ஒரு புறத்தில், மகிந்த சிந்தனையுடன் ஐக்கியப்பட்டு, தமிழின அழிப்பிற்கும், சிறைப்படுத்தலுக்கும் உறுதுணையாக நின்று, தமழீழ மக்களை மீண்டும் சிங்களத்திடம் அடிமைப்படுத்தி, சிங்கள தேசாபிமானிகளாக மறுபிறப்பெடுத்திருக்கும் ஒட்டுக் குழுக்கள் மலையக மக்களின் தலைவிதியாக உருவாகிய தலைவர்கள் எனச் சில தமிழ் அணிகள் மகிந்த பக்கம் தம்மை நிலைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
மறு புறத்தில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்து மேலக மக்கள் முன்னணியும், முஸ்லிம் காங்கிரசும் களம் இறங்கியுள்ளது. இலங்கைத் தீவில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்றுமே தமது மொழிக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் நடாத்துவதில்லை. அவர்கள் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பெரும்பான்மை சிங்களக் கட்சிகளில் ஏதாவது ஒன்றிற்கு ஆதரவு வழங்குவதும், அதனூடாகப் பதவிகளையும், வளங்களையும் அமுபவிப்தாகவே அவர்களது அரசியல் நகர்வு அமைந்திருக்கும்.
மலையக முன்னணியின் தலைவரான மனோ கணேசன் ஆரம்பத்தில் சரத் பொன்சேகாவை எதிர்க் கட்சிகளின் கூட்டு முன்னணியின் பொது வேட்பாளராகக் களம் இறக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு ‘மகிந்த ராஜபக்ஷ' சகோதரர்களை வீட்டிற்கு அனுப்ப இதைவிடத் தெரிவெதுவும் இல்லாத காரணத்தால் ஜெனரல் சரத் பொன்சேகாவை தான் ஆதரிக்க முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். கொழும்பை மையப்படுத்தி இயங்கும் மலையகக் கட்சிக்காரரான இவரிடம் இதற்கு மேல் எதிர்பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை. இது அவரது உயிர், உடமை, எதிர்காலம் குறித்த விடயமாகவும் உள்ளது.
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்னும் தமிழர்களுக்கான அரசியல் அணி முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தற்போது மிக மோசமாகச் சிதைவடைந்து வருகின்றது. அதன் தலைவராக அமர்ந்துள்ள திரு. சம்பந்தன் அவர்கள் எதையும் தீமானிக்க சக்தி அற்றவராகவே உள்ளார். சிறிலங்காவிற்கான அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன் வைத்து கூட்டமைப்பு சார்பாக ஒருவரை நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் சிதைக்கப்பட்டு விட்டது. கொடூரமான இன அழிப்புக்கு முகம் கொடுத்த தமிழீழ மக்கள் முன்னணி வேட்பாளர்கள் இருவருக்கும் வேட்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒருவர் கொன்றவர். ஒருவர் கொல்லச் சொன்னவர். இருவருமே மனித குலத்திற்கெதிரான பயங்கரவாதத்தின் பங்காளிகள். இவர்களில் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலும் அவர்கள் நடாத்தி முடித்த தமிழின அழிப்பை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும்.
சில மேதாவிகள் தெரிவிப்பது போல், மகிந்தவை அகற்றுவதற்காக பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை. சிங்கள தேசத்தை யார் ஆண்டாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை கடந்த 52 வருட கால ஆட்சியாளர்கள் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்திய ரணிலை அகற்ற முயன்றதால் பதவிக்கு வந்த மகிந்தவின் கொடூரங்களையும் நாம் தரிசித்துவிட்டோம். இரண்டு பேய்களில் எந்தப் பேயை ஆதரிப்பது என்ற குழப்பம் தமிழ் மக்களுக்கு அவசியம் அற்றது. தமிழ் மக்கள் தமது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் உலகிற்கு அதனைத் தெரிவிக்க முடியும். அது யார்? என்பதே தற்போதுள்ள கேள்வி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குரிய சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்களுக்கு வழங்கத் தவறிவிட்டதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்துள்ளது. கூட்டமைப்பின் இந்த முடிவின் காரணமாக உருவான வெளியை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் நிரப்ப முற்பட்டுள்ளார். கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தப்பேவதில்லை என்ற முடிவுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கம் சுயேச்சையாகவே போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கிஷோர் மகிந்தவைக் கட்டிப்பிடித்து பிடித்துப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் தமிழினத் துரோகத்தைப் புரிந்துள்ளார். தற்போது மேலும் ஒரு பிளவை கூட்டமைப்பிற்குள் ஜனாதிபதித் தேர்தல் உருவாக்கியுள்ளது.
கிஷோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இதை எப்படிக் கையாளப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிவாஜிலிங்கம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவரது பின்னணி குறித்த அச்சம் தமிழ் மக்களுக்கு எழுவது இயற்கையானதே. இவரது தலைமையில் தற்போது இயங்கும் ரெலோ அமைப்பின் கடந்த காலம் குறித்த பதிவுகள், இவரைப் பழைய பிதாமகர்கள் பின்னின்று இயக்குகிறார்களா? என்ற சந்தேகத்தை இயல்பாகவே எழுப்புகின்றது. இந்தியாவில் நின்றபடியே இந்திய அரசு பற்றி இவர் தெரிவித்த கருத்துக்களின் கடுமையை இந்திய ஆட்சியாளர்களும், உளவுத் துறையினரும் கண்டுகொள்ளாமல் விட்டதும், புலம்பெயர் தேசங்களில் சிங்கள அரசுக்கெதிரான கருத்துக்களை ஆவேசமாகத் தெரிவித்த இவர் நாடு திரும்பியபோது சிங்கள அரசும் கண்டுகொள்ளாமல் விட்டதும் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயங்களாகவே உள்ளது.
அண்மைக் காலங்களில் மகிந்த சகோதரர்களைப் புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டுவந்த ரெலோ அமைப்பின் இன்னொரு தலைவரான சிறிகாந்தா அவர்கள் சிவாஜிலிங்கத்துடன் சென்று ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியிருந்ததும் தமிழர்கள் மத்தியில் இவர் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இவை எல்லாக் கேள்விகளுக்கும் இவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கும் விடயங்களே தெளிவை ஏற்படுத்தும். அதன் பின்னரே தமிழ் மக்களும் இவருக்கு வாக்களிப்பது பற்றி முடிவெடுப்பார்கள்.
சிங்கள தேசத்தை யார் ஆளவேண்டும் என்பதை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும். இதில் தவறான கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தமிழ் மக்களை வரலாற்றுத் துரோகம் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
மாறாக, மகிந்த ராஜபக்ஷவுக்கோ, சரத் பொன்சேகாவுக்கோ வாக்களிக்குமாறு அறிவுறுத்தி அந்த மண்ணுக்காக மடிந்த மனிதர்களின் ஆன்மாக்களை காயப்படுத்தாதீர்கள்.
-சி. பாலச்சந்திரன்
Comments