இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்

(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது பகுதிகள் ) 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களவர் – தமிழர் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து சண்டை பிடிக்கத் தொடங்கினர். சிங்களவரை இலங்கை தேசிய காங்கிரஸ் சார்ப்பு படுத்தியது. தமிழர் சார்பாக சேர்.பொன். இராமநாதன் இருந்தார்.

இலங்கைக்கு என்றோ ஒரு நாள் தன்னாட்சி (self-rule) அல்லது சுதந்திரம் கிடைக்கும் என சிங்களத் தலைவர்கள் நினைக்கவில்லை. தன்னாட்சி பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் உடன்பிறப்புக்களே முதலில் உண்டாக்கினார்கள்.

sir-pon-ramanathan1917 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 2 ஆம் நாள் கொழும்பு விக்டோரியா மண்டபத்தில் இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமரவிக்கிரம தலைமையில் பொன். அருணாசலம் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் புகழ்வாய்ந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பினை விடுத்தவர் ஏரிக்கரை செய்தித்தாள் நிறுவனத்தின் தொடக்குனரும் இலங்கைத் தேசிய சங்கத்தின் செயலாளருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.

இலங்கைத் தேசிய சங்கம் 1888 இல் சிங்கள கரவா சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சங்கமாகும்.

குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தின்போது சாதி தொழில் என்பவற்றுக்கு இடையில் இருந்த தொடர்பு மறையத்தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிங்களவரிடையே காணப்பட்ட படிமுறை சமூக அமைப்பில் கொய்கம (goyigama) என்ற சாதியே உயர்சாதியாகக் கருதப்பட்டது. அந்தச் சாதியினரே பெரும்பான்மையாகவும் (51விழுக்காடு) இருந்தார்கள். இந்த சாதியினர் இடையிலும் நிலக்கிழார்கள் "முதல்தர சாதி" ஆகக் கருதப்பட்டனர். இவர்கள் ஏனைய சாதாரண கொய்கம சாதியாரோடு தம்மைப் பிரித்து "றடல" (Radala) எனத் தங்களை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் படிமுறை சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கரவா சாதியினரும் பணமும் செல்வாக்கும் படைத்தவர்களாகக் காணப்பட்டார்கள். றொபேட்ஸ் (Roberts) என்ற ஆங்கிலேயர் இருபதாம் நூற்றாண்டில் இலங்கை பற்றிய பார்வைகள் (Twentieth Century Impressions of Ceylon) என்ற நூலில் கரவா, துராவ மற்றும் சலாகம சாதியினர் மக்கள் தொகையில் 31 விழுக்காடாக இருந்தனர் என எழுதியுள்ளார்.

இந்த மூன்று சாதிகளிலும் தமிழ்க் கலப்பு இருக்கிறது பலருக்குத் தெரியாத சங்கதியாகும். குறிப்பாக சலாகம சாதியினர் ஒல்லாந்தர் காலத்தில் கருவாப்பட்டை உரிக்கத் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் ஆவர். இன்று சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்குபவர்களில் இவர்களே முதல் இடம் வகிக்கிறார்கள்.

தென்னிலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாகத் நிலக்கிழார் பின்னணியையும் பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொய்கம மற்றும் கராவ சாதியினர் தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார்கள்.

1833 – 1912 வரையிலான காலப்பகுதியில் சட்டவாக்க சபை பெரும்பாலும் எத்தகைய சீர்திருத்தத்துக்கும் உட்படவில்லை. இதில் பெரும்பான்மை 9 மூத்த அரச அதிகாரிகளும் 6 சிறுபான்மை அரசபற்றற்ற (Unofficial) உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அரசபற்றற்ற உறுப்பினர்கள் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருந்து நியமனம் செய்யப்பட்டார்கள். சிங்களவர்களை சார்புபடுத்திய உறுப்பினர்கள் எப்போதுமே கொய்கம சாதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். இதனை விரும்பாத கராவ முதலாளிகள் 1882 இல் இலங்கை வேளாண்மைச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த அமைப்பே 1888 இல் இலங்கை தேசிய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1888 இல் இந்தச் சங்கம் சட்டவாக்க சபைக்குள் நுழைய முற்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்த இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்தான் பொன். அருணாசலம் "எங்களது அரசியல் தேவைகள்" (Our Political needs) என்ற தலைப்பில் உரை ஆற்றினனார். அந்த உரை அரசியலில் இலங்கை அடைய வேண்டிய முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டியது. இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்ட போது மத்திய தர சிங்களவர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு மே மாதத்தில்தான் இலங்கைச் சீர்திருத்த சங்கமும் அவரது தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது.

பொன். அருணாசலம் அவர்களது உரையால் மிகவும் கவரப்பட்ட இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் சேர் ஜேம்ஸ் பீரிஸ் இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அந்த உரையைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த உரையை மட்டுமல்ல பொன். அருணாசலம் அவர்களது ஏனைய வெளியீடுகளையும் படிக்குமாறு வற்புறுத்தினார்.

பொன். அருணாசலத்தின் உரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜேம்ஸ் பீரிஸ் "அரசியல் சீர்திருத்தம் பற்றி பலர் கூறினாலும் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே இடைவிடாத கட்டுப்பாடான கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்ற அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னார்." என எடுத்துரைத்தார்.

1921 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ், 1920 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சபைக் கட்டளைக்குத் தீர்மானம் மூலம் திருத்தம் ஒன்றை முன்வைத்தது. அதன் அடிப்படையில் சட்டவாக்குச் சபை 45 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் 6 அரசசார்பு உறுப்பினர்கள், 28 உறுப்பினர்கள் ஆட்புல, வகுப்புவாரி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவகளாக இருப்பர். மூன்று அமைச்சர்கள் சட்டவாக்க சiபியில் இருந்து நிறைவேற்றுக் குழுவுக்கு (Executiv Council) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக சேர்.பொன். இராமநாதன் சிறுபான்மைத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு விண்ணப்பத்தை குடியேற்ற நாட்டுச் செயலருக்கு அனுப்பி வைத்தார். அதில் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஓரளவு மாற்று யோசனைகளை முன்வைத்தார். நிறைவேற்றுச் செயற்குழுவில் சிறுபான்மையினரது குரல் கேட்கப்பட வேண்டும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரது நலங்கள் பேணப்பட வேண்டும் என்பதே அந்த யோசனைகளாகும்.

ஆனால் இலங்கை தேசிய காங்கிரசின் பேச்சாளர் இ.டபுள்யூ பெரேரா கூட்டு விண்ணப்பத்தை "புகழற்றது" (Infamous) என இழிவு படுத்தினார்.

பொன். இராமநாதன் அனுப்பிய கூட்டு விண்ணப்பத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"ஆட்புல பிரதிநித்துவம் பற்றி விரிவாக ஆராய்ந்த போது தமிழ்ப் பேராளர்கள் தங்களது சிங்கள கூட்டாளிகள் (சில விதிவிலக்கு உட்பட), சிங்கள மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளை உருவாக்கி ஏனையோரது சார்பாக எழும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து தமிழ்ப் பேராளர்களும் தமிழ் அமைப்புக்களும் விலகியதோடு தங்களது ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்தன. இதன் பிற்பாடு காங்கிரஸ் தமிழர்களை சார்புபடுத்தும் தகைமையை இழந்துவிட்டது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை தோற்றுவித்தவரும் அதன் முதல் தலைவருமான எனது உடன் பிறப்பு அருணாசலம் 1920 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதில் இருந்து விலகிவிட்டார்.

டிசெம்பர் 14 ஆம் நாள் இலங்கை ரைம்ஸ் (Times of Ceylon) செய்தித்தாளுக்கு அருணாசலம் கொடுத்த செவ்வியில் "இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் சார்பு படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது. சிங்களவர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையில் ஆளுக்கு ஆள் இருந்த நம்பிக்கையும் ஒத்துழைப்பும் சுக்கு நூறாகிவிட்டது. காங்கிரசின் அதிகார தன்மானமும் உடைந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.

தமிழில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி உண்டு. சிங்களத் தலைவர்களிடம் இருந்து எழுந்த தமிழின எதிர்ப்பு சமிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் முழுதாகப் புரிந்து கொள்ளத் தவறினார்கள். சுயநலமும் பதவி ஆசையுமே அதற்குக் காரணமாகும். தமிழர்களது ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திராது. குறைந்தபட்சம் அது தள்ளிப் போடப்பட்டிருக்கும். சூழ்ச்சியும் தந்திரமும் வாய்ந்த சிங்களத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் அமைச்சர் பதவி, பட்டம், வாக்குறுதி போன்றவற்றை வழங்கித் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றினார்கள். இது பற்றி பின்னர் எழுதுவேன்.

தலைக்கு ஒரு வாக்கு என்றால் (Universal Suffrage) அரசியல் அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களவர் கைக்குப் போய்ச் சேரும் என்பதை இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கிய பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் சிங்கள இனத் தலைவர்களின் உட்கிடக்கையை அறிந்து கொண்டு தமிழர்களுக்கு நேரவிருந்த கேடுகளையிட்டு எச்சரிக்கை செய்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் இனவாதிகள், பிற்போக்குவாதிகள் என பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்களால் அர்ச்சிக்கப்பட்டார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், மொழிகள், மதங்கள் இருக்கும் நாட்டில் எல்லோர்க்கும் வாக்குரிமை என்பது பெரும்பான்மை இனத்தின் அடக்குமுறைக்கு (Tyranny of the majority) வழிவகுக்கும் என்ற உண்மையைத் தமிழர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர்தான் பட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

பொன். இராமநாதன் 1879 இல் தனது 28 ஆவது அகவையில் சட்டவாக்க சபையில் அவரது மாமனார்; சேர். முத்துக்குமாரசுவாமியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தெரிவோடு அவரது அரசியல் வாழ்க்கை தொடங்குகின்றது. இந்தப் பதவியில் 1892 வரை நீடித்தார். 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகித்தார்.

பொன். இராமநாதன் பொன்னம்பலம் முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 1815 ஆம் ஆண்டு சித்திரைமாதம் 16 ஆம் நாள் பிறந்தார். இவர் தமது இளமைக் கல்வியைச் கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியைச் சென்னை இராணிக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து 1874 ஆண்டு சட்டத்தரணியானார். அதன் பின்னர் பத்து ஆண்டு காலம் சட்ட அறிக்கைகளின் ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 தொடக்கம் 1908 வரை சட்ட நாயகமாகவும் (Solicitor General) தற்காலிக சட்டமா அதிபராகவும் கடமையாற்றினார். 1989 இல் பிரித்தானிய அரசு அவருக்கு சேர் (Knight) பட்டத்தைப் பெற்றார். 1903 ஆம் ஆண்டு இராணி வழக்கறிஞர் (Queen's Counsel) பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தப்பட்டார். இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கையர் இவர் ஆவார்.

பொன்.இராமநாதன் முதலியார் இ. நன்னித்தம்பி அவர்களின் மகள் செல்லாச்சியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 ஆண்களும் 3 பெண்களும் பிறந்தார்கள். அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின்னர் 1906 ஆம் ஆண்டு ஆர்.எல். ஹரிசன் என்ற அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார். இந்து சமயத்துக்கு மாறிய ஹரிசன் தனது பெயரை லீலாவதி என மாற்றிக்கொண்டார். இராமநாதன் 1930 இல் மறைந்த பின்னரும் லீலாவதி நீண்டகாலம் இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார். இவர்களுக்குப் பிறந்த ஒரே பெண் சிவகாமசுந்தரி தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பையா நடேசபிள்ளையை மணந்து கொண்டார்.

பொன். இராமநாதன் இளமைக் காலத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களது தொடர்பாலும் ஆறுமுக நாவலர் அவர்களது நட்பினாலும் சைவத் தமிழ்ப் பணிகளில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பெண்களின் கல்வி வளர்ச்சியானது தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கு அடிப்படையாய் அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு 1913 இல் யாழ்ப்பாணம் மருதனா மடத்தில் பெருந்தோகையான பொருட் செலவில் இராமநாதன் மகளிர் கல்லூரியை கட்டி முடித்தார். 1921 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியை நிறுவினார். தமிழர்களது வரலாற்றில் இரண்டு கல்லூரிகளை நிறுவிய ஒரே தமிழ் அரசியல்வாதி என்ற பெருமை இவருக்கு உண்டு.

பெரும் சட்ட வல்லுனராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய இவர் சமயம், தத்துவம், யோகநெறி என்பவற்றிலும் புலமை பெற்றிருந்தார். (வளரும்)

- நக்கீரன்

Comments