அகதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்தது அவுஸ்திரேலியா, ஏமாற்றப்படுவதாக அகதிகள் தெரிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிந்தபோது இந்தோனேஷிய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இந்தோனேஷிய கடலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 78 பேர் விடயத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலிலுள்ள அகதிகள் அனைவரையும் 4 முதல் 12 வாரங்களில் மீளக்குடிமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதியை கப்பலிலுள்ள அகதிகள் ஏற்றிருப்பதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு ஈழத்தமிழ் அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் நடுக்கடலில் மடக்கி பிடித்து இந்தொனேஷிய கடலில் தடுத்துவைக்கப்பட்டு தற்போது நான்கு வாரங்களாகப்போகின்றன. கப்பலில் உள்ளவர்கள் தமக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் கப்பலைவிட்டு இறங்கப்போவதில்லை என்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா அரசுக்கும் இந்தோனேஷிய அரசுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த அகதிகளின் கப்பல் இந்தோனேஷியாவுக்கு அருகில் உள்ள ரியா தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், அங்கு அகதிகளை இறக்குவதற்கு அத்தீவின் ஆளுனர் மறுத்ததை அடுத்து அகதிகள் விவகாரம் சிக்கலுக்குள்ளாகியது.

அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் வரவிடுவதில்லை என்பதில் ஆஸ்திரேலிய அரசு விடாப்பிடியாக நின்றுகொண்டதால் நிலைமை மேலும் மேலும் இறுக்கமடைந்தது.

இதேவேளை, தொடர்ச்சியாக நாட்டுக்குள் வரும் அகதிகள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரும்வாய்ப்பாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் ஆளும் தொழில்கட்சியை விமர்சித்தன. நாடாளுமன்றுக்கு வெளியே, மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேற்படி அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்தன.இந்த அழுத்தங்களுக்கு சிகரம் வைத்தாற்போல், ஆஸ்திரேலியாவின் மேற்கு மாநில முதல்வரும், இந்த அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அண்மையில் அறிக்கை விடுத்திருந்தமை அரசை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

இவைஇவ்வாறிருக்க, ஆஸ்திரேலியாவுக்கு 40 அகதிகளை ஏற்றிவந்துகொண்டிருந்த படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய அரசை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளியது.

இதற்குமேலும் இந்த விவகாரத்தை கீழ்மட்டத்தில் கையாள்வதில்லை என்ற முடிவுடன் சிறிலங்காவுக்கு தனது வெளிவிகார அமைச்சரை அனுப்பினார். அங்கு அந்நாட்டு அரசு தரப்புடன் பேச்சு நடத்தினார்.

இந்த விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க, இவற்றுக்கு சமாந்தரமாக கப்பலிலுள்ள 78 அகதிகளுடனும் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து பேச்சுக்களை நடத்திவந்தது. தமது கோரிக்கைகளை முன்வைத்து கப்பலிலிருந்த அகதிகள் பல உண்ணாநிலை போராட்டங்களையும் நடத்தினர்.
இதேவேளை, இந்தோனேஷிய கடலிலிருந்து நவம்பர் 13 திகதியுடன் அகதிகளை தாங்கிய ஆஸ்திரேலிய கப்பல் வெளியெறிவிடவேண்டும் என்று இந்தோனேஷிய அரசு அறிவித்திருந்தது. இதுவும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த சிக்கலாக அமைந்தது.

ஆனால், தனது சிறிலங்கா விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு நேற்று சிங்கப்பூரில் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், அகதிகள் விவகாரம் தீர்வுகாணும் கட்டத்துக்கு வந்திருப்பதால் தமது கப்பல் தொடர்ந்தும் இந்தோனேஷிய கடலில் தரித்துநிற்க அனுமதி தரவேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கப்பலிலுள்ள அகதிகளுடன் நடத்திய பேச்சுக்கள் நிறைவுக்கு வந்திருப்பதாகவும் அகதிகள் அனைவரும் தாம் வழங்கிய உறுதிமொழிகளை ஏற்று கப்பலை விட்டு இறங்குவதற்கு இணங்கியிருப்பதாகவும் ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அடங்கிய கடிதம் ஒன்று இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் அதிகாரி ஜிம் ஓ கலகன் கையொப்பமிட்டு கப்பலில் உள்ள அகதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரகாரம் -

கப்பலில் உள்ள அகதிகளில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பினால் அகதிகள் என்று அங்கீகாரம் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கி 4 முதல் 6 வாரங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் -

எஞ்சியோர் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கி 12 வாரங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் ஆஸ்திரேலிய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் அனைவரும் ஆஸ்திரேலியாவில்தான் நிச்சயம் குடியமர்த்தப்படுவர் என்று இல்லை. ஆனால், நிச்சயம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படாமல் - இந்தோனேஷியாவில் தங்கமுடியாத என்று அவர்கள் கூறிய காரணங்களையும் கருத்திற்கொண்டு மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதவேளை, அகதிகள் தரப்பிலிருந்து தமது உறவினர்களை தொடர்புகொள்ள வசதிசெய்துதரும்படியும் இன்னும் பலர் தமது உறவினர்களை செஞ்சிலுவை சர்வதேச குழு ஊடாக தேடி கண்டுபிடித்து தரும்படியும் தமக்கு ஆங்கில கற்கை நெறி்க்கு ஏற்பாடு செய்து தரும்படியும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆஸ்திரேலிய அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த முடிவுகளை ஆஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிடினும் அகதிகள் விவகாரம் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளதை உறுதிசெய்யமுடிவதாக ஆஸ்திரேலிய அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழநேசன்

Comments