புத்தரின் பூமியாகும் தமிழரின் நிலங்கள்

வாள் பிடிக்க தெரியாத வழிப் போக்கர்களுக்கு இடம்கொடாமல், என்றும் தலைநிமிர்ந்து ஆட்சியை நடத்தியவர்கள் வன்னி மன்னர்கள். இதில் வன்னிராச்சியம் பண்டாரவன்னியனாலும், யாழ்பாணராச்சியம் சங்கிலியனாலும் மற்றும் எல்லாள மன்னன் என்றும் அன்று தமக்கென்று ஓர் இராச்சியத்தை அமைத்து வாழ்ந்துவந்த மன்னர்கள் இவர்கள்.

அன்று வாழ்ந்த மன்னர்கள் தமக்கென்று ஓர் இடத்தினை தேர்வுசெய்து தமக்கென கட்டுப்பாடுகள் வைத்து தமக்கென படைகள் அமைத்து தமக்கான நிலங்களில் விவசாயம் செய்து மாற்றான் காலில் மண்டியிடாது அரசுரிமை நடத்திய மன்னர்கள். அவர்கள் வழிவந்த தமிழ் மக்கள் இன்று சோற்றுக்கும் கஞ்சிக்கும் கெஞ்சும் நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழ்ந்த மன்னர்கள் கோட்டைகட்டி இராச்சியம் அமைத்து வாழ்ந்து வந்தவர்கள் என்பது நாம் அறிந்த உண்மை. அவர்களின் இராச்சியங்கள் கூட தமிழ் மக்களின் வாழ் இடங்களில் காணப்படுகின்றன என்பதும் உண்மை. இந்தவகையில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு என்னும் இடத்தில் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் தோற்கடித்ததற்கான கற்சிலை ஒன்றினை கட்டிவிட்டு போனார்கள்.

இதனை தமிழ் மக்கள் பேணிப் பாதுகாத்துவந்தார்கள். இவ்வாறுதான் யாழ்பாணத்திலும் சங்கிலியன் சிலை தொடக்கம் தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான ஆதாரங்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் காணப்படுகின்றன. இதனை அழிந்துவிடாது பாதுகாப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். ஏன் என்றால் இவைகள் அழிந்தால் தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் எனகூறிக்கொண்டிருக்கும், ஒரிசாவில் இருந்து கப்பலேறி வந்த சிங்களவர்களுக்கு இன்னும் இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடும். இந்த வரலாற்றுச் சின்னங்கள்தான் தமிழரது வாழ்வினை அவர்களின் பூர்வீக நிலங்களை ஆதாரம் செய்கின்றன. இவற்றைஎல்லாம் மாற்றி அமைக்கும் முகமாக இன்று தமிழ் மக்களை அவர்களது இடங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டு அவர்களை சுதந்திர நடமாட்டமற்ற பகுதியில் வெளியில் நடக்கும் எதுவும் தெரியாத ஊமைகளாக அடைத்துவைத்துவிட்டு, தமிழ் மக்களின் நிலங்களில் சிறீலங்கா அரசு நாடகமாடுகிறது.

உண்மையில் முகாம்களில் இருக்கும் மக்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாது. ஏன் என்றால் அங்கு வானொலி கேட்கக் கூடதடை. மின்கலம் வைத்திருக்க கூடதடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கேட்டாலும் சிறீலங்கா அரசின் ஊதுகுழல் ஊடகங்களைத்தான் கேட்கமுடியும். அவ்வாறு அங்கு அலைவரிசை செல்கின்றது சுதந்திரமான அரசியல்சார்ந்த பத்திரிகைகளைக்கூட மக்கள் படிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் என்னவெனில் முகாமில் மக்களுக்கு வழங்கப்படும் பத்திரிகை தினமுரசு. சிறீலங்கா அரசின் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈபிடிபி நடத்தும் பத்திரிகைதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் சினிமாப்பட நடிகைகளின் அரைகுறைப் படங்கள்தான் மக்களை கவர்ச்சிப்படுத்துவதற்காக போடப்பட்டுள்ளது. இதுதான் அங்கு மக்கள் விரும்பி பார்க்கும் பத்திரிகை என்று கூறி சிறீலங்காப்படை ஒட்டுக்குழுவினர் இதனை வழங்குகின்றார்கள்.

இவ்வாறு தமிழ் மக்களின் எண்ணங்களை மாற்றும் செயற்பாடுகள் ஒரு பக்கத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கையில், மறுமுனையில் தமிழர்களின் நிலங்களில் என்ன நடக்குதென்று தமிழர்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் ஒன்றும் தெரியாத இடத்தில் அடைபட்டுகிடக்கிறார்கள். இங்குதான் நிலமைமாறுகின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த இடங்களில்எல்லாம் பௌத்தமதம் தலைதூக்குகின்றது. சிங்கள பேரினவாத அரசால் அதன்படைகளால் பரப்படும் ஒரு மதம்தான் பௌத்தமதம். புத்தரை முதன்மை கடவுளாக கொண்ட இம்மதம் அரசமரங்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் இவர்களின் வழிபாட்டுதலங்களாக மாறிவிடும். இங்கு அரசமரத்தினை சிங்களவர்கள் போதிமரம் என்றுதான் கூறுவார்கள். தமிழ் மக்களின் வாழ்விடங்களில் எல்லாம் அரசமரங்கள் உண்டு. ஏனென்றால் தமிழ் அரசர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைத்தான் தமிழ் மக்கள் பரம்பரைத் தெய்வங்களாக வணங்குகினறார்கள்.

அன்று அரசமரங்களில் எல்லாம் பிள்ளையார் எனப்படும் சிவன் உமாதேவியர் மண இணையரின் மூத்தமகன் ஆனைமுகன் தெய்வத்தினை வைத்து அரச குலமக்கள் வாழிபட்டுவந்தார்கள். பின்பு தமிழ் மக்களாலும் வழிபடப்பட்டன. இவ்வாறுதான் தமிழ் மக்களின் நிலங்களில் எல்லாம் புத்தமதம் பரப்பும் திட்ட தந்திரங்கள் எல்லாம் சிங்களப்படைகளுக்கு பௌத்த துறவிகளால் ஊட்டப்படுகிறது. 1990 காலப்பகுதிகளின் பின்பு ஆனையிறவு படைத்தளம் விரிவாக்கப்பட்டு பளை கிளிநொச்சி என அப்பிரதேசம் விரிந்து முழுமையான கட்டுப்பாட்டில் சிறீலங்காப் படையகளால் கொண்டுவரப்பட்டது. அங்கு பல புத்தவிகாரைகள் கட்டப்பட்டன. பளைப் பகுதியில் பாரிய புத்தர்சிலை கட்டப்பட்டு சிங்களப் படைகளின் வழிபாட்டுதலமாக மாற்றப்பட்டிருந்தது. இதெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் முளைத்த புத்தர் சிலைகள்.இங்கு இன்னும் ஒன்று எடுத்துகூறவேண்டும். ஊரும் எறும்பினை கொல்லாத பௌத்த மதத்துறவிகள் துப்பாக்கி ஏந்தி தமிழரைக் கொல்ல சிங்களப் படையில் இணைந்து களமுனைக்கு செல்கிறார்கள்.

இவ்வாறான சிங்களப் படைகள்தான் களமுனைகளில் புத்தர்சிலைகளை நிறுவுவதற்கும் புத்த வழிபாட்டுதலங்களை அமைப்பதற்கும் மூலகாரணமாக விளங்குகிறார்கள். அன்று பளைப்பகுதியில் சிங்களபடைகளால் அமைக்கப்பட்ட புத்த தலங்கள் 2000ம் ஆண்டு 4ம் மாதம் 22ம் திகதி ஆனையிறவின் மீட்பின் பின்தான் இந்த புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு தெரியவந்தது.இவ்வாறுதான் 13.05.1997 அன்று தமிழர் நிலங்களை வல்வளைக்கவென ஜெயசிக்குறு எனும் படை நடவடிக்கை மூலம் வவுனியாவில் இருந்து புறப்பட்டு தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கியபடி சிங்களப் படைகள் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரையும், மாங்குளம் தொடக்கம் ஒட்டிசுட்டான் வரையான வீதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நின்றுகொண்டிருந்தன. புலிகளின் கடுமையான தாக்குதலால் தொடர்ந்து முன்னேற முடியாமல் இப்பிரதேசங்களில் ஒரு ஆண்டுக்குமேலாக நிலைகொண்ட சிங்களப்படைகள் அங்கும் புத்தர்சிலைகளை வைத்து வழிபடுகின்றார்கள்.

இதில் அழிக்க முடியாதளவிற்கும் சில சிலைகளை அங்கு நிறுவுகிறார்கள். குறிப்பாக அம்பகாமம் எனப்படும் காட்டுப்பகுதியில் நிலைகொண்ட சிங்களப்படைகள் ஆறு அடி உயரம்கொண்ட புத்தர்சிலையினை வைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு சிலவழிபாட்டுதலங்கள் காடுகளுக்குள்ளும் தமிழர் வாழ் இடங்களுக்குள்ளும் பரவுகின்றன. இவை 1999ம்ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் பின்பு இனம்காணப்பட்டன.இவ்வாறு திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் சிங்களம் திட்டமிட்டு மதப்பரப்பலையும் மேற்கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்பின்புதான் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியினரால் தமிழ் மக்கள் வாழ்விடங்களில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவற்றுக்கான இடங்கள் இனம்காணப்பட்டு முன்னர் மக்கள் வாழ்ந்துவந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது.

(மக்கள் சமைக்க பாவித்த மட்பாண்டங்கள் கட்டடங்களின் சிதைவுகள்) இவை அக்கராயன், மல்லாவி, குமுழமுனை போன்ற இடங்களில் கிணறுதோண்டும்போதும், மண்வெட்டும் போதும் மக்களால் இனம்காணப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. இவைபின்பு ஆய்வுக்கு உட்படுத்தவென வைக்கப்படுகிறது. தமிழர் வாழ்ந்த தடயங்கள் வரலாறுகள் உள்ளதென்பதை நிரூபிக்கும் முகமாக இவை அன்று விடுதலைப் புலிகளின் நிர்வாக பகுதி ஒன்றினால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும்போதுதான் வல்வளைப்பு என்றபெயரில் சிங்களப்படைகள் தமிழர் இடங்களை ஆக்கிரமிக்க தொடங்குகின்றார்கள். 2006ம்ஆண்டு 1ம் மாதம் 21ம் நாள் மட்டக்களப்பு மாவட்டம் மீது போர்தொடுத்த சிங்களப் படைகள் மட்டக்களப்பினை பிடித்துவிட்டு திருகோணமலை மீது போர்தொடுத்து திருகோணமலையினையும் வல்வளைத்துவிட்டார்கள். இந்நிலையில் அங்கு தமிழ் மக்கள் தென்றுதொட்டு வழிபட்டுவந்த வழிபாட்டுத் தலங்கள் பாரம்பரிய இடங்கள் எல்லாம் புத்தமதம் முளைக்கும் திட்டத்திற்கு கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச பௌத்தமத துறவிகளைகொண்டு திட்டமிடுகின்றார்.

(இன்னும் வரும்)

-சுபன்

நன்றி்:ஈழமுரசு

Comments