ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும்


நேர்காணல் – மூன்றாம் பாகம்:

பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் என “ஈழம் இ நியூஸ்” இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நேர்காணலின் மூன்றாம் பாகம் வருமாறு:

கேள்வி: நீங்கள் நாம் மீண்டும் வீதியில் இறங்கி போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறத்தியிருப்பது எமக்கு புரிந்திருந்தபோதிலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுபட்டிருக்கும் ஒரு சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். இந்த அவலத்திலிருந்து தோற்றம் பெற்றிருக்கும் குழப்பமான அரசியல் தலைமைகளும், அவற்றின் தெளிவற்ற கொள்கைளும,; ஏகபிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் தலைமைக்கான வெற்றிடமும், மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய தெளிவான தலைமைகளும் இல்லாத ஒரு சூழலில் மக்களை எந்த கொள்கையின் அடிப்டையில் எந்தத் தலைமையின் கீழ் எப்படி ஒருங்கிணைப்பது?

பதில்: மிக முக்கியமானதும் இனி வரப்போகும் ஈழத்தமிழர் வரலாற்றின் மையமானதுமான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு ஓரே வரியில்தான் உண்மையில் பதிலளிக்க வேண்டும். ஆனால் அதற்கு தற்போதைய யாதார்த்தம் இடம் வைக்கவில்லை. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டலை ஏற்று தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் கீழ்தான் நாம் போராட வேண்டும் என்பதே அந்த ஒற்றை வரி பதில்.

ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இந்த யதார்த்தத்தை கேள்விக்குள்ளாக்கி விட்டன. உங்கள் கேள்விகள் இந்த அவலமான யதார்த்தத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் நேற்று மட்டுமல்ல இன்றும்கூட ஏன் நாளையும் கூட ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் போராட்ட சக்திகளும் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இதை தற்போதைய யதார்த்தம் கேள்விக்குள்ளாக்கலாம் ஆனால் பிரபாகரனின் அந்த இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும்.

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட. இதை நாம் தெளிவாகப் புரிந்திருந்தால் மேற்படி மயக்கங்கள் ஏற்பட்டிருக்காது. நாம் பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுபட்டிருக்கவும் மாட்டோம். உங்களது கேள்விகளுக்கும் அவசியமே இருந்திருக்காது.

பிரபாகரன் வெற்றிகளின் உச்சத்தில் தனிப்பெரும் நாயகனாக உள்ளிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் அவர் புகழ்பாடப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சூழலிலிருந்து நாம் இந்த கருத்தை முன்மொழியவில்லை. அவர் இல்லாமையை தினமும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும், தோல்வியின் அழிவின் குறியீடாக்கி அவர் மீது வசைபாடப்பட்டுக்கொண்டிருக்கும், எதிர்மறையான சொல்லாடல்களாலேயே அவர் பிம்பத்தை நிறுவ முற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விபரீதமான - அச்சுறுத்தும் ஒரு சூழலிருந்து நாம் மேற்படி கருத்துருவாக்கத்தை முன்வைக்கிறோம்.

பிரபாகரனையும் அவர் தோற்றத்தையும் மிக நீண்ட தத்துவ உளவியல் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறோம். இதிலிருந்து எமக்குக் கிடைத்திருக்கும் வாசிப்பும் முடிவும் அலாதியானது. தமிழர்களாக அவர்காலத்தில் வாழ்ந்ததற்காக நாம் செருக்கும் பெருமிதமும் கொள்கிறோம். இதைத் தற்போது தெரியப்படுத்துவதில் எமக்கு எந்த சங்கடமும் இல்லை மாறாக எமது இந்த பகிரங்க அறிவிப்பு – நாமும் தமிழர்களாக – தனது இனத்திற்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டிருக்கும் அந்த அதிமனிதனுக்கு செய்யும் நன்றியும் காணிக்கையும் கூட.

“பிரபாகரனியம்” (PIRABHAKARANIYAM) என்ற நவீன விடுதலைக் கோட்பாடு ஒன்று அவரிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் வைத்து பெரும் அழிவும் துயரமுமாக எமது விடுதலைப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக அவரது விடுதலைக்கோட்பாடு; தொடர்பாக நாம் சந்தேகம் கொள்வது அபத்தமானது மட்டுமல்ல எமது விடுதலை தொடர்பான ஆபத்தான பகுதியும்கூட. உலகின் தலைசிறந்த தத்துவமேதை Jean paul satre இன் மிகச் சிறந்த தத்துவ ஆய்வு “இருத்தலும் இல்லாமையும்” (Being and Nothingness). இருத்தலியல் ( Existentialism) பின்புலத்தில் மனித வாழ்வு அதன் இருப்பு தொடர்பாக ஆழமான கருத்துக்களை முன்வைத்த ஆய்வு அது.

இந்த பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் “பிரபாகரன் : இருத்தலும் இல்லாமையும்” என்ற தத்துவ – உளவியல் ஆய்வை மேற்கொண்டுள்ளோம். பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச்சமூகத்திற்குள் ஏற்படுத்தியிருக்கும்; அதிர்வுகளை ஒரு புறமாகவும் அவரது விடுதலைக் கோட்பாடுகளை மறுபுறமாகவும் வைத்து முள்ளிவாய்க்காலிற்கு முன்னும் பின்னுமாக அவரது இருப்பையும் இல்லாமைiயும் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறோம்.

இந்த முடிவு மிக முக்கியமானது. இனிவரும் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் : இல்லாமை என்பதே இல்லை – அவரது இருப்பே அதிமுக்கியமாகிறது. இதை புறந்தள்ளும் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எமக்கு விடுதலையை பெற்றுத்தராது. மாறாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட இனமாகவே மீதிக்காலத்தை இந்த பூமிப்பந்தில் கழிக்க வேண்டியிருக்கும். இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் அதிதேவையாகிறது. எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைச்சக்தியின் கீழ் நாம் முரண்பாடுகளை களைந்து ஒருமித்து ஒரு குரலாக போராடவேண்டும் என்பதே உண்மை.

கேள்வி: உங்களுடைய ஆதங்கம் எமக்கு புரிகிறது. மற்றைய குழுக்களை புறந்தள்ளுவோம். ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே சில உட்பிரிவுகள், குழப்பங்கள் தோன்றியுள்ளது போல் தெரிகிறதே. அந்த அமைப்பின் பெயரிலேயே முரண்பாடான பல அறிக்கைகள் வெளியாவதும் அதை மறுப்பதுமாக இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் பல முரண்பாடுகளை தினமும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒற்றைச் சக்தியின் கீழ் மீண்டும் அணிதிரள்வது எப்படிச் சாத்தியம்?

பதில்: இதற்கான பதிலுக்கும் நாம் மீண்டும் பிரபாகரன் என்ற ஆளுமையையே முன்னிறுத்த வேண்டியிருக்கும். நாம் முன்பே குறிப்பிட்டது போல் இனிவரும் தமிழர் சொல்லாடல்களில் பிரபாகரன் என்ற பெயர் தவிர்க்க முடியாதது. முள்ளிவாய்க்காலிற்கு முன்பு இத்தகையை கேள்விக்கு இடம் இருக்கவில்லை. தற்போது அது எழுந்திருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. பிரபாகரன் என்ற மனிதனின் இல்லாமையுடன்தான் இந்தகைய கேள்விகள் தோற்றம் பெறுகின்றன. எனவே மீண்டும் அவரது இருப்பை உறுதி செய்யும்போது மேற்படி கேள்விகள் செயலிழந்து போகின்றன.

கேள்வி : குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், உங்கள் பதிலிலிருந்து தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்தால் மேற்படி பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பதுபோல் தெரிகிறதே. அப்படி பார்த்தால் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த செய்திகளை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: இன்றைய நிலையில் பல மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த ஒரு கேள்வியை அனாயசமாகக் கேட்கிறீர்கள். நாம் நீங்கள் எதிர்பார்க்கும் அர்த்தத்தில் அந்த பதிலைச் சொல்லவில்லை. பிரபாகரனின் இருப்பு என்ற சொல்லாடலை நாம் பிரயோகித்தது நாம் அவரை உயிரோடு கொண்டுவரும் சாகச விiளாட்டு சார்ந்ததல்ல. அவரது கொள்கை தொடர்பானது அது. எங்களைப்போல் உங்களைப்போல் சாதாரண மனிதர்களின் மரணம் மீளுருவாக்கம் செய்ய முடியாதது.

உடல் அழிவுடன் ஒரு இல்லாமை நிகழ்ந்துவிடுகிறது. அனால் பிரபாகரன் அசாதாரணமானவர் – அதிமனிதர். அவரை மீளுருவாக்கம் செய்ய முடியும். அவரது இருப்பை உறுதி செய்ய முடியும். அந்த இருப்பே முரண்பாடுகளற்ற அமைப்பாக அந்த அமைப்பை மீண்டும் மேலெழச் செய்யும். அந்த அடிப்டையிலேயே எமது பதில் அமைந்திருந்தது.

நீங்கள் கேட்டபடியால் சொல்கிறோம். தர்க்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் தலைவர் பிரபாகரனின் மரணம் எந்தத் தரப்பாலும் இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. கண்கட்டு வித்தைகளுடனும் பல மோசடிகளுடனும் அவரது மரணம் ஒரு கனவு போலவே விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்கட்டு வித்தைகளையும் மோசடிகளையும் பல தரப்பாலும் கூறப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உருவி எடுத்துவிட்டால் அவர் உயிருள்ள மனிதனாக உலாவுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

ஆகையால் நாம் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறோம். குறைந்தபட்சம் மரணமடைந்ததாகக் கூறப்படும் அவரது பிள்ளைகளின் மரமபணுக்களுடனும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது பெற்றோரின் மரபணுக்களுடனும் அவரது மரபணுக்களை சர்வதேச மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து (சிறீலங்கா -இந்திய நிபுணர்களின் ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாதது) சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாம் அரவது மரணத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிப்போம். நீங்கள் கவனிக்க வேண்டும் அப்போதும் நாம் அவரது மரணத்தை பரிசீலிப்போமே தவிர முடிவாகக் கொள்ள மாட்டோம்.

ஏனெனில் அவர் தனது உயிர்ப்பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையுள்ள நபர். அது தனி மனிதனாக சுயநலநோக்கில் தனது உயிரைப் பாதுகாக்கும் குறுகிய நோக்கம் கொண்டதல்ல. அவரது ஆளுமையே இதன் பி;ன்னணியில் மறைந்துள்ளது. எமது ஆய்விலிருந்து கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருதுகோளை முன்வைக்கிறோம். குறித்துக்கொள்ளுங்கள்.

தன்னால், தன்னால் மட்டுமே இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என்று இறுக்கமாக நம்பிய ஒருவராக அவர் இருந்தார். அவர் யாரையுமே நம்பவில்லை. அதனால் தனது உயிர் குறித்து பெரும் அக்கறை கொண்டிருந்தார். தனக்கு ஏதும் நேர்ந்தால் இனம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதை அவர் தன்னளவில் உணர்ந்தே செயற்பட்டார். இது எமது போராட்டம் சார்ந்து மிக முக்கியமான விடயம். போராட்டம் தொடர்பான சரி, தவறுகள் மேலெழுந்த புள்ளி இங்குதான் மையம் கொண்டுள்ளது. இதை நாம் கவனமாக உள்வாங்கியிருந்தால் தலைவர் பிரபாகரன் குறித்த சச்சரவுகளுக்கு இடமே இருந்திருக்காது.

ஒருவர் தன்னால்தான் இந்த இனத்திற்கு தலைமை தாங்கமுடியும், தன்னால்தான் இ;ந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும், அதற்காக எந்த பெயரையும் தாங்கத் தயாராக இருக்கிறேன் என்ற உளவியலோடு யாரையும் நம்பாமல் ஒரு படையணியைக் கட்டியமைத்து அதைக் கொண்டு அந்த விடுதலையை அடைய எத்தனித்தது என்பது எவ்வளவு பெரிய விடயம். இப்படி ஒரு தலைமை கிடைப்பது அபூர்வம். இப்படி ஒரு தலைமை இனி எமக்கு கிடைக்ப்போவது இல்லை. எனவே இதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதில்தால் எமது அடுத்த கட்ட அரசியலே இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிக்கைகளினூடு தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப புலிகளின் தலைவர் பதவியை கையிலெடுத்த திரு செ. பத்மநாதன் அவர்கள் அந்த பதவியில் ஒரு மாதம்கூட தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியதும் பின்பு கைதாகியதும் எல்லோரும் அறிந்த கதைதான். அவர் மீதான ஆயிரம் குற்றசாட்டுக்கள் இன்றுவரை உலாவருகிறபோதும் அதன் உண்மைத்தன்மை எத்தகையது என்பதற்கும் அப்பால் ஒரு மாத்திற்குள் அவர் வீழ்ந்ததற்கு காரணம் அவர் தன்னை நம்பவில்லை என்பதுதான் முக்கியமானது.

பிரபாகரனைப்போல் தன்னால் மட்டும்தான் முடியும் என்ற கொள்கையில் அவர் இல்லை. தன்னிடம் நம்பி;கையில்லாமல் அவர் யார் யாரையோ எல்லாம் நம்பினார். அடிபணிவு, அவல அரசியலையே கையிலெடுத்தார். வீழ்த்தப்பட்டார். இதுதான் 37 வருடங்களுக்கும் பின்னும் தொடரும் ஒரு தலைமையினதும் 30 நாள்களுக்குள் முடிந்து போன ஒரு தலைமையினதும் கதை.

கொஞ்சம் செரிக்கக் கடினமாக இருந்தாலும் ஒரு கதையைச் சொல்கிறோம். கேட்டுகொள்ளுங்கள். தான் அந்த இடத்திலிருந்து தப்ப வேண்டுமானால் தனது குடும்பத்தையும் சக தளபதிகளையும் பலி கொடுத்துத்தான் நடைபெற வேண்டும் என்றிருந்தால் பிரபாகரன் அதையும் செய்வார். ஏனெனில் அவரது கனவு ஒட்டுமொத்த இனத்தினது விடுதலை தொடர்பானது. அது தன்னால் மட்டும் முடியும் என்ற நம்பிக்கை.

அவர் தப்ப வேண்டும் என்பதற்காக தம்மை அழிக்கத்துணியும் குடு;ம்பமும் தளபதிகளும் போராளிகளும்தான் அவரது அந்த நம்பிக்கையின் ஆதாரங்கள். அது இன்றுவரை ஏதோ வகையில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தமிழீழ விடுதலையின்பால் தம்மை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு தொகுதியினர்பற்றி உணரப்படாமல் இருக்கும் அவலமான ஒரு பகுதி இது. எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – அது உறுதிப்படுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது விடுதலையின் ஆதாரம் இதில்தான் தங்கியுள்ளது.

கேள்வி : நாம் இடையில் குறுக்கிட்டதால் நாம் கேட்ட முதல் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. அதாவது புலிகள் அமைப்பின் பெயரிலேயே முரண்பாடான பல அறிக்கைகள் வெளியாவதும் அதை மறுப்பதுமாக இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் பல முரண்பாடுகளை தினமும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒற்றைச் சக்தியின் கீழ் மீண்டும் அணிதிரள்வது எப்படிச் சாத்தியம் என்று கேட்டிருந்தோம்.

பதில்: உங்கள் கேள்விக்கான சுலபமான பதிலுக்காக ஒரு விடயத்தை கூறுகிறோம். நாம் திரு செ. பத்தமநாதன் குறித்து ஒரு விடயத்தை மேற் குறிப்பிட்டிருந்தோம். அதாவது அவரது முன்னைய போராட்ட பங்களிப்புக்கள் குறித்து யாரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. தலைவர் பிரபாகரனே வியக்கும் அளவிற்கு அவரது பணிகள் இருந்ததாகத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு பொறுப்பெடுத்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு தொடர்பான ஒரு கொள்கைச் சரிவை ஏற்படுத்தினார்.

இதை அவர் தனது இயலாமையின் காரணமாகத்தான் செய்ய நேர்ந்தது என்பதை முழுமையாக இல்லாவிட்டாலும் உளவியலாளர்களாக எம்மால் ஓரளவிற்கு அறுதியிட்டுக்கூறமுடியும். துரோகம், விலைபோய் விட்டார் என்ற செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. அது உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடமே விட்டு விடுகிறோம். ஆனால் மக்களில் பெரும்பாலானோர் அவரை நிராகரித்து விட்டார்கள் என்ற உண்மை இங்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது எமக்கு தெரியவில்லை. காரணம் மிகவும் சாதாரணமானது. தலைவர் மரணம் தொடர்பாக அவர் முன்னுக்கு பின் முரணாகக்கூறிய விடயங்களும் காரணங்களும் தான்.

அத்தோடு சிறீலங்கா அரசாங்கத்தை விட இந்திய அரசு மீதே மக்கள் கடுங்கோபம் கொண்டு புலம்பெயர் தேசங்களில் போராட்த்தை நடத்தினார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முழுப்பொறுப்பு இந்தியாதான் என்று இன்றும் 90 விழுக்காடு மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இதைக் கவனத்தில் கொள்ளாது இந்தியாவுடன் பத்மநாதன் கைகுலுக்கினார். இது மக்களை கோபமடையச் செய்தது. விளைவு அவர் துரோகியாக்கப்பட்டார்.

அவர் உண்மையிலேயே ஏதாவது மக்களுக்கு செய்யவென்று முயன்றிருந்தாலும் அவருடைய குழப்பமான அறிக்கைகளும் செய்கைகளும் மேற்படி துரோகப்பாத்திரத்தை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதன் விளைவாக அவர் முன்மொழிந்த “நாடு நடந்த அரசை” அமைப்பதற்கே முடியாமல் அல்லாடுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் எந்தவிதமான கடுமையான பிரச்சாரங்களும் இல்லாமல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான மக்களவை மிக வேகமாக தனது செயற்பாடுகளை முடுக்கி மக்களின் போரதரவைப் பெற்றுவருகிறது. இதன் அடிப்படை இதுதான். மக்களின் மனநிலையை தெளிவாக அடையாளம் கண்டதால் கிடைத்த வெற்றி.

எனவே குழப்பமான அறி;;க்கைகளை யாரும் விடலாம். எதுவும் செய்யலாம். தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் யாருக்கும் அடிபணியாத ஒரு அரசியல் தீர்வை நோக்கி யார் தமது அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செலுத்துகிறார்களோ அவர்களின் வழியில்தான் மக்கள் சேர்ந்து பயணிப்பார்கள். மற்றவர்களை மக்கள் மிகவேகமாக நிராகரித்துவிடுவார்கள். எனவே இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி : வரும் மாவீரர் நாளிள் கூட பல பிரிவாக அறிக்கைகள் விடுவதற்கு பல முற்சிகள் நடப்பதாக அறிகிறோம். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை வெளியாகும் போது சிலவற்றை அவதானித்திருப்பீர்கள். அது பெரும்பாலும் தாயக மக்கள், புலம்பெயர் தமிழர்கள், போராளிகளின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தில் இருக்கும். இதைத்தான் பிரபாகரனுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையிலான உளவியல் என்று அர்த்தப்படுத்துகிறோம். எனவே நாம் மேற்குறிப்பிட்டது போல் பல அறிக்கைகளை பல பிரிவினர் வெளிவிட்டாலும் அவற்றுள் எது தமிழ்ச்சமூகத்தின் உளவியலைப் படம் பிடித்துகாட்டுகிறதோ அதுவே கூடுதல் நம்பகத்தன்மையைப் பெறும். மற்றவை நிராகரிக்கப்படும். அத்தோடு இந்த போட்டிகள், பிரிவுகள் முடிவுக்கு வரும் என்றும் நம்புகிறோம்.

அத்தோடு மிக முக்கியமான விடயம். விடுதலைப் போராடத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த – அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற போராளிகள் மாவீரர்கள் மீதான வசைபாடல்கள் மேற்படி சில அறிக்கைகளில் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். செ. பத்மநாதன் தொடர்பாக எமது சில ஆதங்கங்களை சிலவற்றை இங்கு பதிவு செய்திருக்கிறோமேயொழிய அவரை துரோகி, காட்டிக்கொடுத்தவர் என்று வசைபாடுவதற்கு எமக்கு எந்த தகுதியோ அருகதையோ கிடையாது.

அந்தத் தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் இங்கு ஒவ்வொரு தரப்பும் தமது எதிர்த் தரப்பாகக் கருதி சில போராளிகள் மீது வசைபாடும் அவலம் அரங்கேறி வருகிறது. செ.பத்மநாதன், கஸ்ரோ, தமிழ்ச்செல்வன், பானு, ராம், நகுலன்என்று பட்டியல் நீளமாகக் கிடக்கிறது. உடனடியாக இதை நிறுத்தி ஒருமித்த கருத்திற்கு வருவதற்கு சம்பந்தப்ட்டவர்கள் முயற்சிக்கவேண்டும்.

தொடரும்….

Comments