ஊடகத்துறை அமைச்சரின் அரசியல் இராணுவ விளக்கங்களுக்கு ஜெனரல் அளித்த பதிலாகவே இதனைக் கருத வேண்டும். இவர் பதவியில் இருந்தவேளை கனடா, "நெஷனல் போஸ்ட்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அரசியல் கருத்துகளை உதிர்த்தபோது ஆட்சியாளர்கள் அதனை அங்கீகரித்திருந்தார்கள். ஸ்ரீலங்காவின் சிங்கள தேசிய இறைமையில் தமிழர்கள் பங்கு கேட்கக் கூடாதென ஜெனரல் கூறிய அரசியல் பார்வைகள் ஆட்சியாளருக்கு இதமாக இருந்திருக்கும். சாதகமான கருத்துகளுக்கு எப்போதுமே பேரினவாதம் தலைசாய்த்து வரவேற்பளிக்கும்.
ஆனால் அதே சக்திகள் அதிகார நாற்காலியை அசைக்க முற்பட்டால், முரண்பாடுகள் முற்றிவிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற விவாதம் தமிழ்நாட்டில் நீடிப்பது போன்று, சரத் பொன்சேகா "வந்தாலும் வருவார்' என்கிற பேச்சுகள் கொழும்பு அரசியலை ஆட்டிப் படைக்கின்றன. இவர் அரசியல் வெள்ளோட்டத்தில் கலப்பதில் மக்களுக்கு என்னவிதமான நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ, எதிர்க்கட்சியினரை கரை சேர்ப்பதில் இவரின் பங்கு நிச்சயம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கப் போகிறது. அதேவேளை விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த பெருமை கொண்ட ஒரு நபர் எதிரணியில் இல்லையென்பதே உண்மையாகும்.
வெற்றியின் பங்காளர்கள் குறித்தான மீளாய்வு, மதிப்பீடு, உரையாடல்கள், இனி அதிகம் பேசப்படும். அமெரிக்காவின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் எட்டு ஆயுதக் கப்பல்களை அழித்தோம், இந்தியா வழங்கிய வரகா, விக்ரகா போன்ற யுத்தக் கப்பல்களின் உதவியடன் கடல் புலிகளை முடக்கினோம் என்கிற வகையில் தற்போதைய ஆட்சியாளர்களால் வெற்றிக்கான காரணிகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதன் ஊடாக, இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவின் யுத்த வெற்றிக்கான உரிமை கோரல்களை ஓரங்கட்டலாமென்று அரசாங்கம் எண்ணுகிறது. இலங்கை இராணுவத்தின் 18 ஆவது தளபதியாக பொறுப்பேற்று, புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தில் தன்னை சில அமைச்சர்கள் அவமரியாதை செய்த விவகாரத்தை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் ஒழுக்கம் பேணப்பட வேண்டியதன் அவசியமும் அவரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தனது அரசியல் பிரவேசம் குறித்த எந்தவிதமான விடயங்களையும் அக் கடிதத்திலோ அல்லது ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலோ அவர் குறிப்பிடாமல் மிகச் சாதுரியமாக தவிர்த்துள்ளார். சிலவேளை அவரை மூன்றாவது அணி யொன்றின் சார்பிலும் போட்டியிட வைக்க முயற்சிக்கப்படலாம். அன்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் விஜயகாந்த் வகித்த மூன்றாவது அணிப் பாத்திரத்தை சரத் பொன்சேகா முன்னெடுக்கக் கூடிய வகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் உத்திகள் வகுக்கப்படலாமென்றும் ஒரு கருத்து உண்டு.
இந்த மூன்றாவது அணி தமிழக நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போன்று இங்கும் ஏற்படுத்தி ஆளும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு விழும் வாக்குகளை குறைத்துவிடலாமென்றும் கணிப்பிடப்படுகிறது. ஆனாலும் மூன்றாவது அணியாக இறங்கினால் வெற்றி பெற முடியாதென்கிற விடயத்தை புரிந்து கொள்ளும் ஜெனரல், அத்தகைய விஷப் பரீட்சையில் இறங்குவார் என்பதில் பலத்த சந்தேகமுண்டு. ஆகவே ஜனாதிபதியுடன் மோதக் கூடிய சகல வல்லமை பொருந்திய வேறொரு நபரை தேடிக் கண்டு பிடிக்க முடியாதென்பதை ரணிலும் உணர்ந்து கொள்வார், அத்தோடு இவ்வாறான பலவீனமான ஆட்தெரிவு நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி இருப்பதனையும் ஜெனரல் புரிந்து கொள்வார்.
அத்தோடு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு எந்த அளவில் இருக்கிறது என்கிற விவகாரத்தையும் சரத் பொன்சேகா கடந்த கால தேர்தல் முடிவுகளிலிருந்து உணர்ந்திருப்பார். பேரினவாத அரசியல் சிந்தனைத் தளத்தில் தமது பயணத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் கட்சிகள், ஆளும் கட்சியினரை அகற்றுவதுதான் தமது ஒரே இலட்சியமென்று பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அணி சேரும் போக்கில் பல முரண்பாடுகளை காவிச் செல்கின்றன. ஐ.தே.கவுடன் உடன்பாடு காண முடியாமல் பொது எதிரியாக அக்கட்சியை நோக்கும் ஜே.வி.பி. யானது புதிய அணிக்குள் இணைந்தால் அடிமட்ட தோழர்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழக்கும் அபாயம் உருவாகும் வாய்ப்புமுள்ளது.
இவ்வாறு ஐ.தே.கவுடன் இணைவதாயின் ஆளும் தரப்பினரை மக்கள் விரோத சக்தியாகவும் தேசத் துரோகக் கும்பலாகவும் சித்திரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜே.வி.பி.க்கு ஏற்படும். அதேவேளை, ஆளும் தரப்பைவிட, ஐ.தே.கவை நாட்டுப் பற்றுள்ள தேசாபிமானச் சக்தியாகப் பிரகடனம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கூட உருவாகும். சிறுபான்மையின கட்சிகளைப் பொறுத்தவரை சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் பல அடிப்படைக் கொள்கைச் சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புண்டு. எதிர்ப்பரசியலை மட்டும் முன்னிலைப்படுத்துபவர்களுக்கு கொள்கைக் குளறுபடிகள் ஏற்படாது. ஆனாலும், விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, நாடாளுமன்றத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவிக்கப் போகிறது.
தமது பிறப்புரிமை சார்ந்த பிரிக்க முடியாத அரசியல் நலன்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இனிவரும் காலங்களிலும் பிரதிபலிக்குமா என்கிற ஐயப்பாடு தமிழ் மக்களிடம் உண்டு. ஏனைய தமிழ்க்கட்சிகளான புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (ஸ்ரீதரன்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஒரு ஆரோக்கியமான அரசியல் நிலைப்பாடாகக் கருதினாலும் தேர்தலிற்கு முன்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய நிரந்தரத் தீர்வினை இவர்கள் முன்வைக்க வேண்டும். 33 வருட கால ஆயுதம் தாங்கிய அரசியல் போராட்டம் முடக்கப்பட்ட நிலையில் தந்தை செல்வா 1977 இல் முன்வைத்த அரசியல் தீர்வினை பேரினவாதத்தின் ஒடுக்கு முறைச் செயற்பாடுகளுக்கு அடிபணிந்து புறந்தள்ளி விடுவார்களாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மாற்றுத் தெரிவு அற்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது ஒற்றைத் தெரிவாக ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு இருப்பதால் எந்தத் தீர்வினையும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கலாமென்கிற போக்கு ஆபத்தாகவே முடியும். தலைகளைப் பிடித்து ஆட்டியவாறு, அடிப்பாகத்தில் உருவி எடுக்கும் செயற்பாடு, திருமலை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அணி மாற்றத்தில புலனாகியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இள இரத்தம் ஊட்டி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண வேண்டுமென அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்த கருத்து, தலைகள் சில ஆட்டுவிக்கப்படுவதை உணர்த்தி நிற்கிறது. இளையோரை வரவேற்பதிலும் முதியோர்கள் விலகி நிற்பதிலும் இவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வழி காட்ட வேண்டும்.
இவை தவிர, மனோகணேசன் தெரிவித்த சிறுபான்மையினக் கட்சிகளுக்கான நான்கு தேர்தல் பாதைகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில கூட்டமைப்பிற்கு சங்கடங்கள் உருவாகலாம். வன்னி யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் பொன்சேகாவையோ அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையோ தேர்தலில் ஆதரிக்க முடியாததொரு கொள்கைச் சிக்கல் கூட்டமைப்பிற்கு ஏற்படலாம். அதேவேளை சிறுபான்மைத் தேசிய இனங்களின் சார்பாக ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்கினால் ரணிலுடன் உடன்பாடு கண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியும் முஸ்லிம் காங்கிரஸும் அவ்வேட்பாளருக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குமா என்பது தெரியாது. அத்தோடு பிரதான மலையக தமிழ் கட்சிகள், இச் சிறுபான்மைக் கூட்டிற்குள் இணையும் வாய்ப்பேயில்லை. இந்நிலையில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அக்கறை கொண்டுள்ள ஆளும் எதிர்க்கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் அதனை தன் வசப்படுத்துவதிலும் குறியாக இருக்கும்.
-இதயச்சந்திரன்
நன்றி வீரகேசரி வார வெளியீடு
Comments