பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 - ஜனவரி 9, 1924) கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் உடன்பிறப்பு) ஆகியோரின் மூன்றாவது மகனாவார். பொன்னம்பலம் குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது உடன்பிறப்புக்கள் ஆவர்.
பொன்னம்பலம் குமாரசுவாமி புகழ்பெற்ற சட்டத்தரணியாவார் (Proctor). 1893 இல் இலங்கை சட்டசபைக்கு நியமன உறுப்பினராக இருந்தார். இளவயதில் இவர் காலமாகி விட்டார்.
பொன். அருணாசலத்தின் மனைவியின் பெயர் சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள் அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம், அருணாசலம் இராமநாதன் ஆகியோர்.
பொன். அருணாசலம் மற்றும் பொன். இராமநாதனின் முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரனின் அவையில் முதல் அமைச்சராக விளங்கிய மானா முதலியார் எனத் தெரியவருகிறது.
மானா முதலியாரும் அவரின் கொடிவழியினரும் வாழ்ந்த இடம் மானிப்பாய் என்று அழைக்கப்பட்டது. மானா முதலியாரின் கொடிவழியினர் மானிப்பாயிற்தான் காலாதி காலமாகக் குடியிருந்து வந்துள்ளார்கள். இக் குடும்பத்தவர்களிடம் இறைபக்தி, கொடைத்தன்மை, தொண்டுள்ளம், அஞ்சாமை ஆகிய நற்குணங்கள் காணப்பட்டன.
மானா முதலியாரின் மகன் கதிர்காம முதலியார் யாழ்ப்பாண அரசின் அரண்மனையில் கணக்கராகப் (Accountant) பணியாற்றிய போது இரண்டாவது சங்கிலி எதிர்மன்னசிங்க பரராசசேகரனைத் துரத்தி விட்டுத் தானே அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனே யாழ்ப்பாண அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். இவனை நல்லூரில் நடந்த போரில் போர்த்துக்கேயர் தோற்கடித்து யாழ்ப்பாண அரசை 1619 இல் கைப்பற்றினார்கள்.
பொன். அருணாசலம் பின்னால் றோயல் கல்லூரி என அழைக்கப்பட்ட கொழும்பு றோயல் கழகத்தில் (Royal Academy) கல்வி கற்று புலமைப்பரிசில் பெற்று இலண்டன் சென்று கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் படித்துக் கலைமாணிப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் வழக்கறிஞராகவும் (Barrister) ஆகவும் 1875 இல் குடியியல் பணித் தேர்வில் (Civil Service) சித்தி பெற்று முதல் இலங்கையர் எனப் பெயரெடுத்தார். பின்னர் அவர் இலங்கை திரும்பினார்.
அரச பணியில் 1875 - 1913 ஆம் ஆண்டு வரை பல்வேறு உயர் பதவிகளை பொன். அருணாசலம் வகித்தார். பதிவாளர் நாயகமாக (1887 - 1902) இருந்தார். 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமதிப்புப் பற்றிய இவரது விரிவான அறிக்கை ஆங்கில அதிகாரிகளது அமோக பாராட்டுதலைப் பெற்றது.
இவரைப் பற்றி இலங்கையின் வரலாற்றிசிரியர் கே. எம்.டி. சில்வா "மிக உயர்ந்த அரச அதிகாரியான அருணாசலம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் வியத்தக்கவாறு தமிழ் மக்களுக்குப் பணி செய்திருக்கிறார். சிங்கள மக்களுக்கும் அவர் பணி செய்திருக்கிறார். அவரைப் போல வேறு யாரும் சிங்களவர்களுக்குப் பணி செய்ததில்லை" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
1913 இல் பொதுப் பணியில் இருந்து பொன். அருணாசலம் ஓய்வு பெற்றார். அதே ஆண்டு அவருக்குப் பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தியது. அது மட்டும் அல்லாது அவர் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பணியைக் கவனத்தில் கொண்டு நிறைவேற்று அவைக்கு (Executive Council) ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார்.
அரச ஆசிய அவையின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து இந்து பண்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். இலங்கையில் ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கப் படவேண்டும் என்ற வேண்டுகோளை பொன். அருணாசலம் அவர்களே முதலில் முன் மொழிந்தார்.
சேர். பொன். அருணாசலம் அரச பணியில் இருந்த காலத்திலேயே சுயராஜ்ய (தன்னாட்சி) உணர்வால் உந்தப்பெற்றார். எனவே ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மேட்டுக்குடியில் பிறந்தாலும் பொன்.. அருணாசலம் அவர்கள் அடித்தட்டு மக்களது முன்னேற்றத்துக்கும் பாடுபட்டார். இது பலர் அறியாத செய்தியாகும்.
சேர் யேம்ஸ் பீரிசோடு சேர்ந்து 1915 ஆம் ஆண்டு இலங்கை சமூக சேவை சங்கத்தை (Ceylon Social Service League) தோற்றுவித்தார். அதன் தொடக்கக் கூட்டத்திற்கு முன்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு கல்வி வாய்ப்பு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, கட்டாய குறைந்தபட்ச கூலி, கட்டாய காப்புறுதி ஆகிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.
இந்தக் குறிக்கோள்களை அடையும் பொருட்டு கல்வி எல்லாத் தரப்பு மக்களிடையேயும் பரப்பப்பட வேண்டும் என எடுத்துரைத்தார். உண்மையில் பொன். அருணாசலம் அவர்களே இலவசக் கல்வியை வலியுறுத்திய முதல் அரசியல்வாதி ஆவார்.
கல்வி எல்லோருக்கும் இலவசமாக - தொடக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் - வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் தொழல் நுட்பக் கல்வியும் அறிவியல் பாடங்களும் கற்பித்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இலங்கையில் இக்காலப் பகுதியில் அய்ந்து அரசியல் இயக்கங்கள் முக்கியமாகச் செயற்பட்டன.
இலங்கைத் தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம், இளம் இலங்கையர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பனவே அந்த அய்ந்துமாகும். இந்த அய்ந்தையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை உருவாக்குவதில் பொன். அருணாசலம் கவனம் செலுத்தினார். இதைவிட, முஸ்லிம் சங்கம், பறங்கியர் சங்கம் என்பனவும் செயற்பட்டன. ஆனால், அவை சேதிய இயக்கம் ஒன்று உருவாவதற்கான செயற்பாடுகளைப் புறக்கணித்தன.
இந்த அய்ந்து அரசியல் இயக்கங்களில் இலங்கைத் தேசிய சங்கத்தையும் யாழ்ப்பாணச் சங்கத்தையும் பொது உடன்பாட்டுக்குக் கொண்டு வருவது கடினமாக இருந்தது.
இலங்கைத் தேசியச் சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றி, ஆட்புலவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வருதல், சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றவர்களின் பெரும்பான்மையை அதிகரித்தல், சட்டசபையின் அதிகாரங்களை அதிகரித்தல் என்பனவற்றையே இலக்காகக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணச் சங்கத்திற்கு இவற்றையிட்டு கருத்து முரண்பாடு இருந்தது. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை (Communal Representation) நீக்குவதின் ஊடாகச் சமபல பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் நிலவியது. எனவே இனவாரிப் பிரதிநிதித்துவ முறை தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதை யாழ்ப்பாணச் சங்கம் வற்புறுத்தியது.
ஒன்றுபட்ட இலங்கைத் தேசிய இயக்கமாக இலங்கைத் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் 1917 டிசம்பர் 15 இல் நடைபெற்றது. 144 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் 17 பேர் தமிழர்கள்.
யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் இரு சார்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் பின்வரும் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அகற்றப்படக்கூடாது.
2. அரச சார்பற்ற உறுப்பினர் எண்ணிக்கை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சமமாக இருக்கவேண்டும்.
இக்கோரிக்கைகளைக் குடியேற்ற நாட்டுச் செயலருக்கும் அனுப்பிவைத்தனர்.
ஆனால் இலங்கைத் தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.
சேர். ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே. சமரவிக்கிரம, எவ்.ஆர். சேனநாயக்கா போன்ற தேசியச் சங்கத்தின் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தனர்.
பொன். அருணாசலம் தொடர்ந்தும் இரு தரப்பினரையும் பொதுக் கருத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தார். அவரைப் பொறுத்தவரை அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மீதிருந்த நம்பிக்கையால் நியாயமான அளவு பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது.
தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான ஒழுங்கு முறைகள் பற்றி சிங்களத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் கலந்துரையாடினார். இதன் பலனாக சிங்களத் தலைவர்களோடு உடன்பாடு ஏற்பட்டது.
டிசெம்பர் 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இலங்கையின் சிறப்பான அரசுக்கும் மக்களது மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் பிரித்தானிய பேரரசின் ஒரு பிரிக்கமுடியாத பொறுப்பான அரசுக்கும் ஏதுவாக அரசியல் யாப்பும் அரச நிருவாகமும் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
சட்ட சபை 50 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் அய்ந்தில் நான்கு பங்கினர் ஆட்புல அடிப்படையில் (Territorial Representation) தேர்ந்தெடுக்கப்படுவர். ஆண்களுக்கு முழு வாக்குரிமையும் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையும் வழங்கப்படும்.
எஞ்சிய அய்ந்தில் ஒரு பகுதியினர் சிறுபான்மையினரைப் பரதிநித்துவப்படுத்தும் - அரச சார்பாகவும் அரசு சார்பற்றதாகவும் - உறுப்பினர்களாக இருப்பார்கள். அவைத் தலைவரை சட்ட சபையே தேர்ந்தெடுக்கும். இலங்கைத் தேசிய காங்கிரஸ் இனவாரியான பிரதிநித்துவத்தை முழு மூச்சாக எதிர்த்தது. சிங்களத் தலைவர்கள் சட்ட சபைக்குத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் நியமிப்பது வகுப்புவாதம் அல்லது இனவாதம் என வாதிட்டார்கள்.
அதே நேரத்தில் தமிழர்களுக்கு முடிந்த மட்டும் அதிகளவான பிரதிநித்துவத்தை உறுதிப் படுத்துவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் எடுப்போம் எனச் சிங்களத் தலைவர்கள் சொன்னார்கள்.
தமிழர்கள் தங்களது இன அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து அதனைப் பேண விளைந்தார்கள். ஆனால் அவர்களது கெட்டகாலத்துக்குச் சட்ட யாப்புத் திருத்தத்தில் சிங்களவரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தாலும் சுயாட்சி கிடைக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சிங்களத் தலைவர்களது விருப்பத்துக்கு இணங்கினார்கள்.
அந்த இணக்கம் தமிழர்களது பலவீனமாகச் சிங்களத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இதனால் சிங்களத் தலைமை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனவாரியாகப் பிரதிநித்துவம் வழங்கப்படக் கூடாது என்பதில் மேலும் பிடிவாதமாக இருக்கத் தலைப்பட்டது.
இந்தக் கட்டத்தில் பொன். அருணாசலம் இருசாராருக்கும் இடையில் ஒரு பக்க சார்பற்ற இடைத்தரகராக இருக்க விரும்பினார். சிங்களத் தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சமரவிக்கிரம கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பின்வரும் யோசனைகளை முன்வைத்தார்.
1) வடக்கு மாகாணத்துக்கு மூன்று இருக்கைகள்.
2) கிழக்க மாகாணத்தக்கு இரண்டு இருக்கைகள்
3) மேல் மாகாணத்துக்கு ஒரு இருக்கை.
4) முடிந்தால் தமிழர்களுக்கு ஏனைய மாகாணங்களிலும் கொழும்பு மாநகர சபையிலும் மேலதிக இருக்கைகள்.
5) மேல் மாகாணத்தில் முஸ்லிம் உறுப்பினருக்கு ஆதரவு
இவ்வாறு இலங்கையரின் கருத்தைத் அறிந்து கொண்ட குடியேற்ற நாட்டின் செயலர் 1920 ஒகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் ஒரு அரச கட்டளையைப் பிறப்பித்தார்.
அதன்படி சட்ட சபையில் 37 உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களில் 14 பேர் அரசு உறுப்பினர்கள். 23 பேர் அரசு சார்பற்ற உறுப்பினர்கள்.
பதினொரு அரசு சார்பற்ற உறுப்பினர்கள் ஆட்புல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அய்ந்து பேர் அய்ரோப்பியரையும் இரண்டு பேர் பரங்கிகளையும் பிரதிநித்துவப்படுத்துவர். ஒருவர் வாணிக வாரியத்தின் பிரதிநிதி. இரண்டு நியமன உறுப்பினர்கள் கண்டிச் சிங்களவருக்கு. இந்தியத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தலைக்கொரு நியமன உறுப்பினர். இந்த ஏற்பாட்டின் படி இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அரசசார்பற்ற உறுப்பினர்களது பெரும்பான்மை 9 ஆக உயர்ந்தது.
இதை அடுத்து சிங்கள தீவிரவாதப் போக்குடைய ஒரு குழுவொன்று இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமையைக் கைப்பற்றியது.
(வளரும்)
நக்கீரன் canada
Comments