தமிழீழம்தான் தமிழருக்கான தீர்வு



எமது தலைவிதியை நாமேதான் தீர்மானிக்க வேண்டும் ! அதை எதிரிகளோ, துரோகிகளோ, சந்தர்ப்பவாதிகளோ தீர்மானிக்கக் கூடாது !

சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு.

இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங்கி விடுதலை அடையும்வரை போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு தளராத மனவுறுதியுடன் இறுதிவரை போராடினால்தான் விடுதலையென்ற இனிய விடியலை நாம் காணமுடியும்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பிற்பாடு, சிங்களவர்களால் தமிழர்கள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு, பின்னர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழித்து இலங்கையை தனிச்சிங்கள நாடாக ஆக்குவதற்கு முனைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கெதிரான தமிழர்களின் அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில்தான் "ஆயுதப்போராட்டம்" என்பது முனைப்புப்பெற்றது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான இந்திய அரசும் தனது ஆதரவினைக் கொடுத்திருந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மறைவின் பிற்பாடு காலப்போக்கில் இந்தியாவின் ஆதரவு என்பதும் தமிழரிடமிருந்து கைநழுவிப்போனது.

தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கென இருந்த ஒரேயொரு சர்வதேச ஆதரவும் அற்றுப்போய்விட்ட நிலையில் தமிழர்கள் தனித்துநின்றே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு சர்வதேச நாடும் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. மாறாக, சிங்கள அரசிற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கி தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கவே முற்பட்டன. சுயநலமிக்க சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளினால் தமிழரின் போராட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சவால்கள் சிங்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களையும் விஞ்சின. சர்வதேச நாடுகளின் இரட்டைவேடம், துரோகத்தனங்களினால்தான் இன்று எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கின்றது.

முழு உலகமுமே கைகட்டி வேடிக்கை பார்த்துநிற்க, தமிழர்கள் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்டார்கள். மனிதநேயம், மனித உரிமைகள் என வாய்கிழியப் பேசும் ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும், உலக நாடுகளும் சிங்கள அரசின் அப்பாவித் தமிழர்கள் மீதான கொலைவெறியாட்டத்தினை தடுத்துநிறுத்தாமல், தமது மறைமுக ஆதரவினையே கொடுத்திருந்தார்கள். குறிப்பாக முள்ளிவாய்க்கால் சம்பவம், அதாவது ஒரு பேரழிவு நடந்தேறப்போகின்றது என்பதனை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதை தடுத்துநிறுத்தவோ அல்லது அப்பாவி மக்களைக் காப்பாற்றவோ எந்தவொரு நாடும் முயற்சிக்கவில்லை என்பது கவலைக்குரியது.

ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலம் புலிகள் ஆனையிறவினைக் கைப்பற்றிய பின்னர் யாழ் நகரின் நுழைவாயிலினை எட்டிநின்று யாழ்குடாநாட்டில் இருந்த முப்பதினாயிரம் படையினரையும் முற்றுகையிட்டிருந்தபோது அப்படையினரினைக் காப்பாற்ற பாய்ந்தடித்து உதவ முன்வந்த இந்தியா இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மிகப்பெரிய பேரழிவு ஆபத்துக்குள் சிக்கியிருந்தபோது அவர்களைக் காப்பாற்ற பெயரளவுக்கேனும் முயற்சிக்கவில்லை.

அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கைவிரித்து நிற்க அவர்களின் மெளனம் சிங்கள அரசிற்கு சம்மதத்தினை தெரிவிக்க நடந்தேறியதுதான் வன்னி அவலம். அதன்பின் அப்போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும், சிங்கள அரசினைக் காப்பாற்றவும் அதன் பங்காளிகளாய் இப்பொழுதும் அயராது முயற்சிக்கின்றனர். அது அவர்களின் சுயநலன்களுக்கானதாகவே அமைந்தாலும் உலக நீதியின் மீதுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கி இருக்கின்றது.

அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையினால் வெளியிடப்பட்ட கொள்கையறிக்கையும் இதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் இழைத்த தவறினை, உலக நீதியின்மேல் ஏற்பட்டுள்ள சந்தேகத்தன்மையினை, "தமிழர்கள் மீதான இலங்கையின் இன அழிப்பு : அனைத்துலக சட்டங்களின்கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி" ( The Tamil Genocide by Srilanka : The Global failure to Protect Tamil Rights Under International Law ) என்ற தனது நூலின் மூலம் அனைத்துலக சட்டவல்லுநரும் பேராசிரியருமான பிரான்சிஸ்.ஏ.போய்ல் ( Francis .A. Boyle ) அவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார்.

இன்றுள்ள உலக நடைமுறைப்படி அனைத்து நாடுகளுமே தம் நாடு சார்ந்த சுயநலக் கொள்கைகளுடனேயே செயற்படுகின்றன. இவ்வாறிருக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தில் சர்வதேசம், தமிழருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நியாயமாக செயற்படுமென்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக, பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் பின்னடைவினைச் சந்தித்து அவர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுவதுமாக இல்லாமற்போய்விட்டதாக சொல்லப்படும் இன்றைய நிலைமையில், தமிழருக்கான நிரந்தரத்தீர்வு என்ற பெயரில் தீர்வில்லாத மிக மட்டமான தீர்வினை முன்வைத்து அதன்மூலம் தமிழர்களை திருப்திப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த மட்டமான தீர்வினை வாய் நிறைய புன்னகை தவழ இரு கையேந்தி வாங்கிக்கொண்டு "தமிழருக்கான தீர்வு கிடைத்துவிட்டது" என உலகம் முழுதும் தம்பட்டமடிக்க தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு தரப்பினர் சிங்கள அரசினாலும், இந்தியா மற்றும் சில நாடுகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அதில் துரோகிகளும், விலைபோனவர்களும், சந்தர்ப்பவாதிகளும்தான் அடங்கியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே ஊகித்துக் கொள்ளக்கூடிய விடயம்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களத்தின் இராணுவவெற்றி பங்குபோடப்பட்டு அதன் பங்காளிகளாக தமிழின அழிப்பின் நாயகர்கள் மஹிந்தவும், சரத் பொன்சேகாவும் தேர்தல் களத்தில் எதிரெதிராக நிற்பது தென்னிலங்கையில் சுவாரஷ்யமான அரசியல் நிலைமையினை தோற்றுவித்துள்ளது.

ஆனால், யார் அதிகாரபீடம் ஏறினாலும், தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கே உணர்ந்திருக்கின்றார்கள் என்பதோடு தம் இனத்தின் இரத்தக்கறைபடிந்தவர்கள் நிற்கும் இத்தேர்தலில் "எவர் வந்தால் என்ன?!" என்ற எண்ணத்தோடு பெரும்பாலும் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆனாலும், போடப்படும் தமிழர் வாக்குகள் அனைத்தும் மகிந்த மாத்தையாவை பழிதீர்க்கும் நோக்குடனேயே வாக்குப்பெட்டிகளில் நுழையும் என்பதும் உறுதி.

சர்வதேச நாடுகளும் தம் பங்கிற்கு தமது சுயநலன்களுக்கு ஏற்றவாறாக யார் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு தமது ஆதரவினை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காட்டிவருகின்றன. பெரும்பாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின் நாடாளுமன்றத் தேர்தலும் நடாத்தப்பட்டு, அதன்பின் தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படலாம். அதை மகிந்த சகோதரர்கள் அரங்கேற்றுவார்களா? அல்லது ரணில் - பொன்சேகா கூட்டணி அரங்கேற்றுமா என்பதனை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். எவர் தீர்வை முன்வைத்தாலும் தீர்வு என்ன என்பது தொடர்பிலும் அதனை தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்போவது யார்? என்பது தொடர்பிலும் ஈழத் தமிழ்மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

இன்று
, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தமிழர்களின் மத்தியில் தனது பிரதிநிதித்துவத்தினை இழந்து நிற்கின்றது. தமது நிலையில்லாத முடிவுகளாலும், விலைபோகும் தன்மையினாலும் தமக்குரிய ஸ்தானத்தினை இழந்து, நம்பிக்கைத்தன்மையினை இழந்து சிங்களத்தினதும் இந்தியாவினதும் தாளத்துக்கு ஆடும் கூத்தாடிகள்போல் நடந்துகொள்வது உண்மையிலேயே கேவலமான ஒரு விடயம்.

இதற்குள்ளும் இலங்கையின் பாராளுமன்றத்தில் திரு.கஜேந்திரன் அவர்கள் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழீழத் தேசியம், தமிழரின் வரலாற்று உரிமை தொடர்பாக துணிச்சலாக தெரிவித்திருந்த கருத்துரைகள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய, வரவேற்கத்தக்க விடயந்தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புமேல் நமக்கிருக்கின்ற நம்பிக்கையை இழக்கின்ற நிலைமையை அவர்களே ஏற்படுத்திவருகின்றார்கள். தமிழர்களின் வாக்கு வலிமையினால் ஒன்றிணைந்த கூட்டமைப்பு... இன்று தமது சுயநலன்களுக்காக கூறுபட்டு குழறுபடிபண்ணி நிற்பதானது... வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமானதாகும். தமிழரின் தலைவிதியை, தன்மானத்தினை அடகுவைக்க....,விலைபேச இவர்கள் யார்??? என்ற கேள்வியுடன்... அவர்களுக்கான தீர்ப்பை தீர்மானிக்கப்போவதும் நம் தமிழ் மக்களே!

"
தமிழர்களுக்கான தீர்வு" என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை,பூர்வீக நிலப்பரப்பு, கலாச்சார பாரம்பரிய விழுமியங்கள் என்பவற்றினை உறுதிப்படுத்துவதுடன் மிக முக்கியமாக, தம்மைத் தாமே ஆளும் உரிமையை அளிப்பதாக அமையவேண்டும். அதனைத் தவிர்த்து சில்லறைத்தனமான விடயங்களை அடக்கிய தீர்வு முற்றாக நிராகரிக்கப்படவேண்டியது. மீறி அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களானால், காலப்போக்கில் சிங்கள ஆதிக்கத்தின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆகவேண்டிய இழிநிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.

தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலியுறுத்தி தமிழர்களின் ஒரே விருப்புத் தீர்வாக "தமிழீழம்" என்பதே அமையும் என்பதனை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த,தெரியப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியவை. வெறும் வாக்குப் பதிவுகளோடு இவை நின்றுவிடாமல், ஈழத் தமிழர்கள் தனித்து நாடு அமைத்து, தம்மைத்தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு தமிழினத்துக்குள்ள வரலாற்று உரிமையை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி அவ்வுரிமையை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் பலவழிகளில் போராடும் வகையிலும் தொடரப்படவேண்டும்.

இத்தனை வருடங்களாய் போராடியதும், இவ்வளவு தியாகங்களை பண்ணியதும் சிங்கள வல்லாதிக்கம் திணிக்கும் மட்டமான தீர்வை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல... நமது தாய்மண்ணின், நமது தமிழினத்தின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் தான்! எம் இனத்தின் தலைவிதியை நாமேதான் தீர்மானிக்கவேண்டுமே தவிர, அதை தீர்மானிப்பது எதிரியாகவோ அல்லது ஈனத் துரோகிகளாகவோ, சுயநலமிக்க சர்வதேச சதிகார நாடுகளாகவோ இருக்கக்கூடாது. அடிமைப்பட்டுப் போவதற்காகவா... இத்தனை நாளும் போராடினோம்? இவ்வளவு இழப்புக்களையும் தாங்கிக்கொண்டோம்?

எனவே, ஈழத் தமிழர்களிற்கான ஒரே தீர்வாக "தமிழீழம்" என்ற தனிநாட்டுத் தீர்வு மட்டுமே அமைய முடியும் என்பதனை இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுவோம்! அவ்வாறில்லாமல் வேறேதும் "வெற்றுத் தீர்வு" தமிழர்கள்முன் வைக்கப்பட்டால், அதனை முற்றுமுழுதாக நிராகரித்து "தமிழீழம்" என்ற இலட்சியத்தினை அடையும்வரை போராட்டம் தொடரும் என்பதை அறிவிப்போம்!

"
தமிழீழம்தான் எமது தீர்வு" என்ற ஆணித்தரமான கோரிக்கையுடன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடத் தயாராகுங்கள்!

"
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்-

Comments