![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4JEfQr4BLleKp1dJCT-TkoC2raMpnnW4dqrjbDhyphenhyphenTr4itAYRtgkNDDLCFDCZzksqFlj_uFqjiDezKwPnV7d9pFr7yltHYcVFGoOFiuKk7mjg1_wWifP_YGsLQUfwE7wbWxCdDh3TdXNmR/s400/nationalherosdayswiss2009.jpg)
என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான் என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.
புலிகளின் பின்னடைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் அக்கருத்துக்களை ஒற்றையான தட்டையான பன்முகப் பார்வையற்ற காழ்ப்புக்களும் குரோதங்களும் நிறைந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களின் வெறும் உளறல்கள் என்று அவற்றைப் புறந்தள்ளும் இவ் ஆய்வாளர் குழு, தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை இந் நேர்காணலில் துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்து காட்டுகிறார்கள்.
பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பது இவர்களின் மேலதிக வாதமாக இருக்கிறது.
இந் நேர்காணலில் இருந்து தமிழ்சமூகத்திற்குக் கிடைத்த முக்கியமான முடிவாக நாம் இவற்றை கருதுகிறோம். இதுவே இந் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்குகிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து உள்ளும் புறமுமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு தமது பாணியில் பதிலளித்துள்ளார்கள். இனி அவர்களுடனான நேர்காணல்…..
கேள்வி: சமகால நிகழ்வு ஒன்றுடன் இந்நேர்காணலை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அண்மையில் எமது ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பாhக்கிறீர்கள்?
பதில்: நல்ல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை நாம் ஒற்றையாக அணுக முடியாது. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஒரு நாட்டிற்குள் நுழையும் குடிவரவுப் பிரச்சினை அல்ல இது. அந்தந்த நாடுகள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சினையை அந்த அடிப்படையிலேயே மட்டும் அணுகவும் தலைப்படுகின்றன.
இந்தப் பிரச்சினையின் பரிமாணமே வேறு என்பதை அவை புரிந்திருந்தும் அதை புரிய மறுக்கின்றன அல்லது புரியாதது மாதிரி நடக்க விரும்புகின்றன என்று சொல்லலாம். இவ்விரு நிகழ்வுகளின் கன பரிமாணத்தை நாம் கால இட வெளி சூழலில் வைத்து ஆராய்வதும் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியற் போக்கை ஆரய்வதும் ஒன்றுதான். ஏனெனில் இரு ஆய்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இடைவெட்டி ஒன்றாகப் பயணம் செய்யக்கூடியவை.
உலகின் இரு வேறு கடற்பரப்புக்களில் நடந்து கொண்டிருக்கிற பிரச்சினையாக இருந்த போதும் பிரச்சினையின் மையம் ஒன்றுதான். நீங்கள் உங்கள் கேள்வியில் இரு நிகழ்வுகளையும் இணைத்ததிலிருந்தே அதன் ஒற்றுமையை புரிந்து கொளள்ளலாம்.
ஆச்சரியப்படும் வகையில் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சில ஊடகங்களாலும் சில அரச அதிகாரிகளினாலும் சட்ட விரோத குடியேற்றம் என்ற பதத்துடன் மேலதிகமாக “பயங்கரவாதிகள்” என்ற பதமும் சேர்த்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினையை பன்மைத்தன்மையாக்குகிறது.
ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற்போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சில வேறுபட்ட கூறுகளை கொண்டுள்ளது.
அதில் முக்கியமானது, “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவடைந்து விட்டது” என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிற ஒரு சூழலில் முன்னரிலும் பார்க்க அதிகளவிலானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு.
இந்த செய்தியின் பின்னணியில் பல தெளிவான உண்மைகள் புதைந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டது என்ற சிறீலங்காவின் செய்தி செமத்தியாக அடிவாங்குகிற இடம் இது. அத்தோடு அந்தப் போரை அது எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது என்ற உண்மையும் சேர்ந்து உறைக்கிற தளமும் இதுதான்.
யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.
ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையை இரு வேறுகடற்பரப்புக்களில் நின்று உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
போரில் குருரமாகத் தோற்கடிக்கப்பட்டவர்களாக – தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக – வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது.
ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.
இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.
அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செய்றபாடாகவும் இது இருக்கிறது. யார் சொன்னது போராடும் இனம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டால் அது அடங்கிவிடும் அல்லது ஓய்ந்து விடும் என்று.
தன்னையறிமாலேயே அது தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கும். அதற்கு சாட்சிதான் மேற்படி நிகழ்வுகள். அவர்கள் தண்ணீரில் மிதந்தபடியே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் இதன் பின்னணிக்குள் இன்னும் ஆழமாகப் போவோம். ஏனெனில் இதன் பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் புதைந்திருக்கிறது.
முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம், மொழி, பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.
அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட – எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.
சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் அடிப்டையில் இப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.
ஏனெனில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.
இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.
எஞ்சியவர்கள் முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள்.
எனவே “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற அடையாளத்துடன் இவர்களுக்கு சம்பந்தபட்ட நாடுகள் ஒரு கூட்டு அரசியல் தஞ்சத்தை வழங்க வேண்டும் என்று நாம் வீதியல் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக கனடா, அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள எமது மக்கள் உடனடியாக இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல்; தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.
இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக – நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா?
அவ்வளவு ஏன், புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வேண்டும்.
அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.
இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற – நடைபெறுகிற தேசம் அது. சிறீலங்கா என்ற தேசத்தை பொறுத்து தமிழர்களுக்கு என்று தற்போது இருக்கிற அடையாளம் ஒன்று இனப்படுகொலைக்கு பலியானவர்கள் இரண்டு இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் மூன்று தாயகத்தில் இன்னமும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்கள்.
மொத்தத்தில் சிறீலங்கா என்ற தேசத்துடன் நாம் எமது தொடர்பை முற்றாகத் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் மீள முடியாத உளவியல் சிக்கலுக்குள் ஒரு இனம் முழுவதும் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக விபரிக்கிறோம். உங்கள் கேள்விக்கான பதில் என்ற அளவில் இதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.
நாம் இனி போராடவேண்டியது எதிரிகளுடன் அல்ல. இந்த மேற்குலகத்துடன்தான். ஜனநாயகம் பேசியே எம்மைக் கழுத்தறுத்தவர்கள் இவர்கள்தான். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்புக்கெதிராக நாம் எமது கண்டனங்களை வீதியில் இறங்கி பதிவு செய்தேயாக வேண்டும். ஏனெனில் உண்மையான போர்க்குற்றவாளி ஐநா பொதுச்செயலர் பான்கிமூன்தான்.
உலக மகா யுத்தங்களின் பிற்பாடு பிரதானமாக இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவதற்காக உலக அரசுகளின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்ட ஒரு பொது அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதை எந்த வகையில் சேர்ப்பது.
இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் எம்மை எமது நிலத்தில் வாழ விடுமாறு நாம் இப்போது உரிமையுடன் கேட்கக்கூடிய ஒரே இடம் ஐநா பொதுச் செயலரின் வாசஸ்தலம்தான். இல்லையேல் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி ஒரு “கூட்டு அரசியல் தஞ்சத்தை” கோரி நகரும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டியிருக்கும்.
இது இந்த உலக ஒழுங்கின் சமநிலையில் ஒரு பெரும் தளம்பலை ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக்காட்டி நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
தொடரும்…….
பரணி கிருஸ்ணரஜனி
Comments