மாவீரர்தின உறுதிமொழியை வாக்கெடுப்பில் பதிவு செய்வோம்


பிரான்சு தேசத்தில், சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தேசத்திற்கான ஜனநாயக வாக்கெடுப்பு, நடைபெறவுள்ளது. ஏற்கனவே, நோர்வேயில் நடைபெற்ற இக் கருத்துக் கணிப்பில், 99 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முள்ளிவாய்க்காலோடு, புலம்பெயர் மக்கள் வாழும் தேசங்களிற்கு இப் போராட்டம் நகர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஒரு நிரந்தரத் தீர்விற்கான அடிப்படைக் கோட்பாடு எதுவென்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தொன்று இருக்க முடியாது.

மாற்றுச் சிந்தனைகள் ஆயிரம் இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியான முடிவாகக் கொள்ளப்படுவது, மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகக் கருதப்படும். 33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம்தாங்கிய போராட்டம், மே 18 உடன், சர்வதேச வல்லரசாளர்களின் பேராதரவுகொண்டு முடக்கப்பட்ட நிலையில், இறைமையுள்ள தேசிய இனமொன்றின் பூரண சுயநிர்ணய பிறப்புரிமையை, மீளவும் வலியுறுத்துவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதைத் தவறென்றும், சமகால அரசியலிற்குத் தேவையற்ற விடயமென்றும் சொல்லப்படும் வியாக்கியானங்கள், மக்கள் கருத்தினை நிராகரிக்க முயலும் ஜனநாயக மறுப்பாகக் கருத இடமுண்டு. 1976 வட்டுக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, மீள் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லையென்று வாதிடுவோர், ஏதோவொரு வகையில், பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும், பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் காய் நகர்த்தல்களிற்கும் இசைவான போக்கினை நோக்கிப் பயணிக்கும், ஆபத்தான பாதையை தெரிவுசெய்ய வேண்டுமென்கிற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

"தமிழீழம்" இறுதித்தீர்வல்லவென்று மக்கள் முடிவெடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளும் அரசியல் பக்குவமும், ஜனநாயகப் பண்பும் இவர்களுக்கு இருக்க வேண்டும். இவைதவிர, சுதந்திர இறைமையுள்ள தமிழீழத் தனியரசே, இறுதியான தீர்வென்பதை மக்கள் தீர்மானித்தால், அந்த மக்களாணையின் அடிப்படையில், தமது போராட்டங்களை முன்னெடுக்கப்படவேண்டிய கடப்பாடு இவர்களுக்கு உண்டு.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும், இத்தேசிய விடுதலைப் போராட்டமானது, மக்கள் ஆணையின் இறுக்கமான அரசியல் கோட்பாட்டிலிருந்து நகர்த்தப்படுவதனை, தவறான அரசியலென்று கணிப்பிடமுடியாது. மே 18க்குப் பின்னர், போராட்டவடிவங்களில் மாற்றமும், பின்னடைவுகளும் ஏற்பட்டாலும், அனைத்துலக வல்லரசாளர்களின் நலனும், அவர்களுக்கிடையே உருவாகிவரும் முரண்பாடுகளும் மாறுதலடையவில்லை.

இலங்கை குறித்த தனது பார்வையில், புதிய இராஜதந்திர அணுகுமுறைகளையும், மென்போக்கு நகர்வுகளையும் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா கூறுகிறது. இரணில் களமிறங்கியுள்ள சரத்பொன்சேக்கா அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவின் இப் புதியபோக்கு உறுதிப்படுத்தப்படும். அத்தோடு இந்துசமுத்திரக் கடற்பிராந்திய பாதுகாப்பு குறித்து, இந்திய அரசறிவியலாளர்கள் கூட்டிய அண்மைய மாநாட்டு ஒன்று கூடலிலும், இலங்கையின் அரசியல் நிலவரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை, வெளிப்படையான அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபடாமல், இலங்கையில் தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளதையும் அவதானிக்கலாம். ஆனாலும் இம்மூன்று வல்லரசாளர்களுக்கும், தமிழ் மக்களிற்கான நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு குறித்து, கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் ஐம்பதிற்கு ஐம்பது என்கிற கோரிக்கையிலிருந்து, ஒஸ்லோவரை முன் வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை சிங்களமோ, சர்வதேசமோ கருத்தில் கொள்ளவில்லையென்பதே உண்மைநிலையாகும்.

ஆகவே மக்களுக்கு எது தேவையென்பதை, மறுபடியும் உரத்துச்சொல்ல வேண்டிய காலநிர்ப்பந்தம், எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. சமஸ்டி, தனியரசுத் தீர்மானமாகி, திரும்பவும் சமஸ்டியாகும் போக்கினையே இலங்கை அரசியலில் காணக்கூடியதாகவிருக்கிறது. ஆனாலும் சிங்களத்தின் பேரினவாதச் சிந்தனையில் சிறிதளவு மாற்றமும் நிகழவில்லை. அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், மக்கள் மீதான இன ஒடுக்குமுறைகளும், நீடித்த வண்ணமுள்ளன.

முழு இலங்கையும் சிங்கள தேசிய இறையாண்மைக்குள் உட்பட்ட விடயமென்பதில், பேரினவாதம் மிக உறுதியாகவிருக்கிறது. தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால், தமிழ் தேசியத்தின் இறைமையை அங்கீகரித்தது போலாகிவிடுமென்பதே சிங்களப் பேரினவாதத்தின் கணிப்பு. இதில் எதிர்ப்பரசியல் என்பதற்குமப்பால், பூரண சுயநிர்ணய உரிமை சார்ந்த அரசியல் நலனை, எதுவித சமரசத்திற்கும் உட்படுத்தாமல், நகர்த்திச் செல்வதிலேயே தமிழ்பேசும் மக்களின் அரசியல் பலம் நிலைநிறுத்தப்படும்.

கடந்த ஞாயிறு அன்று இலண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்க செயற்பாட்டாளர்கள் நடாத்திய ஒன்றுகூடலில், அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழமே தமது இறுதி இலட்சியம் என்பதை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். ஆகவே அதற்கான மக்கள் ஆணையைப் பெறுவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாடு கடந்து வாழும் ஈழத் தமிழ்மக்கள் வழங்கும் ஆணையிலிருந்தே, இவ்வமைப்புக்கள் தமது போராட்ட முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும். "நாடு கடந்த தமிழீழ அரசு" என்கிற அரசியல் போராட்ட வடிவம் உருவாக முன்பாக, இதே பிரான்சு தேசத்தில், சங்கங்களும். அமைப்புக்களும் இணைந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பொன்றை நடாத்தியது. அதில் முழுமையான மக்களின் பங்களிப்பு உள்வாங்கப்படவில்லை. தற்போது நடைபெறவுள்ள பொதுசன வாக்கெடுப்பில், சகல மக்களும் கலந்துகொண்டு, தமது ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

ஆகவே ஆயிரமாயிரம் மாவீரர்களும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த மண்ணின் விடுதலைக்காகச் செய்த தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் என்றும் நினைவு கூரப்படவேண்டும். அவர்கள் எம்மிடம் கையளித்துச்சென்ற அந்த உன்னத இலட்சிய தீபத்தினை அணையாது பாதுகாப்போம். போராட்டவடிவங்கள் மாறினாலும், கொண்ட இலட்சியம் மாறாதென்பதை இப்பூவுலக மக்களிற்கு மறுபடியும் உரத்துச் சொல்வோம்.

- இதயச்சந்திரன்.

நன்றி: ஈழமுரசு (10.12.2009)

Comments