தமிழ்நாட்டில் வதையுறும் ஈழஅகதிகள்

ஈழத்தமிழர் மீதான சிங்கள இனவெறி அரசின் போரைத் தொடர்ந்து, 3 இலட்சம் தமிழர்கள் தற்பொழுது வன்னி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு ஐ.நா. அவை, மனித உரிமை அமைப்புகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் கூட அவர்களை சிங்கள அரசு தடுத்து வைத்திருக்கிறது.
http://puliveeram.files.wordpress.com/2009/07/po_01.jpg
வன்னிமுகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பும் நாம், இதே வேளையில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே முகாம் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும், ஈழஅகதிகளின் வாழ்நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சிங்கள இனவெறி அரசு வன்னி முகாம்களில் ஈழத்தமிழர்களை எவ்வாறெல்லாம் வாட்டுகின்றதோ, அதே அளவிலான வொடுக்குமுறைகளை மென்மையான முறையில் வெளித்தெரியாதவாறு தமிழ்நாட்டில் உள்ள ஈழஅகதிகள் மீதும் தொடுத்து வருகின்றன, இந்திய, தமிழக அரசாங்கங்கள்.

தற்பொழுது, செங்கல்பட்டில் ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழஅகதிகள் 41 பேர் தம்மை விடுவிடுத்து தம் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை 20.09.09 அன்று முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் இதே போன்றதொரு உண்ணாநிலைப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். அப்போராட்டத்தின் விளைவாக 17 அகதிகளை விடுவித்து, ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை அரங்கேற்றியது, தமிழக அரசு. மீதம் உள்ளவர்களை விரைவில் விடுவிப்போம் என்று அப்பொழுது அரசு உறுதியளித்திருந்தும் கூட, இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதைத் தொடர்ந்தே, சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடந்து வருகின்றது.

கடந்த 1983இல் சிங்கள இனவெறியர்களால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, பெரும் தொகையில் அடைக்கலம் வேண்டி ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் தொடங்கினர். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழஅகதிகளுக்கென்று தனி முகாம்கள் அமைக்க உத்தரவிட்டார்.

ராசீவ் காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து, இந்திய அரசு 1992 மார்ச் மாதம் ஈழஅகதிகளை இலங்கைக்கு திரும்பச் செல்லுமாறு அறிவிப்பு வெளியிட்டது. ஈழத்தமிழர்களை வெளியேற்றும் விதமாக, மே 1993லிருந்து ஈழஅகதிகள் முகாம்களுக்கு இந்திய அரசால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 9.11.93 அன்று முதல் ஈழஅகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையும், உணவுப்படியும் நிறுத்தப்பட்டன. ராசீவ் காந்தியின் பிணத்தைக் காட்டி, அனுதாபத்தை வாக்குகளாக்கி பதவியில் அமர்ந்த ‘ஆரியப்புதல்வி’ செயலலிதா, இந்திய அரசின் உத்தரவுக்கேற்ப ஈழஅகதிகள் முகாம்களை மூடி, அவர்களை கட்டாயப்படுத்தி கப்பலேற்றி இலங்கைக்கு அனுப்பினார். ஈழஅகதிகளின் பிள்ளைகள் கல்வி நிறுவனங்களில் பயில தடையிட்டார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அகதிகள் முகாம்களுக்குச் சென்று உதவ, அனுமதி மறுத்தார்;. செயலலிதாவிற்கு பின்னர், ஆட்சியிலேறிய கருணாநிதி செயலலிதா வெளிப்படையாக செய்து வந்த நடவடிக்கைகளை மறைமுகமாக செய்து வந்தார்.

இவ்வாறு, தமிழக ஆட்சியாளர்கள் தம் இந்தியத் தேசியப் பாசத்தை, ஈழத்தமிழர் மீதான பாசிச ஒடுக்குமுறையாக வெளிப்படுத்தினர். வெளிப்படுத்தி வருகின்றனர்.

வங்கதேசப் போரின் போது மேற்கு வங்க மாநிலத்திற்கு, வங்க மக்கள் அகதிகளாக வரத் தொடங்கியிருந்தனர். இந்தியா முழுவதிலும் அம்மக்களுக்காக இந்திய அரசு நிதி திரட்டியது. அப்பொழுது, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, அதிகளவுத் தொகை அளித்து உதவியது தமிழ்நாடே ஆகும். இன்றைக்கு ஈழத்தமிழர்களின் தம் சொந்த தேசம் அந்நிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்விழந்து தங்கள் சொந்தங்களை இழந்து மனவேதனையுடன் தமிழகத்திற்கு அகதிகளாக அவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு ஆளில்லை. மாறாக, இந்திய அரசு ஈழஅகதிகளைக் ‘குற்றவாளிகள் போல் நடத்துங்கள்’ என தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது போலும்.

அகதிகளை எவ்விதம் நடத்த வேண்டும் என்பது குறித்து இரண்டு உலகப் பிரகடனங்கள் இதுவரை உள்ளன. நாடு பிடிக்கும் வெறியால் நடத்தப்பட்ட இரண்டாம் உலகப் போர் அகதிகள் சிக்கலைத் தோற்று வித்தது. இச்சூழலில், பிறந்ததே 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘அகதிகள் நிலை குறித்த உடன்படிக்கை’ Convention Relating to the Status of Refugees என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய உடன்படிக்கையாகும். இவ்வுடன் படிக்கையின்படி அகதிகள் பிரச்சினையை மேற்பார்வை யிடுவதற்கென, அகதிகளுக்கான ஐ.நா. ஆணையர் (United Nations High Commissioner for Refugees - UNHCR) என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. இதன்பின், 1967 ஆம் ஆண்டு ‘அகதிகள் நிலை குறித்த நெறிமுறைகள்’ Protocol relating to the Status of Refugees என்ற உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. 130க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கையொப்பம் இட்டுள்ளன.

இந்த இரு உடன் படிக்கைகளையும் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. ‘கையெழுத்திடவில்லை என்பதால் இந்த இரு ஒப்பந்தங்களையும் மதிக்காமல் இந்திய அரசு செயல்படக்கூடாது’ என்று 1999 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், அப்பாஸ் மற்றும் ஏனையர் எதிர் இந்திய ஒன்றியம் (Ktaer Abbas and others Versus Union of India, 1999 CRI.L.J.919) என்ற வழக்கில் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அகதிகளை எவ்விதம் நடத்துவது என்பதனை வரையறுக்கும் சட்டநெறிமுறைகளையும் இந்திய அரசு இதுவரை வகுக்கத்திருக்கவுமில்லை. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்களால் 1996ஆம் ஆண்டு “அகதிகள் குறித்த தேசிய சட்டம்” ஒன்று உருவாக்கப்பட்டு, அது தற்பொழுது கேட்பார் யாருமின்றி தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு ‘பரிசீலனை’யில் உள்ளது.

தற்பொழுது, தமிழக அரசின் 2009-2010 ஆம் ஆண்டின் குறிப்பேட்டின் படி, மொத்தம் 19,705 குடும்பங்களைச் சேர்ந்த 73,451 பேர் தமிழகமெங்கும் அமைக்கப்பட்டுள்ள 115 ஈழஅகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.400, 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.288, மூத்த குழந்தைக்கு ரூ.180, ஏனையக் குழந்தைகளுக்கு ரூ.90 என்று மாதந்தோறும் நிதி வழங்கப் படுகின்றது. முகாம் வாசிகள், மாலை 6 மணிக்குள் முகாமிற்குள் வந்து விட வேண்டும், எப்பொழுது வேண்டுமானாலும் உளவுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலையிலேயே சிறைக் கைதிகளைப் போல இம்முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ளவர்களுக்கு உதவ முன் வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும், தனிநபர்களும் கடுமையான கண்காணிப்புக் குள்ளாகின்றனர். அகதிகளுக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 14 மற்றும் 21 ஆகியவற்றின் படி, உயிர்வாழும் உரிமை, சமத்துவமுடனும் தனிமனித சுதந்திரத்துடனும் வாழும் உரிமை உள்ளிட்டவை அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்புகளும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில், ஈழஅகதிகளை மாலைக்குள் வந்துவிட வேண்டும் என்று மிரட்டுவதும், குற்றவாளிகளை நடத்துவதைப் போல அவர்களை வரிசையில் அமர வைத்துக் கணக்கெடுப்பதும், அவர்களது நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதும் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில், 1992 ஆம் ஆண்டி சூலை மாதத்திற்குப் பின் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இந்திய அரசு, ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவலர்கள்(UNHCR) யாரையும ஈழஅகதிகள் முகாம்களுக்குள் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. இது போன்ற கண்காணிப்புகளும், தனிநபர் அடக்குமுறைகளும் இந்தியாவில் உள்ள திபெத் உள்ளிட்ட வேற்று நாட்டு அகதிகளுக்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்கள் சொத்து வாங்குவதற்கு தடையில்லை, கல்வி கற்க தடையில்லை, வேறு மாநிலங்களுக்கு செல்லவும் தடையில்லை. ஆனால், ஈழஅகதிகளுக்கோ இவை அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்னபிற நாடுகளிலும் ஏதிலிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் அந்நாட்டுக் குடியுரிமை கூட பெற முடிகிறது. சம உரிமையோடு வாழ முடிகிறது. இங்கு அகதி வாழ்வில் கூட ஈழத்தமிழர்கள் இரண்டாந்தரமாக நடத்தப் படுகின்றனர்.

ஈழஅகதிகள் வெளியூர்களுக்கு பணிக்கு செல்ல வேண்டுமானால் கூட, வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறது, அரசு விதி. பணிக்கு மட்டுமல்ல, வேறு முகாமிலுள்ள தம் உறவினர் இறந்துவிட்டால் கூட, வட்டாட்சியர் அனுமதி வேண்டும் என்பது போன்ற பல கடுமையான விதிமுறைகள் ஈழ அகதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. திபெத் அகதிகளின் மேல்நிலைக் கல்விக்கு இந்திய அரசே முழு செலவையும் ஏற்கிறது. ஆனால், ஈழஅகதி மாணவர்களின் கல்லூரிக் கட்டணங்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது.

சிறப்பு முகாம்கள்

இவை மட்டுமின்றி ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில் 2 முகாம்களும் உள்ளன. இச்சிறப்பு முகாம்களில் ஈழப்போராளிகளே அடைக்கப்பட்டுள்ளனர் என்று வாதிடுகிறது தமிழக அரசு. ஆனால், போராளிகள் அல்லாதவர்கள், எவ்வித வழக்குகளும் இல்லாதவர்கள், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், பிணை கிடைத்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் என பலரும் சட்ட விரோதமாக இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், செங்கல்பட்டு முகாமில் உள்ள 15 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டதாக மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றவர்கள். போரில் தம் குடும்பத்தை இழந்து மனம் வெதும்பி மனநோயாளிகளானவர்களும், இதய நோயுள்ளவர்களும் கூட இவர்களுள் உண்டு என்பது வருத்தத்திற்குரியது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் இம்முகாம்களில் நடந்ததுண்டு.

1994 ஆம் ஆண்டு, வேலூரில் அமைக்கப்பட்டிருந்த இது போன்ற “சிறப்பு முகாமி”ல் உள்ளவர்களுக்கு மருத்துவ சோதனைகளும் கூட மறுக்கப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து முறையிட்டுப் புகார் செய்யப்பட்ட பின், 26.10.94 அன்று தமிழக அரசிற்கு அவ்வாணையம் வாரமொருமுறை வேலூர் சிறப்பு முகாம் ஈழஅகதிகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

1993 ஆம் ஆண்டு திருமதி சரோஜினி என்பவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தம் கணவர் திரு. ஆர்.ஆர்.சிவலிங்கம் என்பவருக்கு இருதய நோயை முன்னிட்டு மருத்துவர்களின் அறிவுறுத்துதல் உள்ளதால், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு(Habeas Corpurs Petition No. 1465 of 1993) ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு உடனடியாக மருத்துவ வசதிகளை செய்துத் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னும், 10 நாட்கள் கழித்து அவர் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை அழைத்து வரும் பொழுது அவருக்கு கைகளில் விலங்கிட்டு, குற்றவாளிகளைப் போல் இழுத்து வந்தனர். மருத்துவமனை கட்டிலில் அவரை சங்கிலியால் பிணைத்தும், அவருடன் வெளியாட்கள் தொடர்பு கொள்வதை தடை செய்தும், புகார் தருவதற்கும் அனுமதி மறுத்து அடாவடித்தனம் செய்தது தமிழக அரசு. இத்தனைக்கும், திரு சிவலிங்கம் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் அதுவரை இல்லை என்பதும் அவர் கொழும்பில் அரசுப் பதவிகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “தென் ஆசிய மனித உரிமைகள் ஆவணங்கள் மையம்” (South Asian Human Rights Documentation Centre-SAHRDC) என்ற அமைப்பு, இச்சம்பவத்தை விட பல கொடுமையான செயல்களை இந்திய அரசு அகதிகளுக்கு செய்திருக்கிறது என்று குறிப்பிட்டது.

மருத்துவ சோதனை செய்து கொள்ளும் உரிமையைக் கூட போராடிப் பெற வேண்டிய அவலநிலையிலேயே, சிறப்பு முகாம்கள் உள்ளன என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டோ, அல்லது பிணை கிடைத்தோ சிறையிலிருந்து வெளிவருகின்ற அதே நாளன்று, சிறை வாசலிலேயே கைது செய்து “சிறப்பு முகாமி”ல் அடைத்து வைக்கப்பட்டவர்களும், இம் முகாம்களில் உண்டு. இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் மீது, “முறையான பதிவில்லை” என்று குற்றம் சுமத்தப்பட்டு, இச்சிறைபிடிப்பு நியாயப்படுத்தப்படுகின்றது.

முறையான பதிவின்றி கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பின், அவர்கள் அப்பதிவை பெறுவதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கவகாத்தி உயர்நீதிமன்றம், இரு வெவ்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. அவ்வாறு சிறைவைக்கப் பட்டவர்களை விடுதலை செய்தும் உள்ளது. (வழக்குகள் : Mr.Bogyi Versus Union of India Civil Rule No. 1847/89, Civil Rule No. 516 of 1991, Mr.U.Myat Kyaw and others Versus State of Manipur and others).

இந்நிலையில், ஈழஅகதி களுக்கு இவ்வாறான உரிமைகள் மறுக்கப்பட்டு, “சிறப்பு முகாம்” என்ற பெயரில் தமிழக அரசு அவர்களை சிறையிலடைத்து வைத்துள்ளது. இவ்வாறு, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை கூட, “சிறப்பு முகாம்” என்ற பெயரில் மீண்டும் சிறை வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இம்முகாம் அமைக்கப்பட்டிருப்பதே ஐ.நா. சட்டவிதிகளின்படி சட்டவிரோத மானதாகும்.

பெரும்பாலான தமிழக அகதிகள் முகாம்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளன என பலமுறை பல்வேறு சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் ஆய்வுகள் செய்து அரசிற்கு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்துடைப்பு நடவடிக்கைகளை அரங்கேற்றிவிட்டு, தானே திருப்தி அடைந்து கொள்வதோடு அரசுகள் தம் கடமையை தட்டிக் கழிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள ஈழஅகதிகள் முகாம்களில் மண்டபம் மற்றும் திருச்சி முகாம்களில் மட்டுமே நிரந்தரக் குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. மீதம் உள்ள அனைத்து முகாம்களிலும் தற்காலிக குடியிருப்புகளே உள்ளன.

திபெத், பர்மா, பாகிஸ்தான் என வேற்று நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளுக்கு இது போன்ற நிலை இல்லை. மாறாக, அவர்களுக்கு சிறப்பு கவனங்கள் செலுத்தி, வசதிகள் ஏற்படுத்தித் தருகின்றது இந்திய அரசு. தமிழகத்தில் உள்ள ஈழஅகதிகளுக்கு செலவிடப்படும் நிதியை இந்திய அரசே தருகின்றது என்பதும் இதில் கவனத்திற்குரிய விடயமாகும்.

இந்திய உளவுத்துறையான ‘ரா’, ஐ.பி., தமிழக அரசின் உளவுப்பிரிவான ‘கியூ’ பிரிவு காவல்துறையினர் என எல்லா பிரிவுகளாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஈழஅகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வெளியிலிருந்து உணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் செய்ய முன்வரும் தனிநபர்கள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்டோரை அச்சுறுத்துவதும், முகாமில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை அச்சுறுத்துவது மாகவே இவர்களது செயல்பாடுகள் உள்ளன.

வேலைக்குச் செல்லும் பொழுது அடிபட்டு இறந்தால் கூட ஈழஅகதிகளுக்கு நிவாரணம் தரப்படுவதில்லை. கர்ப்பிணி பெண்கள், போரில் காயமுற்றோர், மாற்றுத் திறனுடையோர், வளரும் குழந்தைகள் என யாருக்கும் சிறப்பு கவனம் செலுத்தி வளர்ப்பதற்கான ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. அவற்றை வழங்கிவந்த தன்னார்வ நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு விட்டது.

திபெத், பர்மா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்திய எல்லைக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் எல்லோரையும் விட ஈழத்தமிழர்கள் கீழத்தரமாகவும், எவ்வித கவனிப்புகளுமின்றி இந்திய தமிழக அரசுகளால் நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது. தம் தேசத்தை இழந்து, உறவுகளை இழந்து தாய்த்தமிழகத்தை நோக்கி வரும் அகதிகளை நன்முறையில் நடத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

அகதிகள் முகாம்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு விருப்பத்தேர்வின் அடிப்படையில் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். சிறப்பு முகாம்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, அதில் சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகள் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டும். திபெத், வங்கதேசம், நி+ட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது போல் ஈழஅகதிகளுக்கு, நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளபடி எங்கும் சென்று வாழ்க்கை நடத்துவதற்கான தனி மனித சுதந்திரமும், ஏனைய உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும். ஈழஅகதிகளிடம் பணம் பறித்தும், அவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

‘அகதிகளை எவ்வித பாரபட்சமும் இன்றி நடத்த வேண்டும்’ என்கிற ஐ.நா. சட்டங்களை உடைத்தெறிந்து விட்டு, இனரீதியிலான பாகுபாட்டைக் கடைபிடித்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் இனவெறிப் போக்கிற்கும் நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

-க.அருணபாரதி-








மேலும்...

Comments