சமஷ்டிக்காகப் போராடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சனாதிபதித் தேர்தலில் குதிக்குமா?

மீண்டுமொரு தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது. இருப்பினை இழந்த தமிழ் மக்கள், வட - கிழக்கு முகாம்களில், இயல்பு வாழ்வினை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் வருகிற ஜனவரி 26ம் திகதி நடைபெறவிருக்கும் அரச அதிபர் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த தேர்தல் கதையாடல்கள் தொடர்ந்தாலும், தமிழ் மக்களின் மனோ நிலையைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஊடாக, தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடுவோர் முன்வைக்கும் விஞ்ஞாபனத்திற் கூறப்படும் விடயங்களைப் பொறுத்தே மக்களின் தீர்ப்பும் அமையும்.

அன்னப்பறவை போன்று காட்சியளிக்கும் ஜெனரல் சரத் பொன்சேக்கா, 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாக, சில விடயங்களைத் தீர்வாக வைக்கவேண்டுமெனக் கூறுகின்றார். தேர்தல் முடிவடைந்தவுடன், தனது தீர்வுத்திட்டத்தைக் கூறுவேனென மகிந்தர் எடுத்துரைக்கின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை, தமது கட்சி ஏற்றுக்கொள்வதாக, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி, விக்கிரமபாகு கருணாரெட்னா உறுதிபடக் கூறுகின்றார். ஏனைய இரு போட்டியாளர்களும் தமிழ் மக்களுக்கு அறிமுகமில்லாதவர்கள். ஆகவே தமிழின அழிப்பில் கூட்டுச் சேர்ந்த, பிரதான போட்டியாளர்கள் இருவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அறவே இல்லை. இருவரில் ஒருவரை ஆதரிக்கும்படி கூற, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் முடியாது.

மே 18 க்குப் பின்னர், தமிழர் அரசியலில் உருவான தற்காலிக வெற்றிடத்தால், மக்கள் மத்தியில், கூட்டமைப்புக்கு இருக்கும் ஆதரவினை உரசிப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இத் தேர்தலை பயன்படுத்தலாமென்பதே ஒரு சாராரின் கருத்து நிலையாகும். ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன் வைக்கவிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பூரண சுயநிர்ணய உரிமைக்கோரிக்கை உள்ளடக்கப்படுமாவென்று தெரியவில்லை. குறைந்த பட்சம் 83இல் கொண்டுவரப்பட்ட பிரிவினைக்கெதிரான 6வது திருத்தச் சட்டம் அகற்றப்படவேண்டுமென்கிற கோரிக்கையையாவது முன் வைக்கலாம். அதேவேளை யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில், மிகக் குறைந்தளவில் மக்கள் வாக்களித்த விவகாரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை வாட்டுகிறது.

நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயம், வவுனியா வதைமுகாமில் வாழும் மக்களுக்கு, மீள் குடியேற்றத்திற்கான சுதந்திரத்தை வழங்குமாவென்று தெரியவில்லை. இதுவும் தேர்தலைக் குறிவைத்தே நடமாடும் சுதந்திர நாடகம் நிகழ்த்தப்படுவது போலுள்ளது. கொழும்பில் வசிக்கும் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதிக்கு, இதுவொரு நல்ல சமிக்ஞைபோல் தெரிகிறதாம். வாக்கு வங்கியை நோக்கித் தமது பார்வையைச் செலுத்தும் தமிழ் குழுக்களுக்கு இது சிக்கலான விவகாரந்தான். அம்பும் வில்லும் தேர்தல் களத்தில் குதிக்கும்போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, சில அரசசார்பு தமிழ் குழுக்கள், தமிழ் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்களென்று கூற முற்படுவது அபத்தமாக இருக்கிறது.

உரிமைகளை விட சலுகைகளை உயர்த்திப்பிடிக்கும் இவர்களின் பார்வையில் மக்களின் அபிலாசைகளோ அல்லது பேரினவாதத்தின் நிலைப்பாடுகளோ தெளிவற்றுக் காணப்படுகிறது. தற்போதைய அதிபரின் ஆட்சி நீடித்து நிலைபெற்றால் மட்டுமே இக் குழுவினரின் அரசியல் இருப்பும் தக்க வைக்கப்படும். கடந்த தேர்தலில் 1இலட்சத்து 81 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்ற மகிந்தருக்கு, இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மிகவும் அவசியமாகவிருக்கிறது. துணைக் குழுக்களின் ஆதரவினால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாமென்கிற நப்பாசையும் மகிந்தருக்கு உண்டு. என்ன விலைகொடுத்தாவது மகிந்தரைக் கரைசேர்த்துவிடவேண்டுமென்கிற அவசரம், சுவிசில் ஒன்று கூடிய வட - கிழக்கு தமிழ் குழுக்களிடையே காணப்படுகிறது.

சரத் பொன்சேக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் இக் குழுவினரின் சொற்ப ஆதரவும், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குத் தேவைப்படாது. இவர்களின் வாக்குவங்கியும், மக்களாதரவும் எத்தகைய பலவீனமான நிலையில் உள்ளதென்பதை ரணிலும், சரத்தும் புரிந்துகொள்வார்கள். 2005 தேர்தலில், ரணில் பெற்ற வாக்குகள் மகிந்தரைவிட அதிகமென்பதை வட -கிழக்கின் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் போர்வெற்றிக்கு தாமே பூரண உரித்துடையவர்களென்று மோதிக்கொள்ளும் சரத்தும், மகிந்தரும் சிங்கள வாக்குகளைப் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதேவேளை தமிழ்மக்களின் வாக்குகளை அள்ளிவந்து காலடியில் கொட்டுவார்களென்று, தமிழ்க் குழுக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள மகிந்தர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் மௌனத்தால் கலக்கமடைந்துள்ளார்.

மலையகத்தை, மகிந்தர் சொர்க்கபுரியாக்கிவிட்டாரென அறிக்கைவிடும் ஆறுமுகம் தொண்டமானும், இரண்டு தோணியில் கால்வைத்து, கவிழ்ந்து போகாமல், மிகச் சாதுரியமாக அரசியல் பயணம் செய்யும் பெரியசாமி, சந்திரசேகரனும், தோட்ட மக்களின் வாக்குகளை மகிந்தருக்குக் காணிக்கையாக்குவோமென சத்தியம் செய்கிறார்கள். சகல அரச தரப்பு தமிழ்க் கட்சிகளும், குழுக்களும் அபிவிருத்தித் தலைவனாக மக்கள் மத்தியில் மகிந்தரைச் சித்தரிக்க முற்படுகிறார்கள்போல் தெரிகிறது. இரணிலின் ‘ஜனநாயகக் கூட்டமைப்பு' அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டமானின் நிலை மாறிவிடும். ஏனெனில் வடக்கின் தலைவருக்கும், மலையகத்தின் தனிப்பெருந்தலைவருக்கும் ஆளும் கட்சிகளில் எப்போதுமே ஒரு நிரந்தர இடமுண்டு.

தேசியம், தேசிய இனம், தன்னாட்சி, சுயாட்சி போன்ற அரசியல் விவகாரங்களிலெல்லாம் அவர்கள் தலையிடுவதில்லை. ஆனாலும் ‘சுயநிர்ணய உரிமை' என்கிற கோட்பாட்டை முன் வைக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைதான் மிகுந்த சங்கடத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று உருவான கூட்டமைப்பு, அவர்களின் செயற்பாடுகள் தாயகத்தில் வெளிப்படையாக இல்லாத நிலையிலும், அவர்களை அழித்துவிட்டோமென சிங்களப் பேரினவாதம் வெற்றிக்களிப்பில் அதிபர் தேர்தலை நடாத்த முற்படும் வேளையிலும், தமக்கு தமிழ் மக்களிடையே தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறதாவென்பதை பரீட்சித்துப்பார்க்க வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது. கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தர் நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுதலைப்புலிகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ள விவகாரம் தாயக - புலம்பெயர் தமிழ் மக்களிடையே பலத்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்தியா இல்லாமல் சிங்கள அணுக்கள் அசையாது என்பதால், அக்காந்திதேசம் விரும்பாத விடுதலைப்புலிகளை தமக்கும் பிடிக்காது என்பதை பூடகமாக வெளிப்படுத்த முயல்கிறார் சம்பந்தர். ஆனாலும் ஏப்ரலுக்கு முன்பாக நடாத்தப்பட உத்தேசித்துள்ள, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே கூட்டமைப்பின் நகர்வுகள் திட்டமிடப்படுகின்றன. போர்ப்பங்காளி உறிவினைத் தொடரவேண்டுமாயின், மகிந்தர் மறுபடியும் அதிபர் நாற்காலியில் அமரவேண்டுமென இந்தியாவும், கடந்த தேர்தலில் கோட்டைவிட்டது போன்று இல்லாமல், இத் தேர்தலிலாவது இரணில் ஆட்சிப்பீடமேற வேண்டுமென மேற்குலகும் நிழல் யுத்தம் புரிவதால், தமிழ் மக்களின் சார்பாக கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதே சரியான நகர்வாகுமென கணிப்பிடப்படுகிறது. யாராவது போட்டியிடாவிட்டால், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதையாவது கூட்டமைப்பு சொல்லவேண்டும்.

அவ்வாறு கூறாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தால், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுவிடும். அவ்வாறு போட்டியிட்டாலும், அதனூடாக என்ன செய்தியை இந்த சர்வதேசத்திற்கு இவர்கள் கூறப்போகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும், ‘சுதந்திர, இறைமையுள்ள தமிழீழத் தனியரசே ஒரே அரசியல் தீர்வு' என்கிற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடியற்றி, வெளியக - உள்ளக விளையாட்டுக்கள் இல்லாத, ‘பூரண சுயநிர்ணய உரிமை' என்கிற பிறப்புரிமைக் கோட்பாட்டை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?அவ்வாறானதொரு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்து, அதில் அதிகப்படியான மக்களின் ஒப்புதலைப் பெற்றால் அது ஒரு தீர்க்கமான, உறுதியான செய்தியாக சர்வதேசத்தால் பார்க்கப்படும்.

உள்ளக சுயநிர்ணயம், சமக்ஷ்டி போன்ற தீர்வுகளை முன்வைத்தால், அதனை உள்ளுக்குள்ளே அமர்ந்திருந்து தீர்த்துக்கொள்ளுமாறு கூறி, அனைத்துலகம் மெதுவாக நழுவிவிடும். இவைதவிர, இன்னொருவகையான சிந்தனைச் சிதறலொன்று, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் உலவ விடப்பட்டுள்ளது. அதாவது எமது தீர்வு என்னவென்பதை மகிந்தருக்கும், சரத்திற்கும் கூறி, அதனோடு உடன்பாடு காண்பவருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அவரை ஆதரிக்கலாமென்கிற வகையில் அக் கருத்தாடல் அமைகிறது.எத்தனை தடவைகள், பண்டா - செல்வா, டல்லி - செல்வா மற்றும் திம்பு பிரகடனத்திற்கு நடந்த சோகங்களை எடுத்துக் கூறினாலும், சில அரசியல் ஞானிகளுக்கு இவை புரியாத புதிராகவே தோற்றமளிக்கிறது. ஒரு விடயத்தை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை முழுவதும், பௌத்த சிங்களத்தின் இறையாண்மைக்கு உட்பட்டது என்கிற அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து தென்னிலங்கை நிச்சயம் விலகிச் செல்லாது. கூட்டமைப்பினர் முன்மொழியவிருக்கும் உள்ளக சுயநிர்ணய, சமக்ஷ்டி போன்றவற்றை சிங்களம் திரும்பியும் பார்க்காது. ஏதோ இந்தியாவிற்காக 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறோமென எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறார்கள். அதுகூட நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரைதான். அதற்குப் பிற்பாடு, இன்னுமொரு 30 வருடத்திற்கு, சமக்ஷ்டியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடும். ஆயுதப் போராட்ட காலத்தில் ஆமை வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இனித் தாயகத்தையே விழுங்கிவிடும் அளவிற்கு வேகமடையும். இந்தியா இல்லாமல் பிரச்சனையைத் தீர்க்க முடியாதென்று எப்போதும் கூறுவார்கள் இந்த அரசறிவியலாளர்கள்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Comments