இரு தரப்பிலுருந்தும் பேரங்கள் பலமாகப் பேசப்படுவதால் இவ்வாறு மேலும் சிலர் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் என தேர்தலுக்கு முன்னர் தாவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் கட்சி தாவுவது குறித்தும், நம்பியவர்கள் காலை வாருவது குறிததும் தமிழ் மக்களுக்கு கவலையில்லை. எனினும், சிறீலங்காவின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாத்திரம் என்ன என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்வியாகும். டக்ளசின் ஈ.பி.டி.பியோ, பிள்ளையான், கருணா குழுக்களோ ஏன் முஸ்லிம் கொங்கிரஸ், மலையகக் கட்சிகள் குறித்தோ அக்கறைப்படாத தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவது குறித்து ஆவலுடன் இருக்கின்றனர்.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையென்ற கொள்கைகளையும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரிதிநிதிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டமையினாலேயே இவர்கள் அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அங்கீகரித்தார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும் வெற்றியை இவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார்கள். இப்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அடைந்துள்ள கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் மகிந்துவுடன் கைகோர்த்து மகிழ முனைகின்றனர். இன்னும் சிலர் சரத் பொன்சேகாவை அரியாசனத்தில் அமர்த்தவேண்டும் என விரும்புகின்றனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த இருவரில் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கமுடியாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இன்று எதிரெதிர் அணியாக நிற்கும் மகிந்த ராஜபக்சவும் சரி சரத் பொன்சேகாவும் சரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒன்றாகக் கரம்கோர்த்து நடந்தவர்கள். இருவரும் இணைந்திருந்தே மிகக் கொடூரமான தமிழினப் படுகொலையை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இந்தப் படுகொலையில் அவரை விட இவர் குறைவென்றோ, இவரை விட அவர் குறைவென்றோ கூறமுடியாது. எய்தவரும், எய்யச் சொன்னவரும் இந்த இருவரும்தான்.
இவர்களின் கொடூர இனப்படுகொலையில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன தமிழ் மக்களின் வெளிக் காயங்கள் கூட இன்னும் ஆறவில்லை. இப்போது ஆட்சியில் அமர்வதற்காக இருவருமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலைக்கு வாங்குவதற்கு முயல்கின்றனர். இவர்களை கைக்குள் கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை தாங்கள் பெற்றுக்கொண்டுவிடலாம் என்று இருவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இரு போட்டியாளர்களும் சம வாக்குப் பலத்துடன் நிற்கும் நிலையில், தமிழ் மக்கள் அளிக்கப்போகும் வாக்கே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என எதிர்வுகூறப்படுகின்றது. இதனால் இருதரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது.
முன்னர் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு மறுத்தவர்களும் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்தவர்களும் இந்த இருவருமே. இப்போது இருவரும் கூட்டமைப்பினருக்கு அழைப்பு அனுப்புகின்றனர். இருவரது பேச்சில் எதில் மயங்குவது எனத் தெரியாது தவிக்கும் கூட்டமைப்பினர், இறுதியில் இவர்களில் யாராவது ஒருவருடன் கைகோர்த்து தமிழ் மக்களின் வாக்குக்களைக் கோரி வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் சொல்வதை மக்கள் கேட்பார்கள் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கொண்டு தமிழ் மக்களின் கதவுகளைத் தட்டினால், ஏமாற்றமே மிஞ்சும். சிங்கள தேசம் நம்பவைத்து ஏமாற்றிய பழைய பல கதைகளை கூட்டமைப்பினர் மறந்து, இன்னும் நம்பி நம்பியே மோசம் போகலாம். ஆனால் தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றார்கள். அவர்கள் தெளிவான பதிலேயே தேர்தலில் வழங்குவார்கள்.
ஆசிரியர்-தலையங்கம்
நன்றி:ஈழமுரசு
Comments