டிசெம்பர் 26: ஐந்து ஆண்டுகள் கழித்து சிறிலங்காவுக்கு வரும் "அரசியல் சுனாமி"

போர் முடித்து வெற்றிச்சங்கு ஊதிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது அரசியல் இருப்பு இப்படியொரு அதல பாதாளத்திற்குள் இறங்கிவிடும் என்று தான் நம்பிய சோதிடர்கள் ஊடாகக்கூட ஊகித்திருக்க மாட்டார். அவ்வளவுக்கு சிங்கள தேசத்தின் அரசியற்களம் இன்று சகல சக்திகளும் கூடி கும்மியடிக்கும் கூத்துக்களமாகியிருக்கிறது.

விடுதலைப்புலிகளை விட எதிரியாகப் பார்க்க வேண்டிய நிலையில் சரத் பொன்சேகாவும் - கோத்தபாயவை விட நெருக்கமாகப் பார்க்கவேண்டிய நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தனது கட்சி உறுப்பினர்களை விடத் தோழமையாகப் பார்க்கவேண்டிய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்களும் மகிந்தவின் அரசியல் நிரலில் தலைகீழ் மாற்றங்களுக்கான கதாபாத்திரங்களாக அல்லும் பகலும் அச்சமூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச சக்திகளுக்கு எதிரான தனது வெளிப்படையான எதிர்ப்பைக் காண்பித்து வீராப்புடன் போர் நடத்திய மகிந்தவின் நிலை இன்று உள்நாட்டு அரசியல் போருக்கு முகம் கொடுக்க முடியாமல் முடங்கிப்போய்க் கிடக்கிறது. அழையா விருந்தாளியாக பார்த்த இந்தியா இன்று மகிந்தவுக்கு அத்தியாவசியத் தேவையாகியிருக்கிறது. எடுத்தெறிந்து எதிர்த்த மேற்குலகம் இன்று மகிந்தவுக்கு சரணாகதி அடையவேண்டிய சாமியாகியிருக்கிறது. இவையெல்லாவற்றையும் சாதகமாகச் சாதிப்பதற்கு தான் போட்டுடைத்த வெளியுறவுக்கொள்கையை துரிதமாக சீர் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், வரப்போகும் அரச தலைவர் தேர்தல் எவ்வகையான முக்கியத்துவத்தை சிறிலங்காவுக்கும் தமிழர்தரப்புக்கும் ஏன் சர்வதேசத்துக்கும் ஏற்படுத்தியிருக்கிறது என்று நோக்கினால், இது வரலாற்றுத் திருப்புமுனை மிக்க நிகழ்வாக இருக்கப்போவதுதான் உண்மை.MahindaSarath

இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றால் அது சிறிலங்காவை இனிவரும் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினருக்கே பட்டயம் எழுதிக்கொடுக்கப்போகும் தீர்ப்பாக அமையப்போவதும் பொன்சேகா வெற்றிபெற்றால் அது சிறிலங்காவை மேற்குலகுக்கான திறந்தவெளி மைதானமாக மாற்றமடையச்செய்யும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த ஒரு நிலையிலேயே இம்முறை அரச தலைவர் தேர்தல் சிறிலங்காவைப் பொறுத்தவரை முக்கியத்துவமாகிறது.

இந்தவிடயத்தில் ஒவ்வொரு தரப்பினதும் தேவைகளை தனித்தனியாக நோக்கினால் -

1) மகிந்த ராஜபக்ச

மகிந்தவைப் பொறுத்தவரை தனது போர் வெற்றியை இந்தத் தேர்தலில் முழுமையான மூலதனாமாக்கியிருக்கிறார். அத்துடன் எந்த எதிர்ப்பும் இன்றி அரச தலைவராக வரலாம் என்று ஒரு காலத்தில் அவருக்கிருந்த எண்ணம் இப்போது தவிடுபொடியாகி இருப்பினும் தனக்கு இருக்கப்போகின்ற ஒரே எதிர்ப்புசக்தியான பொன்சேகாவை இராணுவச் சக்தியாக தென்னிலங்கைக்கும், தமிழர் அழிப்புக்கு தலைமை தாங்கியவர் என்று தமிழ்மக்களுக்கும் காண்பித்து தேர்தலில் தான் வெற்றியீட்டலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறார். இராணுவ ஆட்சி ஒன்று இந்த நாட்டுக்கு வேண்டுமா என்று மக்களின் சிந்தனை நரம்புகளைச் சுண்டி இழுப்பது போல கேள்வி எழுப்பி தன்னை ஒரு ஜனநாயகவாதியாக நிலைநிறுத்துவதில் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகிறார் மகிந்த.

2) சரத் பொன்சேகா

பொன்சேகாவைப் பொறுத்தவரை நாட்டை ஆளும் வல்லமை தனக்கிருப்பதாக அவர் நினைப்பதை விட, தனக்குக் குழிபறித்த மகிந்த சகோதரர்களைப் பழிவாங்குவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாக இந்த அரச தலைவர் தேர்தலைப் பயன்படுத்துவதற்கே பெரிதும் விரும்புகிறார். அவருக்குள் எரியும் இந்தப் பழிவாங்கும் உணர்வை, மகிந்தவின் போர் வெற்றியால் அரசியல் அஸ்தமனத்திற்குச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியும் பொன்சேகாவைப் போலவே சிங்கள தேசிய வெறிபிடித்த ஜே.வி.பியினரும் கெட்டியாகப் பிடித்து தமது அரசியல் எதிரியாகிய மகிந்தவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு முண்டியடிக்கிறார்கள். போரை வழிநடத்தியவர் என்ற தனித்தகுதியுடன் மட்டுமே அரச தலைவராகிவிட முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள பொன்சேகாவும் தனக்கான தென்னிலங்கை வாக்குவங்கியை குத்தகைக்கு எடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றுடன் பரஸ்பரம் உறவுகொண்டிருக்கிறார்.

3) இந்தியா

சிறிலங்காவின் அரசியல் மாற்றங்கள் தனது விருப்பத்துக்கு ஏற்ப நிகழவேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கும் இந்தியா, இம்முறை அரச தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தில் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்க பிரஜை மற்றும் பாகிஸ்தான் ஆதரவு என்ற - பல்வேறு - தனக்கு வேண்டாத – தகுதிகளைக் கொண்டுள்ள பொன்சேகாவை ஆதரிப்பதில்லை என்ற ஒற்றைக் கொள்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், தனக்கு மசியாத மகிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதிலும் பார்க்க அமெரிக்கா கொண்டுவருவதற்கு விரும்பும் பொன்சேகாவுக்கே தானும் ஆதரவு தெரிவித்தால் -

- தன்னால் கட்டுப்படுத்த முடியாத மகிந்த அரசைத் தூக்கியெறியலாம்.

- இந்து சமூத்திர பிரசன்னங்களில் ஒன்றாக சிறிலங்காவில் ஆழமாகக் காலூன்றிவரும் சீனாவை அமெரிக்காவுடன் சேர்ந்து அகழ்ந்து அகற்றலாம்.

- சீனாவை எதிர்ப்பதற்கு அவசர தேவையாகியுள்ள அமெரிக்காவையும் அனுசரித்துப் போகலாம் - என்பது இந்தியாவின் கணிப்பு.

4) மேற்குலகம்

மேற்குலகத்தைப் பொறுத்தவரை, சிறிலங்கா விடயத்தில் அது நெடுநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்ததற்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமே இம்முறை இடம்பெறப்போகும் இந்த அரச தலைவர் தேர்தல். சீனா தனது நேச நாடுகளுடன் சிங்கள தேசத்தையும் சேர்த்துக் கட்டியெழுப்பும் புதிய கூட்டணியை உடைப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த மேற்குலகுக்கு - சிறிலங்காவில் இம்முறை நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தல் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இதில் சிங்கள தேசத்தின் செல்வாக்கு மிக்க சரத் பொன்சேகா என்ற அமெரிக்கப் பிரஜை போட்டியிடுவது அதன் திட்டத்தை இலகுவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில், மேற்குலக்குச் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் பொன்சேகாவைக் களமிறக்கி வெற்றியீட்டச் செய்வதன் மூலம், சிறிலங்காவிலிருந்து சீனாவின் பிடியை அகற்றி, தனது பிரசன்னத்தை ஆழப்பதிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அழுங்குப்பிடியாக சிறிலங்கா விவகாரத்தை கையிற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்காவுக்கு இதுவரை காலமும் கிடைக்காத - இனிமேலும் கிடைக்க முடியாத அரும்பெரும் சந்தர்ப்பமாக, நடைபெறப்போகும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் அமையப் போகின்றது.

அவ்வாறான ஒரு நிலையில், சீனாவை அப்புறப்படுத்தியதற்கு நன்றிக்கடன்பட்ட இந்தியா தன்னைப் பகைத்துக்கொள்ளாது என்பது மேற்குலகின் மனக்கணக்கு. (இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், மேற்குலகு சார்ப்பு ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் விடுதலைப்புலிகள் சார்ந்துவிட்டால், தனது இருப்புக்கு ஆபத்து என்று மகிந்தவுக்கு ஆதரவளித்து விடுதலைப்புலிகளுடனான போருக்கு ஒட்டுமொத்த உதவியையும் அள்ளிக்கொடுத்து புலிகளையும் முடக்கி மேற்குலகத்தையும் சிறிலங்காவை விட்டு கலைத்த இந்தியா, இன்று பொன்சேகாவின் ஊடாக சிறிலங்காவிற்குள் காலடி எடுத்து வைக்கவுள்ள மேற்குலக்கு ஆராத்திஎடுக்க வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.)mahinda

5) தமிழத்தேசிய கூட்டமைப்பு

இவ்வாறான ஒரு நிலையில், வரப்போகும் அரச தலைவர் தேர்லில் தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்பதே விடை காணப்படாத வினாவாகத் தொடர்கிறது. தாயகத்திலுள்ள தமிழ்மக்களுக்கு சர்வதேசத்தின் ஊடாகவே ஓரு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் காணப்படுவதை மறுக்கமுடியாது. தமிழர்களின் இராணுவ சக்தி பலமாக இருந்தபோதே தமிழ்மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த சிங்கள தேசம், இன்றைய நிலையில் தானாக முன்வந்து தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப்போவதுமில்லை. அதனை வலியுறுத்தும் எந்த சக்திகளையும் சிங்கள தேசத்தில் விட்டுவைக்கப்போவதுமில்லை.

- அப்படியானால், இணைந்த வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள மேற்குலகத்தையும் இந்தியாவையும் சிறிலங்காவினுள் அனுமதித்து அந்தச் சக்திகளின் அழுத்தத்தினால் தமிழர்களது உரிமைகளை தரக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் - உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் அரசியல் சாணக்கியத்துடன் கிடைத்துள்ள சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி - அவை ஆதரிக்கும் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பதா?

- இப்போதுதானே போர் முடிவடைந்திருக்கிறது. அடுத்தடுத்து முன்னெடுக்கப்போகும் அரசியல் முன்னெடுப்புகளில் தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என்று கூறிவரும் மகிந்தவை ஆதரிப்பதா?

- அல்லது, போர் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த சிங்கள அரசியல் தலைமையான மகிந்தவையும் இராணுவத் தலைமையான பொன்சேகாவையும் தமிழனாகப் பிறந்தவன் என்றுமே ஆதரிக்கமுடியாது; அப்படி ஆதரித்தால், அது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் மட்டுமல்லாமல் சிங்கள தேசத்தின் தலைமையை தமிழ்மக்கள் ஆதரிப்பதாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் இழிநிலையாக அமையும்; இவ்வளவு கால ஆயுதப்போராட்டத்தையே அது வலுவிழக்கச்செய்வதாக அமையும்; ஆகவே, அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களது பிரச்சினை குறித்து சிங்கள தலைமையுடன் பேசாமல் சர்வதேச சமூகம் தமிழர் தலைவர் ஒருவருடன் பேசுவதற்கே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என்ற விடயத்தை வெளிக்காட்டும் விதத்தில் தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு தமிழ்மக்கள் ஆதரவளிப்பதா?

தமிழர்களுக்கு புதிராக விரிந்துள்ள புதிய களம் இதுவாகும். இவ்வாறு தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்தாலும் அதன் மூலம் ஆரோக்கியமான தீர்ப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சூழ்நிலை சிறிலங்காவில் உள்ளதா என்பது அடுத்த கேள்வியாகியிருக்கிறது.

1) வடக்கு - கிழக்கு தமிழர்களின் சார்பில் போட்டியிடவுள்ள இந்த தமிழ் வேட்பாளருக்கு வடக்கு - கிழக்கு வாக்காளர்களிடமிருந்து குறைந்தது மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாக கிடைத்தால் மாத்திரமே, அந்த முடிவினை தமிழர் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பாக - சிங்கள தேசத்துடன் பேரம் பேசுவதற்கான பெறுபேறாக - சர்வதேசத்துக்கு தமிழர்களின் பலத்தினையும் விருப்பத்தினையும் எடுத்துக்கூறும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம். அவ்வாறான ஆதரவு தமிழ் வேட்பாளருக்கு கிடைக்காவிட்டால், அது தமிழர் தரப்பின் பலவீனத்தை விளம்பரப்படுத்தி, சிங்கள தேசத்தின் பிரசாரத்துக்கு ஆதரவு சேர்க்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும்.

2) கிழக்கில் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் ஊடாக அங்குள்ள மக்களை மகிந்தவுக்கு ஆதரவாக திசை திருப்பும் நடவடிக்கைகளை மகிந்த தரப்பினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், அங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ் வேட்பாளருக்கு கிடைக்குமா என்பது ஒரு கேள்வி. மறுபுறத்தில், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், கிழக்கிலுள்ள முஸ்லிம் வாக்குகள் தமிழ் வேட்பாளருக்கு கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி.

3) வடக்கிலுள்ள வாக்குளை எடுத்துநோக்கினால், இரகசிய தடுப்புமுகாம்களில் வைத்துள்ள முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வாக்குகள் மகிந்தவை தவிர வேறு வேட்பாளருக்கு கிடைக்க மகிந்த சகோதரர்கள் விடவா போகிறார்கள். இவற்றையிட, யாழ்ப்பாணத்தில் மகிந்த மேற்கொண்டுவரும் தேர்தல் சலுகைகள் மற்றும் தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிவற்றை மீறி தமிழ் வேட்பாளருக்கான வாக்குகள் மிகப்பெரியளவில் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டியுள்ளது.

4) இவ்வாறான நிலையில், தமிழ் வேட்பாளர் ஏகோபித்த வாக்குகளை பெற்றுக்கொள்ளாமல் குறிப்பிட்ட ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டால், அது வடக்கு - கிழக்கிலிருந்து சிங்கள தலைவர்களுக்கு செல்லவேண்டிய வாக்குகளை உடைத்து - 2005 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் இடம்பெற்றது போல - மகிந்தவையே மீண்டும் ஆட்சிக்கு அனுப்பும் காரியமாக அமையலாம். (இதனை எதிர்பார்த்தே தமிழ் வேட்பாளர் ஒருவர் தனித்து போட்டியிடும் தமிழ்க்கூட்டமைப்பின் யோசனைக்கு ஊக்கமளித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனை அடிக்கடி மகிந்த சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது)

இவ்வாறான பல சிக்கல்கள் நிறைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பு இம்முறை அரச தலைவர் தேர்தலில் என்ன நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வது என்ற விடயத்திற்குள் முட்டிமோதி நிற்கிறது. தற்போதைய நிலையில், யாருக்கு ஆதரவு என்ற விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மெளனமாகவே உள்ளது. மகிந்தவும் பொன்சேகாவும் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை தெரிவிக்கப்போவதாக ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதாயின் அதற்கான வேட்புமனுவை எதிர்வரும் டிசெம்பர் 26 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யவேண்டும். இதில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ்மக்களின் அரசியல்வாழ்வுக்கான அச்சாணியாக இருக்கப்போவது உறுதி.

எதிர்வரும் டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் சிறிலங்காவில் பெரும் அழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன. இம்முறை டிசெம்பர் 26 ஆம் திகதி சிறிலங்காவில் தமிழ்மக்களை பொறுத்தவரை அரசியல் சுனாமியை ஏற்படுத்தமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஈழநேசன்

Comments