திரண்ட பங்களிப்புடன் நோர்வே மக்களவைக்கு வெற்றி தருவோம்!

ஈழத்தமிழர் இன்று செய்யவேண்டிய கடமை, தமது இலட்சியத்தை எல்லாவகையான ஜனநாயக முறைகளாலும் தெளிவாகப் பதிவுசெய்வதும், அதற்குரிய நிறுவனங்களை உருவாக்குவதும், இந் நிறுவனங்கள் எங்காவது ‘இழுத்துக்கொண்டு’ போகப்படாமல் ‘கொழுக்கிப் பாதுகாப்புகள்’ இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாகும்.

கடுமையான புவிசார்-வல்லரசுப்போட்டிக்குள் ஈழத்தமிழர் பிரச்சனை சிக்குண்டு இருப்பதை அனைவரும் அறிவர்.

இராணுவ ஒடுக்கலை தமிழ்மக்கள் மீது ஒற்றுமையுடன் திணித்திருக்கும் இவ்வல்லரசுகளும் சிறீலங்கா அரசும், இப்பொழுது தமிழர் அரசியலைத் தம்பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் காட்டும் அரசியலும், ‘ஜனநாயகமும்’ அவர்களது நோக்கங்களுக்கு மாத்திரம் உதவும் ‘ஒருவழிப்பாதை’.

தமிழர், சிங்களவர் இருபகுதியிடமும் ஜனநாயகப்போர்வை தேர்தல் வழியில், மேலாதிக்கப் பொருளாதாரத்திற்கு உதவும் சர்வாதிகார அமைப்புகளை உருவாக்கி, அவற்றைத் தம் சேவையில் ஈடுபடுத்தும் மறைமுக இராணுவ ஆட்சியே இவர்களது நோக்கம்.

தெளிவான அரசியல் இலட்சியத்தை தகுந்த பாதுகாப்புக்களுடன் தமிழர்கள் முன்வைக்காவிட்டால் தமிழர் தேசிய இலட்சியம் திரிபுபடுத்தப்படுவதுடன் எவ்வித மாற்றுத் தீர்வுகளும் மக்கள் விரும்பும் வகையில் வரப்போவதுமில்லை.

விளங்கியோ விளங்காமலோ, ஈழத்தமிழர் சிலர் திரிபுவாத ஒருவழிப்பாதையால் விடிவு வரும் என்று நம்புகிறார்கள், அல்லது நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விரிவான ஜனநாயகம் வந்தால் ஆதிக்க சக்திகளை ஒட்டியோடும் தமது ஒருவழிப்பாதை தடைப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறார்கள்.

ஈழத்தமிழர் அவலத்தைச் சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்ததுபோல இப்பொழுது ஈழத்தமிழர் தமது உள விருப்பத்தை ஆணித்தரமாக ஜனநாயகமுறையில் சொல்வதையும் இருட்டடிப்புச் செய்யும் முயற்சியில் திரிபுவாதத்துக்கு ஆதரவான எமது சில ஊடகங்களுமே செயற்பட்டுவருகின்றன.

மக்களவைத் தேர்தல் பகிஸ்கரிக்கப்படவேண்டும், எவ்வாறாவது பலவீனப்பட்டுவிடவேண்டும் என்ற சிந்தனைகள் இந்த அடிப்படையிலேயே எழுகின்றன.

தனிமனித உறவு முறைகளை வைத்து அரசியலைப் பார்க்கப் பழகிக்கொண்ட அப்பாவித்தமிழர்கள் சி;லர், மக்களவைத் தேர்தலைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் ‘வாரிசு’ உரிமையோடும், ‘ஒற்றுமையின்மையோடும்’ தனிமனித மானப் பிரச்சனைகளோடும் தொடர்புடையவை என்று நம்புகிறார்கள். கொள்கை எங்கு பறிபோகிறது என்று இவர்களால் பார்க்கமுடியவில்லை.

ஈழத்தமிழர் இன்று செய்யவேண்டிய கடமை, தமது இலட்சியத்தை எல்லாவகையான ஜனநாயக முறைகளாலும் தெளிவாகப் பதிவுசெய்வதும், அதற்குரிய நிறுவனங்களை உருவாக்குவதும், இந் நிறுவனங்கள் எங்காவது ‘இழுத்துக்கொண்டு’ போகப்படாமல் ‘கொழுக்கிப் பாதுகாப்புகள்’ இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாகும்.

எல்லா ஜனநாயக முயற்சிகளுக்கும் மக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலக வேண்டுகோளில் ‘ஆழ்ந்த அர்த்தம்’ உண்டு.

இதன் பொருளை விளங்கிக்கொண்டால், நோர்வேயில் மக்களவை திரண்ட பங்களிப்புடன் உருவாவதன் அவசியமும் தெளிவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசை யாரும் பகிஸ்கரிக்கப்போவதில்லை. மாற்றாக, சர்வதேசச் சமன்பாடுகளை சொந்தக்காலில் எதிர்கொள்ளக்கூடிய வகையில், அதனைப் பலப்படுத்தக் கூடியதாகவும் பாதுகாக்கக்கூடியதாவும் இருப்பதற்கு நோர்வே மக்களவையும் அது போன்ற அவைகள் பல நாடுகளிலும் வெற்றிகரமாக உருவாவது அவசியம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர் அரசியலின் அடிப்படையை ஆணித்தரமாக உலகிற்கு முன்வைத்ததில் நோர்வே ஈழத்தமிழர் ஏற்கனவே ஜனநாயகச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். மக்களவை அவர்கள் செய்துவரும் மற்றுமொரு வரலாற்று முன்னோடி.

Comments