அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் சிறீலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடை புறக்கணிப்புப் போராட்டம் தமிழர்களால் நடத்தப்பட்டது. நியூயார்க், வாஷிங்டன் டி.சி., அட்லாண்டா, மியாமி, சான்பிரான்சிஸ்கோ, டலஸ், போஸ்டன் ஆகிய முதன்மையான நகரங்களில் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான Victoria's Secret மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சிறிய அளவில் சில மாதங்களிற்கு முன்பு ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல் அவையின் [United States Tamil Political Action Committee - USTPAC] "இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு" [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகின்றது.
எங்களது கோரிக்கை தெளிவானது. இந்தக் கடைகளிற்குச் சென்று உடைகள் எதனையுமே வாங்க வேண்டாம் என நாங்கள் வாடிக்கையாளர்களைக் கோரவில்லை; தயாரிப்பு நாட்டுப் பட்டியைப் பாருங்கள். "Made in Sri Lanka" என்று இருந்தால் உடனேயே கீழே வைத்து விடுங்கள்' எனக் கோருகின்றோம்" எனப் போராட்ட ஒழுங்கமைப்பாளர்களுள் ஒருவரான சிவா நாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிய அளவில் செய்யப்படும் இந்தப் போராட்டங்களால் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காது என்று சொல்லப்படும் கருத்தை அவர் மறுத்தார். சிறீலங்கா அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு பார்க்கின்றோம்.
பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும். சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் ஊடாக அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்குச் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் சாதாரண குடி மகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது" என தெரிவித்துள்ளார் சிவாநாதன்.
Comments