சிங்கள பேரினவாதத்தின் குரூரம் மீண்டும் அரங்கேற்றம்


பேரினவாதத்தின் அடக்குமுறை மேலாண்மை மேலாதிக்கத் திமிர் மீண்டும் ஒருமுறை தனது குரூரத்தை வெலிக்கடைச் சிறைக்குள் நேற்றுக் காட்டியிருக்கின்றது.

அங்கு தமிழ்க் கைதிகள் மீது காவலர் தரப்பு சீற்றம் கொண்டு தாக்கியதில் பதினேழு கைதிகள் படுகாய மடைந்திருக்கின்றனர். அவர்களில் ஏழு பேரின் நிலைமை மோசமாக உள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களைக் கைதிகளாக்குகின்ற அரசே அவர்க ளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு. அந்தக் கடப்பாட்டிலி ருந்து அரசு அரசுத் தலைமையும் அதிகாரிகளும் எக் காரணம் கொண்டும் தப்பிப்பிழைக்க முடியாது; எந்தச் சாக் குப் போக்குச் சொல்லியும் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

தாம் கைதிகளாகப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்குத் தனது சிறைக்குள் ளேயே உரிய பாதுகாப்பை வழங்க முடியாத இந்த அரசுத் தலைமைத்துவங்களால் இந்த நாட்டின் சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு இந்த நாட்டுக்குள் எப்படி உரிய பாது காப்பை வழங்க முடியும்? உரிய நீதியையும், நியாயத்தை யும் பெற்றுக்கொடுக்க முடியும்?

இது ஒன்றும் இப்போது மட்டும் நடக்கும் புதிய சம்பவம் அல்ல. காலங்காலமாக சிறைக் கூண்டுக்குள் சிக்கும் தமி ழர்களுக்குத் தொடர்கதையாக நேரும் அவலத்தின் மற் றொரு அங்கமே நேற்றுக்காலை வெலிக்கடையில் நடந்து முடிந்திருக்கின்றது.

வன்முறைப் புயல் இனத் துவேஷமாக இலங்கையில் மிக மோசமாகக் கோரத் தாண்டவமாடிய 1983 ஜூலைக் கலவரத்தின் போதும் இதேபோல வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

வெளியே தமிழர்களுக்கு எதிரான குரூர இனக்கலவரம் கொடூர வன்முறையாகக் கொழுந்து விட்டு எரிந்தபோது, சிறைக் கூண்டுகளுக்குள் தனித்து விடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் மிக மோசமான வன் முறை, திட்டமிடப்பட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

1983 ஜூலை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கூண்டு களை ஆயுதங்கள் சகிதம் முற்றுகையிட்ட பெரும்பான்மை யினத்தவர்கள் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தமிழ்க் கைதிகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற னர். பலரின் கண்கள் கூடப் பிடுங்கி வீசப்பட்டன. சிறைக் கைதிகளால் குத்திக் கிழிக்கப்பட்டு, அடித்து நொருக்கப் பட்டு, மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முக்கியமானவர்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூல பிதாக்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் "காந்தீயம்" அமைப்பை உருவாக்கிய கலாநிதி ராஜசுந்தரமும் அன்று அப்படிக் கொன்றொழிக்கப்பட்ட 52 தமிழ் அரசியல் கைதிகளில் அடங்குவர்.
இரண்டு நாள்கள், அடுத்தடுத்து அரங்கேறிய இந்தக் கோரத் தாண்டவத்துக்காக யாரும் நீதிமன்றில் நிறுத்தப் பட்டுத் தண்டிக்கப்படவில்லை.

1983 இனக் கலவரத்தின் மற்றொரு "ஆபரணமாக" இந்தக் கொடூரக் கொலை அத்தியாயத்தைப் பெருமை யுடன் அணிந்து கொண்டது சிங்க(ள) ஆட்சித் தலைமை.

இதேபோன்ற சம்பவங்கள் இலங்கைச் சிறைகளுக்குள் தமிழ்க் கைதிகளுக்கு எதிராக சிறிய அளவில் அவ் வப்போது தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் வெலிக் கடையில் 1983 ஜூலையில் நடைபெற்றமை போன்ற பிறிதொரு அலங்கோலச் சம்பவம் 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 24 ஆம் திகதி பிந்துனுவௌவில் இடம்பெற்றது.

புனர்வாழ்வு அளித்தல் என்ற பெயரில் தான் கூட்டிச் சென்று தடுத்து வைத்திருந்த 28 தமிழ் இளைஞர்கள், பிந்துனுவௌப் பிரதேசவாசிகளினால் வெட்டியும், தாக் கியும் கொடூரமாக குரூரமாக கொன்றொழிக்கப்பட இட மளித்து வாளாவிருந்தது அரச நிர்வாகம்.

இந்த இரண்டு சிறைக் கொடூரங்கள் தொடர்பிலும் முக் கியமாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்ன வென்றால், இவை இரண்டு தொடர்பிலும் கடைசியாக யாருமே தண்டிக்கப்படவில்லை என்பதுதான்.

தான் தடுத்து வைத்திருக்கும் கைதிகளுக்கு உரிய பாது காப்புப் கொடுக்க முடியாத அரசு அந்தக் கைதிகள் கொத் துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமைக்குப் பொறுப் புக்கூற முடியாத அரசு அந்தக் கொலைகளுக்குப் பொறுப் பானவர்களைத் தண்டிக்கக்கூட தகுதியோ அல்லது விருப் பமோ அற்ற அரசு தன்னை இறைமையுள்ள சட்டரீதியான ஓர் அரசு என்று கூறிக்கொள்வதற்கே தகுதியற்றதாகும்.

நீதிமன்றங்களின் நீதியமைச்சின் நேரடிப் பார்வை யிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும் பகிரங்கச் சிறைச் சாலைகளிலேயே இத்தகைய கொடூரங்களும், குரூரங் களும் அரங்கேறுமானால்
பொதுசனத்துக்கோ, ஊடகங்களுக்கோ, சர்வதேசத் துக்கோ காட்டப்படாமல் அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப் பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய, பல்வேறு இரகசிய இடங்களிலும், படைமுகாம்களுக்குள்ளும் இயக் கப்படும் தடுப்பு நிலையங்களில் எத்தகைய கொடூரங்கள் அரங்கேறலாம் என்ற சந்தேகம் பேரச்சத்தைத் தரு கின்றது.

இப்படி உலகின் பார்வைக்குத் தெரியாமல் மூடப்பட்ட தடுப்பு மையங்களுக்குள் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் "பயங்கரவாதிகள்" என்ற பெயரோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

வெலிக்கடை பகிரங்கச் சிறை. அதனால் அங்கு நடப் பது சற்றேனும் கசிகிறது. இரகசியச் சிறைகளுக்குள் எத் துணை கொடூரங்கள் அரங்கேறுமோ.........? ஆண்ட வனுக்குத்தான் வெளிச்சம்...........?

விதியே! விதியே! தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத் தாய்.........? என் செய்ய நினைத்தாய்........?

Comments