சூடாகி வரும் சிங்களத்தின் தேர்தல் களமும், திக்கற்ற ஈழத் தமிழர்கள் நிலையும்!

இலங்கைத் தீவில் யுத்த களம் தற்காலிக ஓய்வுக்கு வந்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்சியைத் தமதாக்கிக்கொள்ளவதற்கான காய் நகர்த்தல்களில் சிங்களப் பேரினவாதப் பெரும் கட்சிகள் இரண்டும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் களமுனைத் தொடர்ந்து நவீன துட்டகைமுனுவாக சிங்கள இனத்தால் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட முடியாதவராகவே கருதப்பட்டார். அவரது வெற்றிப் பேரிகை முழக்கங்களும், வெற்றி விழாக்களும் அதை நோக்கியதாகவே வடிவமைக்கப்பட்டது. இறுதிவரை விடுதலைப் புலிகளுடன் இருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை எதுவித மனிதாபிமான தயக்கங்களும் இன்றி முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்து சிங்கள இனவாத சமூகத்தைக் குளிர்வித்தார்.

தமிழ் மக்களுக்கு யார் அதிக கொடுமைகளை இளைக்கிறார்களோ, தமிழ் மக்களை யார் அதிகமாக இழிவு படுத்துகிறார்களோ, அவர்களே சிங்கள தேசத்தின் பிதா மகர்களாகவும், ஆளும் தகுதியுடையவர்களாகவும் சிங்கள இனத்தால் கவுரவம் படுத்துவதே சுதந்திர சிறிலங்காவின் வரலாறாக இருந்து வருகின்றது. சுதந்திர சிறிலங்காவின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கே தமிழர்களின் அரசியல் பலத்தைத் தகர்க்கும் முயற்சியாக மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலமாகத் தனது இனவாத சிந்தனையை சிங்கள இனத்திற்கு நிரூபித்தார். அவரிடமிருந்து ஆட்சியைத் தனதாக்கிக்கொள்ள வியூகம் வகுத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா 1956-ம் ஆண்டில், 24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவருவேன் என்று சிங்கள இனத்திற்குச் சூளுரைத்தன் மூலம் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதல் பிரதமரானார்.

அவர் மூட்டிய இனவாதத் தீயில் உருவான முதலாவது இனக் கலவரத்தில் 200 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் படுகாயங்களுக்குள்ளானதுடன் தமிழர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டது. 1959-ம் ஆண்டில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் சிங்கள பவுத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த அவரது மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலேயே தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல் அமூலுக்கு வந்தது. இவரது பதவி காலத்தில், 1974-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் புகுந்து குழப்பம் விழைவித்ததனால் 9 தமிழர்கள் பலியானார்கள். இவரது ஆட்சி தொடர்ந்த 1977-ம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகில் பல நூறு தமிழர்கள் பலி கொள்ளப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

இவரைத் தொடர்ந்து, 1977-ம் ஆண்டில் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சிபீடமேறிய ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பழி வாங்கும் வகையில் இரண்டு பொலிசார் கொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான இன வன்முறை நிகழ்த்தப்பட்டு, தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலேயே 1983 கறுப்பு ஜுலை இன அழிப்பு நடவடிக்கையும் அரங்கேறியது. ஆன மொத்தத்தில், சிங்கள தேசத்தின் தேர்தல்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மற்றெந்த அடிப்படைத் தேவைகளையும் தாண்டி தமிழர்கள் மீதான இனவாத, இனக் குரோதமே முக்கியம் பெறுகின்றது.

தமிழ் மக்கள் மீதான வெற்றிக்காக சிங்கள இனம் எந்த விலையையும், எந்தத் தியாகத்தையும் செய்வதர்க்கு எப்போதுமே தயாராக உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்ட காய் நகர்த்தல்களே சிங்கள தேசத்தில் இப்போதும் நடைபெற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்திய அரசின் துணையோடு மிகப் பெரிய தமிழின அழிப்பை நடாத்தி முடித்து, முட்கம்பி வேலிகளுக்கும் மிகுதித் தமிழர்களை முடக்கி, எஞ்சிய தமிழர்களையும் அச்சத்தில் உறையவைத்துள்ள மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிறங்கும் தைரியம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என்று உணரப்பட்ட காரணத்தால், மகிந்த அரசுக்கு எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒரு பொது வேட்பாளரைக் களம் இறக்க வேண்டிய நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை, போர்க் களத்தின் நாயகனாக சிங்கள மக்களால் கொண்டாடப்படும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஓரம் கட்டும் முயற்சியில் மகிந்த சகோதரர்கள் ஈடபட்டு வருவதனால் அதிருப்தி அடைந்த சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சியில் ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகிய தீவிர சிங்கள இனவாதக் கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன. மகிந்தவை எதிர்த்துக் களமிறக்க வேறு தெரிவு இல்லாத நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகா மூன்றாவது வேட்பாளராகக் களம் இறங்கினால் தாம் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகின்றது. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்குவதென்று தீர்மானித்துவிட்டால் மகிந்தவின் வெற்றி கேள்விக் குறியாகவே அமையப் போகின்றது.

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மகிந்தவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா மட்டுமே களம் இறங்குவாராக இருந்தால் ஈழத் தமிழர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம். மாறாக, அது முத்தரப்புப் போட்டியாக மாற்றம் பெற்றால், மேற்குலகு செல்வாக்குச் செலுத்தக்கூடிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதனூடாக குறைந்த பட்சம் யுத்த களத்து மனித உரிமைகள் மீறல்களையாவது வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமக்கான எதிர்கால பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சி. பாலச்சந்திரன்

நன்றி்ஈழநாடு

Comments