ஒன்றாய் எழுவோம்


1945ல் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் பிரித்தானிய மக்கள் ஒரு மிகப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். போர்மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston churchil) அவர்களை அரசியலிலிருந்து ஓய்வு நிலைக்கு அனுப்பிவிட்டு கிளெமன்ட் அட்லீயை (Clemnt Attee) பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.

இவர் இராணுவ அதிகாரியாக இருந்திருந்தாலும் இவரிடமிருந்து மக்களிற்கான சுதந்திர எழுச்சியை பிரித்தானியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் இவரது காலத்திலேயே காலனித்துவ நாடுகளிற்கு சுதந்திரம் வழங்கினார். இவரது காலத்திலேயே இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றன. இவருக்கான தேர்தலில் உலகெங்கிலும் போர்களில் ஈடுபட்ட பிரித்தானிய இராணுவத்தினர் அந்தந்த நாட்டு மக்களோடு தாம் பெற்ற அனுபவங்களில் அடிப்படையில் இவருக்கே தபால் மூலம் வாக்களித்து காலனிய விடுதலைக்கு வழிவகுத்தனர்.

http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/n-19112009-onray-eluvam-02s.jpgஆனால் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறீலங்காவின் யுத்தம் அதன் பெரும்பான்மை மக்களிடமோ அல்லது சர்வதேச அரங்கிலோ எந்த விதமான ஆக்கபூர்வமான நம்பிக்கைகளையும் எழுப்பவில்லை. மாறாக எல்லோரும் சேர்ந்து எமது தேசிய விடுதலையை, எமது இனத்தின் விருப்பை மேலும் மேலும் இல்லாதொழிக்கவே அழுத்தம் ஏற்படுத்துகின்றன. சிறீலங்காவின் ஜனாதிபதிக்கும் இராணுவத் தளபதிக்குமான அரசியல் போட்டியில் கூட அவர்களில் யார் திறம்பட தமிழர் அபிலாசைகள் அழித்துத் தமிழரை அடிமை கொள்வது என்ற போட்டியே நிலவுகின்றது. குற்றம்புரிந்த மனநோயாளியான அரசிடமிருந்து நாம் ஒரு அரசியல் நீதியைப் பெறமுடியாது.

இவர்கள் புத்தரினதும், அசோக தர்மச் சக்கரத்தின் சீடர்களாக இருப்பினும் இவர்களிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை. அசோகர் கூட தான் நடத்திய கலிங்கப் போரின் அழிவுகளைக் கண்டு தன் துயரத்தையும், கண்ணீரையும் வெளிப்படுத்தியிருந்தபோதும் கூட அந்தப் போரினால் அடிமையாக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று எண்ணவில்லை. இவரின் சீடர்கள் இன்று கண்ணீர் வடிக்கவுமில்லை, சுதந்திரத்திற்கான சிந்தனையை வளர்க்கவுமில்லை. எங்கள் போராட்டமானது தீர்க்கமான முன்னெடுப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சக்திகள் மூலமே ஒடுக்கப்பட்டது. புவிசார் அரசியல் முயற்சியின் மூலம் அவர்கள் சாதிக்க நினைத்ததும் அல்லது சாதித்ததாக நினைத்ததும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் ஈழத்தமிழரின் தேசிய விடுதலை வினாவுக்கு பதிலாக அளிக்க முடியவில்லை.

அவர்களின் புவிசார் அரசியல் தீர்வு என்பது வெறும் குழம்பிப்போன, எந்த முடிவுமற்ற முயற்சியாகவே உள்ளது. உலகின் ராஜதந்திர வட்டங்கள், பூகோள சக்திகள் மூலம் எதையும் சாதிக்கும் வல்லமையற்று, தீர்வுகள் ஏற்படுத்தும் சிந்தனைத் திறமைகள் அற்ற வறண்ட சிந்தனையாளர்களாகவே உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையில் சிறீலங்காவானது அவர்களின் "பிழையானதும் பரீட்சார்த்தகரமானதுமான' 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியலின் சோதனைக்களமாகவே உள்ளது. சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் "ஒரு அசாதாரண தீர்க்கதரிசனத்தோடு' போரை நடாத்தி அதன் விளைவுகளைப் "பெறுபேறுகளாகக்' காட்டிப் போரை முடித்து வைத்துள்ளனர்.

ஆனால் இவர்களின் புவிசார் அரசியலின் செயற்பாட்டுத் திட்டங்கள் மேலும் மேலும் குழப்பமானதும், தோல்விகரமானதுமாகவே அமைந்துவிட்டது. தமது தீர்வாக "ஆற்றுப்படுத்துகை' என்றொரு விடயத்தைப் புதிதாகப் புகுத்த முயல்கின்றனர். உயிர்க்கொடை கொடுத்துப் போராடி, கொடூரமான சிறீலங்கா இராணுவத்தின் இனப்படுகொலைக்குள் குடும்பங்களை இழந்து, சொந்தங்களை இழந்து சிதறிப்போய்க்கிடக்கும் மக்களுக்கு வெறும் பொருளாதார நிவாரணம் வழங்குவதன்மூலம் தமிழீழ தேசிய விடுதலைத் தாகத்திற்குத் தீர்வு கண்டுவிடலாம் என்ற அர்த்தமற்ற, செயற்திறனற்ற கொள்கைகளையே சிறீலங்காவிற்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் புகுத்த முயல்கின்றன. ஒரு இனத்தின் சுதந்திர தாகத்திற்கு வெறும் மனிதாபிமானத் தீர்வுகளும், வெற்று ஒத்தடத் தீர்வுகளும் பதிலளித்துவிடமுடியாது.

ஈழத் தமிழ் இனத்தை ஆற்றுப்படுத்த முயலுவதாயின் அவர்களின் தேசிய அவாவான தனித்தமிழீழக் கோரிக்கையை, தமிழர் என்ற தனித்துவ அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலமே பல தசாப்தங்களைக் கடந்து நிற்கும் விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு தீர்வுகொண்டு வரும் முயற்சியின் முதற்படியைத் தாண்ட முடியும். ஹிலாரி கிளிண்டன் கூடத் தனது தேர்தல் பிரச்சாரங்களில் உலகின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு அந்தந்த இனங்களின் விடுதலைக் கோரிக்கையை முதலில் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சிறீலங்காவின் போரும் போரின் பின்னான இனவழிப்பு நடவடிக்கைகளும் சர்வதேசத்திற்கு, ஈழத்தமிழர் விடுதலைப் போருக்கு வெறும் மனித உரிமைகள் விடயங்களும், அபிவிருத்திகளும் சிறீலங்கா போன்ற ஒரு தேசத்தில் எந்தத் தீர்வையும் வழங்க முடியாதென்பதை உணர்த்தியுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மூலம் இன்று தமது தீர்வுகளைக்கொண்டுவர முயலும் சர்வதேச அரசுகள், தமிழீழம் என்ற கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் எந்தப் பயனையும் பெறப்போவதில்லை. இந்தியா இப்படியான விடயங்களில் தீர்வு காண்பதற்கு ஏற்ற தகுதியை தனது அரசியல், வெளிவிவகாரக் கொள்கைகளில் கொண்டிருக்கவில்லை. அவர்களின் அதிகாரவர்க்கமும், புலனாய்வு அமைப்புக்களும் மேற்கொள்ளும் அவர்களின் "பாரம்பரிய' முயற்சிகள் எவையும் இனியும் பலன்தரப்போவதில்லை. இனியும் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் "பயங்கரவாதம்' என்ற திரைக்குள் மறைந்து நிற்க முடியாது. கருணாநிதியும் மத்திய அரசும் தாங்களே கட்டியம் கூறிப் பயங்கரவாதம் சிறீலங்காவில் அழிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். எமது சுதந்திரவேட்கையை அங்கீகரித்து, ஒரு திறந்த நேர்மையான அரசியலின் மூலமே இந்தியா தன் பாவமன்னிப்பைக் கோரமுடியும்.

இதன் மூலமே இந்தியா தனது உண்மையான பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும். எப்படி பங்களாதேசின் விடுதலைக்குத் தோள்கொடுத்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்களோ, அந்த மன நிலைக்கு, கொள்கை வகுப்பாளர்களின் பிழையான வழிகாட்டிலிலிருந்தும், தனி நபர் பழிவாங்கல்களிலிருந்தும் வெளியேறி இந்திய அரசு செயற்படவேண்டும். சிறீலங்காவின் இனப்படுகொலைகளைத் தண்டிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்திய எல்லைகள் எல்லாமே சிறீலங்காவின் உபயத்தில் எதிரிகளின் கூடாரமாவதைத் தடுக்கமுடியாது."ஒரு இனத்தின், மக்களின் அடிப்படை உரிமை, அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை அரசியல் ரீதியாகச் சொல்லவதாகும். ஆனால் சிறீலங்கா அரசு 1983ல் தனது 6வது திருத்தச் சட்டம் மூலம் இந்த அடிப்படை உரிமையையும் தமிழர்களிடமிருந்து பறித்து விட்டது.

இன்று இவர்களின் கூட்டு நாடுகளும் தமிழர்களின் அரசியல் அவாவை நசுக்கிக் குரலடக்கி விட கங்கணம் கட்டியுள்ளன. கருணாநிதி மட்டுமல்லாது, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களும் ‘ஈழம்' என்ற சொல்லையே அழித்துவிட முயல்கின்றன. இன்று "உலகமயமாக்கல்' என்று ஊறிக்கொண்டு தம்மை அரசியல் நிறுவனங்களாக மாற்றிக்கொண்டு "நாடுகள்' என்ற போர்வையில் மறைந்துகொண்டு, நாடுகடந்த அரசியல் கருத்துக்களிற்கும் உலக மக்களிடையே சகோதரத்துவத்திற்கும் பெரும் முட்டுக்கட்டைகளாகவே தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஆனாலும் அதையும் தாண்டியுள்ள விடுதலை உணர்வுள்ள சுதந்திர உலகம் நோர்வேயில் நிகழ்ந்ததுபோலான தமிழீழ அரசிற்கான மீள் ஆணையை வரவேற்கத் தவறாது.

இந்த ஆணை உலகெங்கும் வாழும் தமிழரால் வழங்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் பேரவைகள் அமைக்கப்பட வேண்டும். இப் பேரவைகளில் சுதந்திர தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளும் புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் பங்குபெறல் வேண்டும். இந்தப் பேரவைகள் ஒரு திடமான அடித்தளமாக கட்டியெழுப்பப்படல் வேண்டும். அடுத்து ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஈழத்தமிழர் அவைகள் எங்கும் உருவாக்கப்படல் வேண்டும். இந்த அவைகள் தமிழீழத் தேசிய விடுதலையை அடிநாதமாகக் கொண்டு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அந்தந்த நாடுகளுடனான முழுமையான அரச தொடர்புகளையும் பேணி, ஒரு பலமான அரசியல் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாக ஒவ்வொருநாட்டிலும் செயல்படல்வேண்டும்.

இந்த அவைகளின் அங்கத்துவத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசு கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றுக்குள் ஒன்று செயற்பாடுகளில் ஒன்றிணைந்து, ஒன்றுக்கொன்று பாதுகாப்பாக ஒரு உடைக்க முடியாத கட்டமைப்பாக வளரவேண்டும். இந்த மூன்றில் ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கூட மொத்தக் கட்டமைப்பையும் அபாயநிலைக்குத் தள்ளிவிடும். எனவே இந்தக் கட்டமைப்புககுள் ஈழத்தமிழர்களின் தேசியக் குரலான, அவாவன தமிழீழத்தை ஏற்படுத்துவதற்குத் தம்மை சகல வழிகளிலும் ஒன்றிணைக்கவேண்டும். போராட்டத்தை தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் புலம்பெயர் தமிழர் எம்மிடமே வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எமது தமிழீழத் தனியரசிற்கான விருப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். மேற்கூறப்படும் கட்டமைப்புக்களில் எம்மை இணைத்துக்கொண்டு அரசியல், அறிவு பூர்வமான செயற்பாடுகளில் எமது சக்தியைத் திரட்டவேண்டிய தருணமிது. நடைபெற இருக்கும் மக்கள் விருப்பு வாக்கெடுப்பில் எல்லோரும் எமது கடமையையுணர்ந்து செயற்படல் வேண்டும். இந்த அடிப்படைச் செயற்பாடே நாடுகடந்த தமிழீழ அரசைப் பலம் பெறவைக்கும் அடிப்படைக் கட்டுமானத்தை பலப்படுத்தும் பணியாகும். ஜனநாயகம் பேசும் எந்த வல்லரசு நாடுகளிடம் நாமும் எமது தேசிய விருப்பை, ஜனநாயக முறையில் சொல்வோம். இதன் மூலமே நாம் எமது சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அனைவரும் ஒன்றாய் எழுந்து அரசியல் பணிகளில் எம்மை இணைத்துக்கொண்டு அந்த நாடுகளில் அந்தந்த அரசுகளிற்கு எமது நியாயத்தை அரசியல், ஜனநாயக ரீதியில் அவர்கள் மொழியிலேயே புரியவைப்போம்.

-சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரநசு

Comments