கருணாநிதிக்கு ஒரே ஒரு கேள்வி

ஓநாய் நெருங்குகிறது...ஆடுகள் ஒடுங்குகின்றன. ஓநாய் வருகிறது...மான்கள் நடுங்குகின்றன. ஓநாய் வந்துவிட்டது... முயல்கள் பதுங்குகின்றன. துப்பாக்கியை எடுத்து தோட்டக்காரன் குறிபார்க்கிறான்...ஓநாய் பதுங்குகிறது!

இப்போது வழக்கறிஞராய் இருக்கும் என் மகள் செந்தூரி சிறுமியாய் இருந்தபோது அவளுக்காக நியூ செஞ்சுரியில் வாங்கிய சோவியத் யூனியனின் பெருமைக்குரிய ராதுகா பதிப்பக நூல் ஒன்றில் (அனிமல் புக் - என்று நினைவு) கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்த இந்த வரிகளை இப்போதும் மறக்கமுடியவில்லை. அந்த வரிகள் ஓநாய்களுக்கு மட்டுமே அல்ல.... கொலைகார ராஜபட்சேக்களுக்கும் அவர்களது இந்தியத் தோழர்களுக்கும் கூட அச்சு அசலாக அப்படியே பொருந்துகின்றன. 10 மாதங்களுக்கு முன் ராஜபட்சேக்களிடமிருந்து நமது சொந்தங்களைக் காப்பாற்றமுடியாத நிலை. இன்று, திருப்பதி வெங்கடேசப் பெருமாளால் கூட ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாத நிலை. 2008 அக்டோபரிலிருந்து தமிழினத்தை அழித்தொழிக்கும் பணியில் இறங்கியது இலங்கை.

ஒட்டுமொத்தத் தமிழினமும் அஞ்சி நடுங்கியது. அச்சத்தில் ஒடுங்கியது. பதுங்குகுழியில் பதுங்கியது. 26 மைலில் நடந்த இந்த அநீதி கண்டு தாய்த் தமிழகம் துடித்தது, ஆர்ப்பரித்தது. எங்கள் சகோதரர்களைக் கொல்லாதே என்று குரல் கொடுத்தது. உயிர்ப்பிச்சை கேட்டது. இப்போது, ராஜபட்சேக்களின் முறை. தோட்டக்காரன் துப்பாக்கியை எடுப்பதைப்போல், சர்வதேசமும் போர்க் குற்றம் என்று ஒரே குரலில் பேசுகிறது. தடை போடுவோம் என்கிறது ஐரோப்பா. விசாரிப்பேன் என்கிறது அமெரிக்கா. அஞ்சி நடுங்கி பதுங்கப் பார்க்கிறார்கள், ராஜபட்சேக்கள். இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் விரிக்கப்படும் வலையிலிருந்து ராஜபட்சே தப்பிக்கவே முடியாது. ஆயிரம் ஆயிரமாய் நமது சகோதரர்கள் கொல்லப்பட்டபோது, நாம் துடித்தோம்.

இன்று தன்னுடைய கொடிய சகோதரன் கோதபாய ராஜபட்சே கழுத்துக்கு நேராக கத்தி இறங்குவதைப் பார்த்து, கழுத்தறுபட்ட கோழி மாதிரி அலறித் துடிப்பது, மகிந்த ராஜபட்சே. இன்னும் சொல்லப்போனால், கோதபாயவுக்குப் பிறகு அந்தக் கத்தி யார் கழுத்தில் இறங்கும் என்பது தெரியும் மகிந்தவுக்கு. அதனால்தான் கோழி கொஞ்சம் கூடுதலாய்த் துடிக்கிறது. தானாடாவிட்டாலும் தன் சதையாடுகிறது. இங்கோ, மானாடா விட்டாலும் மயிலாடியது. அதைத் தவிர வேறெதுவும் ஆடவில்லை. போர்க்குற்றம் என்ற புகார் எழுந்தபோது, 'இது எங்கள் உள்நாட்டு விவகாரம், நாங்களே எங்களை விசாரித்துக் கொள்வோம்' என்றெல்லாம் இலங்கை தமாஷ் செய்தபோது கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளிவந்ததா கோபாலபுரத்திலிருந்து! ஆனால், கோபாலபுரம் மாதிரி மௌனம் சாதிக்கவில்லை சர்வதேசம்.

ஆதாரத்துடன் பக்கம்பக்கமாக அறிக்கை தயாரித்து, வரிக்கு வரி விசாரிக்கத் தயாராகியிருக்கிறது அமெரிக்கா. இந்த நேரம்பார்த்து எலிப்பொறியில் போய்ச் சிக்கியிருக்கிறார், ராஜபட்சேவின் கொலைக் கூட்டாளி சரத் பொன்சேகா. தமிழக அரசைப்போல, அமெரிக்க அரசும் ஒரு 'சீன்' போட்டுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்த இலங்கை, நிலைமை விபரீதமாகப் போவதைப் பார்த்து நொந்து போயிருக்கிறது. பொன்சேகாவையெல்லாம் விசாரிக்கக்கூடாது என்று அமெரிக்கத் தூதரைக் கூப்பிட்டு ஒப்பாரி வைக்கிறது. விசாரணையில் எதுவும் சொல்லக்கூடாது என்று அமெரிக்காவில் இருக்கும் பொன்சேகாவுக்கு அவசரச் செய்தி அனுப்புகிறது. விசாரணைக்கே போகாதே என்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா, அவசர அவசரமாக ஹிலாரி கிளிண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.

பத்து மாதங்களுக்கு முன், கொன்றுகுவிக்கப்பட்ட நமது சொந்தங்களைக் காக்க தமிழகம் எந்த அளவுக்குத் துடித்ததோ, அதைப்போல பலமடங்கு கோதபாய ராஜபட்சேவுக்காகத் துடிக்கிறது இலங்கை. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமாய்ப் பறந்து பறந்து துடிக்கிறது. இப்படியெல்லாம் அது துடிப்பதைப் பார்த்து, அதன்மீது கோபம் வரவில்லை நமக்கு. ஒரே ஒரு சகோதரனுக்காக ராஜபட்சேயின் ரத்தம் கொதிக்கும் அளவுக்குக் கூட, கொல்லப்பட்ட ஒரு லட்சம் சகோதரர்களுக்காக தமிழக முதல்வரின் ரத்தம் கொதிக்கவில்லையே என்கிற தன்னிரக்கம் தான் நம் நெஞ்சைப் பொசுக்குகிறது. சிவாஜி ரஜினிகாந்த்துக்கு ஒயிட்வாஷ் செய்தமாதிரி, நடந்தது இனப்படுகொலைதான் என்பது சர்வதேசத்துக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. கோபாலபுரத்துக்கு மட்டும்தான் இந்தச் செய்திபோய்ச் சேரவில்லை. தி.மு.க. மக்களவை உறுப்பினரான டி.கே.எஸ். இளங்கோவனுக்குத் தெரிந்ததுகூட, அவரது தலைவருக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.

'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும்' என்று எச்சரித்தான் வள்ளுவன். செம்மொழி சந்நிதானம் இரண்டையுமே செய்தது. கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தேவையேயில்லாமல் நமக்கு அறிவுரை சொன்னது. ஈவிரக்கமற்ற ஒரு கொலைகாரனைப் பிடித்து விசாரிக்கவேண்டுமென்று சொல்பவர்களிடம், இப்படியெல்லாம் பேசினால் அவர் ஆத்திரப்பட்டு மேலும் பல கொலைகளைச் செய்யக்கூடும் என்று எச்சரிக்கும் ஒரு மேதாவிக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பிணந்தின்னிக் கழுகு ராஜபட்சேவை எச்சரிக்கப் பயன்படுத்தவேண்டிய அதிகாரத்தையும் சக்தியையும், நம்மை மாதிரி சிட்டுக்குருவிகளைச் சுட்டெரிக்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தாரே, ஏன்? ராஜபட்சேவுக்குக் கருணை மனு எழுதி முள்வேலி முகாமிலிருக்கும் 3 லட்சம் தமிழர்களைக் காப்பாற்றுவதுதான் சாதுர்யம், அதைவிட்டுவிட்டு ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றிப் பேசுவது அறிவீனம் என்கிற தொனியில்கூட ஒரு குரல் கேட்டது.

அதையெல்லாம் நம்பினாரோ என்னவோ, கருணாநிதியின் ராஜதந்திரம் குப்புறப் படுத்துக் கொண்டது. முள்வேலி முகாம் பிரச்சினையும் போர்க்குற்றம் தொடர்பான புகார்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவ்வளவு போர்க்குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட வேண்டியவன் நீ! அப்பாவித் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்துவைக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கருணாநிதி கேட்டிருக்கலாம். முள்வேலிக்குள்ளிருந்து மக்களை விடுவிப்போம், போர்க் குற்றவாளிகளைச் சிறையிலடைப்போம் என்று 8கோடி தமிழர்களின் சார்பில் முழங்கியிருக்கலாம். போர்க்குற்றங்களுக்கு எதிராகத் தொலைதூர நாடுகளிலிருந்து கேட்கும் குரல்களுக்கே நடுங்கும் இலங்கை, தமிழ்நாட்டிலிருந்து அந்தக் குரல் கேட்டிருந்தால் அடங்கி ஒடுங்கியிருக்கும்.

அதற்கு மாறாக, கருணாநிதி அரசுதான் அடங்கிஒடுங்கியிருந்தது. தமிழகம் தான் செய்திருக்கவேண்டும் இதை. போர்க்குற்றவாளியைக் கூண்டிலேற்ற முயன்றிருக்கவேண்டும். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்று ஆதாரத்துடன் பேசும் அமெரிக்கச் சகோதரி எலைன் சான்டர், 'ஈழத்தில் கொன்றுகுவிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்காக நியாயம் கேட்கும் பொறுப்பு மற்ற எவரையும் காட்டிலும் தமிழகத் தமிழர்களுக்கே அதிகம்' என்கிறார். ஆனால், இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருப்பது நாம் அல்ல. சர்வதேசம். தொப்புள்கொடி உறவு என்ன கிழித்தது என்ற கேள்விக்கு, என்ன பதில் சொல்லப் போகிறோம்? 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று மீண்டும் வசனம் பேசப் போகிறோமா? 50 ஆண்டுக்கால வசனகர்த்தா தான் பதில் சொல்லவேண்டும்.

தன்னுடைய சாதுர்யத்தையும் பதவி விலகல் ஆயுதத்தையும் பயன்படுத்தி, 2008 நவம்பரிலேயே போரை நிறுத்தியிருக்க முடியாதா, கருணாநிதியால்? இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபட்சேவைக் கழுவிலேற்றுவோம் என்று உலகத் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க முடியாதா? போர்க்குற்றவாளி ராஜபட்சேவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, முள்வேலித் தமிழர்கள் 3 லட்சம் பேரை விடுவித்திருக்கமுடியாதா? அண்ணன் சுப.வீரபாண்டியனும், அருட்தந்தை ஜெகத்கஸ்பாரும், அன்புத் தோழர் திருமாவளவனும் தான் பதில்சொல்லவேண்டும். நேரில் முடியாவிட்டாலும் தொலைபேசியிலாவது சொல்லட்டும். இன்னும் அதே பழைய எண்ணைத் தான் வைத்திருக்கிறேன். மேலே சொன்ன எந்தப் பிரச்சினையிலும், இந்திய ஒருமைப்பாடு கருணாநிதிக்குக் குறுக்கே நிற்க வாய்ப்பேயில்லை.

ஒரு லட்சம் தமிழர்களை நரபலி கொடுத்துத் தான் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியுமென்றால், அதைவிட மிகப்பெரிய தேசிய அவமானம் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்திய காந்தியால் ஒன்றுபட்ட தேசம் இத்தாலி காந்தியால் சிதறிவிடக் கூடாது. கருணாநிதியிடம் கேட்கவேண்டிய நேரடிக் கேள்வி ஒன்றே ஒன்று தான். எங்கள் சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தடுக்கமுடியாத அளவுக்குக் குறுக்கே நின்றது, இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கவேண்டும் என்கிற எண்ணமா? அல்லது, எப்படியாவது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணமா?இந்தக் கேள்விக்கு சுற்றிவளைத்துப் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஆம், இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில்சொல்லிவிடலாம். உங்களைப் பாதுகாக்க, இந்தியாவைக் கேடயமாக்காதீர்கள்.

இந்தியா பற்றி உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். 1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட அயோக்கிய இந்தியா... தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தயங்குகிற கோழை இந்தியா... அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த ஜீவகாருண்ய இந்தியா... போரையே நிறுத்திவிட்டதாக ஒரு 86 வயது மூத்த முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த சிதம்பர இந்தியா.... காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஆறஅமர வேடிக்கை பார்த்த ராஜீவ் இந்தியா...

ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியே, இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய நம்பிக்கைத் துரோக இந்தியா...அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீசப் புறப்பட்ட போர்விமானங்களுக்காக விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த மன்மோகன் இந்தியா...கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த உலகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த சோனியாவின் இந்தியா...தமிழின அழிப்புக்குத் திட்டமிட்ட சரத் பொன்சேகாவைக் கட்டித்தழுவிப் பாராட்டிய நயவஞ்சக இந்தியா....இனவெறி இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நாற்காலியில் அமரவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட கூறுகெட்ட இந்தியா.... இந்த இந்தியா போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணை நிற்குமா, தட்டிக்கொடுக்குமா? அது என்ன செய்யும் என்பது கருணாநிதிக்குத் தெரியும்.

இவர் என்னசெய்யப் போகிறார் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி. ஏற்கெனவே, தமிழினத்தின் இருவேறு அடையாளங்களாக மாறியிருக்கின்றன, முள்ளிவாய்க்காலும் கோபாலபுரமும். முதலாவது, உரிமைக்காக உயிரை விடுவது. இரண்டாவது, பதவி என்றால் உயிரையே விடுவது. முதல்வர் கருணாநிதி அவர்களே,உங்களது சமூக - அரசியல் வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கக்கூடியதா இது?ஜெயலலிதா பற்றி மட்டுமே பக்கம்பக்கமாக அறிக்கை விடவேண்டும், ராஜபட்சே விவகாரம் எழும்போது முகவரியே இல்லாமல் முடங்கிவிடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வரலாறு உங்கள் பெயருக்கு முன்னுள்ள அடைமொழிகளைத் திருத்தி எழுதத் தொடங்கும். அதற்குள் நீங்கள் விழித்து எழுவது நல்லது. எங்கள் தோட்டத்துக்குள் நுழைகிற ஓநாயைக் குறிவைக்க நீங்கள் துப்பாக்கியை எடுத்திருந்தால் ஓநாய் எப்போதோ ஓடிஒளிந்திருக்கும்.

ஓநாய் வந்ததைக் கவனிக்காமல் நீங்கள் கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தீர்கள். பக்கத்துத் தோட்டக்காரர்கள் துப்பாக்கியை எடுத்தபிறகுதான் ஓநாயின் ஆட்டம் அடங்க ஆரம்பித்திருக்கிறது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகள் உங்கள் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொடங்கிவிட்டன. இனியாவது டெல்லி எஜமானர்களைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த சர்வதேசப் போருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். கொலைகார ராஜபட்சேக்கள் தண்டிக்கப்படும் வரை, அலங்கார செம்மொழி மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவியுங்கள். நாடே உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.

தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கை மட்டும் தான் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த என்கிற நேர்மையும் துணிவும் மிக்க சிங்களப் பத்திரிகையாளன். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை, சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான், ராஜபட்சேவின் மென்னியைப் பிடித்து இறுக்கமுடிகிறது. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. தமிழினப் படுகொலைக்கான தண்டனையைப் பெற சகல 'தகுதி'யும் இருக்கிறது, ராஜபட்சேக்களுக்கு. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.

அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".சனிப் பிணம் துணை தேடும் என்பார்கள். குற்றவாளிக் கூண்டுக்கு ராஜபட்சேக்கள் மட்டுமே போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு, இனவெறி இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து அழகுபார்த்த இந்திய வெறியர்களுக்கும் கிடைக்காமல் போகப்போவதில்லை. சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.

ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம், முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும். எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும். இது, ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும், அவரது இந்திய நண்பர்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற கருணாநிதி போன்றோர் வழிவிட்டாலே போதும். ஓநாய்களின் ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.

06.11.2009 'தமிழக அரசியல்' வார இதழில் வெளியான அரசியல் விமர்சனக் கட்டுரை

-புகழேந்திதங்கராஜ்

Comments

இது கட்டுரையல்ல ,கருத்துப் பெட்டகம். வரிக்கு வரி நீதியையும், நியாயத்தையும் மட்டுமே சொல்லுகிறது. அதை நீ செய்ய வேண்டிய இடத்தில் இருந்தும் செய்யவில்லையே என்று சட்டையை பிடித்து உலுக்குகிறது காட்டுரையின் ஒவ்வொரு வரியும். தமிழினத்தின் தலைவாசலை இழுத்து சாத்திய ஐம்பது ஆண்டு கால எழுத்தாளர் கருணாநிதியால் பதில் சொல்ல இயலாது. அவருக்கு செயலலிதா வுக்கு பதில் பாட்டு எழுதவும், மானாட , மயங்கியாட பார்க்கவுமே நேரம் போதாது. இதில இனவுணர்வும் , மான உணர்வும் இவரிடம் எதிர் பார்ப்பது தேவை இல்லாத வேலை .ஏனென்றால் அவர் தன் மான உணர்வு இது தான் என்பதை நன்றாகவே வெளிப்படுத்திவிட்டார். நாம் தான் புரிந்ந்து கொள்ளாமல் ஏன் செய்யல, ஏன் செய்யலைன்னா அவர் பதில் சொல்லவா போகிறார். சர்வதேசம் செய்யும் மேற்கொண்டு வரும் யுத்த மீறல் நடவடிக்கைகையே இவர் கடிந்து கொள்ளாமல் இருந்தால் சரி தான். சொன்னது போலவே சுப.வீர பாண்டியன் அவர்களும் , அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அவர்களும், தோழர்.தொல். திருமா அவர்களும் பதில் சொல்லத்தான் வேண்டும். அனால் அவர்களும் இப்பொழுது இணையத்தில் எழுதுபவர்களை பிய்த்து எரிய ஆரம்பித்து விட்டார்களா. ஆக அவர்களிடமும் பதில் வரும் என எதிர் பார்க்க வேண்டாம்.ஒரே ஒரு வழி தான் எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லும் அது கருணாநிதியை பதவியை விட்டு விளக் செய்வது ஒன்று தான். ஆனால் செயா மாமியும் வந்து விட கூடாது . தமிழகத்தில் தேவை தமிழுணர்வாளர்கள் அடங்கிய ஒரு கூட்டணி ஆட்சி அப்படி பட்ட ஒரு ஆட்சி வந்தால் மட்டுமே உலகத்தமிழ் மக்களுக்கு உதவி செய்ய இயலும். இதெல்லாம் திராவிடம் பேசி தெருக்கூத்து தான் நடத்தும்.

இப்படிக்கு

பொற்கோ