தமிழர் தாயகத்தை இறுக்கமான இராணுவக் கட்டமைப்பு ஒன்றின் கீழ் வைத்திருப்பதே சிங்கள அரசின் இலக்கு.

21 ஆயிரம் கோடியைத் தொடும் அடுத்த வருட பாதுகாப்பு செலவு

அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான செலவினங்கள் குறித்த இடைக்காலக் கணக்கு அறிக்கைக்கு கடந்த வாரம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் இந்தக் கணக்கு அறிக்கையைப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியிருக்கிறது அரசாங்கம்.

அடுத்து வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதால் தான் இடைக்காலக்கணக்கு அறிக்கையை சமர்ப்பித்ததாக அரசாங்கம் கூறுகிறது.ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்கடியினால் தான் அரசு வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்யாமல்- இடைக்காலக்கணக்கு அறிக்கையைச் சமர்ப்பித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்த இடைக்காலக்கணக்கு அறிக்கை, பாதுகாப்பு அமைச்சின் செலவினங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையின் வரவுசெலவுத் திட்டங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே அதிகமாக இருந்து வந்துள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை விழுங்கிக் கொள்ளும் அளவுக்கு பாதுகாப்புச் செலவினம் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது.புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ள போதும், பாதுகாப்புச் செலவின அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை அண்மைய இடைக்காலக்கணக்கு அறிக்கையின் மூலமும் உணர முடிகிறது.

  • பாதுகாப்பு அமைச்சுக்காக அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கு மட்டும், 7140 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு அதிகபட்சமாக 3454 கோடி 56 இலட்சத்து 66ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.கடற்படைக்கு 1160 கோடி 66 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும், விமானப்படைக்கு, 781 கோடி 66 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பொலிஸ் திணைக்களத்துக்கு 1240 கோடி 17 இலடசத்து 66 ஆயிரம் ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 297 கோடி 83 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாவும், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு 1 கோடி 66 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்புச் செலவினத்துக்கு அரசாங்கம் 16ஆயிரத்து 644கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது.

ஆனால் புலிகளுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்ட படையினருக்கு உதவிகள் வழங்குவதற்கும், இராணுவத்தைப் பலப்படுத்திக் கொள்ளவும் நிதி போதாமல் இருப்பதாகக் கூறி, மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தது அரசு.இதன்படி குறைநிரப்புப் பிரேரணை மூலம் 3384 கோடி ரூபா பாதுகாப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்டது.இந்த வகையில் 2009ம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 20 ஆயிரத்து 28 கோடி ரூபாவாக உயர்ந்துள்ளது. ஆனால் இதையும் மிஞ்சும் அளவுக்கு அடுத்த வருடத்துக்கான பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கவுள்ளன.இதை அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்காக அரசாங்கம் சமர்பித்த கணக்கு அறிக்கையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.அதைவிட, படையினருக்கான சம்பளங்களை உடனடியாக அதிகரிப்பதாக கடந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இது பாதுகாப்புச் செலவினத்தில் இன்னும் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாதங்களுக்கான கணக்கு அறிக்கை மூலம் 7140 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதால் அடுத்த வருடத்துக்கான மொத்த பாதுகாப்புச் செலவினம் குறைந்தபட்சம் 21 ஆயிரத்து 420 கோடி ரூபாவை எட்டும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படும் புதிய அரசின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அல்லது அதற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் குறைநிரப்புப் பிரேரணையின் மூலம் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. போர் முடிவுக்கு வரும் வரைக்கும் புலிகளை அழிப்பதற்கு ஆயுதங்கள் தேவை, படையினரைச் சேர்க்க வேண்டும் என்று கூறி அதிகளவு நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது பெரியதொரு படையை கட்டியாள வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

ஆயுதங்களுக்கான செலவுகள் குறைந்திருப்பினும் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, இலங்கை அரசு பாதுகாப்புக்காக செலவிடுகின்ற நிதியைக் குறைத்து அபிவிருத்திக்குச் செலவிடத் தயாராக இல்லை. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக செலவிடப்படும் நிதி ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவேயாகும். பாதுகாப்புச் செலவினம் உயர்ந்து வருவதால் சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அதிகளவு நிதியைச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மனிதஉரிமை பாதுகாப்பு, ஊடக சுதந்திரம், வாழ்க்கைத்தரம், வறுமை என்பன போன்ற சமூக அபிவிருத்தி சுட்டிகள், கணக்கெடுப்புகளில் இலங்கை பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் பாதுகாப்புச் செலவின ஒதுக்கீடு என்று வரும்போது, உலகின் முன்னணி நாடுகளைக் கூடப் பின்தள்ளும் அளவுக்கு இலங்கை முன்னணியில் திகழ்கிறது.இந்த வருடத் தொடக்கத்தில் சர்வதேச ரீதியில் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 56வது இடத்தை வகித்திருந்தது. ஆனால் குறைநிரப்புப் பிரேரணை மூலம் 3324 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதை அடுத்து மலேசியா, ஈக்வடோர், அங்கோலா ஆகிய நாடுகளைப் பின்தள்ளிவிட்டு இலங்கை 53வது இடத்தைப் பிடித்துக் கொண்டது.

ஆனால் அடுத்த வருடத்தின் பாதுகாப்புச் செலவினம் 21ஆயிரம் கோடியைத் தாண்டும் போது உக்ரேனையும் பின்தள்ளிக் கொண்டு அசர்பைஜானுடன் 51வது இடத்துக்காகப் போட்டி போடும் நிலையில் இருக்கிறது.இந்தளவுக்கும் இலங்கை சனத்தொகை ரீதியில் உலகளவில் 56வது இடத்தில் தான் இருக்கிறது.
பரப்பளவு ரீதியில் இலங்கை 121வது இடத்தில் இருக்கும் நாடு. ஆனால் பாதுகாப்புச் செலவுக்காக நிதியை அதிகளவில் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் மட்டும் இலங்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

போரைக் காரணம் காட்டி- புலிகளைக் காரணம் காட்டி பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிய காலம் மலையேறி விட்டது. பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டதாகக் கூறும் அரசாங்கம், பாதுகாப்புச் செலவினத்தை மட்டும் குறைக்காமல்- தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிக்கும் நோக்கில் இலங்கை அரசு இருக்கிறதா என்ற சந்தேகத்தையே எழுப்ப வைக்கிறது.

பாதுகாப்புக்கான நிதியை அதிகளவில் ஒதுக்கி நாட்டை இறுக்கமான இராணுவக் கட்டமைப்பு ஒன்றின் கீழ் வைத்திருப்பதே அரசின் இலக்கு. குறிப்பாக தமிழர் வாழும் பகுதியை இத்தகைய அடிப்படையில் வைத்திருப்பதற்கு கோடி கோடியாக அரசு பணத்தைப் பாதுகாப்புக்காகக் கொட்டுகிறது. இதேநிலை தொடர்ந்து நீடிக்குமானால் இலங்கைக்குத் தோள் கொடுத்து உதவுவதற்கு எந்தவொரு நாடோ, சர்வதேச நிதி நிறுவனமோ முன்வராத நிலையே ஏற்படும்.

நகுலன்

Comments