ஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய சிறுபான்மை ஆக்கியது

amir_chelvaதமிழீழ தாயக விடுதலையை முன் நகர்த்தும் பெருமுயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அய்ந்தாவது விளக்கம் - கருத்துப் பகிர்வு – கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (நொவெம்பர் 07) மாலை மொன்றியல் முருகன் கோயில் அரங்கில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த உறவுகள் கூடியிருந்தனர். அது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வீழ்ந்தாலும் மீண்டும் எழுச்சியோடு எழுவோம் என்பதற்கு அந்த உறவுகள் சான்று பகர்ந்தார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் என்ன தொடர்பு? உறவுகளிடம் இது தொடர்பான தெளிவான விளக்கம் இல்லை. அதுபற்றித்தான் உறவுகள் கூடுதலாகக் கேள்வி கேட்பார்கள் என நாம் சந்தித்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் முன்கூட்டி எச்சரித்திருந்தார்கள். ஆனால் அரங்கில் அதுபற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. எனவே நானே அந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான விளக்கத்தையும் அளித்தேன்.

கூட்ட முடிவில் என்னோடு உரையாடிய பல உறவுகள் நான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றிக் கூறியவை தாங்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்காத செய்திகள் என என்னிடம் தெரிவித்தனர். இது எமது வரலாற்றை எழுத்தெழுதிப் படிக்காவிட்டாலும் வரலாறு பற்றி மேலோட்டமாக அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. இதை மனதில் இருத்தி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றை சற்று விரிவாக எழுத எண்ணியுள்ளேன்.

வரலாற்றை கட்டுரைத் தொடர் மூலம் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. கோடிட்டுத்தான் காட்ட முடியும். எனவே உறவுகள் எமது வரலாறு தொடர்பான நூல்களைப் படிக்க வேண்டும். இந்த நூல்களின் பட்டியலை ஏற்கனவே கொடுத்துள்ளேன்.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று வரலாறு சொல்லித்தரும் பாடங்களில் இருந்து படிப்பினை படிக்கத் தவறியவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those who do not study and learn the lessons of history are doomed to repeat it) என்பதால் வரலாற்றை நாம் படித்து அது சொல்லும் பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். எமது முன்னோர் விட்ட பிழைகளை தவிர்த்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகும்.

இது தொடர்பாக அண்மையில் (09-11-2009) விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்த ஊடக அறிக்கை வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான குழப்பத்தை நீக்க வழி செய்துள்ளது. அதன் முக்கிய பகுதி பின்வருமாறு:

"ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும் தாம் அதற்கான தாயகமும் தேசியமும் தன்னாட்சி உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும் விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும் ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது.

இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் வேட்கையை மக்கள் ஆணை மூலம் வெளிப்படுத்தியமையும் முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது அய்யத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக சனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு அனைத்துலக மட்டத்தில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் சனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும் வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற சனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, நாடு கடந்த தமிழீழ அரசை அனைத்துலக மட்டத்தில் மக்களாட்சி முறைமையில் அரசியல் கட்டமைப்பாக உருவாக்குவது, மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்த மக்கள் கட்டமைப்புகளை உருவாக்குவது இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று வலிமை சேர்க்க உதவும். மூன்றுமே ஒரே நேரத்தில் சமாந்தர பாதையில் பயணிக்கும் தன்மை வாய்ந்தவை. அவை தாயக விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும்.

தொடர்ந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அரசியல் வரலாறு பற்றி, குறிப்பாக சேர். பொன். இராமநாதன் (1851-1930) அவர்களது அரசியல் வாழ்க்கை பற்றி ஆராய்வோம். சட்டவாக்கு சபைக்கு (Legislative Council) (1879 – 1892) தனது 27 அகவையில் காலடியெடுத்து வைத்த இராமநாதன் பிரிட்டிஷ் ஆட்சியை விமர்ச்சிக்கின்ற ஒரு விமர்ச்சகராகவே விளங்கினார். தமிழர்களது முன்னேற்றம் பற்றியோ நலன்கள் பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. 1886 ஆம் ஆண்டளவில் சட்டவாக்கு சபையில் அவரே மூத்த உத்தியோகப் பற்றற்ற உறுப்பினராக விளங்கினார்.

சட்டவாக்கு சபையில் இராமநாதனின் வாயை அடைக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவருக்குப் பல பதவிகளையும் பட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வளங்கினார்கள்.

1889 - Companion of the Distinguished Order of St Michael and St George (CMG)
1892 – 94 சட்டநாயகம் (Solicitor General)
1896 – 97 சட்டநாயகம் (Solicitor General)
1894 – 96 பதில் சட்டமா அதிபர்
1913 - அரச வழக்குரைஞர் (King’s Counsel)
1923 - சேர் பட்டம் (Knighthood)

1892 இல் இராமநாதனின் சட்டவாக்கு சபையின் பதவிக் காலம் முடிந்தவுடன் அவருக்கு சட்டநாயகம் பதவியை வழங்கி சட்டவாக்கு சபையில் இருந்து மெல்லக் கழட்டி விட்டு விட்டார்கள்.

பொன். இராமநாதனுக்கு உச்ச நீதிமன்ற நீதியரசராக வரும் ஆசை இருந்தது. ஆனால் அதற்கு முதற்படியாக சட்டமா அதிபராக வரும் வாய்ப்பை பிரிட்டிஷ் அரசு வழங்க முன்வரவில்லை. 1902 ஆம் ஆண்டு இராமநாதனுக்குப் பதில் அவருக்கு நேரடி கீழ்ப்படியிலிருந்த U.H.Templer என்ற ஆங்கிலேயர் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியரசராக நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் 1901 இல் இராமநாதனுக்குக் கீழ்ப்படியிலிருந்த Henry Wendt என்ற பரங்கியர் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்யப்பட்டார்.

பொன். இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டார். காரணம் அவர் தமிழர்களை மட்டுமல்ல ஆங்கிலம் பேசும் உயர்மட்ட சிங்களவர்களது குரலாகவும் விளங்கினார். அன்றைய காலத்தில் ஆங்கிலம் படித்த உயர்மட்ட சிங்கள - தமிழரிடம் மொழி அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் பிரிவினை இருக்கவில்லை. தமிழர்கள் தங்களை சிறுபான்மையர் என்று எண்ணாது சிங்களவர் - தமிழர் இருசாராருமே இலங்கையின் பூர்வீக மக்கள் (founding fathers) என எண்ணினார்கள். இதன் அடிப்படையிலேயே ஏப்ரில் 06, 1910 இல் குடியேற்ற நாட்டுச் செயலருக்கு எழுதிய விண்ணப்பத்தில் படித்த இலங்கையருக்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒரு சிங்களவர் ஒரு தமிழர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழர்கள் கேட்டிருந்தனர்.

ஆனால் இருபதுகளில் சிங்கள அரசியல்வாதிகள் சட்டவாக்கு சபைக்கு இன அடிப்படையில் அல்லாது ஆட்புல அடிப்படையில் சார்பாளர்கள் (Representatives) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டார்கள். இதன் விளைவு அரசியலில் தமிழர்களுக்குப் பின் இருக்கை ஒதுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது தமிழர்கள் இலங்கையின் இரண்டு பூர்வீக மக்களில் ஒருவர் என்ற தகைமையும் இல்லாது போய்விட்டது. சிங்களவர் மட்டுமே இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர் தேசிய சிறுபான்மையினர் என்ற பாகுபாடு தலை எடுத்தது.

இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்கு போட்டியிட்டு சிங்கள அரசியல்வாதிகளில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்திருந்தார். இந்த வெற்றிக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தமிழர்களது வாக்குகள். தமிழர்களில் பலர் ஆங்கிலம் படித்திருந்தமையால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. இரண்டு சிங்களவர்கள் மத்தியில் கொய்கம – கரவா என்ற போட்டா போட்டி. மார்க்கஸ் பெர்னாந்து கரவா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொய்கம சிங்களவர்கள் தங்கள் வாக்குகளை இராமநாதனுக்குப் போட்டு அவரை வெற்றிபெறச் செய்தனர். கொய்கம சிங்களவர் பெரும்பான்மையாக இருந்தாலும் கரவா சிங்களவர் பணபலத்திலும் அரசியல் பலத்திலும் செல்வாக்கோடு விளங்கினார்கள்.

தாழ்நிலச் சிங்களவர் (Low Country Sinhalese) பற்றியும் இலங்கை தேசிய காங்கிரஸ் பற்றியும் கண்டிய சிங்களவர் கொண்டிருந்த அய்யுறவு காரணமாகவே கண்டிய சிங்களவர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள 1920 இல் கண்டியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1925 அளவில் பெரும்பாலான கண்டிய சிங்களவர் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகி கண்டி தேசிய அவை (Kandyan National Assembly) என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.

1901 – 1971 வரை இடம்பெற்ற குடிமதிப்பின் போது கண்டிச் சிங்களவர் பிறிதாகவும் தாழ்நிலச் சிங்களவர் பிறிதாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் இது கைவிடப்பட்டு விட்டது. 1971 இல் தாழ்நிலச் சிங்களவரின் விழுக்காடு 42.8 கண்டிச் சிங்களவரின் விழுக்காடு 29.1 ஆகவும் காணப்பட்டது.

இருபதுகளில் சிங்களவர் தாழ்நிலச் சிங்களவர் கண்டிய சிங்களவர், கொய்கமஃகரவா, பவுத்தர் ஃகிறித்தவர் எனப் பிரிந்து இருந்தார்கள். கண்டிய சிங்களவர்களை திருப்திப் படுத்தும் முகமாகவே தாழ்நிலச் சிங்களவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1926 இல் இலங்கையில் இணைப்பாட்சி யாப்பை நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

தமிழ்த் தலைவர்கள் இணைப்பாட்சி அடிப்படையில் தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு தமிழரசு வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முறையாக 1949 ஆம் ஆண்டில்தான் முன்வைத்தார்கள்! 1951 இல் திருகோணமலையில் நடந்த தமிழரசுக் கட்சியின் முதல் தேசிய மாநாட்டிலேயே "இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அவர்கள் தேசிய இனத்துக்குரிய அடிப்படை வரைவிலக்கணத்தின் கீழ் சிங்களவர்களிடம் இருந்து வேறுபட்ட ஒரு தேசிய இனம்" ("“The Tamil speaking people of Ceylon constitute a nation distinct from that of the Sinhalese by every fundamental test of nationhood") என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கம்யூனிஸ் கட்சி 1944 இல் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றும் அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை உண்டென்றும் அவர்கள் விரும்பினால் தனியரசை நிறுவிக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. (வளரும்)

- நக்கீரன்

Comments