உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்துக் கூறியவர்கள்

புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவு ஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன் றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசி யாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள்.அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படகுகள் இந்தோனேசிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு படகு 39 பேருடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த போதும் அது கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மூவரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

27 பேர் உயிர்தப்பியுள்ளனர். கனடாவை நோக்கி சென்ற "ஓஷன் லேடி' என்ற கப்பலில் இருந்த 76 பேரையும் உள்வாங்கிக் கொள் வது தொடர்பில் கனேடிய அரசு பல வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து வருகின்றது. கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் கடந்த மாதம் 17 ஆம் திகதி கனடாவின் கடற்பரப்பை சென்றடைந்திருந் தது.

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று தற்போது அவுஸ்திரேலிய அரசின் கப்பலான "ஓஷானிக் விக்கிங்' கப்பலில் வைக்கப்பட் டுள்ள 78 பேரும் தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரி க்கையை முன்வைத்து போராடி வருகின் றனர்.

இந்த மக்களின் அரசியல் தஞ்சங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண் டும் எனவும் இந்த மக்கள் இலங்கையில் நடைபெற்ற போரில் தப்பியவர்கள் எனவும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப் புகள் தெரிவித்துள்ளன.போர் நிறைவுபெற்று விட்டது என இல ங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் பெருமளவான ஈழத் தமிழ் மக்கள் அரசியல் அடைக்கலம் கோரி உயிரைப் பணயம் வைத்து பல ஆயிரம் மைல் கடந்து பயணம் செய்தமை உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட் பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற் போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லா தளவிற்கு சில வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது.

இந்த மக்களின் பயணம் உலகிற்கு ஒரு செய்தியை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. அதாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரி மைகளும், அடிப்படை உரிமைகளும் பாது காக்கப்படும் வரையிலும், அவர்கள் இலங் கையில் பாதுகாப்பாக வாழலாம் என தாம் எண்ணும் வரையிலும் உரிமைக்கான போர் என்ற நிகழ்வுகள் அங்கு அடங்கி விட்டதாக யாரும் கருத முடியாது.
அது ஏதோ ஒரு வகையில் தொட ரவே செய்கின்றது. மேலும் போர் அங்கு எவ்வாறு முடிவடைந்தது என்ப தையும், அதன் பின்னர் தமிழ் மக்க ளின் எதிர்காலம் என்பது என்ன? என் பது தொடர்பான தகவல்களையும் இந்த மக்களின் பயணம் தெளிவாக புரியவைத்திருக்கும்.

இது தொடர்பில் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணை யத்தளம் ஒன்றிற்கு நேர்காணலை வழங்கிய ஊடகவியலாளரும், ஆய் வாளருமான பரணி கிருஷ்ணரஜனி தெரிவித்த கருத்தையும் இங்கு கூறு வது பொருத்தமானது.
"யார் என்ன வியாக்கியானம் கூறி னாலும் புகலிடத்தஞ்சம் கோரியிருப்ப வர்களுக்கு இருக்கிற ஒரே அடை யாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்' என்பதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

போரில் குரூரமாகத் தோற்கடிக்கப்பட்டவர் களாக தமது அடையாள நிலத்தை இழந்த வர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர் களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக் கிறது' என தெரிவித்துள்ளார்.

அதாவது, இலங்கையில் போர் நிறைவு பெற்றாலும் அங்கு எல்லா இனமும் சமத் துவமான அரசியல் உரிமைகளையும், அதி காரங்களையும் கொண்டிருந்தால் மட் டுமே அமைதி ஏற்படும் என்ற வாதமும் இதன் மூலம் வலுப்பட்டுள்ளது.
போரின் நிறைவுடன் உலகம் மறந்து போக முற்பட்ட ஒரு உண்மையை இந்த அப்பாவி மக்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட பயணம் மீண்டும் தூசுதட்டி உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இலங்கையில் போரின் பின்னான நிகழ்வுகளில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் இழந்து போன மனித உரிமைகள் தொடர்பாகவும் மேற்குலகம் சில நகர்வு களை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், ஆசியாவின் மிகப்பெரும் ஜன நாயக நாடாகத் தன்னைத்தானே பிரகட னப்படுத்தியுள்ள இந்தியா மௌனமா கவே இருந்து வருகின்றது.

இந்த வருடத்தின் முற்பகுதியான மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலு மான மூன்று மாத காலப்பகுதியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருந்த மக்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர் என உலகிற்கு அறிவித்து வந்த இந்திய மத்திய அரசும், சில மேற்குலக நாடுகளும் கடந்த ஆறு மாதங்களாக 300,000 மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செயல்திறன் இன்றி உள்ளன.

அழுத்தங்களின் ஊடாக இந்த மக்களின் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அழுத்த மிரட் டல்களும், அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்ற விசாரணை கள் தொடர்பான மிரட்டல்களும் ஓரளவு பலனைக் கொடுத்துள்ளன.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை நிறுத்தப்படும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையும், அமெரிக்கா வின் வெளியுறவு திணைக்களம் அதன் காங் கிரஸ் சபையில் சமர்ப்பித்த இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான அறிக்கை யும் இலங்கைக்கு ஓரளவு அழுத்தத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்த அழுத்தங்களில் இருந்து தப்புவதற் காக இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கை களை அவசர அவசரமாக மேற்கொண்டு வருகின்றது.

எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக் களை முற்றாக மீளக்குடியமர்த்துவதுடன், 20 வருடகாலம் சிறைத்தண்டனை விதி க்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் விடு தலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப் பிய ஒன்றியத்தின் முன்நிபந்தனைகளில் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியத் தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.

ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதுடன் மட்டும் ஈழத்தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவ தில்லை. அவர்களின் அரசியல் பிரச்சினை கள் தீர்க்கப்படும் வரையிலும் உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல் தஞ் சம் கோரும் ஈழத்தமிழ் மக்களின் பயணங் கள் ஓய்ந்துவிடப்போவதில்லை.

- வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி - வீரகேசரிவாரவெளியீடு

Comments