பொது நோக்கு என்றால் என்ன? இது பற்றியதெளிவான பார்வை உள்ளதா?
சுயநலவாதிகளும் சுயசிந்தனையற்ற அடிவருடிகளும் " பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " அல்லது " காட்டுத் தடியாச்சுக் கணக்கரின் மாடாச்சு " என்றதொரு புதிய நிலையொன்றினது தொடக்கமாகப் பல்வேறு புறநிலைகளிலும், இன்று பல்வேறு விதமான பின்னணிகளைக் கொண்ட நபர்களும், தமிழ்த் தேசியத்தினது சிந்தனைக்கு எதிரான சக்திகளும், தமிழ்த் தேசியம் என்ற போர்வைக்குள் நுளைந்து வெட்டியோடத் தலைப்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியத்திற்கு ஆரோக்கியமானதோர் சூழலை அமைத்துத்தராதென்பதை தமிழினம் தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திப்பதோடு, சமுதாய ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பழைமையிலும் புணைவுகளிலும் மூழ்கியுள்ள சக்திகள் தொடர்பாகவும், உண்மையென்ற நுண்ணறிவூடாக பார்த்தலும் மதிப்பீடு செய்வதும் அவசியமாகின்றது. இதுபோன்ற பிறழ்வு நிலைச் சக்திகளும் நபர்களும் தேசியம் சார்ந்தோ, மனிதக் குழுமம் சார்ந்தோ சிந்திப்பதைவிடத் தம்மை எப்படி முன்னிலைப்படுத்தலாம் என்றதோர் சுயநல நோக்கத்தோடு பல்வேறுவிதமான சொல்லாடல்களோடும், திட்டங்களோடும் எங்கும் நுளைந்து வருகின்றனர். இந்த இடத்திலே, அண்மையில் காணொளி நேர்காணலொன்றின்போது அடிகளார் திரு இமானுவேல் அவர்கள் எல்லோரையும் உள்வாங்குதல் பற்றியதான கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது, ஈகங்களால் அடையப்பட்ட இலக்குள் சிதைவுறாத உள்வாங்குதல் பற்றித் தெளிவாகக் கூறியிருந்தார். அவரது கருத்து மிகவும் ஏற்புடையதாகும்.
இதுவரை காலமும் தாயகத்திற்காகவோ அல்லது தமிழ்த் தேசியத்திற்காகவோ எந்த விதத்திலும் செயலாற்ற முன்வராத நபர்கள் பொது அமைப்புகளில் புகுந்து தம்மையும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களென்று சித்தரிக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இப் பிறழ்வு நிலைச் சக்திகள், எமது தாயவிடுதலைக்காக அளப்பரிய ஈகங்களையும், துன்பங்களையும் சுமந்தவாறு தமது இன்னுயிர்களை எம் தாயகப் பரப்பெங்கும், தமிழ்த் தேசியத்திற்காக வீசியெறிந்துவிட்ட மக்களது ஈகத்தை தம்மை முன்னிலைப்படுத்தவும் தமது சுயநலனுக்காகவும் பாவிக்க முனைவதை எந்த ஒரு கட்டத்திலும் அனுமதிக்க முடியாது என்பதைத் தமிழினம் விழிப்புடன் இருந்து உற்று நோக்குதல் அவசியமாகும். தாயகப் பெருவெளியானது எம்தமிழ் உறவுகளின் குருதியால் நனைந்து, அவர் தசைகளால் நிறைந்து எங்கும் அவர்களது மூச்சுக் காற்றுப் பரவி ஏக்கத்தோடு இருக்கின்ற சூழலமைவில், புலத்திலே இது தொடர்பான எந்தப் பிரஞ்ஞையுமற்ற பிறவிகளாக இருந்த பலருக்கு இப்போதுதான் ஞானம் தோன்றியிருக்கிறது. இது தொடர்பாக எந்தக் கேள்விக்குமப்பாலானதொரு ஆய்ந்தறிகையொன்று தமிழினத்தினது இருப்பிற்காக அவசியமாகின்றது. ஏனெனில் தன்னலமற்றுத் தமது வாழ்வை ஈகம் செய்தோரது பெறுபேறுகளைக் தமது சுயநலனுக்காய் பணயமாக்குதலையோ அன்றி தமது நலன் பேணும் கருவியாக்குதலையோ அன்றிக் கையகப்படுத்தலையோ எந்தவொரு கட்டத்திலும் அனுமதிக்க முடியாது என்பதே நிதர்சனமானது.
இரவும் பகலுமற்றுப் பகலவன் வெளித்தோன்றாத மயக்கமானதோர் மங்கிய பொழுதுகளாய் கழிகின்ற இந்த வேளையிலே எந்தவொரு சக்தியையும் தீர்க்கமற அறியமுடியாத இருள் நிலையொன்று நீடித்துச் செல்லுமிவ்வேளையைத் தமிழினம் புத்திசாதுரியத்துடனும் தெளிவுடனும் மிகத் தந்திரமாகவும் உறுதியோடும் கடந்து சென்றாக வேண்டியது அவசியமாகின்றது என்பதை புலத்திலே அரங்கேறும் சில சம்பவங்கள் எடுத்தியம்புகின்றது. எனவே முன்னைய பட்டறிவுகளில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் புதியதொரு பாய்ச்சலொன்று அவசியமாகத் தேவைப்படும் அதேவேளையில், பாய்ச்சலைத் தமது சுயநலத் தேவைகளுக்காகப் பாவித்துப் பாயமுனைவோரையும் காணமுடிகிறது. அப்படியாயின் எப்படி நாம் சரியான சக்திகளை இனங்காண்பது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இங்குதான் எமது தொலைநோக்குப் பார்வையூடாக அலசியாராய்ந்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதிலேயே தமிழினத்தினது எதிர்கால வாழ்வு தங்கியுள்ளமையையும் புலம்பெயர் உறவுகள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகின்றது.
இதிலே நாம் பல விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதும் அதனூடாக சரியானவகையிலே தமிழ்த் தேசியத்தைக் காத்து வளர்க்கக்கூடிய செயற்றிறனாளர்களை இணங்காண்பதும் அவசியமாகிறது. உதாரணத்துக்காக நாம் யேர்மனியை மையமாகக் கொண்டு, ஒரு நகரத்தை எடுத்தாராய்ந்து பார்ப்போமாயின், அங்கு தமிழர்கள் வாழ்வார்களாயின் அங்கு ஒரு தமிழ் பாடசாலை இருக்கும். தமிழ் பாடசாலையை மையப்படுத்தியதாக தமிழர்களது இயங்குகை இருக்கும். அந்த இயங்தளமூடாக தமிழரது சமூகக் கட்டமைப்பைத் தமிழ்த் தேசியத்தினது நலன் சார்ந்து நகர்த்தும் விதமாக, இந்தச் சமூகக் கட்டமைப்பையும் பல்வேறு சிரமங்களுடன் தாயக விடுதலையின் இயங்குதளமாச் செயற்படுவோரால் தேவையறிந்து உருவாக்கியதன் வாயிலாக ஒரு காத்திரமான விளைவுகளைப் பெறமுடிகிறது. பெற்றோரும் பெற்றோரும், பிள்ளைகளும் பிள்ளைகளுமாக இந்தச் சில மணி நேரங்களாவது முகம் பார்த்துப் பேசவும், பொதுமையில் நிற்கவும் தகவுடைத் தளமாக இருக்கும் இதனைக்கூடத் தமது சொந்தப் பகைமுரண் சுயநலன் நோக்கில் நகர்த்தும் சக்திகளும் இல்லாமல் இல்லை என்பதும் கவனிப்பதற்கானதொரு விடயமாகும்.
இதற்கான காரணமாக இருப்பது சரியான தொலைநோக்குப் பார்வையற்ற செயற்பாட்டாளர்களே என்பதும் சுட்டடிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும். தமது நலனுக்காகத் தேசியத்தையும், தேசியத்திற்கான ஈகங்களது பெயரைப் பயன்படுத்தும் போக்கும், தானும் தனது உறவினருமாகத், தாங்கள்முடிவெடுத்துத் சொன்னால் சரியென்றும், மாநில அரசரும், நகரச் சிற்றரசரும் என்ற நிலையிலே, இன்னொரு ராஜபக்சயாக் குடும்பங்களாக அராஜகம் புரிகின்ற நிலமை அரங்கேற்றப்பட்டு வருகின்றமையின் விளைவாக, நேர்மையாகக் காரியாமற்றக் கூடியவர்கள் ஒதுங்கிச் செல்லுவதோடு, இந்தப் போக்கிலேயே தொடர்ந்தும் இவர்கள் அடுத்த தலைமுறையையும் வழிநடத்தத் தலைப்பட்டுள்ளமையையும் காணக்கூயதாக உள்ளது. அடுத்த தலைமுறையினரிடையேயும் தமது சீழ் பிடித்த சிந்தனைப் போக்கையே திணிக்கும் செயற்பாடுகள் நிகழ்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
இப்படியானவர்களின் கீழ் வளரும் அடுத்த தலைமுறையானது தமிழ்த் தேசியத்தை சரியாகக் கொண்டு நகர்த்துமா? இவர்களை நம்பி அனுப்பும் பெற்றோரது நிலை என்ன? போன்ற கேள்விகளும் பெற்றோரிடம் எழுந்து வருவதும் காணக்கூயதாக உள்ளது. இதுபோன்றவர்களிடம், தேசிய நலன் கருதி நியாயத்தைச் சுட்டிக் காட்டுவோரை பகை முரண் நிலையாகத் தெளிவற்றுக் குறுகிய மனப்பான்மையுடன் பார்ப்பதனூடாக, நேர்மையானவர்கள் ஒதுங்கிச் செல்வதும் நிகழ்ந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் விளைவாக தேசியத்தினது சிந்தனையால் முன்மொழியப்பட்ட நிறுவனங்களிடையே பச்சோந்திகள் தலையெடுக்கக் காரணமாகியுள்ளமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனிதை சுட்டுகிறேனென்றால்; தம்மைத் தமிழ்த் தமிழ்த் தேசியத்திற்காக எந்தவிதமான சுகத்தேடல்களுமின்றி மண்ணுக்குள் விதையாக்கிக் கொண்டார்களே, இறுதிக்கணம் வரை உயிரைப் பணயம் வைத்துப் பட்டினிகிடந்து தாயகப் பரப்பெங்கும் வீழ்ந்து புதையுண்ட தமிழ் மக்களது ஈகத்தின் பெயரால், தமிழ்த் தேசியத்தின் பெயரால் இந்த அராஜகச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்பதே உண்மையாகும். இது தொடர்பாகப் பொறுப்புக்குரியவர்களும் சுதந்திரமான தேடல்களைச் செய்வதனூடாக மட்டுமே தேசியத்தைக் காக்க முடியும்.
Comments