விடுதலைப் புலிகளை அழித்தது யார்? என்ற பெருமையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபங்களை அடைவதில் மகிந்த சகோதர்களுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகின்றது. இந்தப் பனிப்போரை இலாபமாக்கி தேர்தலில் வெற்றிக்கனியை தாங்கள் பறித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சரத் பொன்சேகாவை தமது வேட்பாளராக்க முனைந்த எதிர்க்கட்சியினரும் ஆடிப்போகும் அளவிற்கு சர்வதேச நெருக்கடிகள் சிக்கியிருக்கின்றார் சரத் பொன்சேகா. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கும் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமையதிகாரியுமான சரத் பொன்சேகாவும் தமிழினப் படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளாக இருக்கின்றனர்.
முப்படைகளின் தளபதியாக சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்து போரை வழிநடத்திய போதும், அதனை செயல்முறைப் படுத்தியதில் இந்த இருவருக்கும் முக்கிய பங்குண்டு. சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இவர்கள் நடத்திய இனப்படுகொலைகளும், அதனை நியாயப்படுத்தி இவர்கள் வெளியிட்ட கருத்துக்களும் எச்சரிக்கைகளும் சாதாரணமானவையல்ல. பயங்கரவாதம் என்ற போர்வையில் எதனை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று கருதிய இவர்கள் வன்னிப் போரை தங்கள் விருப்பம்போன்று மிகக்கொடூரமாக நடத்தியிருந்தார்கள். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளர்கள், வயோதிபர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவர் மீதும் முப்படைகளையும் கொண்டு மிகக் கடுமையான தாக்குதலை இவர்கள் நடத்தியிருந்தார்கள்.
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறமுடியாதவாறு, உலகில் போரை நடத்திய கொடூரமான சர்வாதிகாரி என வர்ணிக்கப்படும் ஹிட்லர் கூட செய்யாத அளவிற்கு மருத்துவமனைகளையும் இலக்குவைத்துத் தாக்கியழித்து தங்களது காட்டுமிராண்டித் தனத்தை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். வினையை விதைத்தவர்கள் இப்போது அதனை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் ‘மறைவு' சர்வதேசத்தின் பார்வையை முழுமையாக சிறீலங்காவை நோக்கி திருப்பியிருக்கின்றது. இப்போதுதான் அவர்கள் சிறீலங்காவின் உண்மையான முகத்தை கண்டுகொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். அதனால், இந்தப் படுகொலையாளர்களை நோக்கி சர்வதேசம் சுட்டுவிரலை நீட்டத் தொடங்கியிருக்கின்றது.
தங்களது நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருப்பதனால் மற்றவர்களைவிட ஒருபடி மேலே சென்று, அமெரிக்கா இவர்களை விசாரணை செய்யவும் முனைந்துள்ளது. அமெரிக்க அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த, போர்க் குற்றங்கள் தொடர்பான பட்டியலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின் 46வது பக்கத்தில், வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளை உயிருடன் விடாமல் கொன்று குவிக்க வேண்டும் என்றும், இதற்காக போரின் போது கடைப்பிடிக்கப்படும் எந்த நியதியையும் பார்க்கத் தேவையில்லை என்றும் தனது படைத் தளபதிகளுக்கு சரத் பொன்சேகா உத்தரவிட்டுள்ளார்.
இதனை கடந்த யூலை 10ம் திகதி அம்பலாங்கொடவில் நடந்த கூட்டத்தின் போது சரத் போன்சேகாவே தனது வாயால் பெருமையுடன் சொல்லியும் காண்பித்துள்ளார். இந்தப் பெருமைதான் சரத் பொன்சேகாவுக்கு இப்போது வினையாகியுள்ளது. அமெரிக்காவின் முடிவு சிறீலங்காவைச் சீற்றம் கொள்ள வைத்துள்ளது. எங்களுடைய பிரச்சினைகளைப் கையாள்வதற்கு அனைத்துலக நீதிமன்றங்கள் தேவையில்லை என சிறீலங்கா ஜனாதிபதி சீறியுள்ளார். இந்நிலையில், தனது தனிப்பட்ட நன்மைகளுக்காக தான் எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சரத் பொன்சேகா வாக்குறுதியளித்துள்ளார். அவரது வாக்குறுதியானது காட்டிக்கொடுக்கும் அளவிற்கு விடயங்கள் இருக்கின்றன என்பதை வெளிச்சமாக்கியது.
இதேவேளை, அமெரிக்க அதிகாரிகளினால், விசாரணை செய்யப்படும் போது தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டாம் எனவும், அதற்கான உரிமை அவருக்கு இல்லை எனவும் சிறீலங்கா அரசாங்கம் கூறியிருந்தது. எனவே, மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்கின்றன என்பதும் அதனை மறைப்பதற்கு சிறீலங்கா முயல்கின்றது என்பது வெளிப்படையானது. இந்நிலையில்தான், விசாரணைகளை எதிர்கொள்ளாமல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து தப்பித்து வந்திருக்கின்றார். மடியிலை கனம் இருந்தால் வழியில் பயம் வரும் என்பதுபோன்று, இவர் தப்பித்து வந்திருப்பதே, விசாரணைகளை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு சிறீலங்கா போர்க் குற்றங்களைப் புரிந்திருக்கின்றது என்பதை இந்தச் சர்வதேசம் புரிந்துகொள்ள போதுமானதாகவே இருக்கும்.
ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு
நன்றி்:ஈழமுரசு
Comments