இம் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில், பிரான்சில் நடைபெற்ற சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், மாற்றுக்கருத்திற்கு 43 வாக்குகள் விழுந்துள்ளன.
99 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக, ‘ஆம்' என்கிற ஒற்றைச் சொல்லால் நிரம்பி வழிந்தது. ஏறத்தாழ 32,000 மக்கள் இவ்வாக்களிப்பில் கலந்துகொண்டாலும், அஞ்சல் மூலம் பெறப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி, முடிவடையவில்லையென்று ஊடகச் சந்திப்பில் கூறப்பட்டது. 32 வருடங்கள் கடந்து சென்றாலும் தாயகக் கனவினை, மக்கள் கைவிடவில்லையென்று, மறுபடியும் உரத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகிற்கு, மக்கள் சொன்ன மாவீரர் தினச் செய்தி இதுதான்.
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள், ஜனநாயக முறைமையூடாக பதிவு செய்த இச்செய்தி, ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழீழ மக்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும். வருகிற 19ம் திகதியன்று, புலம்பெயர் ஈழமக்கள் அதிகமாக வாழும் கனடா தேசத்திலும், தமிழீழத் தனியரசிற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. உலகின் அரங்கில், இவ்வகையான, மக்களின் அரசியல் நலன் சார்ந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கள் புதியவையல்ல. மக்களின் விருப்பிற்கு மாறாக, உலக ஒழுங்கினைப் பேணுவதாகக் கூறும் வல்லரசாளர்கள், திணிக்கும் தீர்வுகள், அம் மக்களால் நிராகரிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். அண்மையில் ஸ்பெயினிலும் இதுபோன்றதொரு வாக்கெடுப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்குத் தீமோரில் நடந்த பிரிவினைக்கான வாக்கெடுப்பினை அவுஸ்திரேலியா முன்னின்று நடாத்திய அதிசயமும் நிகழ்ந்தது. 13வது திருத்தச் சட்டம் என்கிற கானல் நீரை, தாயக பூமியின் முற்றங்களுக்கு அழைத்துவரப்போவதாக ஐரோப்பிய ஒன்றியமும் கூறுகிறது. இந்தியாவும் வழிமொழிகிறது. மகிந்த அரசின் மூவர்களை, புதுடெல்லிக்கு அழைத்த இந்தியா, தேர்தல் முடிந்தவுடன் 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென, கையில் அடித்துச் சத்தியம் செய்யச்சொன்னதாகத் தகவல். தமிழின அழிப்பின் சூத்திரதாரி இந்தியாவிற்கு, தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்ததுயாரென்று தெரியவில்லை. கொத்துக் குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட இரசாயன வாயுகக்கும் எறிகணைகளையும் ஏவி, வன்னி மக்களைக் கொன்று குவிக்க, பின்னால் நின்று சிங்களத்தை உசுப்பேற்றி விட்டவர்கள் யாரென்று தமிழ் மக்களுக்குத் தெரியும்.
இன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக ஜனநாயகக் குரலெழுப்பும் பிராந்தியக் காவலர்கள், மக்களின் அரசியல் நலன் குறித்து கரிசனை கொள்வதுபோல் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். அரசியல் தீர்வினை விட, மகிந்தர் மறுபடியும் ஆட்சிப்பீடமேறவேண்டும் என்பதிலேயே இந்தியாவின் ஆர்வம் அதிகமாகவுள்ளது. அத்தோடு சம்பூரில் அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டுவதிலும், மன்னார் கடல்பரப்பில் எண்ணெய் இருக்கிறதாவென்கிற தோண்டல் முயற்சிகளிலுமே காந்தி தேசம் மும்முரமாக ஈடுபடுகின்றது. எதிர்வரும் சனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டவுடன், இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவை நோக்கியே பயணிக்கின்றனர். சீனாவிற்கு எந்த அரசியல் வாதிகளும் செல்லவில்லை. இதேவேளை அமெரிக்க செனட் சபையின் விசேட குழுவொன்றும் இலங்கை குறித்த தமது பார்வையை வெளிப்படுத்தியுள்ளது.
ஆகவே அதிபர் தேர்தலில் இரண்டு பெரும் குதிரைகள் ஓடும் போட்டியில், இரண்டு வல்லரசாளர்கள் பின்புலத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இனமுரண் நிலைத் தீர்விற்கான அரசியற் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென இந்த இரு வேட்பாளர்களிடமும் எந்த வல்லரசும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. பூர்வீக தமிழ்தேசிய இனத்தின் அடையாளங்கள், பேரினவாதத்தால் அழிக்கப்படுவது குறித்து இந்தியாவிற்கும் கவலையில்லை. வாய்மூல மரணச் சான்றிதழ்களை பெற்றவுடன், இராஜீவ் காந்தியின் விவகாரமும் முற்றுப்பெறுகிறது. ஆனாலும் இறுதிப் போரில் நடந்தேறிய கொடூரங்களுக்கு துணைநின்று, சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிங்களத்தை காப்பாற்றியதாக கருதப்படும் இந்தியா, தமிழ் மக்களுக்கு பதிலளிக்கும் நாள் விரைவில் வருமென்பதே பலரின் எதிர்பார்ப்பு.
மூடி மறைக்கப்பட்ட உண்மைகள், கசிய ஆரம்பித்துள்ளது. பொட்டல் வெளிகளில் பல தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை, கைத்தொலைபேசியில் பதிவுசெய்து, சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளி, சோடிக்கப்படாத உண்மை என்பதனை அமெரிக்க அறிவியல் நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சரத் பொன்சேக்காவிற்கும் மகிந்தருக்குமிடையே நடைபெறும் அதிகார மையம் நோக்கிய மோதலில், இன்னமும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருமென்று எதிர்பார்க்கலாம். வெற்றிச் செய்தி கேட்டு வெடி கொளுத்திய சிங்கள மக்கள், சரத் - மகிந்தர் வீசும் பரஸ்பர சேறடிப்புக்களினால் குழம்பிப் போயுள்ளனர். ஆனாலும் யாரை ஆட்சியில் அமர்த்துவதென்பதில் குறியாகவிருக்கும் இரண்டு வல்லரசுகளும், மிகச் சாதுரியமாக தமது காய்களை நகர்த்துகின்றன.
சமபலத்தோடு அதிபர் மோதல் நடைபெறுவதால், தமிழ் மக்களின் வாக்குகளை எவ்வாறு தமக்குச் சார்பானவர் பக்கம் திருப்புவது என்பதில் அமெரிக்காவைவிட இந்தியாவிற்கே அதிக கவலை சூழ்ந்துள்ளது போல் தெரிகிறது. இந்நிலையில், இந்த இருவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை, உலகிற்கு எடுத்துக்கூற, தானும் சனாதிபதித் தேர்தல் களத்தில் குதிப்பதாக ரெலோ எம்பி. சிவாஜிலிங்கம் கூறுகின்றார். இதில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கும் இவ்வேளையில், அக் கூட்டை உடைத்து, வெளியில் வந்து, சுயேட்சையாக சிவாஜிலிங்கம் தேர்தலில் இறங்கியிருப்பதன் பின்புலம் எதுவாகவிருக்கும்?மகிந்தவும், தமிழ் இராணுவக் குழுக்களும், இந்தியாவுமே, விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்கிற கருத்துநிலையில் மிக நெருக்கமாக உறவு கொண்டவர்கள்.
ஆகவே எந்தக் கூட்டு தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதில், தெளிவான பார்வையன்று தமிழ் மக்களுக்கு வேண்டும். இவைதவிர,ரணிலும் சரத் பொன்சேக்காவுமே தமிழ் மக்களின் முதன்மையான எதிரிகளென்று பிரகடனம் செய்யும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், மகிந்த சகோதரர்களின் கூட்டு இனப்படுகொலை நிகழ்த்திய தலைமைத்துவத்தை, இதில் உள்ளடக்காமல் தவிர்த்துள்ளார். ஆகவே, இந்திய ஆட்சிப்பீடத்தின் நலனிற்கு ஏற்றவகையில், அதன் அதிகாரத்திற்கு முண்டு கொடுப்பவர்கள், தற்போதைய சிங்கள ஆட்சியாளர்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் தனியரசிற்கான மீள் வாக்கெடுப்பு கருத்துக் கணிப்பினை, தமிழ் நாட்டிலுள்ள ஈழ அகதி முகாம்களில் நடாத்தினால் மிகப் பொருத்தமாகவிருக்கு மென்பதை இவர்கள் குறித்துக்கொள்ளவேண்டும்.
ஆனாலும் அதனை இந்திய மத்திய அரசு தடுத்துவிடுமென்பது இவர்களுக்கு புரியாத விடயமல்ல. அதேவேளை பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலைக்கெதிரான மாணவர் அமைப்பானது, இலண்டனிலுள்ள குயின்ஸ் மேரி பல்கலைக்கழக மாணவர் மத்தியில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா? இல்லையா? என்பது குறித்த வாக்கெடுப்பொன்றை நடாத்திட முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு, பிரித்தானியாவிலுள்ள ஏனைய பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களிலும் நடாத்த உத்தேசித்திருப்பதாக அம் மாணவர் அமைப்பு தெரிவிக்கின்றது. இத்தகைய காத்திரமான முயற்சியினை, புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் நடாத்துவது பொருத்தமாக அமையும். ஆகவே பரந்துபட்ட மக்கள் மத்தியில், சிங்கள பேரினவாத கொடுங்கோலாட்சியை அம்பலப்படுத்தும் இத்தகைய பரப்புரைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை சகல தமிழ் மக்களும் வரவேற்பார்கள்.
-இதயச்சந்திரன்
நன்றி:ஈழமுரசு
Comments