“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”- – என்று உலக இலக்கியத்தின் உச்சியில் நின்று முழங்கிய நம் வள்ளுவனின் வாயில், கியூபாவையே தூக்கிப் போடலாம். அதன் பட்டப்பெயர் உலகின் சர்க்கரைக்கிண்ணம். ஆம். உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தியாவது அங்கேதான்.
ஈழத் தமிழினத்தை ஏழு நாட்டு சர்வாதிகாரக் கூட்டணியின் உதவியோடு நசுக்கிய காட்டுமிராண்டித்தனத்தின் உச்சபட்ச- மிருகத்தனத்தின் அதிகபட்ச இனப் பாரபட்ச ராஜபக்ஷே அரசில் அதற்குள்தான் எவ்வளவு குழப்பங்கள்… கழுத்தறுப்புகள்… முதுகுக் குத்தல்கள்..!
ரத்தவெறி பிடித்த மிருகங்களுக்கு, வெறி எல்லை மீறினால் ஒரு நிலையில் தங்களுக்குள்ளேயே கடித்துக்கொள்ளும் என்ற உண்மைக்கு ஏற்ப பொன்சேகாவும் ராஜபக்ஷேவும் முட்டிக்கொள்ள, இதற்கெல்லாம் காரணமே கோத்தபய ராஜபக்ஷேதான் என்று பொன்சேகா தரப்பு சொல்ல, தம்பியும் அண்ணனும் முட்டிக்கொள்ளப் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன.
பிரணாப் முகர்ஜியிடம் கைகுலுக்கும் ராஜபக்ஷே முகத்தில் ஓர் ஆரம்ப கட்ட மனநோயாளியின் அரைவேக்காட்டுப் புன்னகையைப் பார்க்க முடிகிறது. சீனாவிடமும் அமெரிக்காவிடமும் சிக்கி சிங்களம் நார் நாராகக் கிழிவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். ஒருவேளை நம்மால் முடியாது போனாலும் நமது அடுத்த தலைமுறை கண்டிப்பாகப் பார்த்து வலிக்க வலிக்க கைதட்டும்.
சரி, எதிரியின் நிலை இது என்றால்…
துரோகிக்கு?
திருடனுக்குத் தண்டனை என்றால் அவனுக்குக் கட்டுச்சோறு கட்டிக்கொடுத்தவனுக்கு? நமது மத்திய அரசுக்கு? அதற்குத் துணைபோன மாநில தி.மு.க. அரசுக்கு? அகில இந்திய அதிகார மட்டத்துக்கு? செய்த துரோக பாவத்துக்கு இப்போது நினைத்தாலும் பரிகாரம் செய்ய முடியும். அது பாவத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்ல; நமது ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நன்மைக்காகவும் செய்ய வேண்டிய பரிகாரம். இந்தப் பரிகாரத்தில் ஆன்மிகமும் உணர்ச்சியும் மட்டும் இல்லை. அறிவும் இருக்கிறது.
ஒரு விதத்தில் அது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரிகாரம் மட்டும் இல்லை. ஒவ்வோர் இந்தியனின் எதிர்காலச் சந்ததிகளின் நன்மைக்கும் செய்ய வேண்டிய பரிகாரம் அது.
என்ன என்று பார்ப்பதற்கு முன்… ஒரு ஃபிளாஷ் பேக்…
சுமார் ஒருவருடத்திற்கு முன்பு 12-12-2008 தேதியிட்ட நமது ‘தமிழக அரசியல்’ இதழில் நாம் எழுதியிருந்த ‘ஏன் வேண்டும் தனி ஈழம்? – இந்தியர்கள் உணர வேண்டிய தருணம்’ என்ற கட்டுரையின் சுருக்கமான சுருக்கம் வருமாறு:-
இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுமே மதவெறி பிடித்த நாடுகள். நம் நாட்டிற்குள் மத உணர்வைத் தூண்டி இந்தியாவின் மதச் சார்பின்மையை அசைக்க முயலும் நாடுகள். எனவே இந்தியாவின் உடனடித் தேவை தனக்கு அருகில் தன்னைப்போல ஒரு மதச்சார்பற்ற நாடு. அது தனி ஈழத்தில் மட்டுமே சாத்தியம்.
தமிழினத்துக்கு எதிராக இலங்கையை ஆதரிக்கும் இந்திய மாமாக்கள், ஒரு நாளும் இலங்கையை மதச்சார்பற்ற தேசமாக மாற்ற முடியாது. இந்திய எதிர்ப்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கடுகளவுகூட வித்தியாசம் இல்லை.
இந்திய-சீனப்போரின்போது, இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை ஆதரித்தனர். ஆனால், சிங்களர்கள் சீனாவை ஆதரித்தனர். திபெத் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பிரச்னை ஏற்பட்ட போதும், சீனாவையே முழுமையாக இலங்கை ஆதரித்தது. இவையெல்லாம்கூட மதப்பற்று என்று காரணம் கூறிவிடலாம். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஈழத் தமிழர்கள் இந்தியாவை ஆதரிக்க, இலங்கையோ பாகிஸ்தானை ஆதரித்தது.
ஆக பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளால் எதிர்கால இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படாமல் காக்க ஒரே வழி…
ஈழத் தமிழனின் நன்மைக்காக என்று மட்டும் இல்லாமல், இந்தியாவின் நன்மை என்று சுயநலமாக, அறிவுபூர்வமாக யோசித்தால்கூட, தனி ஈழத்தை இந்தியாவே ஒரு மதச்சார்பற்ற தேசமாக உருவாக்கி, அதன் தோளில் கைபோட்டு தோழனாக வைத்துக்கொள்வதுதான்!
–இதுவே அந்தக்கட்டுரையின் சாரம்சம்.
ஆனால் என்ன நடந்தது?
பிள்ளையைக் கொல்ல பேய்களைத் துணைக்கு அழைத்த பித்தனின் கதையாக, பாகிஸ்தான், சீன ராணுவத்தோடு இந்திய ராணுவமும் சேர்ந்து, சிங்களனுக்கு உதவி ஈழத் தமிழினத்தை மண்ணில் புதைத்தது.
உலகில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும், பாதிக்கப்படும் அந்த இனத்துக்கு இந்தியா உதவும் என்ற நோக்கில் கூட்டுச் சேராக் கொள்கையை உருவாக்கி, அதனாலேயே ‘ஆசியஜோதி’ என்று அலங்கரிக்கப்பட்டார் ஜவஹர்லால் நேரு. அவர் கண்ட சுதந்திர இந்தியாவின் 62 ஆண்டுகாலப் பெருமையை சுக்குநூறாக உடைத்து, மனிதநேய உலகமே இந்தியாவை காறி உமிழும் நிலைக்கு ஆளாக்கினார்கள் சோனியாவும், மன்மோகனும்!
ஏப்பம் விடும் நேரத்திற்குள் ஓர் உண்ணாவிரதத்தை நடத்திமுடித்து, தமிழக மக்களின் தமிழ் ஈழ ஆதரவு உணர்வை திசை திருப்பினார், கருணாநிதி. பஸ் நிறுத்தத்தில் நிற்கும் யாரோ ஒருவர் போல, போர் நிறுத்தம் நடந்துவிட்டதாகப் பொய்ச் செய்தி தந்தார் சிதம்பரம்.
ஒருநாள் செலவுக்குக்கூட உருப்படியாகத் தாங்காத ஒரு சில நூறு ரூபாய்களுக்காக, ஓட்டுரிமையை விற்று வாக்காளர்கள் தங்கள் பங்குக்குத் துரோகம் இழைக்க, அதே நேரம், அதே நிமிடம், அதே நொடிகளில்தான், உலகின் தலைசிறந்த தீரம்மிக்க இனவிடுதலைப் போராட்டங்களில் ஒன்று என உலகளாவிய நடுநிலையாளர்களால் ஒப்புக்-கொள்ளப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், ஏழுதேசக் கோரைப் பற்களால் சிதற அடிக்கப்பட்டது.
ஓட்டு ‘வாங்கி’ வென்றவர்களின் வெறிக் கூச்சலில் இந்த நூற்றாண்டின் மனித ஓலம் கரைந்து போனது. முள்வேலிக் கம்பிக்குள் முடங்கிய லட்சக்கணக்கான தமிழர்கள் கழிப்பிட வசதியின்றி, உணவின்றி, நீரின்றி, நோய்வாய்ப்பட்டு, புண்வந்து, சீழ்ப்பிடித்து சித்ரவதைப்பட்டு சாவதைவிடக் கொடுமையான நிலையில் ஒரு வாழ்க்கை வாழ்கின்றனர்.
அரைகிலோ மீட்டருக்கு அப்பால் ஆடவனின் முகம் தெரிந்தாலே அனிச்சையாய் ஆடைதிருத்தும் நம் உயர்ந்த இனத்துப் பெண்கள், உடலில் ஆடையே இல்லாததையும் அறியமுடியாமல் மனநோய்க்கு ஆளாகி அலைகின்றனர். “நியாயமாவது…. ஜெயிப்பதாவது! எவன்டா உளறுவது?” என்ற ஓங்காரக் குரலுக்கு உதாரணமாகி வலு சேர்த்தது ஈழத் தமிழனின் இழிநிலைமை. அகதிகளின் நிலை அறிய பயணம் போவதாகச் சொல்லிவிட்டு கூலிங்கிளாஸ் போட்டு, கும்மாளம் அடித்த கோமான்கள், எல்லோரும் நினைக்கிறார்கள்… ‘நாம் சாமர்த்தியமாக நடந்து கொண்டுவிட்டோம்’ என்று. அதன் மிச்ச எச்ச சொச்சமாகத்தான், இன்று பொன்சேகாவால் ராஜபக்ஷேவுக்கு ஆபத்து என்றதும், ராஜபக்ஷே வீட்டு வாசலில் முறைவாசல் செய்ய, பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைக்கிறார் சோனியா!
எல்லாவிதத்திலும் தமிழ்நாட்டைச் சுரண்ட நினைக்கிற நமது அண்டை மாநிலங்களுக்கு ஒரு பயம் உண்டு. தனி ஈழம் மலர்ந்தால் அதைப்பார்த்து தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இன உணர்வு வந்துவிடும். பின்னர் தமிழ் நாட்டிலேயே தமிழனை ஏய்க்க முடியாது. எனவே தமிழக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசை மாற்றுகிற வேலையை நாராயணன்களும் மேனன்களும் ஆண்டனிகளும் ரொம்பகாலமாகச் செய்து வருகிறார்கள்.
இவ்வாறாக, தமிழினத்தில் இருந்து உருவான மற்ற மொழி இனங்கள், பெற்ற தாயின் கழுத்தை அறுக்கும் செயலாக, தமிழினத்தையே அழிக்கப் பார்க்க, வட இந்திய வங்காள இனமோ, நம் இனத்தில் இருந்து உருவான சிங்கள இனத்தின் நன்மைக்காகக் காய்நகர்த்துகிறது. வட இந்திய அரசியலை வழிநடத்தும் வங்காளிகள் சார்பாக முகர்ஜிகள், இதைப்பார்த்துக் கொள்கிறார்கள்.
தவிர, சிங்கள மண்ணில் வியாபாரம் வளர்க்கும் இந்திய முதலாளிகள் – சில தென்னிந்திய சீமான்கள் உட்பட கண்மூடித்தனமாக சிங்களனை ஆதரிக்கின்றனர். ஆக, இவர்கள் யாருக்குமே இந்திய தேசத்தின் மீது பற்று இல்லை. பணம், பதவி, பவிசு,சொகுசு, இதுவே குறி!
இந்து மகா சமுத்திரத்தில் இலங்கைக் கடற்படையில் சிங்களர்களும் சீன வீரர்களும் சேர்ந்து தமிழக மீனவர்களை அடிக்கின்றனர்.சிங்களனின் குறி வேண்டுமானால் தமிழனாக இருக்கலாம். ஆனால், சீனனின் குறி இந்தியா!
இந்தியாவின் வட எல்லையில் மட்டுமல்ல. தென் எல்லையில் நினைத்தால் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு சீனாவுக்கு அதிகரித்திருக்கிறது. சீனாவின் பிடியில் இந்தியா ஒரு சாண்ட்விச் ஆகலாம். இந்தியாவிற்கு எதிராக சீனா என்ன சொன்னாலும் பாகிஸ்தான் கேட்கும். பாகிஸ்தான் கண் காட்டினால் பங்களாதேஷ் தலையாட்டும். என்ன செய்யப் போகிறது இந்தியா?
சீனாவின் தூண்டுதலோடு இலங்கை தன் வேலையை ஆரம்பித்துவிட்டது என்பதற்கு பின்வரும் தகவலே சாட்சி. “அந்தமான் தீவுகள் இலங்கையின் கடல் பகுதிக்குள் வருவதால் அவை இலங்கைக்கே சொந்தம். எனவே, இந்தியா அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளார் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்ல காம. படியுங்கள் டெல்லிவாலாக்களே! நன்றாகப் படியுங்கள். அவர் சொல்வது கச்சத்தீவு என்று எண்ணி, தமிழன் நாசமாகப் போனால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம். அவர்கள் கேட்பது அந்தமான் தீவுகளை! இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் ராஜபக்ஷேவுக்குக் கால்கழுவி விடுகிறது இந்தியா. பிரணாப் முகர்ஜியாலும், சிவசங்கர மேனனாலும் இந்தியாவின் வெளியுறவுத்துறை விபரீத வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
‘தனி ஈழம் அமைந்தால் விடுதலைப்புலிகள் அமெரிக்காவுக்கு ஆதரவாகப் போய்விடுவார்கள். எனவே நாம் இலங்கையைத்தான் ஆதரிக்க வேண்டும்’ என்று இங்கே சிலர் பேசினார்கள். ஆனால் அந்த வேலையைச் செய்திருந்தால், ஈழம் மலர்ந்திருக்கும். அழிந்தாலும் இந்தியாவை இக்கட்டில் தள்ள மாட்டோம் என்று உறுதியோடு இருந்து, அந்த இந்தியாவாலேயே அழிந்தனர் விடுதலைப்புலிகள்.
இனி சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவும் இலங்கையில் இறங்கும் . இப்போது அந்தச் சிலரின் குரல் கேட்கவே இல்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தை அழித்ததன் மூலம் நமது இந்திய தேசம் நம் வாயிலேயே நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டது என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்?
இனியாவது இந்திய தேசத்தை நிஜமாக நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் சிந்திக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நமது இந்திய தேசத்தின் வளைந்த கூண் முதுகு நிமிர வேண்டும். தனி ஈழத்தை இந்தியாவே உருவாக்க வேண்டும். அதை மதச்சார்பற்ற தேசமாக அமைத்துத் தர வேண்டும். அதன் மூலம் கொழும்புவின் கொழுப்பு அடக்கப்பட வேண்டும். சீனாவின் பிடியைத் தளர்த்தவேண்டும். சீனாவோடு இணைந்தாவது இலங்கையில் கால்பதித்து இந்தியாவை கண்காணிக்க எண்ணும் அமெரிக்காவின் ஆசையை முறியடிக்க வேண்டும்.
எதிர்கால இந்தியாவின் நன்மைக்காக இதைச்செய்துவிட்டு, ஈழத் தமிழன் நலனுக்காகத்தான் இதைச்செய்தோம் என்று இந்தியாவின் இருபத்து சொச்சம் மொழிகளிலும் கூவிக்கொள்ளுங்கள்! எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இன்னும் தயங்கினால் இந்தியாவின் முட்டாள்கள் என்று இக்கால இந்திய அரசியல் தலைவர்களை எதிர்கால வரலாறு எழுதி வைக்கும். இல்லையில்லை செதுக்கி வைக்கும். டர்பன்களால் அதை மறைக்க முடியாது. டர்பன்களால் வழுக்கை மறைக்கப்படலாம். இந்த இழுக்கை மறைக்க முடியாது. ஒன்று உண்மை! காவிரிக்கு என்னவோ, அதுதான் சிந்து நதிக்கும்! முல்லைப் பெரியாறு அணைக்கு என்னவோ அதுதான் சட்லெஜ் அணைக்கும்! தமிழனுக்கு என்னவோ அதுதான் ஒட்டுமொத்த இந்தியனுக்கும்!
–
திருமொழி
நன்றி: தமிழக அரசியல்
Comments