சிங்களவரின் விருப்பத்திற்கு மாறான ஒருவரை அரச அதிபர் ஆக்க தமிழர்களுக்கு வாய்ப்பு


சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு?... பேய்க்கா?... பிசாசுக்கா?... பின்னாலே இருக்கும் பூதங்களுக்கா...?
தமிழர்களின் வாக்குகள் இரண்டாம் சுற்றில் சேர்க்கப்படும் போது, தமிழர்கள் தமது இரண்டாவது விருப்புரிமை வாக்கை பிசாசுக்கு அளித்திருந்தால் - ஆகக் குறைந்தது 9 வீதமான வாக்குகளை பிசாசின் வாக்குடன் கூட்டினால் - சிங்கள வாக்காளரின் முதலாவது கூடிய வாக்கைப் பெற்ற பேயை வீழ்த்திவிட்டு, இரண்டாவது கூடிய வாக்குகளைப் பெற்ற பிசாசு வென்றுவிடும்.

இதன் மூலம் - சிங்களவரின் விருப்பத்திற்கு மாறான ஒருவரை சிறிலங்காவின் அரச அதிபர் ஆக்கக் கூடிய வாய்ப்பு தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் முறையில் உண்டு.


தமிழர் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதா...? அல்லது தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்துவதா...? அத்தோடு - முதலாவது வாக்கைத் தமது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை பேய்க்கோ அல்லது பிசாசுக்கோ அளிப்பதா...?

சிறிலங்கா அரச அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பது பற்றி ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

சிறிலங்காவின் அரச அதிபருக்கான தேர்தல் முறையில் ஒரு விசாலமான பரப்புண்டு.

இரு பெரும் சிங்கள வேட்பாளர்களுமே இனவாதிகள் என்ற வகையில் இருவருக்கும் இடையிலான வேறுபாடு பேய்க்கும் பிசாசுக்கும் இடையிலான வேறுபாடு தான்.

இந்த முறை நிகழவுள்ள தேர்தலில் தமிழர்களின் வாக்குகள், அதிபர் ஆகப்போவது எவர் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய நிர்ணயகரமான வாக்குக்களாய் உள்ளன.

இந்த நிலையில் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முறையில் காணப்படும் வாய்ப்பான அம்சங்கள் எவையென விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முறையின் கீழ் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறும் ஒருவரே அரச அதிபர் ஆக முடியும்.

எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளரும் பெற வேண்டிய 50வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாத நிலைமை ஏற்பட்டால் முன்னிலையில் இருக்கும் இரு போட்டியாளர் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்கள் பெற்ற வாக்குச்சீட்டில் அளிக்கப்பட்ட இரண்டாவது விருப்புரிமை வாக்குகள் கணக்கிலெடுக்கப்படும்.

தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்கும் நிலையிலோ அல்லது அவர்களது வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் நிலையிலோ - போட்டியிலிருக்கும் பேய் அல்லது பிசாசு மிக இலகுவாக 50வீத எல்லையினைத் தாண்டிவிட வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு.

அதில் கூடிய வாக்குகளைப் பெற்றிருக்கும் ஒருவர் முதல் சுற்றில் அரச அதிபர் ஆகி விடுவார்.

இத்தகைய நிலைமையில் - தமிழர்கள் தங்கள் வாக்குகளினைத் திட்டமிட்டு மூலோபாயத்துடன் பயன்படுத்தினால் பல நல்ல விளைவுகளினைத் தமக்குச் சார்பாக ஏற்படுத்த முடியும்.

தமிழர்கள் தமக்கென ஒரு பிரதிநிதியை நிறுத்தி தங்களது வாக்குகளினை ஒருங்கிணைந்த முறையில் அவருக்கு அளித்தால் சிங்கள வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்கைப் பெறாது முதற் சுற்றில் தோல்வி அடைந்துவிடுவர்.

தமிழர்கள் தமது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை மட்டும் அளித்திருந்து இரண்டாவது விருப்புரிமை வாக்கினைப் பயன்படுத்தாமல் விட்டால் - அவர்களின் வாக்குகள் இரண்டாவது சுற்று எண்ணிக்கையின் போது செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டுவிடும்.


அந்த நிலையில் - அளிக்கப்பட்டுள்ள மிகுதி வாக்குகளில் இரண்டாவது விருப்புரிமை எண்ணப்பட்டு - 50 வீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அரச அதிபர் ஆவார்.

சிங்களவர்களை 77வீத மக்கள் தொகையாகக் கொண்ட சிறிலங்காவின் தேர்தல் முறையில் - முதலாவது, இரண்டாவது என பல வாக்குகளை அளிக்க கூடிய ஏற்பாடு அரசியல் யாப்பில் உள்ளதால் - தமிழர்கள் தமது இரண்டாவது வாக்கை என்ன செய்வதெனத் தீர்மானிக்க இடமுண்டு.

இரு பெரும் சிங்கள இனவாத வேட்பாளர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தமது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் இனவாதத்திற்கு எதிரான தமது எதிர்ப்பைத் தெளிவாகப் பதிவு செய்யலாம். அதே வேளை - தமது பலத்தையும் ஐக்கியத்தையும் உலகிற்கு நிரூபிக்கலாம்.

தேர்தலைத் தமிழர் புறக்கணித்தால் - தமிழர் வாக்குகளை இனவாதிகள் தமது தேவைக்கு ஏற்றவாறு சூறையாடி விடுவார்கள்.


தேர்தலில் பங்கேற்று, தமது சார்பில் ஒருவரைப் போட்டிக்கு நிறுத்தி, முதலாவது வாக்கை அவருக்கு அளித்துவிட்டு - பேய்க்கும் பிசாசுக்கும் இடையில் யாரையாவது ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழர் கருதினால் - தமது இரண்டாவது வாக்கை பேய்க்கோ அல்லது பிசாசுக்கோ அளிப்பதன் மூலம் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது தாம் விரும்பிய ஒருவரை அதிபராக ஆக்கிவிட முடியும்.

ஒரு பேச்சுக்கு, முதலாவது சுற்றில் பேய் 45 வீதமான வாக்குகளையும், பிசாசு 42 வீதமான வாக்குகளையும் பெறுவதாக வைத்துக் கொள்வோம்; அப்படி வரும் போது இருவரும் தோல்வி அடைந்துவிடுவர்.

அதே வேளை - தமிழர்களின் வாக்குகள் இரண்டாம் சுற்றில் சேர்க்கப்படும் போது, தமிழர்கள் தமது இரண்டாவது விருப்புரிமை வாக்கை பிசாசுக்கு அளித்திருந்தால் - ஆகக் குறைந்தது 9 வீதமான வாக்குகளை பிசாசின் வாக்குடன் கூட்டினால் - சிங்கள வாக்காளரின் முதலாவது கூடிய வாக்கைப் பெற்ற பேயை வீழ்த்திவிட்டு, இரண்டாவது கூடிய வாக்குகளைப் பெற்ற பிசாசு வென்றுவிடும்.

இதன் மூலம் - சிங்களவரின் விருப்பத்திற்கு மாறான ஒருவரை சிறிலங்காவின் அரச அதிபர் ஆக்கக் கூடிய வாய்ப்பு தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் முறையில் உண்டு.


எனவே - தமிழர் தேர்தலைப் புறக்கணிப்பதா?... தமிழர் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா?... அப்படி ஒரு பொது வேட்பாளரைத் தமிழர் நிறுத்தினால் முதலாவது வாக்கை மட்டும் அளிப்பதா?... அல்லது, இரண்டாவது வாக்கையும் அளித்து தமது விருப்பத்திற்கு பொருத்தமான பேய் அல்லது பிசாசை அரச அதிபர் ஆக்குவதா?... என்ற கேள்விகளுக்குத் தமிழர் விரைந்து பதில் காண வேண்டும்.

முன்னணிப் போட்டியில் இருக்கும் இரண்டு சிங்கள வேட்பாளர்களுக்கு இடையே ஒருவரைத் தந்திரோபாய ரீதியில் தெரிவு செய்யவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தின் போது யாரைத் தோற்கடிப்பது என்பதுவே தமிழ் மக்களின் தீர்மானமாக இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் - தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து பேயைத் தோற்கடிப்பதற்காக பிசாசுக்கு வாக்களிக்க வெளிப்படையாக முடிவெடுத்தால், சிங்களவர்கள் எல்லோரும் சேர்ந்து பேய்க்கு வாக்களித்து பேயை வெல்ல வைக்கக்கூடிய ஆபத்தும் உண்டு; அதனையும் கருத்தில் எடுக்க வேண்டும்.

தற்போது போட்டியின் முன்னணியில் இருக்கும் இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு சார்பாக எதனையும் செய்வார்கள் என்று மனக் கோட்டை கட்ட முடியாது.

தங்கள் மீது பாரிய இனப்படுகொலை யுத்தத்தினை நிகழ்த்திய முதன்மைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அனைத்துலக சமூகத்தின் முன் கோரிக்கை வைப்பதற்கு முன்பு - தண்டனை வழங்கத் தமக்குக் கிடைத்த வாய்ப்பினைத் தமிழர்கள் பயன்படுத்தி குற்றவாளியினைத் தண்டிக்க வேண்டும்.

அதே வேளை - பேயோ? அல்லது பிசாசோ? என்று தேர்வு செய்யும் போது - அவற்றுக்குப் பின்னாலே இருக்கின்ற பூதங்களையும் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பேயையும் பிசாசையும் விடவும் அந்தப் பூதங்கள் தான் எல்லா வல்லமையும் மிக்கவை; ஆபத்தானவை.

அந்தப் பூதங்களின் நலன்களையும் கருத்தில் எடுத்து, தமது நலன்களையும் கருத்தில் எடுத்து - எந்தப் பூதத்தைப் பகைத்துக்கொண்டால் தமக்கு நல்லது, எந்தப் பூதத்தோடு நட்புக் கொண்டால் தமக்குக் கெட்டது என்பதையும் தமிழர்கள் கணக்கிட வேண்டும்.

ஆனால் - எதைச் செய்வதானாலும் மிக முக்கியமானது என்னவெனில் - தமிழர்களிடத்தில் ஒற்றுமை வேண்டும்.

இந்தத் தடவையாவது, திரும்பவும் சொல்லுகிறோம், இந்தத் தடவையாவது, எங்களுக்குள் ஐக்கியம் வேண்டும்; இணக்கப்பாடு வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாமல் போய்விட்ட நிலையில் - இனியும் புலிகளைச் சாட்டிக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துக்கெண்டு இருக்காமல் - ஒற்றுமை பேண வேண்டும்.

ஏனென்றால் - இந்தத் தேர்தல், தெளிவாக - மிகத் தெளிவாக - தமிழ் மக்களின் நலன் மட்டுமே சார்ந்தது; விடுதலைப் புலிகளின் பங்கு அல்லது தாக்கம் இதில் இருக்கப் போவதேயில்லை.

என்ன முடிவு எடுத்தாலும் - அதை ஒன்றாய்ச் சேர்ந்து எடுத்து - தமிழ் கட்சிகள் எல்லாமும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் - அந்த முடிவோடு ஒன்றித்து நிற்க வேண்டும்.

இந்தத் தடவை ஒற்றுமையாகச் செயற்படவில்லை என்றால் - இனி எந்தத் தடவையும் தமிழர்கள் எதையும் சாதிக்க முடியாது.

இதுவரை நடந்துகொண்ட முறைகளுக்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம்; ஆனால், இந்தத் தடவை ஒற்றுமையாக இருக்க மறுப்பவர்கள் - கேள்விக்கிடமற்ற வகையில் மக்கள் பணிக்கு அருகதை அற்றவர்களே தான்.

(குறிப்பு: தமிழர்கள் என நாம் இங்கு குறிப்பிடுவது - தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள இஸ்லாமிய, கத்தோலிக்க, இந்து மற்றும் வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களையேயாகும்.)

- புதினப்பார்வை, டிசம்பர் 4, 2009-

Comments