நவம்பர் 27ல் தியாகத்தீபங்கள் ஏற்றுங்கள்: பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அவ்வியக்கத்தின் ஒருங்கினைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடி பட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம்''என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments