இலங்கை அரசுக்கு சார்பாகத் திரும்பும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகள்?

போர்முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தின் அணுகுமுறைகளில் முதல்முறையாக மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.

  • சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு விடுபட்டு வரும் நிலையில்- தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி தீர்வு ஒன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் இறங்குவது இனிமேல் குதிரைக்கொம்பாகவே இருக்கப் போகிறது. இந்தநிலை ஏற்படுவதற்கு இலங்கை அரசு சற்று கீழே இறங்க எடுத்த முடிவு மட்டும் காரணமல்ல. அதற்கு அப்பால் போருக்குப் பின்னர் தமிழர் தரப்பில் அரசியல் நடவடிக்கைகளைக் கையாண்ட அனைத்துத் தரப்பினருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளும் இதற்கான பொறுப்பில் இருந்து விலக முடியாது.

இலங்கை அரசாங்கம் மீது கடந்த பத்து மாதங்களாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்த வெளியுலக நாடுகள் இப்போது அதனை புகழும் நிலை உருவாகி வருகிறது.
போர் நடந்து கொண்டிருந்த போது பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்களுக்காக அரசின் மீது குற்றம்சாட்டிய சர்வதேச நாடுகள், போர்நிறுத்தத்தை வலியுறுத்தின. போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களை உருவாக்கியது. அரசாங்கத்தின் திட்டப்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாவது தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்துக் கண்காணிப்பதாகவே இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும், வவுனியா வடக்கின் ஒருபகுதி மக்களுமே தற்போது தடுப்பு முகாம்களுக்குள் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறது. சர்வதேசத்துடன் முரண்பட்டுக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அதன் விருப்பங்களுக்கு ஏற்ப நடக்க முயன்றது. அடுத்து உள்நாட்டு அரசியல் விளையாட்டுகளுக்கும் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குகள் தேவைப்பட்டன. முகாம்ளுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு ஒருபோதும் அவர்களின் வாக்குகளைப் பெற முஎயாது என்பதால் அரசாங்கம் அவர்களைப் படிப்படியாக விடுவிக்கும் முயற்சியில் இறங்கியது.

  • இந்தக் கட்டத்தில் இடம்பெயர்தோரை தடுப்புமுகாம்களுக்குள் அடைத்து வைத்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்ட தமிழர் தரப்புகள் இப்போது பெரிதும் பலவீனப்பட்டு நிற்கின்றன. காரணம் அவர்கள் முன்னிலைப்படுத்திய பிரச்சினை இப்போது தணியத் தொடங்கி விட்டது.

அடுத்த மாதம் 10ம் திகதிக்குள் அனைவரையும் மீளக்குடியமர்த்தி விடுவோம் என்று இந்தியாவிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவில் இருந்து வந்த நாடாளுமன்றக் குழுவினர், ஐநாவின் பார்வையாளர்கள், அமெரிக்காவின் தெற்காசிய விவகார உதவி இராஜாங்க செயலாளர் என்று அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டி வரவேற்றனர். இந்தக் கட்டத்தில்- போர்க் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இலங்கை தெடார்பாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த கருத்துகள் மறைந்து சாதகமானதொரு சூழல் உருவாக ஆரம்பித்துள்ளது.

  • போரின்போது இடம்பெற்ற குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி பொருளாதார ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், பாதுகாப்பற்ற நிலையைக் காரணம் காட்டி இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்குலக நாடுகள் விடுத்திருந்த எச்சரிக்கைகள் எல்லாம் இப்போது மீளாய்வு செய்யப்படும் நிலை உருவாக ஆரம்பித்துள்ளது. இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் மேற்கொண்ட ஒரே ஒரு நடவடிக்கை தான் காரணம். தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை மீளக்குடியர்த்த மேற்கொண்ட நடவடிக்கையே அது.

ஆனால் இது மட்டுமே போர்க்காலத்தில் இலங்கை அரசு மீது சர்வதேசம் குற்றம்சுமத்துவதற்கு காரணமாக ஒரே பிரச்சினை அல்ல. தமிழ்மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாகவே அந்த நிலை உருவானது. ஆனால் அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததன் மூலம் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சமாளித்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. இதன் ஒரு கட்டமே, இலங்கை தொடர்பாக கடும்போக்கை கைவிட்டு மென்போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்க செனெற்; குழுவொன்று சமர்ப்பித்துள்ள ஆலோசனையாகும். அந்த ஆலோசனை இப்போதே வேலை செய்யத் தொடங்கி விட்டதை றொபேட் ஓ பிளாக்கின் விஜயத்தின் மூலம் உணர முடிகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை எந்தப் பிரச்சனையும் இன்றி நீடிக்கும் நிலை உருவாகி வருகிறது. தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படாமல், அவர்களின் பாதுகாப்புத் தொடர்பான உத்தரவாதங்கள் பெறப்படாமல், போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமலேயே சர்வதேச சமூகம் இலங்கை அரசுடன் கைகோர்க்கத் தொடங்கி விட்டது.

  • இது தமிழ்மக்கள் எதிர்பாராத திருப்பம். சர்வதேசத்தின் அண்மைய போக்கு தமிழ் மக்களை நம்பிக்கையீனத்துக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சர்வதேசத் தலையீடு ஒன்றின் மூலம் நியாயமான தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். அது பொய்யாகும் நிலை தோன்றியுள்ளது. அதேவேளை, இந்தநிலைக்கு தமிழர் தரப்பினால் பலவீனமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களும் ஒரு வகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது. போர் நடந்த போது படுகொலைகளை நிறுத்தக் கோரியும், போர் முடிந்த பின்னர் முகாம்களில் உள்ளோரை விடுவிக்கக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டங்களை இப்போது தொடர முடியாது. அதற்கான வாய்ப்புகளை கொடுக்காமல் இந்தப் பிரச்சனையை அரசு திறமையாக கையாண்டுள்ளது.

தமிழரின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை முன்னிறுத்திய ஒரு கோரிக்கை நிலைப்பாட்டுக்குள் தமிழர் தரப்பினால் வரமுடியாது போனது இலங்கை அரசுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இந்த நிலையில் சர்வதேசத்தின் இப்போதைய போக்கு, தமிழரின் பிரச்சினைகளில் இருந்து விலகத் தொடங்கி விட்டது. கடந்த வாரம் புதுடெல்லிக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஸவின் தலைமையிலான இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இந்தியாவுக்கு ஒரு உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், அரசியலமைப்பில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய முயற்சிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக தமிழ் மக்களை வாக்களிக்கத் தூண்டும் ஒரு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்க்கட்சிகள் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்று இதனை வைத்துக் கொண்டே சர்வதேசம் நிர்ப்பந்திக்கலாம். இந்த அழுத்தங்களின் ஊடாக மகிந்த ராஜபக்ஸ மீளவும் ஜனாதிபதியாகலாம். ஆனால் தமிழரின் பிரச்சினைக்கு என்ன தீர்வு? எப்படிப்பட்ட தீர்வு என்பதை மகிந்த ராஜபக்ஸ இப்போதைக்கு மட்டுமன்றி எப்போதுமே வெளியிடமாட்டார்.
அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தானதாகி விடும். தமிழர் தரப்பின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி இலங்கை அரசு கடைப்பிடித்த நெகிழ்வுப்போக்கு அதற்கு பெரிய பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

  • சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு விடுபட்டு வரும் நிலையில்- தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி தீர்வு ஒன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் இறங்குவது இனிமேல் குதிரைக்கொம்பாகவே இருக்கப் போகிறது. இந்தநிலை ஏற்படுவதற்கு இலங்கை அரசு சற்று கீழே இறங்க எடுத்த முடிவு மட்டும் காரணமல்ல. அதற்கு அப்பால் போருக்குப் பின்னர் தமிழர் தரப்பில் அரசியல் நடவடிக்கைகளைக் கையாண்ட அனைத்துத் தரப்பினருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளும் இதற்கான பொறுப்பில் இருந்து விலக முடியாது.

பிற்குறிப்பு வட்டுக்கோட்டைதீர்மான வாக்கெடுப்பு, மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் நடைபெறுகின்றனதானே? என சொல்லி தப்பிக்க முனையக்கூடாது அது வேறு எமது ஆதங்கம் வேறு

இன்போதமிழுக்காய் - தாயகத்திலிருந்து ஹரிகரன்

Comments