தொடர்ந்தும் சாடியா? அல்லது மூடியா என்று இனிமேலும் இருக்க முடியாது.



பேரினவாதிகளிடம் தலைவிதியை அடகுவைக்காமல் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை கையாள வேண்டும்


அண்மையில் ஐ.தே.க./ஐ.தே.மு. மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க டில்லி சென்று இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டமைச்சர் ஆர்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இலங்கை அரசியல் நிலைவரத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதாவது முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரி பதவியிலிருந்து சென்ற வாரம் ஓய்வு பெற்றுள்ளவருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகா ஐ.தே.மு.வின் பொது ஜனாதிபதி வேட்பாளராய் நிறுத்தப்படுவதையிட்டு பல செயற்பாடுகளும் அங்கலாய்ப்பும் இந்தியத் தலைவர்கள் தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டன.

அவற்றை விளக்கும் வகையில் பாகிஸ்தானின் பல தடவைகள் இராணுவ ஆட்சி நடத்தப்பட்டதன் காரணமாகத் தாம் பெற்ற பிரதி கூலமான அனுபவங்களைச் சுட்டிக்காட்டியதோடு இப்போது தமது தென்புறமாக ஒரு இராணுவ மயமான ஆட்சி உருவாக்கப்படுமானால் அது தமக்குக் கவலையளிக்கவல்ல விடயமென அவர்கள் விக்ரமசிங்கவிடம் எடுத்துக் கூறினர். மற்றும் ஜெனரல் பொன்சேகா வெற்றியீட்டும் பட்சத்தில் எதிரணிக் கட்சியினர் முன்வைத்துள்ள வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என இந்தியத் தலைவர்கள் வினவிய போது விக்ரமசிங்க அளித்த பதில் விநோதமாயுள்ளது. அதாவது தாம் "நல்ல விசுவாசம் கொண்டுதான் காய்கள் நகர்த்தி வருவதாகவே பதிலளித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியத் தலைவர்கள் எழுப்பிய அதே கேள்வி இலங்கையிலும் இந்தியத் தலைவர்கள் எழுப்பிய அதேகேள்வியை இலங்கையிலும் பலர் எழுப்பி வருவதைக் காணலாம். உதாரணமாக ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த இளைப்பாற்றுக் கடிதத்துடன் இணைக்கப்பட்ட அனுபந்தத்தினைத் தாம் எல்லோராலும் அனுமதிக்கப்பட்டவாறு ஜனாதிபதியிடம் சோர்ப்பதற்குப் பதிலாக அவர் அவ் ஆவணத்தில் தன்னிச்சையாக சில மாற்றங்களைச் செய்துவிட்டார். இக்காரியத்தைக் தானும் செவ்வனே நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த ஐ.தே.மு. தலைமைப்பீடத்தினால் முடியாமற் போனமை இந்தியத் தலைவர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு வலுச்சேர்ப்பதாக அமைகிறது.

இந்த வகையில் 15.11.2009 இல் வெளியாகிய "சன்டே ரைம்ஸ் இதழில் அதன் அரசியல் ஆசிரியர் எழுதிய கட்டுரையில் வெளிப்படுத்திய கருத்து மிகப்பொருத்தமானது என்பதால் அதனை மேற்கோள்காட்டுகிறேன்." எனவே, இலங்கை அரசியலில் எதிர்கால நகர்வுகள் மற்றும் இலங்கை மக்கள் தலைவிதியைப் பொறுத்தவரை அவர்களின் (ஐ.தே.மு. தலைமைப்பீடத்தினரின்) கைகளில் மிகப்பாரிய பொறுப்பு உள்ளது. வேதாளம் என்று தாம் எண்ணும் ஒருவரை அகற்றுவதற்காக தாம் கட்டுப்படுத்த முடியாத இன்னொரு வேதாளத்தை உருவாக்குவதற்காக எதிரணிக் கூட்டமைப்பினர் முனைகின்றனர் என்றே இரத்தினச் சுருக்கமாக அக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகா 40 வருடகாலமாக இராணுவத்தில் ஊறியவர் எனச் சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் அவர் 60 வயதில் அரசியலில் பிரவேசித்த பின்னரும் இராணுவ ரீதியான மனோபாவத்திலிருந்து விடுவித்துக் கொள்வது இலகுவான விடயம் என்று எண்ண முடியாது எனலாம். ஆயுதப்படைகள் அனைத்தும் அடங்கலாக முழு அரச எந்திரமுமே அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பாக யுத்த வெற்றிக்குப் பின்னர் மாதக் கணக்கில் இராணுவத்தினரை வானளாவப் புகழ்ந்து நடத்தப்பட்ட கொண்டாட்டங்கள் சற்று ஓய்ந்த கையோடு ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்தினால் சரியென எண்ணப்பட்ட காரணங்களுக்காக

"ஓரங்கட்டப்பட்டமை பொன்சேகாவின், அரசியல் பிரவேசத்திற்குப் பெரிதும் உத்வேகமளித்திருக்கும் எனலாம்.

விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ள நிபந்தனைகள்

  • இப்போது என்னவென்றால் பொது வேட்பாளராய் நிறுத்தப்படவுள்ள ஜெனரல் பொன்சேகா கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஐ.தே.மு. வின் நிபந்தனைகளென அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

    1.அவர் ஜனாதிபதியாய்த் தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒழிக்கப்பட வேண்டும்.

    2.இடம்பெயர்ந்த மக்களை (ஐஈககு) மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அவர் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும்.

    3. அவர் ஒரு காபந்து அரசாங்கத்தினை அமைக்க வேண்டும். அதில் நான் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவேன். காபந்து மந்திரி சபையில் ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

    4. அவர் அவசரகால நிலையை உடனடியாக நீக்குவதோடு, அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

    5.குறிப்பிட்ட கால எல்லைக்குள் பொதுத் தேர்தலை நடத்துவதோடு, பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

மேற்குறித்த யோசனைகளை ஐ.தே.மு. அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளுமெனத் தான் நம்புவதாக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆக, இந்த யோசனைகள் அங்கத்துவக் கட்சிகளால் பரிசீலிக்கப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லை என்பது ஒரு புறமிருக்க பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவது பற்றி ஐ.தே.க. வுக்குள்ளேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சரி, அவரைத்தான் நிறுத்த வேண்டுமென இறுதி முடிவு எடுக்கபப்டும் என வைத்துக்கொண்டால் ஐ.தே.மு. தனது திட்டவட்டமான தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே போட்டியிடுவதற்கிணங்க வேண்டும் என்று கூட எண்ணப்படவில்லை. மேலும், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று எதுவும் கூறப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து எனது சென்றவாரக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல "இராணுவ ஆட்சிக்கான அதிகாரத்தை வெள்ளித்தட்டத்தில் வழங்கும் நடவடிக்கையாகவே இதனை மேலும் வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.

ஜே.வி.பி.யின் நிலைப்பாடு

  • மற்றும் ஜே.வி.பி. யானது மேற்குறித்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் என்றோ ஐ.தே.மு.வில் இணைந்துகொள்ளும் என்றோ கூற முடியாது. உண்மையில் ஜே.வி.பி. யின் தொழிற்சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லால் காந்த தனது பாணியிலேயே கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது விக்ரமசிங்க தனது "வாயைப் பொத்தி வைத்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இது விடயமாக ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக்கூடிய நிலைமை தென்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைவர் இரா.சம்பந்தன்,பா.உ. பின்வருமாறு கருத்து வெளியிட்டிருப்பதைக் காணலாம்: "எந்தத் தேர்தல் முதலாவதாக நடத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமாயின் யார்,எவர் வேட்பாளர்கள் என்பதை அறிய வேண்டும். அவர்கள் தத்தம் கொள்கையைத் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அதன்பின்பு தான் யாரை ஆதரிப்பது என்று நாம் தீர்மானிப்போம். இன்னும் நாம் முடிவு எடுக்கவில்லை சம்பந்தன் இவ்வாறு கூறும் அதேநேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐ.தே.மு.வில் இணைத்துக் கொள்வதற்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,பா.உ. பணிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். இதனிடையில் தமிழ் மக்கள் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என "சுடர்ஒளி நாழிதள் சென்ற வாரம் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்ததை 15.11.2009 இல் "சன்டே ரைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள் காற்றில் பறக்கவிடப்படுவது வரலாறு

  • நிற்க,ஜனாதிபதி வேட்பாளராய்ப் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் முன்வைக்கவுள்ள கொள்கைத் திட்டம் தொடர்பான அம்சத்தை நோக்குவோமாயின் அது மிக எச்சரிக்கையாக நோக்கப்பட வேண்டிய பாரிய பொறுப்பு. குறிப்பாக தமிழ்,முஸ்லிம் கட்சிகளைச் சார்ந்ததாகும். ஏனென்றால் தேர்தல்களின்போது ஆளும் கட்சிகளால் முன்வைக்கப்படும் விஞ்ஞாபனங்கள் ஒருவேளை ஏற்புடையதாக அல்லது கவர்ச்சிகரமாகக் காணப்பட்டாலும் அவற்றில் நம்பகத்தன்மையைக் காண்பது அரிது. உதாரணமாக 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையில் ஐ.தே.க. முன்வைத்த விஞ்ஞாபனமானது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதைப் பொறுத்தவரை ஐ.தே.க. பிரச்சினையின் பின்புலத்தை விலாவாரியாக விளக்கியதோடு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. ஆக, தமிழரின் அமோக ஆதரவையும் பெற்று 5/6 பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர்.தான் அந்த விஞ்ஞாபனத்தை இரவோடிரவாகக் காற்றில் பறக்க விட்டவர். அது மட்டுமல்லாமல், தமிழருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து 1983 இல் மிகப்பெரிய இனக்கலவரத்தை ஏவிவிட்டு தமிழர் தரப்பிலான ஆயுதப்போராட்டத்திற்குப் பெரிதும் பங்காற்றியவர். ஏன் 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னின்று அமைத்த பொதுஜன முன்னணி சார்பில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனமும் தமிழருக்குத் திருப்திகரமானதென எண்ணப்பட்டதாலேயே அவர் 62.38% பெரும்பான்மையீட்டினார். ஆனால், ஜே.ஆர்.ஆரம்பித்த யுத்தத்தை சந்திரிகா "சமாதானத்திற்கான யுத்தம் என மகுடமிட்டுத் தொடர்ந்து நடத்தியது தான் வரலாறு.

ஒப்பனைக்காக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள்

  • மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் எதுவுமின்றி ஒப்பனைக்காகச் சில பேச்சுவார்த்தைகளை நடத்தியதாயினும் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி நின்று இந்தியா,சீனா அடங்கலாகப் பல நாடுகளின் உதவியோடு அதனை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துவிட்டது. தற்போது சமாதானம் என்பது அரசாங்கத்தின் பிரசாரப் பண்டமாகவே உள்ளது. அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அக்கறையோ உண்மையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் எட்ட வேண்டுமென்ற கரிசனையோ காணப்படவில்லை. மெனிக்பாமில் அடைத்து வைக்கப்பட்ட 300,000 இடம்பெயர்க்கப்பட்ட மக்களை வடபகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடச் சென்று பார்வையிடுவதற்கு நீண்டகாலமாக அனுமதி அடாத்தாக மறுக்கப்பட்டிருந்தது. சென்ற வாரம் தான் 15 பா.உ. க்கள் மெனிக்பாம் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அங்கே மக்கள் எதிர்நோக்கும் அன்றாட உணவுப் பிரச்சினைகள் மற்றும் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்பதை அறிய முடியவில்லை என்பது போன்ற விடயங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். எவ்வாறாயினும் முகாம்களில் நிலைமைகள் அதிகம் குறைகாண்பதற்கில்லை என்ற தொனியிலேயே அங்கு சென்றிருந்த சில த.தே.கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுத்துள்ளதைக் காணலாம். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரியில் நடைபெறத்தான் போகிறது என்பது இன்று உறுதியாகியுள்ள நிலையில், பல காலமாக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் கூட திடீரெனத் தளர்த்தப்படுகின்றன. உதாரணமாக யாழ்,கொழும்பு போக்குவரத்து நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு அமைச்சு அனுமதி எதுவுமின்றி வேறு எதுவித கட்டுப்பாடுமின்றி நடைபெறலாமென அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கவர்ந்தெடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) என்றாலும் சரி, ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முற்படும் ஐ.தே.மு. என்றாலும் சரி, அதிகளவு பிரயத்தனம் செய்யும் எனலாம். தமிழ்பேசும் மக்கள் கடந்த ஆறு தசாப்தங்களாக எதிர்நோக்கிய அடக்கு முறைகள் பேரினவாத நில அபகரிப்புகள் போன்ற கசப்பான அனுபவங்களை இலகுவாக மறந்துவிட முடியாது. அவர்களின் தெரிவு தொடர்ந்தும் சாடியா? அல்லது மூடியா என்று இனிமேலும் இருக்க முடியாது. தமிழ் பேசும் மக்கள் ஆளுங்கட்சிகளின் வாக்குறுதிகளை மட்டும் நம்பி அக்கட்சிகளை மாறி மாறி ஆதரித்து ஏமாந்த நிலை ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமக்காக உண்மையில் குரல் கொடுக்கும் சக்திகளோடு கைகோர்க்கும் வகையிலான தமது தலைவிதியைப் பேரினவாத சக்திகளிடம் அடகு வைத்தல் அற்றதான திருப்பு முனையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கையாளப்பட வேண்டும்.


-கொழும்பிலிருந்து ஆதவன் இன்போதமிழ்-

Comments