இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு தேசவிடுதலைப் போராட்டத்தின் தோற்றம் ஏன் அமைந்தது? அதன் நியாயத்தன்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகள் தெரியும், என்று ஆய்ந்தால் அதற்குக் கிடைக்கும் பதில் என்பது உண்மையிலேயே தலை குனிவைத்தான் தரும். இந்தநிலை அந்தமக்கள் மத்தியில் காணப்படுவதற்கான காரணம் என்ன? என்று பார்த்தால் ஊடகங்கள் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடையவில்லை என்பதுதான்.
சரி நவீன உலகின் போக்கிற்கமைய மக்களுக்கான நேரமின்மை மக்களின் அன்றாட ஏனைய சிக்கல்கள் மக்களை ஊடகங்களின் பக்கம் ஈர்க்கவில்லை என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையில் ஊடகங்களின் பங்கு என்பது மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் மக்கள் மொழியில் மக்களுக்கான செய்திகளை அல்லது தகவல்களைக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.
தாயகத்திலும் சரி புலம்பெயர் தளத்திலும் சரி தமிழ்மொழி பேசுகின்ற ஊடவியலாளர்களில் பெருமளவானவர்களிடம் எங்கள் கருத்தைச் சரியானமுறையில் சரியான தளத்தில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்கு அப்பால் நான் பெரிது நீ பெரிது என்ற எண்ணம் மட்டுமே கூடுதலாக இருந்தது, இருக்கின்றது. எங்காவது யாராவது ஒரு சிலர் மட்டும் நான் அவ்வாறானவன் அல்லன், எனது நோக்கம் முழுவதுமே ஊடகத்தில் மட்டும் எனது புலனைச் செலுத்திச் செயற்பட்டேன் என்று கூறிக்கொள்ளலாம். அது எந்தளவிற்கு வெற்றியைப் பெற்றுத்தரும்? ஊடகங்கள் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை; ஊடகவியலாளர்கள் சரியான முறையில் கையாளப்படவில்லை. அவர்கள் எந்தளவிற்கு முக்கியமானவர்கள் அவர்களை எவ்வாறு கையாளவேண்டும் என்ற பார்வை சரியானமுறையில் இருந்திருக்கவில்லை. களத்திலும் நெருக்கடிகளிலும் நின்று பாடுபட்ட எத்தனை ஊடகவியலாளர்கள் தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றால் இதற்கெல்லாம் மௌனம்தான் பதில். சிங்கள அரசு ஊடகச் சுதந்திரத்தை எந்தளவிற்கு நசுக்கிவைத்துள்ளது என்பதை மட்டும் வைத்துக் கொண்டே ஊடகங்களின் வீச்சினை எதிர்நோக்க அது எவ்வளவு அச்சம் கொண்டது என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
வன்னிமீதான போர்த்தீவிரத்தின் போது தென்னிலங்கை ஊடகங்கள் ஊடக வலைப்பின்னல் ஒன்றைச் சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இராணுவ ஆய்வாளர்கள் இந்நடவடிக்கைகளுக்கு சிங்கள ஆட்சியாளர்களால் சரியான முறையில் கையாளப்பட்டனர். ஊடகங்களின் மூலம் போர் நகர்வுகளையும் எதிர்த்தரப்புக்கு உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல ஆய்வுகளையும் செய்திகளையும் வெளியிட்ட அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தனர். அதனைவிடவும் சர்வதேச ஊடகங்களைச் சரியான முறையில் கையாண்டு சிங்கள அரசின் மீதான அழுத்தங்களை குறிப்பிட்ட அளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதிய இணையத்தளங்களை நிறுவி அவற்றில் செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிடுவதை மிக முக்கிய பணியாக மேற்கொண்டனர்.
ஆனால் எமது மக்கள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கொன்று குவிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் விதவைகளாகவும் ஆக்கப்பட்டும் பேரவலத்திற்குள் மூழ்கியிருந்தவேளையில் நாம் ஊடகங்கள் மூலம் சாதிக்க முடிந்தது என்ன? புதிதாக எதனைச் சாதித்தோம்? சரி அந்த வேளையில் சர்வதேசத்தையே ஏறி மிதிப்பது போன்று சிங்கள அரசு தனது ஏளனமான கருத்துக்களை மாறிமாறித் தொடர்ந்து விதைத்து வந்ததே, அந்த விடயங்களைக் கூட ஏன் நாங்கள் பாரிய விடயங்கள் ஆக்க முடியவில்லை?
தமிழ்மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கின்ற பல பத்து இணைத்தளங்களும், பல வானொலிகளும், பல பத்திரிகைகளும் ஏன் ஏராளமான சஞ்சிகைகளும் கூட சர்வதேச நாடுகளில் வெளிவந்தவண்ணமே உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தமக்கிடையில் எந்தளவு ஒற்றுமைத் தன்மையை அல்லது ஒருங்கிணைந்த செயற்பாட்டை வைத்திருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பவேண்டும். போரின் தொடக்கம் முதல் இறுதிவரையில் மக்களின் அவலம் என்பது வார்த்தைகளுக்குள் அடக்கிவிடக் கூடிய விடயமல்ல. அந்தவிடயங்களை உள்ளதை உள்ளவாறே அனைவரும் ஒரு தளத்தில் நின்று வெளியிட்டிருந்தாற்கூட போரின் தார்ப்பரியம் சர்வதேச ரீதியில் அன்றே உணரப்பட்டிருக்கலாம். மாறாக ஒவ்வோர் ஊடகமும் தமக்குக் கிட்டியவிதத்தில் தாம் தீர்மானித்த விதத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரே நேரத்தில் முரண்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தமை உண்மையான செய்திகளை ஏனையவர்கள் நம்பிக்கையீனத்துடன் நோக்கியதனை அவதானிக்க முடிந்தது.
சர்வதேச ரீதியில் பல போராட்டங்கள் வெற்றிபெற்றன என்றால் அந்தப் போராட்டங்களின் போக்கினை அல்லது வீச்சினை மேம்பாடடையச் செய்தவை ஊடகங்கள் தாம். தற்போது கூட எங்கள் தாயகம் சிதைக்கப்பட்டு மக்கள் நிர்க்கதியாக வெவ்வேறு திசைகளில் சிதறியுள்ளனர். அவர்களைக் கூட அரவணைக்க ஆற்றுப்படுத்த ஏதாவது சரியான ஊடகம் ஒன்றாவது இல்லையா? என்ற ஏக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.
நடந்து முடிந்த காலப்பகுதிகளில் ஊடகங்கள் விட்ட குறைகள், சாதித்தவை என விரிவாக நோக்கினால் அது ஆழமான வடுக்களையும் கவலைகளையுமே தந்து நிற்குமே தவிர மாறாக அதன் மூலம் எதனையும் எட்டிவிடப் போவதில்லை.
நாடுகள் கடந்தும் ஊடகங்களின் இமயங்களில் நிற்கக்கூடிய மண்பற்றாளர்கள் பலர் மூத்த ஊடகவியலாளர்களாக இன்னமும் தம்மால் முடிந்தவற்றை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி இளைய துடிப்பான ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொதுவான ஊடகக் கொள்கை உருவாக்கப்படல் வேண்டும், ஊடக அமையம் நிறுவப்படவேண்டும்.
எதிர்வரும் காலங்களின் பிரதிபலிப்பாய் எங்கள் போராட்டம் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் அல்லது வாக்கெடுப்புக்கள் கூட நிகழலாம். அந்தவேளை மட்டும் ஊடகங்களில் கருத்துக்களை எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் திணித்துவிட முடியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு துரிதமாய் புதிய ஊடக மாற்றங்கள் நிகழவேண்டும். தாயகத்தில் அவலத்துள் சிக்கியிருக்கும் மக்கள் முதல் ஏக்கங்களுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வரை அனைவரையும் ஒருசேர சங்கமிக்க வைக்கும் வகையிலான புதிய ஊடகங்களின் வருகை என்பது தற்போதைய மிக முக்கிய தேவையாகவுள்ளது.
ஏனைய வழிகளில் சாதிக்கத் தவறியவற்றை நாங்கள் எங்கள் பேனாக்கள் மூலம் சாதிப்போம். சாதனையின் முடிவில் எங்களால் சிந்தப்பட்ட உயிர்விலைகளுக்கும், குருதிவிலைகளுக்கும், கண்ணீர் விலைகளுக்கும், ஏன் வியர்வை விலைகளுக்கும் சரியான அறுவடையைப் பெற்றுக் கொள்வோம். நாங்கள் எதிர்பார்ப்பது போல இம்மாற்றங்கள் போரின் இறுதிக் காலங்களில் தம் உயிர்களை இழந்து விட்ட பல்லாயிரம் மக்களின் உயிர்களோடு தங்கள் உயிர்களையும் இணைத்துக் கொண்ட ஊடகவியலாளர்களின் கனவுகளுக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கும் என்பதுவே உண்மை.
- இராவணேசன்
ஈழநேசன்
Comments