படையினர் நிலை கொண்டுள்ள இடங்களில் எல்லாம் பௌத்தமதமும் அதன்சின்னங்களும் தலைதூக்கியுள்ளன. தமிழ் மக்கள் செல்லமுடியாத குடும்பிமலையில் புத்தர்சிலை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவ்வாறு மட்டக்களப்பில் பௌத்தமதம் தற்போது செளித்து வளர்கிறது. அடுத்து திருகோணமலை 08.08.2006 அன்று மாவிலாற்றினை வல்வளைத்து மூதூர் பகுதியினை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சிங்களப்படைகள், அங்கும் மதம் பரப்புகின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தில் கால் ஊன்றிய சிங்களப்படைகள் அங்கும் பல இடங்களில் பௌத்த சின்னங்களை உருவாக்குகின்றார்கள். வெருகல் பிரதேசத்தில் உள்ள இலங்கைத் துறைமுகத்துவாரம் எனும் கடற்கரைப்பகுதியில் பாரிய மலைத்தொடர் உள்ளது.
இதில் மலை ஒன்றின் உச்சியில் வேளாங்கன்னி மாதா குடிகொண்டுள்ளார். எல்லோரும் அதில் ஏறமுடியாது எனினும் அங்கு சிறிய சிலை ஒன்றுதான் வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் வெருகல் ஆற்றின் ஒருகிளை கடலில் கலக்கும் இடம் என்பதால் இங்குள்ள மக்கள் றால் பிடிப்பது மற்றும் கடற்தொழிலில் ஈடுபடுவார்கள். இவ்வாறன இடத்தை வல்வளைத்த சிங்களப் படைகள், தமது பௌத்த துறவிகள் ஆராச்சியாளர்கள் பேன்றவர்கள் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பின்னர் அது சிங்களவர்களின் இடமென உறுதிப்படுத்துகின்றனர். இதனைவிட அப்பகுதியில் உள்ள மலை ஒன்றில் நான்கு வரியில் நீளமான கல்வெட்டு ஒன்று காணப்படுவதாகக் கூறி அதனைச் சிங்களப் பகுதியாக அறிவிக்கின்றனர். அது சிங்கள இனத்தின் மூதாதையர் வாழ்ந்த இடம் என்றும், அவை அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து அங்கு புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. இவ்வாறு சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்களில் எல்லாம் காரணங்கள் கூறப்பட்டு புத்தர் சிலைகள் முளைவிடுகின்றன. இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் புத்தர் சிலைகள் முளைவிட்ட அதே நேரத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த திருகோணமலையில் நகர்பகுதியில் கோணேஸ்வரர் கோவிலை மறைக்கும் முகமாக கோவிலுக்கு செல்லும் வழியில் 80 அடி உயரமுள்ள புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இனவாதிகளால் தமிழர்களின் வரலாறு மாற்றப்படவேண்டும் என்பது ஊட்டப்பட்டுவிட்டது. 1998ம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலின் பெருமையினையும் புகழினையும் மறைக்கும் வகையிலும் சிங்கள ஆதிக்கத்தின் செல்வாக்கினால் கோணேஸ்வரர் கோவிலின் கீழ் பாரிய புத்தர்சிலை ஒன்று சிங்கள இனவாதி ஒருவரின் தலைமையில் கட்டப்பட்டுவந்தது.
இதனை தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்தார்கள். ஆனால் அங்கு எதுவும் நடக்கவில்லை. புத்தர் சிலையினை கட்டி வந்த சிற்பியின் கனவில் குதிரையில் ஒருவர் வந்து அம்பினால் எய்து அவரைக் கொல்லும் கெட்ட கனவினை சிற்பி கண்டதினை தொடர்ந்து அந்த புத்தர் சிலையினை மேலும் கட்டாமல் அவ்வாறே முழுமை அடைய செய்துவிட்டதாக அன்று சிங்களவர்கள் மத்தியில் கதைகள் உலாவியது உண்மை. இதன்பின்பு திருமலை பேருந்து நிலையத்தில் கட்டாயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இதற்காக பலதமிழ் உணர்வாளர்கள் குரல்கொடுத்தார்கள், போராடினார்கள். தமது உயிர்களைக்கூட கொடுத்தார்கள். ஆனால் சிங்களவர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் எதனையும் செய்யமுடியவில்லை. இவ்வாறுதான் திருகோணமலையில் துப்பாக்கிமுனையில் கட்டாயத்தின் பெயரில் பல புத்தர்சிலைகள் முளைவிட்டன.
இதுதான் சிங்களத்தின் மதப்பரப்பு நடவடிக்கை. இவ்வாறுதான் இன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் எல்லாம் புத்தர் சிலைகள் முளைவிடப் போகின்றன. இதற்கு முன்னுதாரணமாகத்தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் சிங்கள அகழ்வாராச்சியாளர்களின் பணிகளும் தமிழ் இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டும் பணிகளும் நடைபெற்றுள்ளன. யாழ் வடமராட்சியில் ஆதிகால மனிதர்களின் சிதைவுகள் குடியிருப்பு சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறீலங்காவின் அகழ்வாராச்சி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆதிகால மனிதர்களின் குடியிருப்பு எச்சங்களை அகழ்வாராச்சி மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று அகழ்வாராச்சி துறைப்பணிப்பாளர் கலாநிதி செனரத் திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு தனிச் சிங்களவர். யாழ்பாணத்தின் மண்வாசனை தெரியாத சிங்களவர். யாழ்மண்ணை ஆராச்சிக்கு உட்படுத்துகின்றார். வடமராட்சியின் குறித்த பகுதியில் ஆதிகால மனிதர்களின் மூன்று குடியிருப்புக்களின் சிதைவுநிலை எச்சங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 3 கிலோ மீற்றர் பகுதியை உள்ளடக்கும் என்றும் இப்பகுதி யாழ்ப்பாணத்தின் வரலாற்று பின்னணியை குறிப்பிடும் மிகமுக்கிய கண்டுபிடிப்பு என்றும் தெரிவித்துள்ளார். காலப்பிரமாணத்தை குறிப்பிடக்கூடிய பல்வேறு நிறங்களிலான மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவாம். இந்த பொருட்கள் பாவனைக்காலத்தை ஆய்வாளர்களால் நிர்ணயிக்கமுடியும் என்றும் கிறிஸ்துவுக்கு முந்தியகாலத்தில் கி.மு.800 ஆண்டுவரையான காலத்தை இவைகுறிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவை எந்தக் காலத்துக்குரியது என்று குறிப்பிட்டு கூறமுடியாதாம் என்றும் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் சில அகழ்வாராச்சிகளை நடத்திமுடித்துள்ளதாகவும் கந்தரோடை என்று அழைக்கப்படும் கதுருகொட பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்தாகவும் தெரிவித்துள்ளனர். இங்குதான் இவர்கள் சிங்கள பெயர் சூட்டுகின்றார்கள். இப்பகுதியில் பாரிய சன்னியாசிமடம் ஒன்று இருந்தமைக்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், கந்தரோடை இரும்பு யுகத்திற்கு உரியது என்றும் இது குடாநாட்டின் பாரிய பழமையினை சுட்டிக்காட்டியுள்ளது என்றும் புதிய அகழ்வு எச்சங்கள் அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். யாழ்குடாநட்டின் வரலாற்றினை தீர்மானிக்கும் வல்லிபுரம் தங்கச்சுருள் முக்கியமானதாகவும் இது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் தெரிவித்த அவர், மாளிகை ஒன்றையும் அரச குலத்தவர் நீராடும் தடாகம் ஒன்றையும் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கு இன்னும் பெயர் குறிப்பிடவில்லை சிங்களப்பெயர்கள் தேடுகிறார்கள் போல உள்ளது. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பகுதிக்குரிய இடங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் 1995ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதிகளில் சிங்களப் படைகள் நிலைகொண்டு அங்கு பல புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளமை யாழ். மக்கள் பார்த்தவிடயம். ஆனால் அவர்கள் கதைக்கமுடியாது. காரணம் அவர்கள் கண்முன்னே துப்பாக்கிதான் நிற்கும். ஆரியகுளச்சந்தியில் பாரிய புத்தர்சிலை அமைத்து அங்கு பலவழிபாடுகளை செய்யும் சிங்களப்படைகள் யாழ்ப்பாணம் செல்லும் சிங்கள மக்களுக்கு எல்லாம் இது புத்தரின் பெருமையான இடம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணம் கோட்டைக்கு செல்லும் வழியும் மற்றும் நகர் பகுதிகளுக்கு சொல்லும் வழியாக காணப்படும் ஆரியகுளச்சந்தியில் ஒரு தாமரைக்குளம் அமைந்துள்ளது.
அதற்கு எதிர்பக்கத்தில் தான் இந்த புத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளது. பாரிய செலவில் பாரிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டு தற்போது மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை வீதிகள் எங்கும் சிங்களப்படைகள் புடைசூழ நிற்பார்கள். இங்குதான் அண்மையில் பாரிய பெரகரா விழா கூட நடைபெற்றது. இதற்கு பல்வேறு ஒத்துழைப்புகளையும் வழங்கி பௌத்தம் யாழில் தழைத்தோங்க ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவும் ஆதரவு வழங்கியிருந்தார். வன்னிப் பகுதியில் கிளிநொச்சியின் இரணைமடுப்பகுதியில், கல்மடுபகுதியில், ஸ்கந்தபுரம்பகுதி, அக்கராயன், ஜெயபுரம் போன்ற பகுதிகளிலும் முல்லைத்தீவின் மல்லாவி, கொய்யாக்குளம், குமுழமுனை, குருந்தூர்மலை முத்தையன்கட்டு, மூன்றுமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு, வவுனியா வடக்கின் நெடுங்கேணி, ஒதியமலை, நைனாமடு போன்ற இடங்களில் எல்லாம் அரசர்கள் வாழ்ந்த வரலாற்று சின்னங்கள் கட்டட எச்சங்கள் எல்லாம் உண்டு.
இதனை ஆய்வுசெய்துவிட்டு சிங்களவர்கள், சிங்கள மன்னர்கள் ஆண்ட இடங்கள் என்று கூறுவார்கள். இவற்றுக்கெல்லாம் காலம் உண்டு என்றுதான் கூறவேண்டும். அதற்குமுன் பன்னாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள் இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணும் முகமாக எமது மண்ணில் நாங்கள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இன்னுமொரு உண்மை உலகிற்கு தெரியும். ஆராய்ச்சியின்போது எத்தனை மண்டை ஓடுகள், மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் எல்லாம் கணப்படுகின்றது என்பதையும் கண்டறியலாம். இவைகள் எல்லாம் சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையினை காட்டி நிற்கும்.
-சுபன்-
நன்றி:ஈழமுரசு
Comments