ஈழத் தமிழினம் அழுது புலம்புவது எதுவரை? சிந்திப்போம் செயற்படுவோம்!

ஒருவருக்குத் தீமையானது செய்யக் கூடாததைச் செய்வதாலும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதாலும் ஏற்படும் இதனை ஆங்கிலத்தில் ( errors of Commission and omission ) என்பர்.

இதனை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர இப்படிக் கூறியிருக்கிறார்

  • செய்தக்க அல்ல செயக் கெடும் - செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.

இன்று எமது இனம் இப்படியான கோர நிலைக்கு ஆளாகக் காரணமானவை எமது முந்தைய தலைவர்கள் இவ்விரு குற்றங்களையும் செய்ததன் விளைவே என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இதே தவறை நாமும் இன்று செய்வதா? எனவே புலம் பெயர் ஈழத் தமிழர் ஆழமாகச் சிந்தித்து ஒன்றாகச் செயற்பட முன்வாருங்கள்.

இது எமது இனம் சார்ந்த விடையம் இதனை ஒருவரோ ஒரு அமைப்போ தனித்து நின்று சாதிக்க முடியாது அப்படிச் செயற்படவும் கூடாது. எனவே உங்கள் அனைவரின் கவனத்துக்கும் இங்கு கூறப்படும் விடையங்களையும், விடுபட்டுப் போன முக்கியமான அவசரமான விடையங்களையும் கவனத்தில் கூட்டாக பரிசீலித்து உலகளாவிய தமிழரின் கோரிக்கையாக வைத்துச் செயற்படுவதே இன்றைய தேவையாக உள்ளது.

இலங்கை அரசு தானே மாவிலாற்றில் தொடக்கிய தமிழின அழிப்புப் போரை வன்னியை முழுமையாகக் கைப்பற்றிய பின் அதுவே போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கூறிவிட்டது. எப்படி எதுவித சாட்சிகளும் இல்லாமல் வெளி நாடுகளையும் ஊடகங்களையும் வெளியேற்றித் தனது அராஜகத்தைச் செய்ததோ, அதே வகையில் போர் மற்றும் மனித உரிமை விதிகளை மீறிச் செய்த தடையங்களை வெளியுலகுக்குத் தெரிய விடாது அழித்து விடுவதிலும் கவனமாக தொடங்கி விட்டது. மீள் குடியேற்றம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றத்தையும் ஆரம்பித்துள்ளது.

இதே முறையில் செம்மணி மற்றும் மாவிலாற்றுக் குற்றங்களை உலக நீதிக்கு மறைத்தும் தடையங்கள் சாட்சியங்களை அழித்தும் தப்பித்துக் கொண்ட முன் அனுபவம் உள்ள சிங்கள அரசு, அதனை மீண்டும் வன்னி மண்ணில் நடத்தி முடிக்கும் மன உறுதியும் ஆளுமையும் கொண்டு செயற்படுவதை அமைக்கால சம்பவங்கள் நிரூபித்துள்ளன. இந்த உண்மைகளை நாம் உதாசீனப் படுத்தி விட முடியாது.

இதுவரை நடத்திய போரைப் புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்கும் போர் என்று சிங்களம் கூற அதனை ஏற்று அதற்கு இராணுவ ஆலோசனை உட்பட சகல வளங்களையும் வழங்கியதோடு புலம் பெயர் தமிழ் மக்களின் கண்ணீரையும் கதறல்களையும் கண்டும் காணாது இராணுவத்தின் போருக்குத் தேவையான கால அவகாசத்தையும் கொடுத்து வந்தது இணைத் தலைமை நாடுகளைக் கொண்ட சர்வதேச அரசுகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மக்கள் மீட்புத் திட்டம் என்றும் போருக்குப் பின் தீர்வு எனவும் கூறி இணைத்தலைமை நாடுகளும், அமெரிக்க அரசும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போருக்கு வசதியும் வாய்ப்பும் கொடுத்து விட்டன. இந்தத் திருப்பணியில் இந்திய அரசின் செல்வாக்குடன் உள்ள (SARC) தெற்கு ஆசியப் பிராந்திய கூட்டமைப்பு இலங்கைக்கு அனைத்துலக ஆதரவையும் ஆபிரிக்க நாடுகளின் செல்வாக்கையும் தேடிக் கொடுத்துப் பெரும் பங்கை வகித்து உள்ளது.

இலங்கை இராணுவத்துக்கு இராணுவ ஆலோசனை வழங்க வன்னிப் படைத் தளத்துக்கு சென்றிருந்த அமெரிக்க, பிரித்தானிய, இந்திய, பாக்கிஸ்தானிய, வங்க தேச, மாலைதீவு, யப்பான் நாட்டு இராணுவ அதிகாரிகள் 16.12.2008ல் போய் வந்த பின்னர்தானே போரியலில் தமிழருக்கு எதிரான பின்னடைவுகள் பெரிய அளவில் ஏற்பட்டன. எனவே இத்தகைய கனவான்கள் எமக்கு நல்லதே செய்வார் என நம்பி நாம் ஏமாந்து போக வேண்டுமா என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

இலங்கை அரசு போரை முடித்து விட்டதாகக் கூறிவிட்டது. அடுத்து மீளமைப்புப் பணிகளையும் தானே அன்றி வேறு எவரது தலையீடும் இன்றிச் செய்து முடிக்கப் போவதாக உறுதிபடக் கூறிவிட்டது. புலிகளின் தலைமையை முற்றாக அழித்து விட்டதாகவும் அறிவித்து விட்டது. இப்போது தடை முகாம்களில் உள்ள தமிழர் பற்றிய விபரம், அவர்களின் பாதுகாப்பு, எண்ணிக்கை என்பன எவருக்கும் தெரியாத இருளில் உள்ளது.

தலைமை பற்றிய பிரச்சனையில் தமிழினம் தவித்துக் கொண்டே இருக்குமானால் கொன்றொழிக்கப் பட்ட மக்களுக்கான நீதி செம்மணி, கொக்கட்டிச் சோலைக் கொலைகள் போன்று மறக்கடிக்கப் பட்டு தடையங்கள் அழிக்கப்பட்டுவிடும். இப்போதே அந்தப் புதை குழிகள் மீது புத்த கோயில்களும் மடங்களும் எழுப்பப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.

தடுப்புக் காவலில் உள்ள மக்களின் கதியும் பல விதமான சோகங்கள் நிறைந்தும் எஞ்சி உள்ளவர்கள் வன்னியில் குடியேற்றப்படும் இராணுவம் சார்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் அடிமைக் குடிமக்களாக வாயில்லாப் பூச்சிகளாகக் குடியமர்த்தப்படுவர். மேலும் நிலத்தடி மற்றும் விவசாய வளங்கள் வசதிகள் கடல் வளம் அத்தனையும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் சிங்கள மக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஏற்கனவே யாழ்ப்பாண மக்களும் மட்டக்களப்புத் திரிகோணமலை சம்பூர் தமிழ் மக்களும் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக விவசாயம் மீன்பிடித் தொழில்கள் கூடச் செய்ய முடியாது பிறர் உதவியிலும் இலவச நிவாரணங்களிலும் தங்கி இருக்கும் கையறு நிலையில் உள்ளனர். இதே நிலை இன்று வன்னி மக்களுக்கும வந்து விட்டது. இந்நிலையில் இன்று இலங்கையில் உள்ள ஒட்டு மொத்தத் தமிழருமே சிங்களத்தின் கொத்தடிமைகளாகி விட்டனர் என்பதே உண்மை நிலை.

இன்று தமிழரின் நிலை பற்றி புகலிடத் தமிழர் அல்லாது வேறு எவரும் எதுவும் செய்ய முடியாத அரசியல் இலங்கையிலும் இந்தியாவிலும் உருவாக்கி வட்டது. ஆர்ப்பாட்டங்கள் வீதி மறிப்புகள் புகலிட மக்களிடையே ஈழத் தமிழர் பற்றிய ஆபத்தான கருத்து உருவாக்கம் தலை தூக்கும் செய்திகள் வெளிவரத் தொடங்கி விட்டன. இவை வருடத்தில் எப்போதோ ஒருநாளில் எங்காவது ஒரு நாட்டில் எற்படுவதே இந்நாட்டு மக்களுக்கு ஏற்புடையனவாக இருக்கும். எனவே இவற்றைத் தொடர்ச்சியாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட நடத்துவது சாத்தியமான விடையம் அல்ல.

எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளாப்படக் கூடிய ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் நெறிப்படுத்தப்படும் பிரச்சாரம் கவன ஈர்ப்பு அரசியல் ஒன்று தான் நாம் எமது இளம் தலை முறையினருக்கு வழிப்படுத்த வேண்டிய செயற்பாடாக உள்ளது. அத்தகைய ஒரு செயற்பாட்டுக்கு உடனடியாக நாம் இறங்குவதன் மூலமே இலங்கை அரசின் கொடுமைகளில் இருந்து நாம் எம் தொடர்ச்சியான உறுதியான செயற்பாடுகள் மூலம் எம் இனத்தைக் காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள எல்லா தமிழர் பேரவைகளும் கூட்டாகச் சில அதி முக்கிய தேவைகளை கோரிக்கைகளாக இணைத் தலைமைமை மற்றும் சர்வதேசச் சமூகத்திடம் முன்வைத்து எமது இனத்தின் அடுத்த கட்ட அரசியல் செயற் பாடாகக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவைச் சம்மேளனம் கூடித் தீர்மானித்தது போன்று மீண்டும் இந்தச் சம்மேளனம் கூடித் தீர்மானங்களை நிறைவேற்றி உலக அரசுகளின் ஆதரவைப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மாதிரியாக எமது பிரேணைகள் பின்வரும் வடிவில் அமையலாம்.

இலங்கை அரசு தனது போரை முடித்துக் கொண்டு விட்டது என அறிவிக்கப் பட்ட நிலையிலும், மீள் கட்டுமானம் மறுவாழ்வுத் திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையிலும், இலங்கை ஒரு நாடு ஒரு தேசம் பெரும் பான்மை சிறுபான்மை கிடையாது என்பதன் மூலம் சிங்கள அரசு இலங்கை ஒரு பல் இன, பல் மத, பல்கலாச்சார மக்களைக் கொண்ட நாடு என்பதை மறுதிலிப்பதாலும் தனது ஆரிய சிங்கள பௌத்த மேலாதிக்க வெறியை வெளிப் படுத்தியுள்ளது.

1970ல் ஸ்ரீமா தன்னிச்சையாக அரசமைப்பை மாற்றியது போன்று, 1972ல் ஜே.ஆர். இலங்கையின் அரசமைப்பை மேலும் இனவெறியும்;மத வெறியும், மாற்றியமைக்க முடியாத கடினத் தன்மையும் கொண்ட அரசமைப்பை உருவாக்கியது போன்று அதி வெறி கொண்ட ஜாதிக ஹெல உறுமய, ஜே.வீ.பீ. போன்ற கட்சிகளுடன் சேர்ந்து இதுவரை வரலாறு காணாத அழிவையும் அவமானத்தையும் தமிழினத்துக்குத் தந்த மகிந்த இதே சக்திகளின் கூட்டுடன் தமிழரின் பரம்பரை வாழிடங்களான வடக்கு கிழக்கு மகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் ஒரு முழுமையான தமிழின அழிப்பைச் செய்ய உள்ளார் என்பதாலும், உலகத் தமிழர் பேரவைகளின் சம்மேளனம் அனைத்துலக நாடுகளிடம் பின் வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது,

  1. சர்வதேச சமுதாயம் குறிப்பாக இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, யப்பான், நோர்வே இவர்கள் எமது இன்றைய அழிபாடுகளுக்குப் பெரிதும் துணை நின்றவர்கள் என்ற காரணத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உடனடியாக கனதியான ஈடுபாடு கொண்டு பின் வரும் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக் கேட்டுக் கோள்கிறோம்.

  2. உடனடியாக ஐ.நா. தலைமையிலான அனைத்துலக அமைதிப் படையின் கீழ் வடக்குக் கிழக்குப் பகுதிகளை உட்படுத்தி மூன்றாண்டுப் போரினாலும் இராணுவ மற்றும் ஆயுதாரிக் குழுக்களினாலும் அடக்கு முறைக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்குப் பாதுகாப்பும் மீள் வாழ்வும் அளிக்கவும்.

  3. தடை முகாம்களில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களினது பாதுகாப்பு, பராமரிப்பு, மீளவும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரங்களை மீளப் பெற உதவ வேண்டும். அவர்களுக்கான மருத்துவத் தேவைகள் சிகிச்சை உடல் உள சீர்ப்படுத்தல் என்பன உடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

  4. . மக்களின் சரியான எண்ணிக்கை, கொல்லப் பட்டவர்கள், காயங்கள் பட்டிணியால் இறந்தவர்கள், கைதானவர் காணாமல் போனவர்கள் பற்றிய வைத்தியசாலைப் பதிவேடுகள் உட்படத் துல்லியமான புள்ளி விபரங்கள் பெறப்பட வேண்டும். கைதான, சரணடைந்த வைத்தியர்கள் அரச அலுவலர்கள், பொது நலத் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

  5. . இனப் படுகொலைக்கு ஆதாரமான தடையங்கள் சாட்சியங்களை உடனடியாகப் பாதுகாப்புக்கு உட்படுத்தி, நெறிப்படுத்தி போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மூலம் குற்றவாளிகளை உலக நீதி மன்றில் நீதி விசாரணைக்கு உட்படுத்திக் குற்ற வாளிகளுக்குத் தண்டனையும் பாதிக்கப் பட்டவருக்கு நட்ட ஈடு நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்க:

  6. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மை என்பவற்றை அங்கீகரித்து ஈழத் தமிழ் மக்களும் அவர்களின் பூர்வீகமும் கொண்ட அனைத்துலகில் வாழும் தமிழ் மக்களின் வாக்குப் பதிவு மூலம் தமக்கேற்ற அரசை தெரிந்து கொள்ளும் அரசமைப்பின் மூலம் ஒரு நிரந்தர அமைதித் தீர்வுக்கு வழி செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.

  7. மூன்றாண்டு கால ஐ.நா.அமைதிப் படையின் கீழ் வடக்கு கிழக்கு முhகாண மக்களின் இயல்பு வாழ்வு மீளாக்கம் செய்த பின்னர் முழு அளவிளான சுய நிர்ணய ஆட்சி முறை பற்றிய மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவும் அதன் அடிப்படையில் ஐ.நா.மற்றும் அனைத்துலக அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய நடவடிக்கையில் உலகத் தமிழர் பேரவைகளின் கூட்டமைப்பு மீண்டும் உடனடி வேலைத்திட்டங்களில் ஈடுபடத் தயவாக வேண்டி நிற்கிகும் அதேவேளை அவர்களின் முயற்சிகளை உலகத்தமிழினம் வலுப்படத்துவது காலத்தின் கட்டாயமாகின்றது.

ஈழப்பிரியன் இன்போ தமிழ்

Comments