பனையின் கீழ் பால் குடிக்கும் தமிழ் அரசியல்

வன்னியில் சுமார் 5லட்சம் மக்கள் இருந்ததாக கூறப்படும் இறுதி அறிக்கையின் படி தற்போது உள்ள எண்ணிக்கை, சுமார் 2 லட்சம் எண்ணிக்கையை வேறுபடுவதாகவும், அதிலும் பலர் தப்பிச் சென்றார்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் சுமார் 75 ஆயிரம் பேருக்காவது என்ன நடந்தது என்பதே தற்போதைய ஆய்வு. சாட்சியமில்லா - வன்னிமக்களின் அவலம்

அடுத்து

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை தெரிவு செய்ய உத்ததேசித்துள்ளீர்கள்? என தமிழ் மக்கள் பலரிடமும் வினாவிய போது கிடைத்த பதில் எங்களை நிம்மதியாக சாப்பிட விட்டால் போதும். இந்த பதிலில் பல உண்மைகள் உண்டு,

ஏனெனில் தமிழ் மக்கள் (மலையக,முஸ்லிம்) கடந்த காலங்களில் தலைவர்களை நம்பி வாக்களித்து பின்னர் ஏமாந்து நின்றது தான் மிச்சம்.

இதற்கிடையில் தேர்தல்கள் வந்தால் தான் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என மக்களும் நன்மையடைவது வழமை.

இந்த அடிப்படையிலேயே முகாம்களில் இருந்த மக்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யுத்த வடுக்களுடன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பது எவருக்குத் தெரியும்.
உண்மையிலேயே தத்தம் உறவுகளை இழந்தவர் மட்டுமே கவலையுடன் வாழ்கின்றனர்.

  • இறுதி மூச்சு விடும் பொழுது தன் மகளுக்கு (7வயது சிறுமி) தண்ணீர் கொடுக்க முடியாவில்லை என்ற கவலையால் தாய் ஒருத்திக்கு தண்ணீரைக் காணும் பொழுதெல்லாம் ஒவ்வாமை வியாதி ஏற்பட்டுகின்றது.

இது போன்ற உண்மைகளை ஸ்ரீலங்கா அரசும் அரசியல் அரக்கர்களும் அறிவார்களா? அறிந்தால் தேர்தலை முக்கியப்படுத்துவார்களா? இது போன்ற தழும்புகளால் தமிழ் மக்களை தடாகங்களாக் மாற்றிவிட்டு ஜனநாய நீரோட்டத்தில் குளிக்கின்றோம் என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் இறுதியாக இடம் பெற்ற ஜனாதிபதி தேர்ததில் விடுதலைப் புலிகள் தமது கருத்தை கூறுகின்றனர். (முன்னாள் அரசியல் துறைபொறுபாளர் அமரர் சு.ப.தமிழ்செல்வனிடம் செய்தியாளர் சந்திப்பில் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த நேரடிபதில்)

  • ‘கேள்வி:- சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யார் ஆட்சியில் வந்தால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

    சு.ப:- இரண்டு பேரினவாத கட்சிகளும் ஆட்சிக்கு வருவதும்,போவதும் மாறி மாறி நிகழ்வது காலகாலமாக இடம் பெறுகின்றது, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நிதந்தரமான தீர்வுகளை முன்வைக்க தவறியே இருக்கின்றன, எனவே இந்த தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் மக்களே முடிவெடுப்பார்கள்.”

அதாவது இரண்டு பேரினவாத கட்சிகளும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் அமர முடியாது. எனவே தமிழ் மக்கள் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் நடாத்தப்படும் தேர்தல்களின் போது சிங்கள மக்கள் சோப்பு,சீப்பு,கண்ணாடி போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கருதிக் கொண்டும், தமிழ் மக்கள் தமது பிரச்சனைக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பதாக கருதிக் கொண்டுமே பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

அதனால் தான் சமாதான பேச்சு வார்த்தைகள் ஒவ்வொரு தடையையும் தாண்டி இடம் பெற்றுக் கொண்டிருந்த போது தமிழ் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில், தொன்பகுதியில் சோப்பு,சீப்பு,கண்ணாடிகளில் தமக்கு கிடைக்கவில்லை என கூக்குரல் (ரணில் அரசுக்கு எதிரான பல தொழிற்சங்க போராட்டங்கள்) இட்டு ரணிலின் அரசை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தலைமையில் கவிழ்த்தனர்.

ஆகவே தமிழ் மக்களின் வாக்குகளை சமாதானம் என்ற அடிப்படையில் அபகரித்து ஆட்சியில் அமர்வதை தடுக்க வேண்டும், உலகிற்கு கூறவேண்டும் என்பதே தமிழ்செல்வனின் கருத்தாக இருந்தது.

அதாவது தமிழ் மக்கள் வாக்களிக்காமல் இருந்தால் தென்னிலங்கை மக்களின் தெரிவு என்ன என்பதை தெளிவாக கூறமுடியும் என்பதே கருத்து.

ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ரணில் நாட்டில் அமைதி அபிவிருத்தி எனவும் வேட்பாளர் மகிந்த இராணுவ தீர்வு தொடர்பாகவும் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இதற்கிடையே சு.ப.தமிழ்செல்வனால் கூறப்பட்ட கருத்து ஜனநாயக விரோத செயற்பாடு என தென்னிலங்கை ஊடகங்களை கொட்டித் தீர்த்தன. அது தான் கூறப்பட்டது என்ற கருத்தும் வலுப் பெற்றது.

இதை ஆமோதிக்கும் விதமாக குடாநாட்டில் மக்கள் படை என்ற பேர்வழிகள் வாக்கு சாவடிக்கு சென்ற சிலரை தாக்கியிருந்தனர்.

மேலும் தமிழ் ஊடகவியலாளாகள் பலரும் ‘மகிந்தவா?” ‘தலைவரா?” என்ற கருத்துக்களை உறுதியாக கூறிவந்தனர்.

தமிழர் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்திருக்கலாம், அதனூடாக நாட்டிலுள்ள அனைவருக்கும் இலகுவாக அரசின் இழுத்தடிப்புக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களின் மனதை வென்றிருக்கலாம், இதை தமிழர்கள் தவறவிட்டார்கள் என்பது என் கருத்து.

என்னிடம் தனிப்பட்ட ரீதியில் சிலர் அனுகி. தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டதினால் தான் தொடர்ந்து சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதுள்ளது என்றனர். நாட்டில் அமைதி அபிவிருத்தி என்று கூறிய ரணிலுக்கு சிங்கள மக்கள் வாக்களித்திருக்கலாமே? என்று மறு கேள்வி கேட்டேன்.

இது நடந்து முடிந்த கதை ஆனால் நடக்கப்போகின்ற கதையும் இது தான்.

ஆனால் எதிர்வரும் தேர்தல் வெற்றிவேந்தன் யார் என்பதை வெளிக்கொணர்வதாக அமையும்.

கருணாவை பிரித்து புலிகளுக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்திய ரணில், அவ் வெற்றியை வெளியே கொண்டாட முடியாது திண்டாடினார். தற்போது பொருத்தமான வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் கணிசமான கொண்டாட்டங்கள் வெளிப்படும்.

  • மகிந்த ஜனாதிபதியாக வந்த காலம் முதலே அடுத்த தேர்தலையும் மனதில் கொண்டே செயற்பட்டுள்ளார் அதற்கா யுத்த முனைகளுக்கு சென்றமை, ஹெப்பிடிகொலாவ குண்டுத் தாக்குதல் சம்பவம் முதற் கொண்டு அத்தனை சம்பவங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியமை, அண்மையில் உயிரோடிருக்கும் தனக்கு தானே ரூபாய் தாள் அச்சிட்டு வெளியிட்டமை என்பவற்றுடன். வாட்டி வதைத்தெடுத்த எம் மக்களை மீளக் குடியேற்றம், நடமாடும் சுதந்திரம், என அடிப்படை சுதந்திரங்களை தனது சட்டைப் பையுக்குள் இருந்து எடுத்து கொடுப்பதை போல அனுமதிப்பது என்று பல ரகங்கள்.

இதற்கிடையே சரத் பொன்சேகா ஒரு வடிகட்டின முட்டாள் போல சித்தரித்து அரச சார்பு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. (இந்த முட்டாளின் மகள்கள் இருவருக்குமா யாழ்குடா நாட்டை சுற்றிப்பார்ப்பதற்கு உலங்குவானுர்தி கொடுக்கப்பட்டது? எப்படியெல்லாம் சுகத்தை அனுபவிக்கிறார்கள்?)

அதில் முக்கியமாக பிரபாகரனின் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரங்களை செய்வேன் என்றும், என்னிடம் அதிகம் கேள்வி கேட்க வேண்டாம் அரசியல் அனுபவம் தன்னிடம் இல்லை என்றார் எனவு செய்திகள் வெளிவந்தன.

சரத் பொன்சேகாவை பக்கம் பக்கமாக புகழ்ந்த அரச ஊடகங்கள் காறி உமிழ்கின்றன.

அதாவது ஒரு முட்டாளை இராணுவ தளபதியாக நியமித்திருந்ததையும் அவர் பல குற்றங்களையும் செய்திருக்கின்றார் என்றும் கூறுகின்றனர். இது பிரதான எதிர் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிலைமை,

ஏற்கனவே நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நல்ல களம் அமைத்து கொடுத்திருக்கிறார் மகிந்த.

இராணுவத்தினரின் பணியை மெச்சும் சரத் பொன்சேகா பதவியில் வந்தால் இராணுவம் சார் நலன்கள் கூர்மையடையும். இராணுவ புரட்சியற்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை நகருகின்றது.

சிறுபான்மையினரின் உரிமைகள் மனித உரிமைகள் என ஒரு காலத்தில் தலைகீழாக கூட பாதயாத்திரை செய்தவர் இன்று …..

‘எந்த ஒரு திட்டத்தினதும் இறுதிப் பயனாளி பொது மக்களே” என்று அண்மையில் கூறிய இவர் சரியாகத் தான் செயற்பட்டிருக்கின்றார். அதனால் தான் மக்களுக்கு இவ்வளவு அவலமும்

அடுத்த வேட்பாளர் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடவுள்ள விக்கிரமபாகு கருணாரட்ணவின் இன்றைய நிலை.

அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

  • இவர் மனித உரிமைகள் தொடர்பாக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றார். இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற மனித அவலங்கள் தொடர்பான ஆவனங்களை தயாரித்து மனித உரிமைகள் அமைப்புகளுக்கு தகவல் வழங்கி வருவதுடன் சுமார் 75ஆயிரம் பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையும் எழுப்புகின்றார். வன்னியில் சுமார் 5லட்சம் மக்கள் இருந்ததாக கூறப்படும் இறுதி அறிக்கையின் படி தற்போது உள்ள எண்ணிக்கை, சுமார் 2 லட்சம் எண்ணிக்கையை வேறுபடுவதாகவும், அதிலும் பலர் தப்பிச் சென்றார்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் சுமார் 75 ஆயிரம் பேருக்காவது என்ன நடந்தது என்பதே இவரின் தற்போதைய ஆய்வு.

வன்னியில் சுமார் 5லட்சம் மக்கள் இருந்ததாக கூறப்படும் இறுதி அறிக்கையின் படி தற்போது உள்ள எண்ணிக்கை, சுமார் 2 லட்சம் எண்ணிக்கையை வேறுபடுவதாகவும், அதிலும் பலர் தப்பிச் சென்றார்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் சுமார் 75 ஆயிரம் பேருக்காவது என்ன நடந்தது என்பதே இவரின் தற்போதைய ஆய்வு. படம்:-JDS

இந்த மூன்று வேட்பாளர்களில் மகிந்த, மற்றும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு சிந்திக்கின்றது.

இது தொடர்பாக பா.உ சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் கேட்கப்பட்டதற்கு. நாம் இது வரையும் யாரை ஆதரிப்பது என தீர்மானிக்கவில்லை என்றார்.

  • சரி இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தவிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடவுள்ள விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கு ஆதரவளித்தால் என்ன அவர் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் தானே?

    பதில்:- அவர் வெல்லுவாரா? எமது மக்களின் பிரச்சனைக்கு தீர்வை முன்வைக்கக் கூடிய ஒருவரை ஆதரிப்பது தொடர்பிலே ஆலோசித்து முடிவெடுப்போம்.

ஆக இந்த பதிலின் அர்த்தத்தின் படி த.தே.கூ தனது சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டாது என்பது உறுதியாகியுள்ளதுடன், பேரினவாத கட்சிகளுக்கே ஆதரவு கொடுக்கும் அல்லது பொது நிலை எடுக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தீர்மானத்தை வெளியிடுவதற்கு ஏற்கனவே மக்களுடன் கலந்தாலோசித்துள்ளதா? அல்லது மக்களை பிரதிநிதுவப்படுத்தும் குழுக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் கருத்துக்களை கணித்துள்ளதா?

பெரும்பான்மையின மக்களின் உணர்வலைகளையும் கருத்துக்களையும் பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்கள் மூலம் உணர்ந்தறிந்தே மகிந்த அரசு தேர்தல் குறித்து முடிவெடுத்துள்ளது. இதற்கு ஈடுகொடுப்பதற்காக ஐ.தே.கவும் பல சந்திப்புக்கள் கூட்டங்கள் அது இது என ஏறி இறங்கி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒருவரை தாம் ஆதரிப்பதாக கூறும் த.தே.கூட்டமைப்பு மக்களிடம் இருந்து கருத்தறிய வேண்டிய தேவை எவ்வளவு முக்கியமானது. தமிழ் மக்களிடம் கருத்தறியாமல் த.தே.கூட்டமைப்பு இது தொடர்பான முடிவெடுத்தால் தமது சுயநலத்திற்கான அரசியலை மட்டுமே செய்கின்றார்கள் என்பதை மக்கள் புரிவார்கள்(ஏற்கனவே தமிழ் அரசியல்வாதிகளின் சுத்துமாத்துகள் மக்களுக்கு புரியும், பல வளங்களை இழந்ததற்கும் மக்களின் அவலத்திற்கும் பொறுப்பு இவர்களுக்கும் உண்டு). இதன் தாக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலின் போது அவர்கள் உணர நேரிடும்.

இரு பிரதான வேட்பாளர்களில் எவரை ஆதரித்தாலும் நடந்து முடிந்த யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வடுக்களுக்கும் காரணமானவர்களின் செயலை அங்கிகரிப்பதாகவே அமையும்.

மீண்டும் மக்களை ஏமாற்றும் செயல் த.தே.கூ என்ற பெயரில் இடம் பெறவுள்ளன.

இந்நிலைக்கு எதிர் மாறாக சுயேட்சை வேட்பாளராக குதிப்பேன் என்ற கருத்தை பா.உ சிவாஜிலிங்கம் இந்தியாவில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் இயக்கங்கள் தமது இயக்கத்தின் தாரக மந்திரமாக இருந்த தமிழரின் உரிமை,வடக்குகிழக்கு பிரிக்கமுடியாத தமிழர் தாயகம், சுயாட்சி என்ற கோஷங்களை மக்களின் நிம்மதி என்று கூறி பதவிக்காக விற்று நிற்கின்றன.

எனவே பனையின் கீழ் நின்று பால் குடிக்கின்றோம், எங்களில் கறைபடியவில்லை என்று சொன்ன தமிழ் கட்சிகள் வெறியேறி அரசியல் சகதிக்குள் மூழ்கிவிட்டன.

இந் நிலையில் மக்களின் வாக்குகளை பறிக்கும் செயலை எவ்வாறு தமிழ் மக்கள் தடுப்பார்கள்.

மகிந்த அரசு இந்தியாவின் செல்லப்பிள்ளை என்றும், சரத் பொன்சேகா பாகிஸ்தானின் நண்பன் என்றும் எனவே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில் விரிசல்கள் வரும் சர்வதேசத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் எடுபடும் முடிவு வரும் என தமிழ் ஊடகங்கள் மோட்டுக் கல்வியை ஊட்டிவருகின்றன.

சரத்பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் ஐ.தே.காவும் மணிக்கு ஒருதடைவை இந்தியாவின் கால்களுக்குத்தான் ஒத்தடம் கொடுக்கின்றது. அது மட்டுமல்ல ஆசிய கண்டத்தில் தனித்தனி சர்ச்சைகளில் இருக்கும் இந்தியா, பாக்கிஸ்தான்,சீனா உள்ளிட்ட நாடுகள் ஸ்ரீரங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்குவதில் ஒற்றுமையாகவே இருந்தனர்.

மேலும் இந்தியா வழங்கிய ஆயுத உதவியினால் இந்திய அரசியலில் அடித்த புயலை அடக்குவதற்கு, இந்தியா எதுவித ஆயுத உதவிகளையும் வழங்கவில்லை தலையிடியைத் தந்தது என்றது போல சரத்பொன்சேகா கூறியதையும் நினைத்து பாருங்கள்.

எனவே தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு இடப்பட வேண்டும் என சுயாதீனமாக சிந்திக்கும் காலம் வடக்கு கிழக்கில் உருவாகவில்லை.

  • அதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை பாதிக்காத வண்ணம் அமையவேண்டும் என பொது நிலை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அதன் உண்மை அங்கு சுதந்திரம் இல்லை என்பதே. இதை புரிந்து கொண்டு புலம் பெயர் தமிழர்கள் நடப்பது அவசியம்.

அதேவேளை

தாயகத்தில் இருக்கும் மக்களுடன் அரசியல் யதார்த்தங்களை பகிர்ந்து வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்த வழிகாட்டுங்கள்.

வின்சன் ஜெயம் இன்போதமிழ்

Comments