வடக்கு நோக்கி துரிதமாக நடைபெறும் “வடக்கின் வசந்தம்” என்று அழைக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தை 180 நாட்களுக்குள் விரைவுபடுத்தும் நோக்குடன், சீன அரசாங்கத்திடமிருந்து பெருமளவிலான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. 2049 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த உபகரணங்களை இலங்கைக்கான சீனத்தூதுவர் கடந்த 28 ம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.
மேற்கு நாடுகளின் அழுத்தம், பிராந்திய வல்லரசுகளின் போட்டியாதரவு போன்ற சாதக, பாதக அரசியல் சூழல் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இக்காரணிகள் மும்முனை அதிகாரவலுப்பிரயோக அரசியற்களமாக இலங்கைத்தீவை மாற்றியுள்ளது.
இந்தியா இதுவரை 1000 கோடி ரூபா உதவியையும், சீனாவும் தன்பங்கிற்கு 2049 மில்லியன் ரூபா உதவியையும் வழங்கியுள்ளது. இவ்விரு நாடுகளும் இலங்கைத்தீவில் மேற்குலகத்தின் கால் ஊன்றவிடக்கூடாது என்ற விடயத்தில் ஒத்துப்போகின்றன. அதேவேளை இவ்விரு வல்லரசுகளும் தங்களின் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, இலங்கையில் கால்களை ஊன்றுவதில் போட்டிபோட்டுச் செயற்படுகின்றன. இந்தப்போட்டிதான் அதலபாதாளத்தில் விழவேண்டிய இலங்கை அரசாங்கத்தை தற்போது காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது.
மேற்குலகத்தின் கையை இலங்கையில் வலுப்பெறாமல் செய்யவேண்டுமானால் மீளவும் ராஐபக்சவின் அரசாங்கமே ஆட்சிக்கு வரவேண்டும். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவினது அரசியற்பிரவேசம் உறுதியாகிக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழலில், சிங்கள மக்களிடமிருந்து பிரிந்து போகக்கூடிய ராஐபக்சவின் யுத்தவெற்றி வாக்குக்களை சமப்படுத்த வடக்கை - குறிப்பாகத் தமிழர்களை விட்டால் - அரசுக்கு வேறு நாதியில்லை என்ற உண்மை புரியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கருவியாக வடக்கின் வசந்தம் அபிவிருத்தித்திட்டத்தை மையப்படுத்திய செயற்பாடுகள் “180 நாட்கள் விரைவுத்திட்டம”; என்ற சுலோகத்துடன் புதிய பாய்ச்சலில் முன்னெடுக்கப்படுகின்றன.
இம் மும்முனை அதிகாரவலுப்போட்டியின் பின்னணியில் - சிறிலங்காவின் சிங்கள பேரினவாதத்தின் பலிபீடத்தில் - தமிழ்மக்களின் உரிமைகள் கையாளப்படுகின்றன. அதேவேளை, பெயரளவிற்காவது மனித உரிமைகளைப்பற்றிப் பேசும் மேற்குலக நாடுகள் ஐக்கிய இலங்கைத்தீவிற்குள் தமிழ்மக்களிற்கான அரசியல் தீர்வை வழங்கவேண்டும் எனக்கூறுவதை, சிறிலங்காவின் அரசியல்தலைமைகள், தனது நாட்டின் இறைமைக்கு சவால் விடும் விடயம் என பிரச்சாரம் செய்கின்றன.
மறுபுறம், இந்தியாவிடம் உருப்படியான தீர்வுத்திட்டம் எதுவுமே இல்லை. இந்தியாவும் சீனாவும் கொடுக்கும் ஆதரவால், தமிழ்மக்களிற்கு கிடைக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான அழுத்தங்கள் வலுவற்றதாகிவிட்டன. தங்களது சுயநல - பிராந்திய - அரசியல் அதிகாரபோட்டியில், நீண்டகாலப் போரில் பல இலட்சம் மக்களை இழந்து, சொத்திழந்து, வேதனைகளை தாங்கி, தமக்கு பாதுகாப்பான அரசியல் சூழலுக்காக ஏங்கித்தவிக்கும் மக்களை நிரந்தர அரசியல் வெறுமைக்குள் இந்த வல்லரசுகள் தள்ளிவிடப்போகின்றன. அரசியல் தீர்வில்லா அபிவிருத்தி என்பது தலையில்லா முண்டத்தை அலங்கரிப்பது போன்றதே.
இலங்கை அரசானது சீனா சார்ந்த போக்கையே கடைப்பிடிக்கின்றது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டு தமிழ்மக்களை திருப்திப்படுத்திய ஈழ அரசியல் தீர்வுக்கே ஆதரவளிக்க முடியும். சீனாவைப் பொறுத்தவரையில் உள்நாட்டு அழுத்தங்கள் அதற்கில்லை என்பதால் சீனாவை நோக்கிய நகர்வுகளை இலங்கை விரும்புகின்றது. நீண்டகாலமாக இந்தியாவிற்கான சந்தைவாய்ப்பை ஊக்குவித்த சிங்களம், தற்போது சீனாவின் உற்பத்திக்கான சந்தைவாய்ப்பிற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது மட்டுமல்லாமல் முதலீட்டு வாய்ப்புகளிலும் சீனாவையே முதன்மைப்படுத்துகின்றது.
1962 ம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 33 ஆயிரம் சதுர கிலோமீற்றரை இராணுவ வலிமையினூடாக கைப்பற்றிய சீனா, இந்தியாவின் இறைமையை கேள்விக்குறியாக்கியது. அந்த முனையில் தற்போதும் இராணுவ முரண்பாடு தொடர்கின்றது. இந்தியாவுக்கு நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் என இந்தியாவைச்சூழ உள்ள தரைவழிநாடுகளுடன் சுமூக உறவில்லை. தற்போது மீதமிருந்த இலங்கையினை சீனாவிடம் கோட்டைவிடுவதனூடாக இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இந்தியா கொண்டிருந்த இறைமைபறிபோயுள்ளது.
இந்திய அதிகார வர்க்கத்தின் சுயலாபத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இணைந்து உருவாக்கிய தவறான அரசியல் கொள்கை வகுப்பானது இலங்கைத்தீவில் தமிழர்களின் அரசியல் வாய்ப்பை இல்லாதொழித்தது மட்டுமல்லாமல் தனது பிராந்திய வல்லாதிக்க இருப்பையும் நிர்மூலமாக்கியுள்ளது. இதற்கு இந்தியாவின் பதவிமோகங்களால் தடுமாறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரமமதைகொண்ட கொள்கைவகுப்பாளர்களும்தான் காரணம்.
“தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை வரட்டும்” என்று நினைக்கும் முட்டாள்கள் போன்று செயற்பட்ட இந்திய அதிகாரவர்க்கம் இலங்கையில் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக எடுத்த நகர்வுகள் ஈற்றில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
இந்நிலையில், மேற்குலகத்தின் அரசியல் நகர்வுகள் தடுக்கப்பட்ட நிலையிலுள்ளன. அதேவேளை இந்தியா, சீனாவின் தலையீட்டை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதே தவிர, தமிழ்மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவல்ல. அதற்கமைவாகவே போருக்கு முண்டுகொடுத்து, மனித உரிமைவிடயத்தில் இலங்கையை காப்பாற்ற முயன்றமை உட்பட தொடர்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விரோதப்போக்குகள் அனைத்தும் சாட்சியாக அமைகின்றன.
தமிழ்மக்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த தற்போதிருக்கும் ஒரேவழி தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடேயாகும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். தங்கள் கட்சிகளின் அடிப்படை பாரம்பரியத்தை அழியவிடாது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுவது மிக முக்கியமானது.
Comments