புலம்பெயர் தமிழர்மீது விரிக்கப்படும் சிங்களச் சதி வலைகள்'

தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். அந்த சோகத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் இதயத்தில் சுமந்து வகை தேடி அலைகின்றார்கள்.

ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போரின் இன்றைய பின்னணிக்கு எதிரிகள் மட்டும் காரணமல்ல. சிங்கள இனவாத அரச படைகளை தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகள் தனித்து நின்று எதிர்க்க, சிங்கள தேசத்திற்குப் பின்னால், இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் உட்பட 21 நாடுகள் அணிவகுத்து ஆயுதங்களும், யுத்த தளபாடங்களும் வழங்கியதுடன் உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொண்டன. ஆனாலும் தமிழர் படை வீராவேசத்தோடு களத்தில் நின்று போராடின. எதிரிகளை அழிக்க முனைந்த விடுதலைப் புலிகளைத் துரோகிகள் அதே கள முனைகளில் நின்று காட்டிக் கொடுத்த கொடுமைகளும் அரங்கேறியது.

தமிழினத் துரோகியாக மாறி, மகிந்தவின் கைப்பிள்ளையாக அவர் மடியில் வீற்றிருந்த கருணா புலிகளின் போர் யுக்திகளை தான் பெற்ற அனுபவங்களிலிருந்து சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் அணிகள் எந்தெந்த திசைகளில் நகரும், அந்தப் பகுதிகளின் நில அமைப்புக்கள், பாதைகள் என்பவற்றை எல்லாம் படம் போட்டுக் காட்டிக் கொடுத்து ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து பதவிகளையும் சன்மானங்களையும் பெற்றுக்கொண்டார். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் அணியினுள் பல துரோகிகளும் கருணாவால் களம் இறக்கப்பட்டது. விடுதலைப் போராளிகளுடன் போராளிகளாகக் கலந்துகொண்ட இந்தத் துரோகிகளை விடுதலைப் புலிகள் இனம் காணத் தவறிவிட்டார்கள்.

அவர்கள் உள்ளேயிருந்தே தகவல்கள் சொல்லி இலக்குத் தவறாத தாக்குதல்களுக்கு வழி செய்து கொடுத்தார்கள். தமிழீழ மண் அந்த மக்களின் இரத்தத்தால் சிவந்த போதும், தமிழ்த் துரோகிகளின் நெஞ்சத்தில் கருணை சுரக்கவில்லை. மனிதாபிமானம் மிக்க சர்வதேச நாடுகள் யுத்தத்தை நிறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க விடுத்த வேண்டுகோள்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு, உலக அமைப்புக்களால் தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் பாவித்து தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்தியது சிங்கள அரசு. மனிதப் பேரவலங்களைத் தடுக்க விடுதலைப் புலிகளால் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளிடம் சரணடைந்தாவது அந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் முடிவினை எடுத்து, சரணடையவும் முன் வந்தார்கள்.

வெள்ளைக் கெடி ஏந்தி நிராயுத பாணிகளாக வந்த தமிழீழ அரசியல் துறைப் பணிப்பாளர் நடேசன், தமிழீழ சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட பலர் சிங்களப் படைகளால் யுத்த தர்மங்களையும் மீறிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தனை அவலங்களும் இடம் பெற்ற பின்னரும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. முள்ளிவாய்க்கால் முனையில் வைத்தே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வயது, பால் வேறுபாடுகளின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். கற்பிணிப் பெண்களது வயிறு கிழிந்து சிசுக்களின் உடல் பாகங்கள் வெளியே வந்த கொடூரக் காட்சிகள் கூட அந்த ஈனத் தமிழர்களின் கோர இதயங்களில் இரக்கத்தை உருவாக்கவில்லை.

சிங்கள இனவாதிகளின் கோர தாண்டவத்திற்கு அத்தனை கூலிக் குழுக்களும் தாளம் போட்டன. நடந்து முடிந்த மனிதப் பேரவலங்கள் கருணாவுக்கும், டக்ளசுக்கும், ஆனந்தசங்கரிக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. சிங்களத்தின் வெற்றிச் சிரிப்பில் இந்த வெட்கம் கெட்ட மனிதர்களும் இணைந்து கொண்டார்கள். தமிழினம் அதற்காகவும் வெட்கித் தலை குனிந்தது. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்களில் தப்பிய தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் வைத்து வதை பட்டார்கள். சந்தேகத்திற்கிடமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் புதைகுழிக்கு அனுப்பப்பட்டார்கள். சிங்களப் படைகளின் பாலியல் வெறிக்குப் பல யுவதிகளும், சிறுமிகளும் பலியானார்கள்.

ஆனாலும் எம் இனத்தை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிக் குழுக்களும் நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. ஈழத் தமிழர்களின் அத்தனை இன்னல்களையும் போராடித் தீர்க்கவேண்டிய பெரும் பொறுப்புக்கள் புலம் பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் சிங்கள தேசத்தின் கோரக் கரம் புலம்பெயர் தேசங்களிலும் நீண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கான பல சதித் திட்டங்கள் அரங்கேறுவதற்கு ஆயத்த நிலையில் துரோகத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் துரோக அரங்கேற்றத்தில் ஒன்றே மாவீரர் நாளன்று வெளியிடப்பட்ட கோத்தபாயாவால் தயாரிக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டு, தளபதி ராம் என்ற பெயரில் வெளிவந்த துண்டுப் பிரசுரமும், சீடியும் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புலம்பெயர் தமிழீழ மக்களே! எம்மையெல்லாம் முட்டாள்களாக்கி இவர்கள் அரங்கேற்றத் துடிக்கும் துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள்.

"இத்தனை காலம் எங்கிருந்தாய்? என்பது எமக்குத் தேவையற்றது. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்பதே எமக்குத் தேவையாக உள்ளது" என்ற இறுக்கமான கேள்வியுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள். "எதிரிகளிலும் பார்க்க, துரோகிகளே ஆபத்தானவர்கள்"

- தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

-சி. பாலச்சந்திரன்

நன்றி:ஈழநாடு

Comments