சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை.
பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இனி கொண்டுவரப்படுகின்றது. அதாவது அந்த அறிக்கையில் இலங்கையினை நாம் இழக்க முடியாது என்ற தலைப்பில் இந்த உள்ளார்ந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
இதன்படி சிங்கள மக்களுக்கு பாரிய பொருளாதார திட்டங்களை கொடுத்து அவர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபங்களை கழுவி அதனூடாக தமது திட்டங்களுக்கு ஆதரவு தேடும் முயற்சியினையே செய்யவேண்டும் என தெளிவாக கூறப்படுகின்றது.
சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் இதனையே இலங்கைக்கு செய்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வந்துள்ளது என்பதே கொள்கை வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்கு பற்றியோ அன்றி தமிழ் மக்கள் பற்றியோ தாம் விசேடமாக எதுவும் செய்ய தேவை இல்லை என்பதே அமெரிக்க நிர்வாகத்தின் புதிய கொள்கை.பேசுவதற்கு எதுவும் இல்லை, போர் முடிந்து விட்டது, தலையிடி குறைந்து விட்டது, இனி வடக்கு கிழக்கில் யாரும் தலை எடுக்க போவதும் இல்லை தலையிடி தரப்போவதும் இல்லை,
இருக்கின்ற விசுக்கோத்துக்களை எப்படியாவது ஜன நாயகம், மனித உரிமை என்று ஏமாற்றிவிடலாம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின் அடுத்த கட்ட திட்டம் இடம்பெற போகின்றது. எங்கட விசுக்கோத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்பவும் மேற்குலகை உள்வாங்க வேணும் என்றால் அவர்கள் பாணியில் போகவேணும் என்று சொல்லிக்கொண்டும், புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றும் கூறி திரிகின்றனர். இந்தா பாருங்க செய்து காட்டுறம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் புறப்பட்டு விட்டனர். இவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் மேற்குலகம் அயல் நாடுகள் தமது நோக்கத்தை தான் முன் நிறுத்துவார்கள் ஆனால் அதற்குள் எமக்கு என்ன எடுக்கலாம் என பார்க்கவேண்டும் அதுதான் அரசியல் என்றும் இராசதந்திரம் என்றும் கூறுகின்றார்கள்.
எடுத்துக்காட்டாக தேன் எடுப்பவன் எடுத்துக்கொண்டு போக சிந்துவதனை நாங்கள் நக்கலாம் என செய்தும் காட்டுகின்றார்கள். பிரச்சினை என்ன வென்றால் சிந்துவதனை நாங்கள் எமது மக்களுக்காக நக்குவதற்கும் கூட ஏதோ ஒரு வகையில் எமக்கு பலமும் அல்லது அழுத்தம் கொடுக்கும் சக்தியும் இருக்கவேண்டும். இது ஜன நாயக ரீதியாக சாத்தியமா?
தற்போதுள்ள ஜன நாயக கட்டமைப்பின் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என கூறும் தமிழ் தலைவர்கள் உள்ளுக்குள் இது சாத்தியம் இல்லை என ஏற்றுக்கொண்டுள்ளனர். தனிப்பட்ட ரீதியில் கதைக்கும் போது சரியாக கதைப்பவர்கள் மக்கள் முன் சொல்லும் போது வெறுமாதிரி சொல்கின்றனர்.
ஆகவே எமது பிரதி நிதிகளும் கூட மேற்குலகம் மாதிரியே தமிழ் மக்களை அணுகுகின்றார்களா?
ஜன நாயக பாதை எமது செயற்பாடுகளை தற்போது பாதுகாப்பதற்காக, எம்மை பாதுகாப்பதற்காக, எம்மை சர்வதேசம் அணுகுவதற்காக என்று கூறும் இந்த புதிய அமைப்புக்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் உண்மையாக எம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எமக்கான சுதந்திரத்தை பெற அல்லது எம்மை முற்று முழுதாக இன அழிவில் இருந்து பாதுகாக்க வைத்திருக்கும் பொறிமுறை என்ன?
பலம் என்ன?
விடுதலைப்புலிகளே அந்த பொறியும் பலமுமாக இவ்வளவு காலம் வரை இருந்தார்கள் அதற்கு பின்னடைவு வந்தவுடன் இருப்பவர்களையும் பிய்த்தெடுத்து, பாடைகட்டி அனுப்புவதில் எம்மவர்களிடையே எவ்வளவு போட்டி?
விடுதலைப்போரில் ஆயுத ரீதியான போராட்டத்தில் பின்னடைவு வந்தவுடன் அந்த கொள்கையே தவறு என கூறுபவர்கள் தங்கள் கொள்கையினை தெளிவாக விளக்கி எப்படி உரிமைகளை பெறமுடியும் என கேட்டால் விடை??
அவர்கள் சொல்ல வருவது காலவோட்டத்தில் ஒரு நாள் அது சாத்தியமாகும் என்கிறார்கள். இங்கு நாம் ஜன நாயக கட்டமைப்புக்களை புறக்கணிப்பது என்று கூறவில்லை ஆனால் உலகத்தில் ஜன நாயகத்தை பாதுகாப்பதற்கு எந்தவொரு நாடோ அல்லது நாடு சாரா அமைப்புக்களோ ஆயுத ரீதியாக எவ்வளவோ பலத்தினை வைத்துக்கொண்டுதான் , எவ்வளவோ உயிர்பலிகளை கொடுத்துதான் அதனை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேற்குலகமும் சரி, ஆசிய நாடுகளும் சரி தினம் தினம் உயிர்பலிகளை கொடுத்தே தமது ஜன நாயகம் என்ற சொல்லை பாதுகாத்து கொண்டு வருகின்றார்கள். இந்த உண்மையினை அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஏற்று கொள்ள மறுப்பது ஏன்?
அதற்காக மேலும் தமிழர்கள் உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்பது இங்கு வாதம் அல்லசிங்கள தேசம் இன்று எதனையுமே தர மறுப்பதற்கு காரணம் என்ன?
எமது இராணுவ பலம் இல்லாது போனது என்பதனை ஏன் உள்ளுக்குள்ளே ஒத்துக்கொண்டும் வெளிப்படையாக சடைந்தும் பேசி வருகின்றீர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி சன நாயகத்தினை கட்டி எழுப்பி எதையாவது செய்யுங்கள் அதே நேரம் எல்லாவற்றுக்கும் அடிப்படையான தமிழர்களது சமூக, பொருளாதார, படை பலத்தினை கட்டி காக்கும் தந்திரோபாயத்தினையும் மறக்காதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை, வழுக்களை திருத்தி மீழ ஒழுங்கமைத்து, எப்படி அதனை செய்யலாம் எனவும் சிந்திக்க வேண்டும்.
ஆக குறைந்தது எமக்கு நியாய பூர்வமாக எதுவும் கிடைக்காது போனால் எமது உரிமைக்காகவும் எம்மை ஒடுக்கிவரும் சிங்கள தலைமைக்கு நாமே தண்டனை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்ற செய்தியினையாவது சொல்வதற்கு தமிழர்கள் தயாராக இருக்கவேண்டும். எல்லோரும் சன நாயகம் ,இராச தந்திரம் என்று மேற்குலகத்தின் (இனிப்பு) பாணிக்குள் போகாது அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்டி, தமிழர்களை ஏமாற்ற முடியாது என்றும் எமாற்ற நினைப்பவர்களை யாராக இருந்தாலும் தெட்ட தெளிவாக எதிர்த்து குரல் கொடுக்க கூடியவர்கள் எதிர்த்து நிற்க கூடியவர்கள் எப்போதும் இருக்கவேண்டும் அவர்களை பாதுகாக்க வேண்டும் அதனை சன நாயக அமைப்புக்களும் அதனை நிறுவ போகின்றவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆசிரியர்-தலையங்கம்
நன்றி:ஈழநாதம்
Comments