முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்ட பின்னரும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போர்க் களத்தை முன் நகர்த்திச் செல்லும் என்றே தமிழர்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது சிதைவடைந்தே செல்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரழிவில் தப்பிப்பிழைத்தவர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கிச் சித்திரவதைக் குட்படுத்திய போதும், நாளாந்தம் அங்கிருந்தவர்கள் விடுதலைப் புலி முத்திரை குற்றி அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது நிலமைகள் என்ன என்பது இதுவரை வெளிவராத நிலையிலும்,
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் பால் வேறுபாடுகளின்றிக் கொடுமைகளை அனுபவிக்கும் தமிழர்களின் நிலமைகளைப் பார்ப்பதற்கு ஐ.நா. அமைப்புக்களையோ, தொண்டு நிவனங்களையோ அனுமதிக்காத நிலையிலும், யுத்தத்தின் இறுதிக் காலம்வரை ஈழத் தமிழர்கள்மேல் சிங்களப் படைகள் நடாத்திய இன அழிப்பின் சாட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கரட்ணம் அவர்கள் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன் ஆகியோர் உயிரச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அஞ்ஞானவாசம் செய்து வரும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் எவையும் திருப்தி தருவதாக இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இருக்கின்றதா? அல்லது பல்வேறாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறதா என்ற சந்தேகமே தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கி வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவானந்தன் கிஷோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு மாறாக அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் தன் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறியிருக்கிறார். அவரது தற்கால நடவடிக்கைகள் அனைத்துமே சிங்கள அரசுக்குச் சார்பானதாகவே உள்ளதாக அவதானிக்கப்படுகின்றது. தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கிட்டத்தட்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பேச்சாளர் போலவே கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார்.
தமிழ் மக்களின் துயரங்களைப் பதிவு செய்து சிங்கள தேசத்தின் தொடரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிகாந்தா மகிந்த அரசுக்கு வக்காலத்து வாங்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். இவர்கள் யாருடைய நடவடிக்கைகளையும், அறிக்கைகளையும் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பலமான நிலையில் ததிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. முள்ளிவாய்க்கால் முடிவு வரை விடுதலைப் புலிகளால் நெறிப்படுத்தப்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போது கயிறறுந்த பட்டங்கள் போலத் திசை தப்பிப் பறக்க ஆரம்பித்து விட்டதையே உணர்த்துகின்றது.
இது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அபாயகரமான அறிகுறி. ஒரு கருணா திசை தப்பி எதிரிகளிடம் சரணடைந்ததனால் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதப் போர்க் களம் சிதைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரது சரணடைதல்களும் தமிழீழ மக்களது அரசியல் போர்க் களத்தைச் சிதைத்துவிடும். தமிழீழ மக்களுக்கான இராணுவப் பலம் சிதைக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், பலவீனமாகப் போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டு நெறிப்படுத்தப்பட்ட சரியான பாதையில் பயணிப்பதே தற்போதைய தேவையாக உள்ளது.
அதை விடுத்து, தற்போது உடனிருக்கும் உறுப்பினர்களையே கட்டுப்படுத்த முடியாத பலவீனமான நிலையில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எஞ்சியிருக்கும் அரசியல் குழுக்களையும்? இணைத்துக்கொண்டு தமிழீழ மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது என்பது அவர்களை மேலும் பல அழிவுகளுக்கே தள்ளிவிடும். தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ மண்ணை மீட்பதற்கான போராட்டத்தின் அரசியல் படையாகக் கட்டியமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் இலட்சியத்திலிருந்து நழுவ முற்பட்டால், அவர்களின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைந்துவிடும். தமிழீழ விடுதலைக்காக மிகப் பெரிய அர்ப்பணிப்புக்களை ஈந்த தமிழீழ மக்கள் தற்போது சிங்கள தேசத்தால் மௌனமாக்கப்பட்டு இருந்தாலும், தேர்தல் களம் ஒன்றில் தமது தீர்மானங்களைச் சரியாகப் பதிவு செய்யத் தவறப் போவதில்லை.
அது நடந்து முடிந்த யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் அவர்களால் சரியாகவே உணர்த்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தப்புத் தாளங்கள் போட முற்பட்டால் அவர்களையும் நிராகரிக்கத் தமிழீழ மக்கள் தயங்கமாட்டார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை விடவும் மேலாக, புலம்பெயர் தமிழ் மக்கள் தம்மால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேர்த் திசையில் பயணப்பட வைக்க முடியாது என்று புரிந்து கொண்டால், தமிழீழ மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கிணையாக இன்னொரு அரசியல் சக்தியையும் உருவாக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டுதேர்தல்கள் ஆண்டாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான தீர்மானங்களை விரைந்து எடுப்பது அவசியம் என்றே கருதுகின்றோம்.
சி. பாலச்சந்திரன்
தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பறிபோகும் தாய் நிலமும் "பதவிக்காய் அலையும் ஸ்ரீகாந்தாவும்"
ஐக்கிய இலங்கை என்ற கபடமான மகிந்த சிந்தனைக்குள் பலியாகும் ஸ்ரீகாந்தா பறிபோகும் தாய் நிலத்தை மறப்பதேன்?
Comments