தென்னிலங்கையின் அரசியல் மோதல்களும் வெளிவரும் உண்மைகளும்

ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்திய 2009 ஆம் ஆண்டின் இறுதி வாரம் இதுவாகும். காலம் கரைந்து செல்வது சாதாரண மனிதர்களுக்கு வேதனையானது, ஆனால் இந்த ஆண்டை கடந்துவிட வேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் ஆவலாக உள்ளது.

ஏனெனில் அந்தளவிற்கு மிகப்பெரும் பேரழிவையும், துன்பத்தையும், படுகொலைகளையும் ஈழத்தமிழ் இனம் உலகின் எந்த ஒரு சமூகத்தின் ஆதரவுகளும் இன்றி உலகின் எந்தவொரு நாட்டினது உதவிகளும் இன்றி இந்த வருடம் சந்தித்திருந்தது. அறுபது வருட துன்பங்களையும், ஒரு வருட பேரழிவையும் சந்தித்த இந்த சின்னஞ் சிறிய இனம் உலகெங்கும் சிதறிப்போயுள்ளது, ஆனாலும் தமது உரிமைகளை வென்றெடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் சிதறவிடவில்லை. பிராந்திய வல்லரசாக தன்னை பிரகடனப்படுத்துவதற்காக சின்னஞ் சிறிய தமிழ் இனத்தின் மீது தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றிய இந்திய பேரரசிற்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னை வலுப்படுத்தி வருகின்றது.

இலங்கை அவர்களை அடக்கிவிடுவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை. அதனைத் தான் மூன்று நாடுகளில் நடந்து முடிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கொடுப்பு பறைசாற்றி நிற்கின்றது. புலம்பெயர் நாடுகளில் தமக்கு உரித்தான அரசியல் தீர்வு என்ன என்பது தொடர்பாக ஈழத்தமிழ் இனம் வேகமாக செயற்பட்டு வருகையில் இலங்கையில் தென்னிலங்கையின் அரசியல் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அங்கு பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி உண்டு.

ஏனையவர்களில் பலர் மேற்கூறப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் மேற்கூறப்பட்ட வேட்பாளர்களுக்குகிடைக்கும் வாக்குகளை சேர்க்கவோ அல்லது பிரிக்கவோ மட்டும் தான் பயன்படுவார்கள். பலருக்கு அதன் மூலம் தனிப்பட்ட ஆதாயங்களும் கிடைக்கலாம். எனினும் இந்த வலிமையான போட்டிகளால் தென்னிலங்கை அரசியல் பலவீனமடைந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும். முன்னர் ஒற்றுமையாக நின்று போரை மேற் கொண்டதுடன், தமிழர்களுக்கு எதிராக கருத்துகளையும் கூறி வந்த பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள் தற்போது தமக்குள் மோதிக்கொள்வதால் பல தகவல்கள் வெளிவருகின்றன.

உதாரணமாக கடந்த மே மாதம் 18 ஆம் திகதி வன்னிப்பகுதியில் போர் முடிவுக்கு வந்த போது வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித் தேவன், சிறப்புத் தளபதி பிரிகேடியர் ரமேஷ் ஆகியோரின் மரணம் தொடர்பாக இப்போது பலத்தசர்ச்சை எழுந்துள்ளது. சரணடைய வந்த மேற்படி மூவரும் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என சரத் பொன்சேகா பேட்டி யொன்றில் தெரிவித்ததாக செய்தி வெளியகியிருந்தது. இவ்விடயம் இலங்கை அரசியலில் மட்டுமல்லாது உலகிலும் பல தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்த இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன.

ஏனெனில் இந்த சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான விஜய் நம்பியாரும், பல இந்திய அதிகாரிகளும் கொழும்பில் தான் தங்கியிருந்தனர். பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை தனக்கு அனுகூலமான பிரசாரத்திற்கு பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள போருக்கு ஆதரவான கடும்போக்காளர்களின் வாக்குகளை கவாந்து விடலாம் என அரசாங்கம் திட்டமிட்டது. அதன் தொடர்ச்சியாக பொன்சேகா நாட்டையும், இராணுவத்தையும் வெளிநாட்டு சக்திகளுக்கு காட்டிக் கொடுத்து விட்டார் என்ற கருத்துக்களை அரசின் அமைச்சர்களும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர். பொன்சேகாவின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்தவர்களை விட பொன்சேகா துரோகம் இழைத்துவிட்டார் என தெரிவித்தவர்கள் தான் அதிகம்.

அப்படியானால் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தில் உள்ள உண்மைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது தான் அதன் அர்த்மாக அமையும்.அதாவது, தென்னிலங்கையில் தற்போது தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலை வன்னியில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த பேரழிவின் ஒரு சிறு பகுதியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால், வெளிவரவேண்டிய தகவல்களும், நாமும் இந்த உலகமும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் ஏராளம் உண்டு. வன்னியில் நடைபெற்ற இந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் தற்போது அதனை மேற்கொண்டவர்களுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகளால் வெளிவருகின்றன. ஆனால் அனைத்துலக சமூகம் அறியாதது அல்ல. போரின் பின்னர் இலங்கையில் இருந்து விடைபெற்று சென்ற முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவரிடம் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்து சென்றிருந்தார்.

அதாவது, "வன்னியில் ஒவ்வொரு கணமும் என்ன நடந்தது என்பது தொடர்பான முழு தகவல்களும் எமக்கு தெரியும், அதற்கான ஆதாரங்கள் பலவற்றையும் நாம் பதிவு செய்து வைத்துள்ளோம்' என அவர் தெரிவித்திருந்தார். அதில் உண்மைகளும் உண்டு. ஏனெனில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைவதற்கு முன்னர் இலங்கையிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கும், அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசுதரப்பு அதிகாரிகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கும் சரணடைவது தொடர்பாக தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாது, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட "த ரைம்ஸ்' ஊடகவியலாளருக்கும் பா. நடேசன் நேரிடையாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர்கள் எவ்வாறு சரணடைய வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை கொழும்பு அரசு வழங்கியிருந்தது.

எனவே அவர்கள் வலுவான ஆதாரங்களை முன்வைத்த பின்னரே வெள்ளை கொடிகளுடன் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த மே மாதம் தெரிவித்த கருத்தை இங்கு தருவது பொருத்தமானது. அவர் தனிப்பட்ட ரீதியாக தெரிவித்த கருத்து என்பதால் பெயரை குறிப்பிடுவது பொருத்தமாகாது:"நடேசனும், புலித் தேவனும் 17 ஆம் திகதி நள்ளிரவு என்னுடன் தொடர்புகொண்டிருந்தனர், அவர்கள் சரணடையப் போவதாகவும், தம்முடன் உள்ள போராளிகளை சரணடைய வைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். எனது உதவிகளை அவர்கள் நாடுகின்றனர் என்பது எனக்கு புரிந்தது. நான் அது தொடர்பாக இலங்கை அரசின் முக்கிய தலைவர் ஒருவரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன், கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கும் தகவல்களை தெரிவித்தேன்.

அரசின் முக்கிய தலைவர் தான் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி விட்டு மீண்டும் எனக்கு தொலைபேசி எடுப்பதாக தெரிவித்திருந்தார். நான் காத்திருந்தேன், தொலைபேசி அழைப்பு வந்தது, பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி விட்டேன், சரணடைவதில் பிரச்சினைகள் இல்லை, அவர்களை வெள்ளைக் கொடிகளு டன் வருமாறு அந்த முக்கிய தலைவர் என்னிடம் தெரிவித்தார். உடனடியாக நான் அந்த தகவலை நடேசனிடம் தெரிவித்தேன், "நீங்கள் அதிகாலை வெள்ளைக்கொடிகளுடன் 58 ஆவது படையணியிடம் செல்லுங்கள், அவர்கள் உங்களை வவுனியாவுக்கு கொண்டு வருவார்கள். நான் மாலை உங்களை வவுனியாவில் வந்து சந்திக்கின்றேன்' என நான் நடேசனிடம் தெரிவித்தேன். ஆனால், அதன் பின்னர் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்பது எனக்கு புதிராகவே உள்ளது' என தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தற்போது ஐக்கிய நாடுகள் சபை வரை எதிரொலித்துள்ளது, இலங்கையில் போரியல் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற மேற்குலகத்தின் தொடர்ச்சியான அறிக்கைகளுக்கு மத்தியில் இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளிவருவதற்கு தேவையான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும். மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டவர்கள் நாம், பேரழிவை சந்தித்தவர்கள் நாம், இழந்த உரிமைக்காக தற்போதும் போராடி வருபவர்கள் நாம், இனவாத அழுத்தங்களினால் வாழ்வை தொலைத்தவர்கள் நாம், எனவே எமக்கு சார்பான சூழல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு எமக்குத் தான் உண்டே தவிர மேற்குலகத்திற்கு அல்ல. எமக்காக அவர்களை ஒரு படி இறங்கவைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் விவேகமான அரசியல் நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

யதார்த்தமான சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாம் நடுநிலையை காப்பாற்ற முயற்சித்தால் அதுவும் யாரோ ஒரு வேட்பாளரை மறைமுகமாக காப்பாற்ற எடுக்கும் முயற்சியாகவே கொள்ளப்படும் ஏனெனில் எதிர்வரும் தேர்தலின் வெற்றி என்பது நுலிழையாகவே இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. உலக வரலாற்றைப் புரட்டி பார்த்தாலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம், அதாவது அதிகாரம் உள்ள அரசின் மீதான போர்க்குற்ற விசாரணைகளை விட அதிகாரம் இழந்தவர்கள் மீதான விசாரணைகளும் தண்டனைகளுமே அதிகம். ஈழத்தமிழ் மக்களின் வாக்குப் பலம் தற்போதைய சூழ்நிலையில் கணிசமான பங்களிப்பை வழங்கவல்லது.

2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் தொகுதிகளில் 870,000 மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 982,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள் ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 392,800 பேர் தமிழ் மக்கள். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 633,654 வாக்குகளைப் பெற்று 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. எனவே, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளின் பலம் என்பது தற்போதைய சூழ்நிலையில் 12 இலட்சத்தில் இருந்து 15 இலட்சமாக இருக்கும் என கணிப்பிடப்படுகின்றது. அதனை ஒருங்கிணைப்பதன் மூலம் நாம் காத்திரமான நகர்வுகளை மேற் கொள்ள முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

-வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி:வீரகேசரி

Comments