போர் முடிவடைந்ததும் நடைபெறப் போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன.இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன.
ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிகள், ரணிலை முன்னிலைப்படுத்தும் எதிர்க்கட்சியினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோடு இணையும் சிறுபான்மையின தேசியக் கட்சிகள் என்பவற்றோடு நான்காவதொரு அணியாக அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சேர்ந்து கொள்வாரென எதிர்வு கூறப்படுகிறது.
அவர் தேர்தலில் இறங்கி தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென இரண்டு தரப்பினர் விரும்புகின்றனர்.
உள்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் வெளியுலக வல்லரசாளர்களைப் பொறுத்தவரை அமெரிக்க தலைமையிலான மேற்குலகினருமே இந்த இரு தரப்புகளுமாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக அவரை உசுப்பேற்றி கொம்பு சீவி விடும் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்பு எழுந்தன.
படைத் தரப்பினர் அரசியலில் ஈடுபடக் கூடாதெனவும் அது குறித்த சர்ச்சைகளைக் கிளறி விடுவது குற்றமாகுமென்றும் அரசு சில எதிர்நகர்வுகளை மேற்கொண்டது.
ஆனாலும் குடும்ப ஆட்சிமுறை நோக்கி, நாட்டை நகர்த்துவதாக குறை சொல்லும் சில சிங்கள கடும் போக்குக் கட்சிகள், அரசின் அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளாது ஜெனரலுடன் பல சந்திப்புகளை நிகழ்த்தின.
தமது அரசியல் இருப்பிற்காகவும் எதிர்கால நலனுக்காகவும் சரத்தின் அரசியல் பிரவேசத்தை ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் மனதார வரவேற்பார்களென்பதே உண்மையாகும்.அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியின் தந்திரோபாயம், இதிலிருந்து முற்றாக வேறுபடுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் ஏகோபித்த வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசனின் ஆதரவு தமக்குக் கிடைக்காதென்பதை ரணில் அறிவார்.
இருப்பினும் சரத் பொன்சேகாவை அரசியல் ஆடுகளத்தில் மிதக்க விட்டு இறுதியில் வேறொருவரை ஜனாதிபதி முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என்கிற உத்தியை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவும் கூடும்.
அண்மையில் மேற்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றை புலம்பெயர் தமிழ் மக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ""பச்சை அட்டை'' (எணூஞுஞுண இச்ணூஞீ) வதிவிட அனுமதி கிடைக்கப் பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயமும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொள்ள உத்தேசித்திருந்த விசாரணைகளும் கொழும்பு அரசியலில் பல அதிர்வுகளை உருவாக்கியிருந்தன.
போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்தேறிய குற்றங்கள் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சரத்பொன்சேகாவிடம் ஏன் அமெரிக்கா முன்வைக்க முயல்கிறது என்கிற பிரச்சினையும் எழுந்தது. ஆனாலும் அமெரிக்க அரசோ, இத்தகைய சந்தேகக் கணைகளுக்கும் உத்தியோகபூர்வ அரசின் கேள்விகளுக்கும் எதுவித பதில்களையும் வழங்காமல் கண்ணை மூடிய பூனை போல் இருந்தது.
அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம், சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததும், தேசப்பற்று, தேசிய இறைமைக்கு ஆபத்துவந்துவிட்டது போல் அனைத்து சக்திகளும் ஒருமித்த குரலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின.
தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்படும் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டவர்களே அதிகம் பேசினார்கள்.
மௌனமாகவிருந்து செயற்பட்டு அமெரிக்கா சீவிய கொம்பு, தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரைப் பதம் பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேற்குலகின் பாரம்பரிய நட்புச் சக்தியான ஐ.தே. கட்சியினர் மறுபடியும் ஆட்சி பீடமேறுவதற்கு ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இயக்க வேண்டிய பிராந்திய நலன் சார்ந்த தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது.
அந்த வகையில் ஆளும்கட்சியினரின் வாக்கு வங்கியைச் சிதைத்து தமக்குச் சார்பானவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமாயின் சிலரின் சுய முனைப்பையும் சுய கௌரவத்தையும் சீண்டி விடக் கூடிய தந்திரோபாய உளவியல் செயற்பாட்டினை அதிகரிக்க வேண்டும்.
இந்த உளவியல் சார்ந்த உத்தியினையே எதிர்க்கட்சியினரும் கையாள முற்படுகிறார்கள்.அமெரிக்காவின் விசாரணைகளை உதாசீனம் செய்து தாய்நாட்டுக்குத் திரும்பிய சரத் பொன்சேகா குறித்து பிரமாண்டமான கதாநாயகத்துவ பிம்பம், சிங்கள மக்களிடையே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பரந்து விரிந்து உயர்ந்து நிற்கிறது.
இந்த விசாரணை விவகாரம், ஒரு தனித்துவமான ஒப்பற்ற சிங்கள தேசிய ஆளுமையை ஜெனரலுக்கு வழங்கியுள்ளமையை ஆட்சியாளர்களும் உணர்வார்கள்.சம்பள அதிகரிப்பு மற்றும் போரில் பாதிப்புற்றோர் மீதான கரிசனை போன்ற விடயங்கள், அமெரிக்க விசாரணைக் காலத்தில் நடந்ததை குறித்துக் கொள்ள வேண்டும்.அத்தோடு வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் ஆட்சியாளர் குறித்த பார்வை, தென்னிலங்கை மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
இவை தவிர, எதிர்க்கட்சிகளுக்கிடையே உருவாகும் புதிய கூட்டுகள் குறித்தும் அண்மிக்கும் தேர்தல்களில் அவை உருவாக்கப் போகும் வலிமைமிக்க தாக்கங்கள் பற்றியும் நோக்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீல.சு.க. (மக்கள் பிரிவு) வும் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ கணேசன்) என்பவற்றோடு பல சிறு கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்கிற புதிய கூட்டு உருவாகியுள்ளது.
அதேவேளை இப் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கும் அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் புதிய கூட்டணியிலும் இணைந்து கொள்கின்றன.
இனப்பிரச்சினைத் தீர்விற்கான பொதுக் கருத்தொன்றை நிர்மாணிக்கவும் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்களுக்கான புதிய தளமொன்றை உருவாக்கவும் இக்கூட்டணி நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
எந்த வேளையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முழுமையான வரைவு வெளியிடப்படலாம் என்கிற நிலையில் அவை குறித்து சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளுக்கிடையே ஒரு தெளிவான புரிதல் உருவாகி, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதியான தீர்வுத் திட்டம் வெளிவர முன்னர், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம்.அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம்
காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ரணில் வகுத்திருக்கும் தேர்தல் வியூகத்தில் முஸ்லிம் காங்கிரசையும் ஜனநாயக முன்னணியைப் பயன்படுத்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய கூட்டை தேர்தல் காலத்தில் தமது அணியில் இணைத்துக் கொள்ளலாமென்கிற தந்திரோபாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியும் இணைந்து கொள்ளும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகத் தெரிய
வில்லை.
பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே வருகிற ஜனாதிபதித் தேர்தலில் தனது முழுமையான ஆதரவு கிட்டுமென முதலமைச்சர் பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.இதில் இந்தியா என்கிற பிராந்திய மேலாதிக்க மனோ நிலையாளர்கள், இத்தேர்தலில் எந்தக் கூட்டிற்குத் தமது மறைமுகமான ஆதரவை வழங்குவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
போர் வெற்றியின் பிராந்தியப் பங்காளர்கள், தமது ஆதரவைத் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கே வழங்குவார்களென்று தெரிகிறது. அதாவது சீனா, அமெரிக்கா மேலாதிக்க ஊடுருவலை தடுக்க வேண்டுமாயின், போர்க்கள உறவினை நீடிக்க வேண்டும்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் நிஜமானால் தற்போதைய ஜனாதிபதியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்படும்.
அந்த அக்கினிப் பிரவேசத்தை இந்தியாவால் தடுக்க இயலாது போனாலும் சில வேளைகளில் எதிர்க்கட்சிக் கூட்டோடு இணைய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடுத்திட அதனால் முடியும்.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை மோதல் ஏற்படுமாயின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்பவருக்கே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுண்டு.
அரைப் பங்கு இல்லாவிட்டால் அதிகாரமில்லை என்பதே ஜே.ஆர். எழுதிய ஜனாதிபதிக்கான அரசியல் சாசனம்.
இந்நிலையில் புலிகளுக்கு எதிரான போரில் ஒன்று திரண்ட பிராந்திய சர்வதேச வல்லரசாளர்கள், இனி அதிகாரத்தில் யாரை இருத்துவது என்கிற விவகாரத்தில் முட்டி மோதப் போகிறார்கள்.
தேர்தல் சூறாவளி மையங் கொள்ளும் இந்நிலையில் மே 19 போர் ஓய்விற்குப் பின்னரான முதல் நகர்வில் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காலடியை எடுத்து வைக்கப் போகிறதென்பதை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாக அவதõனிக்கிறார்கள்.
பேõரின் கொடூரங்களும் ஆழ்மனத்தின் ஆறாத இரணமாகி இன்னமும் வலிகளை உயிர்ப்பிய்த்துக் கொண்டிருக்கும் கோர நினைவுகளும் தொலைந்த இருப்புக்களும் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள்ளும் வதைத்தபடியே இருக்கிறது.
83 இனப்படுகொலை துரத்திய பல மலையகத் தமிழர்கள், வன்னியில் குடியேறி, இன்று வவுனியா முகாம்களில் வாழ்வதையும், இதே நவம்பர் மாதத்தில் இழப்பதற்கு ஏதுமற்ற பெருந்தோட்ட பாட்டாளி மக்கள் நாடற்றவராகியதையும் மறக்க முடியாது.
- இதயச்சந்திரன்-
நன்றி - வீரகேசரிவாரவெளியீடு
Comments