யாழ்ப்பாண அரசு


(இக்கட்டுரையின் முதல் பகுதி இங்கே) 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், சுதந்திரமா? அடிமை வாழ்வா? என்ற கேள்விக்கு 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த ஆணை, 1985 இல் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அனைத்துத் தமிழ் அமைப்புகளும் முன்வைத்த தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுகள், 2004 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் வி.புலிகளே தமிழமக்களின் ஏகப் பிரதிநிதிகள் ஆகிய வரலாற்றுப் பதிவுகளை மீள் வாசிப்புச் செய்து "தமிழீழமே தமிழர்களது முடிந்த முடிவு" என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலுசேர்க்க ஒரு நேரடிவாக்கெடுப்பை (Referendum) நடத்துவதன் தேவை பற்றியும் நாடு கடந்த அரசை மக்களாட்சி முறைமைக்கு ஏற்ப வலுப்படுத்தவும் இந்தக் கருத்தரங்குகளில் விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல் இடம்பெற்றது.

செப்தெம்பர் 20 இல் ஸ்காபரோ முருகன் கோயில் அரங்கிலும் ஒக்தோபர் 04 இல் மிசிசக்கா ஜெதுர்க்கா கோயில் மண்டபத்திலும் இக் கருத்தரங்கம் நடந்தேறின. கனடியத் தமிழ் மாணவர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் சமூகம் ஒழுங்கு செய்த இந்தக் கருத்தரங்கில் நானும் கலந்த கொண்டு பேசினேன்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் - நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் இடையிலான வேற்றுமை ஒற்றுமை பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்.

தமிழில் பல இலக்கண நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் தொல்காப்பியமே முதல் நூல். நன்னூல், தொன்னூல், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், களவியற்காரிகை, நேமிநாதம், காக்கைபாடினியம், பன்னிரு பாட்டியல், வீரசோழியம் போன்றவை வழி நூல்களாகும்.

இது போலவே திம்பு பேச்சுவார்த்தை, இடைக்கால தன்னாட்சி அதிகார அவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்றவற்றுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமே ஆணிவேர் அல்லது அடித்தளம். திம்புப் பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்ட தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட - சுதந்திரம், இறைமை நீங்கலாக - எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளே. பேச்சு வார்த்தைக்காக சுதந்திரம், இறைமை இரண்டும் கைவிடப்பட்டன.

ஒஸ்லோ பறையறைதலிலும் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்துக்கு மாற்றாக உள்ளக தன்னாட்சிக் (Internal Self Determination) கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை (1) நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதில் இறுக்கியது.

“நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையைத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியல் அமைப்பாகும்.”

இது போலவே இடைக்கால தன்னாட்சி அதிகார அவை (ISGA)) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாண இராச்சியம் என்று சொல்லப்படும் அரசுருவாக்கம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே உருவானது எனும் கருத்துடைய வரலாற்றாய்வாளர்கள் கலிங்க மாகனுடன் அதன் தோற்றத்தை எடுத்துக் கொள்வார்கள்.

1976 ஆம் ஆண்டு மே 14 இல் பண்ணாகம், வட்டுக்கோட்டையில் தந்தை செல்வநாயகம் தலைமையில் கூடிய தமிழர் அய்க்கிய முன்னணியின் முதல் தேசிய மாநாட்டில் ஒரு நீண்ட தீர்மானம் நிறைவேறியது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானம் தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும். இருபத்து ஏழு ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் இணைப்பாட்சி அரசியல் முறைமைக்கு அறவழியில் போராடிய தமிழ் அரசுக் கட்சி அதில் தோல்வியையே கண்டது. எனவே இணைப்பாட்சியைக் கைவிட்டுத் தனித் தமிழீழத்துக்கான முடிவை மேற்கொண்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட வாசகம் இருந்தது.

"இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்மக்களுக்குள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமய சார்பற்ற, சமவுடமை தமிழீழ அரசை மீட்டெடுத்தலும் மீள உருவாக்குதலும் தவிர்க்க முடியாதென இம் மாநாடு தீர்மானிக்கிறது."

This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

இந்தத் தீர்மானத்தில் காணப்படும் இரண்டு சொற்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது. அவை மீட்டெடுத்தல் மீள்உருவாக்கல் (restoration and reconstitution) என்பனவாகும்.

போர்த்துக்கேயர் (கிபி 1505 -1658) முதன்முறை இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு மூன்று அரசுகள் இருந்தன. வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம், தெற்கே கோட்டை இராச்சியம், மத்தியில் கண்டி இராச்சியம் ஆகியன இருந்தன.

கோட்டை இராச்சியத்தை போர்த்துக்கேயர் கிபி 1565 கைப்பற்றினார்கள். யாழ்ப்பாண இராச்சியத்தை கிபி 1619 ஆண் ஆண்டு போர்முனையில் கைப்பற்றினார்கள்.

இலங்கை போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் 1658 இல் கைமாறியது. ஒல்லாந்தர் கண்டி, வடக்கு வன்னிமை நீங்கலாக இலங்கையை 1796 மட்டும் ஆண்டார்கள். பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியரிடம் கைமாறியது. 1815 இல் கண்டியை ஆண்ட தமிழ்மன்னன் ஸ்ரீவிக்கிரமசிங்கனை சிங்களப் பிரதானிகள் பிரித்தானியர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டு அரசையும் அவர்களிடம் கையளித்தார்கள்.

யாழ்ப்பாண அரசு (இராச்சியம்) யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்தது. அதன் மேலாண்மை சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வரைக்கும் பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது.

யாழ்ப்பாண அரசு வீழ்ந்த பின்னரும் பண்டார வன்னியன் ஆண்ட வன்னிமை 1803 ஆம் ஆண்டுவரை தனி அரசாகவே விளங்கியது. கற்சிலைமடுவில் நடந்த போரில் பண்டாரவன்னியன் கப்டன் ட்றிபேர்க் (ஊயிவ. னுசநைடிநசப) என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.

யாழ்ப்பாண அரசு இருந்ததை இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்கள். சென்ற ஆண்டு (2008) தரம் எட்டு வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த "யாழ்ப்பாண இராச்சியம்" தொடர்பான பாடத்தை நீக்கிவிட அரசு சாங்கம் முயற்சி மேற்கொண்டது. ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

யாழ்ப்பாண அரசை ஆண்ட மன்னர்களது பெயர்களையும் ஆட்சிக் காலத்தையும் கீழே காணலாம்.


அரசன் பெயர் ஞானப்பிரகாசர் இராசநாயகம்
கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது
காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி கி.பி 1242 கி.பி 1210
குலசேகர சிங்கையாரியன் கி.பி 1246
குலோத்துங்க சிங்கையாரியன் கி.பி 1256
விக்கிரம சிங்கையாரியன் கி.பி 1279
வரோதய சிங்கையாரியன் கி.பி 1302
மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325
குணபூஷண சிங்கையாரியன் கி.பி 1348
விரோதய சிங்கையாரியன் கி.பி 1344 கி.பி 1371
சயவீர சிங்கையாரியன் கி.பி 1380 கி.பி 1394
குணவீர சிங்கையாரியன் கி.பி 1414 கி.பி 1417
கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1440

1450 இல் கோட்டை அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450 - 1467 வரை ஆட்சி செய்தான். அது மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது.

கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1467
செகராசசிங்கன் சிங்கையாரியன் கி.பி 1478
முதலாவது சங்கிலி கி.பி கி.பி 1519
1560 இல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்
புவிராஜ பண்டாரம் கி.பி 1561
காசி நயினார் கி.பி 1565
பெரியபிள்ளை கி.பி 1570
புவிராஜ பண்டாரம் கி.பி 1572
எதிர்மன்னசிங்கம் கி.பி 1591
அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1615
சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1617

1619 இல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு அவர்களின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. . கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) எமது வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும். கீழே தமிழ் வரலாற்று நூல்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தந்துள்ளேன். முடிந்தளவு இவற்றைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.

பரராசசேகரம் - ஐ.பொன்னையாப்பிள்ளை (பதிப்பு 1928-1936)
வையா பாடல் - வையாபுரி அய்யர் (14-17 ஆம் நூற்றாண்டு)
பதிப்பு க.செ. .நடராசா 1980)
கைலாயமாலை - முத்துக்கவிராயர் (16-17 ஆம் நூற்றாண்டு) - நல்லூர் கைலாசநாத கோயில் புராணம்
யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர் (பதிப்பு குல.சபானாதன் 1949)
யாழ்ப்பாண சரித்திரம - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (1912)
புராதன யாழ்ப்பாணம் - முதலியார் செ. இராசநாயகம் (1926)
யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம் (1933)
யாழ்ப்பாண வைபவ கவ்முதி - ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை (1918 – வல்வை நகுலசிகாமணி 2001 பதிப்பு)
யாழ்ப்பாண அரசர்கள் (1920) - சுவாமி ஞானப்பிரகாசர்
யாழ்ப்பாண இராச்சியம் - கலாநிதி சி. பத்மநாதன்
யாழ்ப்பாண இராச்சியம் - பேராசிரியர் க. சிற்றம்பலம் (1992)
யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (1953)
பவுத்தரும் சிறுபான்மையினரும் - ச.கீத. பொன்கலன் (1987)
இலங்கையில் தமிழர்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (2008)
யாழ்ப்பாண அரச பரம்பரை - க. குணராசா
தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப. புஷ்பரட்ணம்
என்று முடியும் எங்கள் போட்டிகள் - எஸ்.கே.மகேந்திரன், எம்.ஏ.தஷிணகைலாச புராணம் - சிங்கை செகராசசேகரன் (பதிப்பாசிரியர் சி.பத்மநாதன் (1995)

The Fall and Rise of the Tamil Nation - V.Navaratnam (1995)
Sri Lanka The National Question - Satchi Ponnambalam (1983)
Sri Lanka: Witness to History – S.Sivanayagam (2000)
S.J.V. Chelvanayakam The Crisis of Sri Lankan Tamil Nationalism – A.Jeyaratnam Wilson (1993)
The Break-Up of Sri Lanka – A Jeyaratnam Wilson (1988)
Sri Lankan Tamil Nationalism – Murugesar Gunasingam (1999)
The Evolution of An Ethnic Identity – K.Indrapala (2005)

அடுத்த கிழமை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் வானில் சுடர்விட்டு ஒளிர்ந்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்களில் ஒருவரான சேர் பொன். அருணாசலம் பற்றி எழுதுவேன். (வளரும்)

- நக்கீரன் canada

Comments