நான் கண்ட பாலகுமாரன்

க.வே. பாலகுமாரன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பெயர். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே எனக்குப் பிடித்தமான இயக்கங்கள் இரண்டு. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றொன்று ஈரோஸ், பிடித்தமான தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் வே. பிரபாகரன். மற்றொருவர் வே. பாலகுமாரன். இந்த இருவரில் நான் முதலில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது அண்ணன் க.வே. பாலகுமாரன் அவர்களைத் தான். க.வே.பாலகுமாரன்

1989 ஆம் ஆண்டு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதி இராசு இயக்கிய ‘கொங்கை தீ’ நாடகத்தைப் பார்த்து விட்டு, அரங்கத்தை விட்டு வெளியே செல்ல எத்தனித்த என்னை, என் பெயர் சொல்லி அழைத்த குரல் கேட்டு அத்திசை நோக்கித் திரும்பினேன். அங்கே நண்பர் வைகறையும், ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணன் பாலகுமாரன் அவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எதிர்பாராத அதிர்ச்சி எனக்கு. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இடையில் பல இருக்கைகள் இருப்பதையும் மறந்து விரைந்து சென்றேன். அதற்குள் நண்பர் வைகறை என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அண்ணன் பாலகுமாரன் அவர்களும் கரங்களைப் பற்றி நலம் விசாரித்துக் கொண்டோம்.

“உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் ஓவியங்கள் பற்றிய கட்டுரையைப் பாலம் இதழில் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. எங்கள் போராட்டங்கள் குறித்து நிறைய தொடர்ந்து செய்யுங்கள்” என்றார்.

இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.

அதற்குள் நண்பர் இராசு அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார். அனைவரும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.

ஈரோஸ் குறித்தும், பாலகுமாரன் குறித்தும் நான் கொண்டிருந்த உயர் மதிப்பீட்டிற்கு. காரணம் பாலம் இதழ் என்றால் மிகையாகாது. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம், எவ்வாறு கலை இலக்கியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கும், உலக விடுதலை இயக்கங்களைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கும் அடையாளமாக பாலம் இதழ் வெளிவந்தது. குறிப்பாக பாலத்தீன விடுதலை இயக்கத்தைப் பற்றிய வரலாறுகளையும், செய்திகளையும் போராடுகின்ற மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பாலம் இதழ் ஆற்றிய பணி அளவிட முடியாதது. எனக்குள் இருந்த சமூகம், கலை இலக்கியம் குறித்த பார்வையை இன்னும் ஆழப்படுத்து வதற்கும், அதிகப்படுத்து வதற்கும் பாலமும் அடிப்படை யாக இருந்திருக்கிறது.

ஈரோஸ் இயக்கம் போராட்டம் குறித்துக் கொண்டிருந்த மார்க்சியக் கோட்பாடும், அணுகு முறையும் தெளிவும், புரிதல்களும் எனக்கு அந்த இயக்கம் மீதும், அதன் தலைவர் பாலகுமாரன் மீதும் மதிப்பும்மரியாதையும்,ஈடுபாடும் அதிகமாவதற்குக் காரணமாக இருந்தன. புலிகளும், ஈரோசும் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று சிந்தித்த தருணங்களும் உண்டு.அண்ணன் பால குமாரனைப் புதுச்சேரியில் சந்தித்த பிறகு மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த காலத்திலேயே, ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, புலிகள் இயக்கத்தில் இணைய விரும்புகிறவர்கள் இணையலாம் என்று அறிவித்து முதலில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக செய்தி அறிந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை விமர்சித்த நண்பர்களும், தோழர்களும் இங்கு உண்டு. ஆனால் அண்ணன் பாலகுமாரன் செய்தது மட்டுமே சரி என்பதைக் காலம் உணர்த்தியது. நான் ஈழத்திற்குச் சென்று, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள் என்னை வரவேற்று நான் பார்க்க வேண்டிய இடங்களையும், சந்திக்க வேண்டிய நபர்களையும் விவரித்த பிறகு, அண்ணன் பாலகுமாரன் எப்படி இருக்கிறார்? நான் அவரைப் பார்க்க வேண்டும என்று சொன்னேன். அண்ணை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

தமிழகத்திலேயே எனக்கு அறிமுகம், எனக்குப் பிடித்தமான மனிதர் என்று சொன்னேன். உடனே ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் சந்திக்கலாம் என்று கூறினார். ஒரு முன்னிரவுப் பொழுதில் என் வாகனம் கிளிநொச்சியிலிருந்து கிளம்புகின்றது. என்னை அழைத்துச் செல்லும் நண்பர் ‘பாலகுமாரன் அண்ணை உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறார்’ என்றார்.

மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்
றேன். வாகனம் இருளைக் கிழித்துக் கொண்டு சென்றது. ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அடர்ந்த மரங்கள் அடங்கிய ஒரு தோப்பின் வாயிலில் நின்றது. அது, புதுக் குடியிருப்பு.

என்னை வாகனத்தி லேயே இருக்கச் சொன்ன நண்பர் கீழே இறங்கவும், வாயிலில் இருந்தவர் கைவிளக்கோடு நண்பரை நோக்கி வந்து, ஏதோ கேட்டுவிட்டு, என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சுற்றுப்புறம் மிகவும் இருளாகஇருந்தது. எதையுமே பார்க்க முடியவில்லை. ஒரு 150 அடி தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. அது வீடாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அங்குத் தெரியும் விளக்கொளியில் அண்ணன் பாலகுமாரன் நிற்பது தெரிந்தது. வீட்டு வாசலில் கட்டி அணைத்து வரவேற்றார். அண்ணியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். தேநீர் கலக்கித்தர வேண்டுகை விடுத்தார். குடும்பத்தினர் நலம் விசாரித்தார். தமிழ்நாட்டு நண்பர்கள், தலைவர்கள், மக்கள் குறித்து விசாரித்தார்.

ஓவியர் புகழேந்தி நான் அவருக்காக எடுத்துச் சென்ற என்னுடைய நூல்களை அவரிடம் தந்தேன். உங்கள் ஓவியங்களையும் அதுகுறித்த கட்டுரைகளையும் ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். எங்கள் போராட்டத்தை, இன்னொரு பரிமாணத்திற்கு உங்கள் ஓவியம் இட்டுச் செல்கிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டும். இப்போது தானே இங்கு வந்திருக்கிறீர்கள். ஓவியம் செய்வதற்கான கரு இங்கே நிறைய கிடைக்கும் என்று அவர் பேசிக் கொண்டே சென்றார். நான் அவரிடம் கேட்க வேண்டிய பேச வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. அண்ணே, நீங்கள் ஈரோசை கலைத்துவிட்டு, இயக்கத்தில் சேர்ந்தது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி அவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்று கேட்டேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் மிகவும் சிரமப்பட்டிருப்போம். இரத்தம் இரத்தம் ஒரே இரத்தம் அப்பப்பா தாங்கமுடியவில்லை. என்னால் வழிநடத்துவது சிரமம் என்று உணர்ந்தேன். ஒருங்கிணைந்து போராடுவது தேவை என்று உணர்ந்தேன். அதனால்தான் ஈரோசைக் கலைத்துவிட்டு, புலிகள் இயக்கத்தில் இணைய விரும்புபவர்களை இணையச் சொன்னோம் என்றார். உறங்கா நிறங்கள் ஓவியத் தொகுப்பில் உள்ள பிரபாகரன் ஓவியத்தைப் பார்த்து, குதூகலித்து என்னைக் கட்டிப் பிடித்து பாராட்டினார். இதுதான் உண்மையான பிரபாகரன். இதுதான் வெளி உலகத்திற்குக் காட்ட வேண்டிய பிரபாகரன். அவருடைய மனிதநேயச் சிந்தனை தோய்ந்த முகம் உங்களுடைய ஓவியத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றார். நான் எதை நினைத்து அவ்வோவியத்தைச் செய்தேனோ, அதையே அவரும் உள்வாங்கியதை நினைத்து மகிழ்ந்தேன்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், அரசியல் மாற்றங்கள், விடுதலைப் போராட்டத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றை யுமே பயங்கரவாதமாகப் பார்க்கும் உலகநாடுகளின் பார்வை. ‘ஈழ விடுதலைக்கு இந்தியா ஏன் பக்கபலமாக இருக்க வேண்டும்.’ தமிழ்நாட்டுத் தலைவர்கள், மக்கள் செய்யவேண்டிய பங்களிப்புகள் குறித்து விரிவாகவே பேசினோம்.

தமிழ்நாட்டிலே நாம் தங்கியிருந்த நாட்களில், தமிழ்நாடே எமது முன்னணிக் களமாக இருந்த நாட்களில், தமிழ் இனமான உணர்வில் ஒன்றுபட்டு, விடுதலைப் போராட்டத்தின் வீச்சின் பால் ஒன்றுபட்டு, சர்வதேச மனிதநேய அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்பட்டதை நினைவு கூர்ந்தார்

க.வே. பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர். அவருடைய மார்க்சியச் சிந்தனை அந்த நாட்டைக் கட்டமைப்பதிலும், வடிவமைப்பதிலும் திட்டமிடுவதிலும் பயன்படுத்தப்பட்டது. அவருடைய எழுத்தாற்றல், சர்வதேச அரசியல் குறித்தும், விடுதலைப் போராட்டங்கள் குறித்தும், உள்ளூர் அரசியல் நிலைகள் குறித்தும், இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதழ்களில் கட்டுரைகளாக வெளிப்பட்டது.

அவருடைய சிந்தனைகள், புலிகளின் குரல் வானொலியின் ஊடாகவும், தமிழீழத் தேசிய தொலைக்காட்சி ஊடாகவும், கலை இலக்கிய நிகழ்வுகள் போன்ற அனைத்து வகையான நிகழ்வுகள் ஊடாகவும் உரைகளாகவும் வெளிப்பட்டன.

நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்துபவராகவும் இருந்திருக்கிறார்.

நான் தமிழீழத்தில் நின்ற நாட்களில் அவரை சந்திக்காத நாட்கள் மிகவும் குறைவு. அவருடைய இருப்பிடத்திற்கு நான் சென்று விடுவேன். இல்லைஎனில் என்னுடைய இருப்பிடத்திற்கு அவர் வந்து விடுவார். நிறைய பேசுவோம், விவாதிப்போம், அய்யங்களைப் போக்கிக் கொள்வோம். சினிமா, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், போன்றவற்றை சர்வதேசிய அளவில் விவாதித்திருக்கிறோம். அவரிடமிருந்து நான் நிறையவே கற்றிருக்கிறேன். ஆனால் அவர் சொல்வார் ‘உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டியிருக்கிறது’ என்று. அவரை சந்திக்காத நாட்களில் நான் எதையோ இழந்ததாக உணர்வேன்.

Comments