1847 இல் யூலை மாதத்தில் இலண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொழிலாளர்கள் சங்கம் "கம்யூனிஸ்டுகள் சங்கம்" என்று அழைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில்தான் "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர" (Workers of the world unite; you have nothing to lose but your chains) என்ற முழக்கத்தை கார்ல் மார்க்சும் பிடரிக் ஏஞ்ஜெல்சும் (Karl Marx and Frederick Engels ) முன்வைத்தனர்.
1848 இல் மார்க்ஸ், ஏஞ்ஜெல்ஸ் இருவரும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Party Manifesto) என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் மக்களின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.
அமெரிக்காவுக்கும் அய்க்கிய இராச்சியத்துக்கும் எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளைக் கையாண்ட George Washington அவர்களின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும் இவர்களது விடுதலை வேட்கையும் வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான, இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திரப் பறையறை துரடல 4, 1776 இல் இடம்பெற்றது.
1776 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பறையறை வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பறையறைக்கு இடப்பட்டிருந்த தலைப்பு "13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பறையறை" என்பதாகும். இன்றளவும் அந்த யூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
யூலை 10, 1776 இல் அய்வரைக் கொண்ட குழு சுதந்திர பறையறைவு தயாரிப்பில் ஈடுபட்டது. யோன் அடம்ஸ் (James Adams) பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Franklin) றொஜர் ஷெர்மன் (Roger Sherman) ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் (R.R.Livingston) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) ஆகியோரே இந்த அய்வர் ஆவர். இந்தப் பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson என்பாரே இந்த பறையறைவை எழுதினார். இந்த பறையறைவில் காணப்பட்ட சாகா வரம் கொண்ட வைர வரிகள்....
"We hold these truths to be self evident: that all men are created equal; that they are endowed by their creator with certain inalienable rights; that among these are life, liberty. and the pursuit of happiness."
"இந்த உண்மைகள் வெளிப்படையானவை எனக் கருதுகிறோம்: எல்லா மனிதர்களையும் கடவுள் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் மறுக்க முடியாத சில உரிமைகளையும் கடவுள் அவர்களுக்கு அளித்துள்ளான். அவற்றுள், வாழ்வுரிமை (Life) சுதந்திரம் (Independence) இன்பத்திற்கான தேடல் உரிமை (Persuit of happiness) வெளிப்படையான உண்மைகள் எனக் கருதுகிறோம்."
அமெரிக்க சதந்திரப் பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த அறமே காரணம் எனலாம். ஈழத் தமிழ் மக்களும் இன்று அல்லது நாளை தங்கள் விடுதலையை வென்றெடுப்பர். ஏனெனில்...
"தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட வேட்கை நியாயமானது. பன்னாட்டு மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். பன்னாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.” (தமிழ் ஈழ தேசியத்தலைவர் மேதகு திரு வே. பிரபாகரன்)
பாகிஸ்தான் 1947 இல் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் நாடு. அதன் முன்னோடி மார்ச்சு 22 - 24, 1940 இல் லாகூரில் கூடிய முஸ்லிம் லீக் மாநாடு பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அதிகளவு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் என எல்லோராலும் கருதப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை 1930 இல் அல்லமா இக்பால் (Allama Iqbal) அவர்களால் முன்மொழியப்பட்டது. அதன் பின் பாகிஸ்தான் என்ற பெயர் 1933 இல் சவுத்திரி இராமத் அலி (Choudhary Rahmat Ali) என்பவரால் முன்மொழியப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் மொகமட் அலி ஜின்னாவும் மற்றும் தலைவர்களும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.
1941 இல் லாகூர் தீர்மானம் முஸ்லிம் லீக்கின் யாப்பில் சேர்க்கப்பட்டது. இதுவே 1946 இல் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையாக வடிவெடுத்தது.
"முஸ்லிம்கள் தொடர்ச்சியாகவும் வாழும் புவியியல் நிலப்பரப்பு தனிப் பகுதிகளாக எல்லை வகுக்கப்பட்டால் அல்லாது எந்த அரசியல் யாப்புத் திட்டமும் முஸ்லிம்களால் ஏற்கவோ நடைமுறைப் படுத்தவோ முடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஆன வட - மேற்கு மற்றும் கிழக்கு வலையங்கள் சுதந்திர அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவை தன்னாட்சி உரிமை மற்றும் இறைமை படைத்த மாநிலங்களாக விளங்கும்."
பாகிஸ்தான் உருவாகுவதற்கு பிரித்தானிய இந்திய சட்டசபைகளில் சிந்து மாகாணமே முதலாவதாக ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் ஒரு தலைபட்ச பறையறவை அறிவித்தது. இந்தப் பறையறை வெளியிடப்பட்ட 11 ஆவது மணித்துளியில் அமெரிக்கா இஸ்ரேலை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கவுத்தமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்;தது. மே 17 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் பல நாடுகள் ஒப்புதல் அளித்தன.
1945 இல் அய்யன்னா அவை உருவாக்கப்பட்டது. அப்போது அதில் 51 நாடுகள் உறுப்புரிமை வகித்தன. இன்று அதன் உறுப்பினர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மை தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த நாடுகள் ஆகும்.
1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக்குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம் 15 இணைப்பாட்சி நாடுகளைக் (1. Armenia, 2. Azerbaijan, 3. Belarus, 4. Estonia, 5. Georgia, 6. Kazakhstan, 7. Kyrgyzstan, 8. Latvia, 9. Lithuania, 10. Moldova, 11. Russia, 12. Tajikistan, 13. Turkmenistan, 14. Ukraine, 15. Uzbekistan) கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து பொரிஸ் யெல்ச்சின் (Boris Yeltsin) ஆட்சியைக் கைப்பற்றினார். செப்தெம்பர், 1991 இல் போல்ரிக் நாடுகளது (Latvia, Lithunia, Estonia) சுதந்திரத்தை உருசியா ஏற்றுக்கொண்டது. நொவெம்பர், 1991 இல் பொரிஸ் யெல்ச்சின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து எஞ்சிய 12 நாடுகள் தனிநாடாகத் தம்மைப் பிரகடனம் செய்தன.
இதே போல் யூகோசிலோவாக்கியா குடியரசில் (Slovenia, Croatia, Bosnia and Herzegovina, Macedonia, Montenegro, Serbia) இரண்டு மாகாண அரசுகளும் (Kosovo and Vojvodina) உறுப்பிரிமை வகித்தன. யூகோசிலோவாக்கியாவின் தலைவர் டிட்ரோ மறைந்த பின்னர் அது உடைந்து தனித்தனி நாடுகள் ஆகின.
யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் யூன் 25, 1991 இல் சுதந்திரப் பறையறை செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக ஒப்புதல் அளித்தது.
1991ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பறையறை செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழியில் யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.
இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னை சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்யன்னா அவையின் ஒப்புதல் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்யன்னா அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.
"கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்........."
எனவே புவிவரை படத்தில் இருக்கும் நாடுகள் மனிதர்கள் புவியைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட வரலாறுதான். நாடுகளின் எல்லைக் கோடுகள் கல்லில் எழுதியவை அல்ல. கடவுளால் எழுதப்பட்டவையும் அல்ல.
இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே 1976 ஆண்டு மே 14 இல் வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாம் நோக்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் நான் மேலே குறிப்பிட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்துக்கும் அல்லது லாகூர் தீர்மானத்துக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.
இலங்கையின் வட – கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களது ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருண்மிய வேட்கைகள் அனைத்தையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் துல்லியமாகவும் அச்சொட்டாகவும் எடுத்துக் காட்டுகிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்வியல் அவலங்களில் உள்ள பல்வேறு இடர்களைத் தீர்ப்பதற்கும் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மானத்தோடும் வாழ்வதற்கும் தங்களது மொழி, கலை, பண்பாடு இன அடையாளங்களைப் பேணித் தனித்துவமான இனமாக வாழ்வதை வற்புறுத்துகிறது.
ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுடைய சமயசார்பற்ற சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டெடுத்து மீள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசியல் இலக்கை எட்டும் வரை நாம் ஓயாது போராடவேண்டும்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. வடக்கில் 69 விழுக்காடு வாக்குகளையும் கிழக்கில் 32.9 விழுக்காடு வாக்குகளையும் அது பெற்றது.
33 ஆண்டுகளுக்குப் 1976 இல் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட் வட்டுக்கோட்டைத் தீர்மானமே திம்பு பேச்சுவார்த்தைக்கும் ஒஸ்லோ அறிவித்தலுக்கும் அடிக்கல்லாக இருந்தது. திம்புவில் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக்காக முன்வைத்த தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கோட்பாடுகளே.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் உறுதிசெய்வது நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்துக்கு வலு சேர்க்கும். இதனை நாடுகடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் உறுதி செய்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவையில் காணப்படும் “நாடுகடந்த தமிழீழ அரசின் நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?” என்ற கேள்விக்கு பின்வருமாறு விடை இறுக்கப்பட்டுள்ளது.
"ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப் படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன."
காலத்தின் தேவையை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து ஓயாது ஒழியாது போராடுவோம்.
(அடுத்த கிழமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்புலம் பற்றிப் பார்ப்போம். Ulagaththamilar - September 25, 2009)
நக்கீரன் canada
Comments