கடந்த நூற்றாணடின் நடுப்பகுதியில் மாவோவின் தலைமையில் திரண்ட சீன விவசாயிகளின் செஞ்சேனைப்படை விஸ்வரூபம் எடுத்து சீனா முழுவதிலும் செங்கொடியை நாட்டி சோசலிச அரசான மக்கள் சீனக் குடியரசை நிறுவியதோடு நின்றுவிடாமல் அதன் பசிக்கு அமைதியாகக் கிடந்த திபெத்தையும் இரையாக்கிவிட்டது. சீனா தனது நிலவிஸ்தரிப்புக் கொள்கையினால் 1959 இல் திபெத்தை ஆக்கிரமித்ததோடு அதனை சீனாவின் ஒரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தியதோடல்லாமல் அண்டை நாடான இந்தியாவின் இமாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளையும் 1961 இல் ஆக்கிரமித்துக் கொண்டது. திபெத்தில் மிக அமைதியான ஆன்மீகம் மிளிர வாழ்வை நடத்திக் கொண்டிருந்த திபெத்தியர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து அண்டை நாடுகளான நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர வேண்டி ஏற்பட்டது.
இப்புலம் பெயர்வு இன்று வரை 50 வருடங்கள் தொடர் கதையாவே நீண்டு செல்கிறது. இவ்வாறு தொடர் புலம்பெயர்வு இடம்பெற்றாலும் சீன ஆக்கிரமிப்போடு திபெத்திலிருந்து வெளியேறிய திபெத்தின் ஆன்மீகத் தலைவர் ,தலாய் லாமாவும் (கிறிஸ்தவ மதத்தின் அதி உயர்பீடம் போப்பாண்டவர் என அழைக்கப்படுவது போல் திபெத்தின் ஆன்மீகத் தலைவர்களை தலாய் லாமா என்றழைப்பது திபெத்தியர்களின் வழக்கம்) அவருடைய சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் கோரியதோடல்லாமல் காலம் தாழ்த்தாது திபெத்திய மக்களின் சமூக, பொருளாதார, தேசிய ஒருமைப்பாட்டை நலிவடைந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பை உணர்ந்து திபெத்திய மக்களை ஒரு குடையின் கீழ் நிலை நிறுத்துவதற்காக இந்தியாவில் புலம்பெயர் அரசொன்றை 1959 இல் நிறுவினர். இவ்வரசு திபெத்திய மத்திய நிர்வாகம் என்றழைக்கப்படுகின்றது.
சீன ஆக்கிரமிப்பால் தாயகத்தில் திபெத்திய மக்களிடம் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு திபெத்திய மத்திய நிர்வாகம் பதிலீடாக அமைந்தது. இடம் பெயர்வு, இராணுவ ஒடுக்கு முறை, சீன மக்கள் குடியேற்றம், ஒடுக்கு முறை என்பவற்றுக்கு மத்தியிலும் திபெத்திய மக்களின் விடுதலை உணர்வையும், தேசியப் பற்றையும் சீன அரசால் மழுங்கடிக் முடியவில்லை. அதற்கு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் திபெத்திய மத்திய நிர்வாகமே காரணம். அத்தோடு மிகப்பெரிய சீனப் பேரரசுக்கு மிகப்பெரும் சவாலாக இது இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. சீன ஆக்கிரமிப்போடு திபெத்தை விட்டு வெளியேறிய ஆன்மீகத் தலைவரும், சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் புகுந்து தமக்கான அரசை நிறுவுவதற்கு சீன எல்லையிலுள்ள இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் காங்கரா மாவட்டத்தில் தர்மசாலா என்ற நகரில் தமது புலம்பெயர்ந்த அரசாகிய திபெத்திய மத்திய நிர்வாகத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இந்நிர்வாகத்தின் முழுப்பொறுப்பையும் பௌத்த தலைவராகிய தலாய் லாமாவே பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார். ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் புதிய அரசியற் சிந்தனைகளின் வளர்ச்சி புலம்பெயர் அரசொன்று பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி அரசாங்கத்தை அமைக்க முடியுமென்பதை திபெத்தியர்கள் நிரூபித்துக் காட்டினர். 50 வருட கால நீண்ட புலம்பெயர் வாழ்வு. திபெத்திய சமூகத்தை பெரிதும் பாதித்தாலும் கூட தர்மசாலாவில் தனது மடாலயத்தை அமைத்து வாழ்ந்து வரும் தலாய் லாமா அந்நகரில் ஏராளமான திபெத்தியக் குடியிருப்புக்களையும், கல்விக் கூடங்களையும் அமைத்து தமது தேசிய ஒருமைப்பாட்டை, சமூகப் பண்பாட்டு விழுமியங்களை, பாதுகாத்ததோடல்லாமல் தொடர் புலம்பெயர்வினால் இந்தியாவில் மட்டும் வாழ்கின்ற திபெத்தியர்கள் ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட ஜனநாயகத் தேர்தல் என்ற சிந்தனை அவர்களிடம் உதயமாகியது.
இதன் விளைவுதான் 2002 ஆம் ஆண்டு உலகளாவிய திபெத்தியர்களுக்கான ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து லாப்சங் டென்சின் என்பவரைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை நிறுவியிருக்கின்றனர். உலகளாவிய திபெத்தியர்களின் ஜனநாயகத் தேர்தல் என்று இதைச் சொல்லப்பட்டாலும் கூட. இந்தியாவிலும், நோபாளத்திலுமே இத்தேர்தல் நிகழ்ந்திருக்கிறது. மாறிவரும் உலகிற்கு ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு தேசத்தின் மக்கள் பிறிதொரு நாட்டில் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக விழுமியங்களைத் தழுவியதான தேர்தலை நடத்த முடியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றனர். திபெத்திலிருந்து இடம் பெயர்ந்த திபெத்திய அரசு நிலத்தையும், இறைமையையும் இழந்ததே தவிர மக்களையும், அரசாங்கத்தையும் அது இழக்கவில்லை என்று சொல்வதே பொருத்தமானது. ஏனெனில் திபெத்திய நிலம் சீனாவின் ஆக்கிரமிப்பினால் விழுங்கப்பட்டு விட்டது.
ஆகவே நிலம் இழக்கப்பட்டது. நிலம் இழக்கப்பட்டமையினால் தாயகத்து இறைமையும் இழக்கப்பட்டு விட்டது. இறைமை என்கின்ற போது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ்கின்ற மக்கள் மீது அந்நாட்டின் அரசாங்கம் செலுத்துகின்ற அதிகாரம் அல்லது பலப்பிரயோகமே இறைமையாகும். அரசாங்கத்தின் பலப்பிரயோகம் என்கின்றபோது அவ்வரசாங்கத்தின் சட்டமன்றம் இயற்றுகின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய குடிகளை கீழ்ப்படிந்து நடக்க நிர்வாகத்துறை ஆணையிடுவதும், அவ் ஆணையை மீறுவோரை நீதித்துறை மூலம் தண்டிப்பதற்கு அரசுக்கே உரித்தான மேலான அதிகாரமே இறைமை என அரசியலாளர்கள் வரையறுக்கின்றனர். எனவே அரசுக்குரித்தான நிலம், மக்கள், இறைமை, அரசாங்கம் என்னும் கூறுகளில் நிலத்தையும், இறைமையையும், மக்களையும் இழந்து புலம்பெயர்ந்து உருவாக்கப்பட்ட இடம்பெயர்ந்த அரசுகளில் திபெத்திய மத்திய நிர்வாகம் குறிப்பிட்டளவு மக்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு அரசாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வரசு புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்கள் மீது ஒருவகையான இறைமையை கொண்டிருக்கின்றது. அது எவ்வாறெனில் மத்திய நிர்வாகம் எடுக்கின்ற சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க கட்டளையிடுகின்றது. ஆனால் கட்டளையை மீறுவோரை அதனால் கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ முடிவதில்லை. அவ்வாறு தண்டிப்பதாயின் அது இயங்கும் நாட்டின் இறைமையை மீறுவதாகிவிடும். ஆகவே இடம்பெயர்ந்த திபெத்திய அரசுக்கு சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒருவகையிலான சமூக உள்ளக இறைமையைக் கொண்டிருக்கின்றது என்றே கொள்ளலாம். இவ்வாறு பல்வகைப் பரிமாணங்களைக் கொண்ட திபெத்திய மத்திய நிர்வாகம் உலகின் முக்கிய நாடுகள் யாவற்றுடனும் இராஜரீக உறவுகளை வைத்திருப்பதோடு அந்நாடுகளில் இவ்வரசின் பிரதிநிதிகள் தங்கியுமிருக்கின்றனர். ஆனால் இவ்வரசை எந்தவொரு நாடும் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை.
ஏன் இவ்வரசு இயங்கும் இந்தியாவில் கூட இவ்வரசு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது திபெத்தியர்களின் துரதிர்ஸ்டமே. ஏனெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் ஆட்டத்தில் இந்நாடு பகடைக் காயாக உருட்டப்படுகிறது என்பதே உண்மை. எனினும் இவ்திபெத்திய இடம்பெயர் அரசின் செயற்பாட்டினால் தாயக திபெத்தில் வாழும் மக்கள் விடுதலை தாகம் தணியாதவர்களாக என்றோ ஒருநாள் திபெத் விடுவிக்கப்படும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு தமது தேசிய எழுச்சியை சீனாவின் கொடிய இராணுவ அடக்கு முறைக்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாசிப் படையெடுப்பால் போலந்து ஆக்கிரமிக்கப்பட்டபோது போலந்து அரசுத் தலைவர்கள் பிரித்தானியாவிற்குத் தப்பிவந்து 1939 இல் ஒரு இடம்பெயர்ந்த அரசினை உருவாக்கினர். இந்தப் பேரளவிலான அரசாங்கம் சில உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களோ, இறைமையோ இருக்கவில்லை.
ஏனெனில் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தை ரஷ்யாவின் செஞ்சேனைப்படை 1945 இல் மீட்டாலும் கூட அந்நாட்டின் மீது சோசலிசக் கோட்பாட்டை அமுல்ப்படுத்தியதனால் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் இயங்கிய போலந்தின் முதலாளித்துவ அரசால் சோசலிச சோவியத் ரஷ்யா 1991 இல் வீழ்ச்சியடையும் வரை நாடுதிரும்ப முடியவில்லை. பனிப்போர் காலத்தில் வல்லரசுகளால் போலந்து பந்தாடப்பட்டதனால் அதனுடைய இடம்பெயர்ந்த அரசு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு சாதனையையும் அடைய முடியவில்லை. இவ்வாறுதான் வல்லரசுகளின் பந்தாட்டத்தில் கொசோவோவும், ஒசெற்றியாவும், அப்காசியாவும் சிக்கித் தவிக்கின்றன. இங்கு கொசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து போக எத்தனித்த வேளை சேர்பியாவுக்குச் சார்பான ரஷ்யா கொசோவோவின் பிரிவினை வாதத்தை எதிர்க்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கொசோவோவை அங்கீகரிகரித்தன.
அதேவேளை ஜோர்ஜியாவிலிருந்து தெற்கு ஒசெற்றியா, அப்காசியா பிரிந்து போக உருவாக்கிய இடம்பெயர்ந்த அரசுகளை ரஷ்யா அங்கீகரிக்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. ஆகவே இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் பிராந்திய நலன், புவிசார் அரசியல் மையநிலைப்பாட்டு சாதக பாதகத் தன்மையே இனங்களுடைய சுய நிர்ணய உரிமையையும், நாடுகளின் அல்லது பிராந்தியங்களின் விடுதலையையும் தீர்மானிக்கின்ற சக்திகளாக விளங்கிவருவதைக் காணமுடிகின்றது. பிராந்தியங்களின் விடுதலை அல்லது இறைமையை மீட்டல் என்பதற்கும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பெறுதல் என்பதற்குமிடையில்லான வேறுபாடுகளைப் பிரித்து விளக்குவது கடினமாயினும் கோட்பாட்டு ரீதியில் வேறுபட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும்.
பிராந்தியங்களின் விடுதலை என்கின்ற போது குறித்த ஒரு பிராந்தியம் அல்லது பிரதேசத்தின் இறைமையை இன்னுமொரு நாடோ, அல்லது மத்திய அரசோ கையகப்படுத்தியோ, அல்லது கட்டுப் படுத்தியோ வைத்திருத்தலாகும். ஆனால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்றபோது ஒரு தேசிய இனத்திற்கு தன்னைத் தானே ஆளுகின்ற உரிமை அதாவது தனது அரசியல்த் தலைவிதியை தானே நிர்ணயிக்கின்ற உரிமை அதற்குண்டு. பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அடக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம். தனது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு தன்னைத்தானே ஆளுகின்ற உரிமையைப் பெறுதல். இவ்வாறு சுயநிர்ணய உரிமையைப் பெற்றதன் பிற்பாடுதான் இறைமை என்கின்ற கோட்பாடு பற்றிப் பேச முடியும். ஆகவே சுயநிர்ணய உரிமையை பெறாமல் அல்லது அடையாமல் ஒரு தேசிய இனம் இறைமை பற்றி பேச முடியாது.
ஆகவே சுயநிர்ணய உரிமையைப் பெறல், இறைமையைப் பெறல் என்பவற்றிற்காக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமூகங்கள் தமது இலக்கினை அடைவதற்கு தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம், இடம்பெயர்ந்த அரசு உருவாக்கம் போன்ற அரசியல் சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தி அவற்றினூடே தமது போராட்ட இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இடம்பெயர்ந்த அரசுகளிலிருந்து மாறுபட்டு தாயகத்திற்கு வெளியே புலம்பெயர்ந்து உலகெங்கும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் நாடுகள் கடந்து அமைக்கவிருக்கும் மக்களவைகளும், அவற்றினூடாக உருவாக்கமுனையும் நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் வரலாற்றுத் தேவை, வரலாற்றுப் பரிமாண வளர்ச்சி அதன் சாகத பாதகத் தன்மைகள் பற்றி தொடர்ந்தும் வரும்...
-தி-வன்னியன்
நன்றி:ஈழமுரசு
Comments