உயிர் கொடுத்துப் போராடிய உத்தமரை கலந்தாலோசிக்காத எந்த முடிவும் தமிழருக்கு தீர்வாகாது
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரிவிக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பெருங்கூட்டமாக சூரிச்சுக்குப் படை எடுத்திருக்கின்றார்கள்.
- இந்தக் கூட்டம் அல்லது இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் விதமும், அது தொடர்பான ஏற்பாடுகளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஊடக வியலாளர்கள், ஆய்வாளர்கள், அவதானிகள் மட்டத்தில் பலத்த சலசலப்பையும், சந்தேகங்களையும் எழுப்பி நிற்பது உண்மை.
இத்துணை தரப்புகளை சத்தம் சந்தடியின்றி ஓரிடத்தில் கூடவைக்கும் ஏற்பாட்டாளர்கள், இதுபற்றி ஊடகங்களுக்கு மூச்சுக்கூட விடாமல், அமானுஷ்ய அதீத மௌனம் காப்பது ஏன் என்ற வினா இயல்பாகவே எழுகின்றது.
முரண்பட்ட திசைகளிலே முட்டுப்பட்டு, மோதிக் கிடக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களை, ஆரவாரமே காட்டாமல் ஒரு மூடிய அறைக்குள் கொண்டுவந்து சேர்க்கும் ஓர் அமைப்பின் முயற்சியும் அதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய தரப்புகளின் பலமும் குறைத்து மதிப்பிடக்கூடியவையல்ல.
- ஆனால் இந்தக் கலந்துரையாடல், அதற்கான ஏற்பாடுகள், முன்நடவடிக்கைகள் குறித்தெல்லாம் அளவுக்கு அதிகமான மௌனம் காக்கப்படுவது ஏன்?
- இப்படி தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதுவும் இன்றைய மிக நெருக்கடியான வேளையில் ஒன்றுகூடி, தமக்குள் கலந்துரையாடி ஓர் இலக்கை எட்டுவது என்பது உலகத் தமிழினமே கூர்ந்து உற்று நோக்கி கவனிக்க வேண்டிய விடயம்.
- ஆனால், ஊடகவியலாளர்களையே நெருங்க விடாமல் இத்தகைய கலந்துரையாடலை, மிக இறுக்கமான சுவர்களுக்குப் பின்னால் மூடிய வேலிக்குள் நடத்துவது ஏன்?
இவை யெல்லாம் இயல்பாகவே சந்தேகத்தைக் கிளப்புகின்றன.
உண்மையில், நெருக்கடி மிக்க இலங்கை அரசியலில் தமிழ், முஸ்லிம் மக்கள் தரப்பில் ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அவர்களுக்கு ஏதேனும் மீட்சியை ஈட்டிக் கொடுக்கமுடியும் என்ற நன்நோக்கத்திற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்குமானால் ஏற்பாடுகள் நடந்திருக்குமானால் இத்தகைய அதீத,அளவுக்கு மீறிய கட்டுக்கோப்பு வேலி அத்தியாவசியமற்றதாகும்.
- அது மாத்திரமல்ல, தமிழர்கள் தமக்குள்ளும், அதே சமயம் முஸ்லிம்களுடன் சேர்ந்தும் ஒன்றுபட்டு அரசியல் சவால்களை சந்திப்பதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடுதான் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுமானால், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு பிரதான தரப்பு ஏன் புறந்தள்ளப்பட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
நடப்பதை நடந்தவாறே உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தித் தெரியப்படுத்துவது மட்டும்தான் ஊடகங்களின் பணி என்ற நிலைமையைத் தாண்டியதாக இன்று தமிழ் ஊடகவியல் தரப்பின் எல்லை விரிந்து, பரந்து கிடக்கின்றது.
தமிழர் அரசியலில் கருத்துருவாக்கிகளாக பிரதான கருத்துருவாக்கிகளாக இன்று ஊடகங்களும், ஊடகவியலாளர்களுமே முன்னிலை வகிக்கும் நிலைமை உள்ளது. இதன் காரணமாகவே தமிழின அடக்குமுறை நடவடிக்கைகளின் பிரதான அங்கமாக ஊடக அடக்குமுறையும் இலங்கைத்தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளுக்கு நிகராக இப்போது வரை ஊடகவியலாளர்களும் இழப்புகளை பாதிப்புகளை இங்கு சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் புறந்தள்ளி விட்டு, அரசியல்வாதிகள் மட்டத்தில் ஒத்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது நான்கு சக்கர வாகனத்தை மூன்று சக்கரத்தில் நகர்த்தும் எத்தனமாகவே படுகின்றது.
இன்றைய களநிலைமையில் ஊடகங்களைப் புறம்தள்ளி வைத்துவிட்டு, அரசியல் தலைமைகளிடையே ஒத்த கருத்தை உருவாக்க முடியும் என்பது இந்தக் கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்களின் நப்பாசையாக இருந்தால் அது புத்திசாதுரியமற்றதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
இந்தக் கலந்துரையாடலுக்கு, பெரும் பணச் செலவில் அழைக்கப்பட்ட சில அரசியல்வாதிகளை விடவும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்கும், ஆதரவும், வரவேற்பும், வழிகாட்டும் தகைமையும் பெற்ற ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றமையை மறைத்து விடமுடியாது.
இதேவேளை, 1985 இல் பல்வேறு தமிழ் போராட்ட இயக்கங்களும், கட்சிகளும் திம்புவுக்குக் கூட்டிச் செல்லப் பட்டமை போன்ற தோற்றத்தை இப்போது சூரிச் கலந்துரையாடல் முன்நகர்வும் காட்டி நிற்கின்றது திம்பு ஏற்பாட்டுக்கு இந்திய அதிகார வர்க்கம் பின்புலத்தில் இருந்தது. இப்போது சூரிச் ஏற்பாட்டுக்கு வெளியே தெரியாமல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச சக்தி எது?
- ஊடகத் தரப்பினைப் புறக்கணித்து உதாசீனம் செய்து ஓரங்கட்டி இந்தக் கலந்துரையாடலை வெற்றிகரமாக நடத்தி விட்டால், பின்புலத்தில் உள்ள அரூபக் கரங்களை மறைத்து விடலாம் என சம்பந்தப்பட்டோர் எண்ணுவார்களேயானால் அது வேடிக்கையன்றி வேறில்லை. எல்லா விடயங்களையும் எல்லாக் காலத்திலும் மூடி மறைத்து விடமுடியாது என்பதுதான் உண்மை.
பின்னிணைப்பு
விடுதலையை விலைபேசி விற்று விட்டு மகிந்தாவின் கோவணத்துக்காக தமிழர் தலைவிதியை வியாபாரமாக்கத் துணிந்து செயற்பட சூரிச்சில் ஒன்றுகூடும் கனவான்கள்
- தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி,
- ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா,
- "புளொட்" தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
- ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் ஸ்ரீதரன் (சுகு).
- சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி.,
அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா
இவர்களுடன்
- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன்
தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு பின்புலத் தளமாக இருந்து செயற்பட்டு வரும் லண்டன் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் "தமிழர் தகவல் மையம்" என்ற தமிழ் விரோத அமைப்பே இந்தக் கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது.
தொடர்புபட்ட செய்தி
கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறு தான் தீர்ப்பெழுதும்........
இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி பத்தி பகுத்தறிவு இராணுவப்புலனாய்வு ஆய்வாளர்களானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “யார் இந்த புலித்தலைமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே எந்த இலட்சியமோ கொள்கையோ இல்லா ஊடகங்குக்கும் அதன் மேதிலிகளுக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம்? ஒன்றே ஒன்று தான்
- தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழர்தாயக,தேசிய,சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தகமையுள்ள ஓரே தலைமை ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியத்தலைமைதான் மேற்சொன்ன கேள்விக்கான பதிலாகும்!
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியான பின்னடைவை அல்லது இழப்பை சந்தித்துள்ளார்கள் என்பதற்காக,போர்க்களத்தின் இறுதிக்கால ஒருசில துன்பியல் சம்பவங்களை மேற்கோள்களாகக் கொண்டு 37 வருடகால விடுதலைப்புலிகளின் தியாகத்தை அர்பணிப்புக்களை உன்னதமான உயிர் தியாகங்களை நம்பிக்கையுடன் நடந்துவந்த இலட்சியப் பயணத்தில் உழைத்தவர்களை கொச்சைப்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் கேலி செய்வதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதை மேற்சொன்னவர்கள் அறிதலும் புரிதலும் அவசியமாகின்றது அத்துடன் இராணுவ பலம் சிதைக்கப்பட்டது என்பதற்காக புலிகள் அரசியல் இராஜதந்திர பலம் இல்லாதவர்கள் என்கின்ற முடிவும் தவறானதாகும்
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் உண்மைகளை ஆதார பூர்வமாக எடுத்து சொல்வதற்கும் எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் புலிகள் என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் . காரணம் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எம் மக்களுக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் பயணித்தலே மிகமுக்கியமானதாகும்.
அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ,வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்”
இதுஈழத்தமிழருக்கு மட்டுமல்லஅவர்களுக்கும்அரோக்கியமானதல்லஎன்பதை உணர்ச்சிவசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் கறைபூசாத குறை!
அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ,அவர்கள் எந்த தலைமையால் வளர்க்கப்பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிகபட்சம் சாதிக்கக்கூடியது புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. தங்களுக்கான இருப்பை நிலைநிறுத்துவது.
புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் நான் மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை,இவர்களின் மாற்றமில்லா கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாத படி அவர்களின் செயல்கள் இருப்பதை உணர்கின்றேன் .
இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார்?எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றிய கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது,அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்த படி பேசக் கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட முடியாதவர்கள் மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை இழிவுபடுத்தும் செயல் வருந்தத்தக்கது.
- கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்த தக்கது. புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழத்தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நாம் அறியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் மூண்டதமிழின அழிப்பு தமிழ்த்தேசியம் மீதான கறையாகவே பலரும் கருதுகின்றனர்
- முட்டாள் தனமான சிந்தனைகள்,முடிவெடுக்கமுடியாது புலம் தேடி ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழத்தேசியதலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும்? என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்றுபட்ட தமிழினமாய் கைகோர்த்து செயலாற்ற இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை.
ஒரு நெருக்கடியான பின்னடைவை ஈழப்போர் சந்தித்த பின்னரும்,ஒரு தற்காலிகத் தோல்வியை ஏற்று மக்களைக் காப்பாற்ற ஈழத்தமிழினத்துக்கு யோசனை கூறுவதை, அதற்கான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதை உணர்வுகளை கட்டுப்படுத்தி கொம்புசீவி விட எத்தணிப்பதையும் நாம் மறந்துவிட முடியாது?
- புலிகளின் வீரவரலாறு,புலிகளின் போராட்டவரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் தமிழரின் உண்மையான வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கருவறைகளைச் சுமக்கும் அந்த மாவீரர் கல்லறைகளில் துயிலும் தியாகிகள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது.
ஒரு விடுதலை இயக்கத்தின் போர்க்கள தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்கவேண்டி வந்த படையணிகளை,மனித பேரவலம் என்கின்ற மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் அடக்கி தாயக விடுதலை என்ற இலட்சிய பயணத்துக்காய் போர்முனை சென்ற சூரியப் புதல்வர்களை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.
பிராந்திய நலன்,நாடுகளுக்கிடையிலான இராணுவ பொருளாதார உறவுகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் பெருங்கனவொன்றுக்கான நியாயங்கள் உள்ளவரை சுயநலமற்றவர்களாய்ப் புரட்சிகர இயக்கங்களில் அணி சேரும் இளைஞர்களின் தியாகங்களுக்கான தேவைகளும் நியாயங்களும் தொடர்ந்து இருந்துவரும்,அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும் ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டமைக்க,ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை.
காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும்,அக்கறை காட்டாத சிங்களப் பேரினவாத அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் இன்றைய வன்னி முகாங்களில் சிறைபட்டும் வதைபட்டும் கிடக்கும் எம் மக்களை போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை. சிறைச்சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன வெறியர்களுக்கான கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது.
- மாற்றுக்கருத்துடையவர்கள் என்போரின்,மற்றும் உண்மையான மாற்றம் மிக்க தமிழீழத்தலைமைத்துவத்தை ஏற்க முடியாத அவர்களது,விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது! விபரீதமானதுதான் இப்போதும் இவர்கள் தம்மினத்தை விட தமிழீழத்தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம். தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை!
37 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால் அதற்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ,அல்லது தேசியத்தலைவரோ அல்ல!
இருந்தாலும்,மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது,முயன்று பார்க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும்,இந்தியாவின் செருப்பாகட்டும்,மேடைபேச்சில் மயங்கி,போலித்தனம் பண்ணும் தமிழகத்தலைவர்களை நம்பியே காலத்தை ஓட்டட்டும்.
ஆனால் தமிழகளுக்கான தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…
இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும்,என விரும்பும் இவர்களால்,தமிழீழ விடுதலைப்போராட்டம் முன்னோக்கி நகரும் எனில்……
இது இவர்களுக்கான காலம்…? என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்
ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறு தான் தீர்ப்பெழுதும்........
இன்போ தமிழ்
“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
Comments