பிச்சை எடுக்கும் அரசு பிச்சை போடுமா?


வன்னியில் தொடர் அவலங்களைச் சந்தித்து அதன் தொடராக வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேசத்தின் தொடர் அழுத்தங்களால் மீள் குடியேற்றம் என்ற பெயரில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிட்டார்களா? என்பதை சர்வதேச நாடுளோ அல்லது சர்வதேச அமைப்புக்களோ ஏன் புலம்பெயர் தமிழ் உறவுகளோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வன்னியில் சந்தித்துவந்த தொடர் சொல்லமுடியாத துயரத்தின் தொடராய் உணவுப் பிரச்சினை என்பது அவர்களை முற்றுமுழுதாய் வாட்டி எடுத்தது. உணவி ற்காய் கையேந்திப் பிச்சை எடுத்தாலும் பிச்சை போட வன்னியில் உணவில்லை. ஏற்றத்தாழ்வின்றி குழந்தை முதல் நடக்கமுடியாத மிக வயது முதிர்ந்த மூத்தவர்கள் வரை கஞ்சிக்காக நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்து ஒருவேளை நாக்கை நனைத்தால் போதும் என்று தமது வாழ்நாள்களைக் கழித்தார்கள்.

அதன் தொடராக முகாம்களுக்குள் முடக்கப்பட்ட போது தமிழ்ச் சினிமாவில் காட்டுவது போன்று யாராவது ஒருவர் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு சிறிய உணவுப் பொதி ஏதாவது கொடுத்தால் அதனைப் பெறுவதற்காக முண்டியடித்து அடிபட்டு அந்தப் பொதியைப் பெறுவதற்கு எவ்வளவு அவலப்படுவார்களோ அதே போன்றதான நிலையை முகாம்களில் சிங்களவர்கள் மேற்கொண்டார்கள். அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களிலும் உணவிற்காக முண்டியடித்தார்கள்.

தற்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிங்கள ஆட்சியாளர்களால் தமது சொந்தப் பகுதிகளுக்கு மீள் குடியமர்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள அரச பேச்சாளர்களும் அமைச்சர்களும் ஏன் அரச குடும்ப அங்கத்தவர்களும் மார்தட்டிச் சொல்கிறார்கள். இதனைப் பார்த்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் கூட தமது மகிழ்சியினை வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகளும் இலங்கையில் முக்கிய விடயமாக அரசினால் பரப்புரைக்காப் பயன்படுத்துகின்றது.

ஆனாலும் அந்தச் செய்தியின் பின்னால் இருக்கும் மிக முக்கியமான மனித அவலம் யார் கண்களுக்கும் ஏன் தெரியவில்லை??

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மக்கள் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களை அம் மாவட்டங்களின் முக்கியமான ஒரு இடத்தில் வைத்து அந்தப் பிரதேசங்களின் அல்லது மாவட்டங்களின் இராணுவ மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த நிகழ்விற்கு அரசாங்கத்தின் ‘கௌரவ’ நிலையில் இருக்கும் முக்கியமானவர்கள் வருகை தருவார்கள். அவர்களுக்கு உடனடியாக ஒலிவாங்கி வழங்கப்படும். அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் தம்மாலான மட்டும் வாக்குறுதிகளை ஷவழமைபோல்| வழங்கிவிட்டு சம்பிர்தாயத்திற்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5,000 ரூபா பணம் வழங்கிவிட்டு ஷஷஉங்களுக்கு, நிவாரணம் வழங்கப்படும், வீடுகளுக்கான தளபாடங்கள் வழங்கப்படும், சில நாட்களில் மேலதிகமாக 20,000 ரூபா வழங்கப்படும்… உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள்..|| என்றும் உரையாற்றிவிட்டு தமது இடங்களிற்குச் சென்றுவிடுவார்கள். அந்த நிமிடங்களில் இருந்து அகதி மக்கள் சந்திக்கும் அடுத்த கணங்கள் ஒவ்வொன்றும் அந்த மக்களிற்கு நின்மதியற்றவை.

அம் மக்கள் தமது பகுதிகளுக்குச் செல்வதற்கு வழங்கப்பட்ட நிதியின் அரைப் பகுதியோ அல்லது மூன்றில் ஒரு பகுதியோ முடிவடைந்துவிடும். மிகுப்பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி யாருக்காவது எழுகின்றதா?

அவர்கள் தமது வாழ்க்கையை சிறிது சிறிதாகவே தொடங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதைவிடவும் ஒரு வீட்டினையோ அல்லது ஒரு கொட்டிலையோ போடுவது தொடக்கம் சமையலுக்கான தீப்பெட்டி வரையிலுமான அனைத்துப் பொருட்களையும் பணம் கொடுத்தே பெறவேண்டிய சூழல். வன்னி சென்ற மக்களின் வீடுகளில் 40வீதத்திற்கு மேற்பட்ட வீடுகளில் இராணுவத்தினரே உள்ளனர்.

அவர்கள் அந்த வீடுகளில் இருந்து வெளியேறுவது உடனடியாக நடக்கக் கூடிய விடயமா? சரி அதனை விடுத்தாலும் தெரிந்தவர்களின் வீடுகளின் தாவராங்களில் இவர்கள் வாழ்ந்தாலும்? அடுத்த வேளை உணவு? பிள்ளைகளுக்கான கல்வி? போக்குவரத்திற்கான குறைந்த பட்சம் மிதிவண்டி இன்னோரன்ன தேவைகள் அவர்களுக்கு வராதா? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கு தேவைகள் வாராதா?

"கௌரவ" முக்கியஸ்தர்களால் வழங்கப்பட்ட நிவாரணம், நிதி எல்லாம் பேச்சளவில் தானா? சர்வதேசத்தின் மத்தியில் வன்னி அகதிகளை அடகு வைத்துப் பிச்சை எடுக்கும் சிங்கள அரசு பெறும் பிச்சையில் இருந்து ஒரு சிறு பகுதியையாவது அவர்களுக்காக வழங்கினால் என்ன? அதனை வழங்குகின்றதா? தம்மால் வழங்கப்படும் நிதியோ அல்லது ஏனைய உதவிகளோ அந்த மக்களைச் சென்றடைகின்றதா? போன்ற விடயங்களை சர்வதேசம் மக்கள் மத்தில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு ஏன் கண்டறியாமல் விட்டுள்ளது? இந்தக் கேள்விகள் கட்டுரை எழுத்தாளரது தளத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை விட அடுத்த வேளை உணவிற்காக ஏங்கி நிற்கும் வன்னி அகதிகளின் மனதில் இருந்து வெளிவருகின்றவை என்பதே உண்மையான விடயம்.

மீண்டும் மீண்டும் அவலம் சுமப்பதே வன்னி மக்களின் நிலையா? இதற்கான பதிலை யார் தான் சொல்வார்கள்??

- இராவணேசன்.

ஈழநேசன்

Comments