ஈழத்தமிழர்கள் தவிர வந்தாரை வாழ்வைக்கும் தமிழகம்


வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பல நூற்றாண்டுகால நம்பிக்கை. ஆனால் சுமார் 26 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலையை எண்ணிப் பார்த்தால், அது பொய்த்துப் போய்விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

போரால் வாழ்விடம் இழந்து தாய்த் தமிழகத்தை நாடி வந்த ஈழத் தமிழர்கள், 26 மாவட்டங்களில் உள்ள 115 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர் வசித்து வருகின்றனர்.

முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேரும் காவல்துறையிடம் பதிவு பெற்ற சுமார் 1 லட்சம் பேரும் தமிழகமெங்கும் வாடகைக் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இலங்கையில் இன்றுள்ள இதே அரசியல் சூழ்நிலை தொடருமானால் இவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்பே இல்லை.இவர்களின் அடிப்படை வசதிக்காக தமிழக அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியிருப்பது ஆறுதல் தரும் விஷயம். தற்போது முகாம்களில் அவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை. எனவே இவர்களுக்கு அரசு நிலங்களில் (சமத்துவபுரங்கள் போல) குடியிருப்புகள் அமைத்துக் குடியமர்த்த வேண்டும். இதற்கு ஐ.நா. அகதி ஆணையரிடம் கேட்டாலோ, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் கேட்டாலோ நிச்சயமாக நிதி உதவி கிடைக்கும்.மேலும் அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரையும் ஆறு மாதங்களுக்கு மேல் முகாம்களில் தங்க வைக்காமல் இத்தகைய புதிய குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டும்

குடியிருப்புகளுக்குப் போன பின்பு அடுத்த ஓராண்டு காலத்துக்கு, அரசு இப்போது வழங்கி வரும் மானியத் தொகையை (குடும்பத் தலைவருக்கு ரூ. 400 மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.இங்குள்ள ஈழத் தமிழர்கள் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. ஆனால், பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. எனவே முகாம் பதிவு அட்டைகளைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் அனைத்துலகப் பயண இலங்கை கடவுச்சீட்டை (நழ்ண்ப்ஹய்ந்ஹய் டஹள்ள்ல்ர்ழ்ற் ஸ்ஹப்ண்க் ச்ர்ழ் 10 ஹ்ங்ஹழ்ள் ச்ர்ழ் ஹப்ப் ஸ்ரீர்ன்ய்ற்ழ்ண்ங்ள்) சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூலம் வழங்க மத்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.காவல்துறைப் பதிவு முறையில் மாற்றம் கொண்டு வந்து புகைப்படம் ஒட்டிய காவல்துறை பதிவு அட்டையை வழங்க வேண்டும். விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால் ஒருவாரகாலத்துக்குள் பதிவு அட்டை வழங்கப்படவும் வேண்டும்.நிலையான வதிவுரிமை அட்டை உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு பெறும் சுதந்திரம் வேண்டும்.

இந்த வசதியை ஈழத்தமிழர்கள் தவிர அனைத்து வெளிநாட்டவருக்கும் இந்திய அரசு இப்போது வழங்கியுள்ளது.

இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.முதலீட்டு வலிமை கொண்டவர்கள் தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும்.மழலையர் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை இருந்த சிறந்த அணுகுமுறையை நீட்டிக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இந்த அணுகுமுறை வேண்டும்.1983-ல் தொடங்கிய தொழிற்கல்வி அனுமதிக்கான இட ஒதுக்கீடு, நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது.

மத்திய அரசின் ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்பதால் இடஒதுக்கீடு தேங்கியுள்ளது.மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Ministery of External Affairs) வெளிநாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யுமிடமாகும். அவர்களே வெளிநாடுவாழ் இந்தியருக்கான கல்வி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றனர்.ஈழத் தமிழர்களுக்கு மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என்ற இடஒதுக்கீடு 2010-ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறு இப்போதே முயல வேண்டும்.உயிர் அச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளி மாற்றம், கல்விச் சான்றிதழ்களுடன் பயணிக்க முடியாது. அவர்களிடம் இதனைக் கேட்பது மனிதநேயமும் அல்ல. உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கொண்டு கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம்.

இதற்கான அரசாணை தேவை.ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதி போன்று) தமிழக அரசு தொடங்கி, அரசு நிதி ஒதுக்கியும், புரவலர்களிடம் நிதி திரட்டியும், வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும். பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் பரிசீலிக்க வேண்டும்.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த 31 ஆயிரம் குடும்பங்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் பரிசீலித்து நிறைவேற்றும் பட்சத்தில் நம்மை நம்பி வந்தவர்களை வாழவைத்த பெருமை தமிழகத்துக்குக் கிடைக்கும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பல நூற்றாண்டு கால நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்த்துவிடலாகாது!

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Comments