இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்
2010 ஜனவரி 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த பேரழிவிற்குப் பிறகு கூடும் இரணடாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது.
இந்தசட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே. ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டு காலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் உள்ள அரசியல் கட்சிகளும் தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம் இதுதான்.
அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் முன்பாகக் கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில் எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்த காலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா?ஈழத் தமிழர் இனப்படுகொலையும் தமிழக சட்டமன்ற அரசியல் கட்சிகளும்
மே 22 ஆம் தேதியன்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.
மே 23 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பான் கி மூன் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட வன்னித் தமிழ் மக்களை சந்தித்தார். "உலகம் முழுதும் உள்ள பல அகதிகள் முகாம்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். ஆனால் இங்கு உள்ளதைப்போல கொடூரமான சூழலில் அமைந்துள்ள முகாமை நான் கண்டதில்லை" என்று அவர் கூறினார்.
ஆனால், இலங்கை அரசுக்கு ஐ.நா.சபையிலேயே துணை போகத் துணிந்த இந்திய அரசு, அந்தக் கோரிக்கையை இன்று வரை கண்டுகொள்ளவில்லை. கேள்வியை முன்வைத்தத் தமிழக உறுப்பினர்களும் தங்களின் வேண்டுகோளை ஏன் அரசு ஏற்கவில்லை என்ற கேள்வியைத் தொடுத்து உரிமைக்காகப் போராடவுமில்லை.
சிங்கள இனவெறி அரசால் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களையும், இனவெறி ஜனாதிபதி மகிந்த ராசபக்சாவையும் தி.மு.க. கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாத இடைப்பகுதியில் சந்தித்து விட்டுத் திரும்பிய நாட்களில் அந்த இரு அறிக்கைகளும் வெளியாயிருந்தன. "எங்கள் அறிக்கையைக் காட்டிலும் உங்களது அறிக்கையானது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை உலக அரசுகளுக்கும், மக்களுக்கும் தெரிவிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்" என்பதைப் போருக்குப் பிறகு இலங்கைக்கு முதல் முதலாகச் சென்ற இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பதற்காகத்தான் அந்த இரு அறிக்கைகளும் அவர்களது இலங்கைப் பயணம் நிறைவடைந்த ஒருவார காலகட்டத்துக்குள் வெளியாயிருந்தன.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின், அமெரிக்க அரசின் குறிப்புகளை பாராளுமன்றக் குழுவினர் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இன்றுவரை தங்களது அறிக்கையை வெளியிடவில்லை. இருப்பினும், முள்வேலி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சந்தித்துவரும் சித்திரவதையை சிங்களவர்களில் உள்ள சில மனிதாபிமானம் மிக்கவர்கள் வெளிப்படையாகப் பேசத் தவறவில்லை.மே 14 ஆம் தேதியன்று வவுனியாவில் உள்ள முள்வேலி முகாம்களில் இருந்த தமிழ் மக்களைப் பார்த்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா " இவர்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையின் நீதிஅமைப்பில் இவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதே இல்லை. இதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்படலாம்" என்று ஜூன் 4 ஆம் தேதி வெளிப்படையாக அறிவித்தார். (http://transcurrents.com/tc/2009/06/idps_in_vavunia_we_are_doing_a.html ). சிங்கள அறிவுஜீவிகளால் நடத்தப்பட்டுவரும் Groundviews என்ற ஆங்கிலப் பத்திரிகையானது ஜூலை 2 ஆம் தேதியன்று முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரடியாகக் கண்டறிந்த ஒருவரின் அனுபவத்தை வெளியிட்டது. (http://www.groundviews.org/2009/07/02/an-eye-witness-account-of-idp-camp-conditions-in-sri-lanka/) சிங்களத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தக் கட்டுரை தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ள முள்வேலி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கொட்டடிகள்தாம் என்பதை உலகுக்கு உணர்த்தின.
ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று பேசிய அமெரிக்க அரசின் செயலாளரான ஹிலாரி கிளிண்டன் " இலங்கை அரசானது கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது " என்று கூறினார். ( http://www.egovmonitor.com/node/29093 ).அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலாள்ரான ரால்ப் மிலிபேணட் அக்டோபர் 14 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் " முகாம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் வரும் காலங்களில் இங்கிலாந்து அரசு அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்திக் கொள்ளும்" என்று எச்சரித்தார். ( http://www.irinnews.org/Report.aspx?ReportId=86712 ) . அவரது வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாக இருக்கவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 17 ஆம் தேதியன்று தற்காலிகமாக விலக்கிக் கொண்டது. ( http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=71064 )
சமாதான வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் படுகொலை செய்யச் சொல்லி இலங்கை ராணுவத்தின் 58 ஆவது டிவிஷனின் தலைவரான பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், இராணுவ அமைச்சகத்தின் தலைவருமான கோத்தபாயா ராஜபக்சாதான் என்று இலங்கை ராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா டிசம்பர் 12 ஆம் தேதியன்று இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையில் வெளிப்படையாகவே பேசினார்.
முகாமில் அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் தமிழ் பிரஜையான வாணி குமார் டிசம்பர் 20 ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் அப்சர்வர் பத்திரிகைக்குக் கொடுத்த நேர்காணலில், முகாமில் உள்ள ஒவ்வொரு தமிழச்சியும் எவ்வாறு கற்பழிப்பு சித்திரவதைக்கு சிங்கள அதிகாரிகளாலும், ராணுவத்தினராலும் உள்ளாக்கப் பட்டனர் என்பதை விவரித்து உள்ளார். அவரது கூற்றை உண்மைதான் என்று இலங்கை அரசின் மனித உரிமை அமைச்சகத்தின் செயலாளரான ராஜீவ் விஜய சேகர ஒத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார்.
ஈழத் தமிழர் இன சுத்திகரிப்புக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளும் தமிழக சட்டசபை அரசியல் கட்சிகளும்
போர் 2009 மே மாதம் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இந்தப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர். சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கை அரசால முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அடைக்கப்பட்ட / அடைக்கப்படவிருந்த மக்களின் மறுவாழ்வுக்காகவென்று "வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009 இல் முன் வைத்தது. வன்னி மக்களின் மறுவாழ்வு என்ற சாக்கில் - போரின் மூலம் தான் கைப்பற்றப்போகும் வன்னிப் பெருநிலத்தையும், ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ் குடா பகுதியையும் தனக்கு சாதகமான நிலப்பகுதியாக எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே 7 ஆம் தேதியன்று இலங்கை அரசு ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தம்பியும், ஆலோசகரமுமான பசில் ராஜபக்சாவின் தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதே அந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.
தமிழ் மக்களை உள்ளடக்காத "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் நிர்வாகக் குழுவை எதிர்த்து தமிழக சட்டசபையோ, அதன் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவில்லை. மாறாக, சிங்களர்களின் தலைமையில் அமைந்த நிர்வாகக் குழுவிற்கு இந்திய அரசு அளித்த அங்கீகாரத்தை தமிழக ஆளும் கட்சி எவ்விதக் கேள்வியும் இன்றி ஆமோதித்தது. இந்த அடிப்படைத் தவறே அதனை மேலும் பல தவறுகளை இழைக்கத் தூண்டுவதாக அமைந்து விட்டது.
ஜூன் - ஜூலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த வேளையில் இலங்கைத் தூதுவரான ரோமேஷ் ஜெயசிங்கேவின் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது ஜூலை 8 ஆம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், இராணுவ ஆய்வாளருமான லெப்டினண்ட் ஜெனரல் V.R.ராகவன் கலந்து கொண்டு பேசினார்.
சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி நிலப்பகுதியில் அடுத்து வரும் சில மாதங்களிலேயே சிங்கள ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 2 லடசத்து 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படலாம் என்ற தகவலை வெளியிட்டார். அவரது கருத்தை அந்த ஆய்வரங்கத்தில் இருந்த இலங்கைத் தூதர் மறுக்கவில்லை. ஜூலை 15 ஆம் தேதியன்று இதே கருத்தை சரத் பொன்சேகாவும் வெளியிட்டார். (http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=11946&cat=1 )
தமிழர்களுக்குச் சொந்தமான பகுதியில் சிங்களக் குடியேற்றத்தையும், ராணுவமயமாக்கலையும் உறுதிப்படுத்தும் இந்தக் கருத்துக்களை அப்போது நடந்து கொண்டிருந்த தமிழக சட்டமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, ஈழ மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறிக்கும் சிங்கள இனவெறி அரசின் திட்டத்தை எதிர்த்து எவ்விதத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவர இயலவில்லை.
ஜூன் மாதம் தொட்டு முகாம்களில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷமே தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. ஆனால், முகாமில் இருந்து புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதக் கவலையையும் கொள்ளவில்லை. சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளை சர்வதேச போரியல் சட்டங்களின் அடிப்படையில் போர்க் கைதிகளாகத்தான் பாவிக்கவேண்டும் என்ற கருத்தை சர்வதேச அளவில் மனித உரிமை இயக்கங்கள் வலியுறுத்தின.
சிங்கள அரசின் சித்திரவதைக் கொட்டடிகளில் வீழ்ந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் காக்கும் அந்த அதி முக்கியக் கருத்தையும் தமிழக சட்டசபைக் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டன. முள்வேலி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் எவ்வாறு நடத்தப்படும் என்ற முக்கியக் கேள்வியைக் கேட்கவும் அவை மறந்து போயின.
ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம்
உலக சமூகத்தின் போர் நியதிகளை சிங்கள அரசு மீறத் துணிந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா.சபையும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையையே ஈழத் தமிழ் மக்களின் மீது அது இழைத்த போர்க்குறற்மாக அறிவித்து வருகின்றன.
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசைத் தமிழ் இனப்படுகொலைக்கான அரசாக அறிவிப்பதற்குத் தயங்க வேண்டிய அவசியம் இல்லை . உலகின் பல நாடுகளின் மாநில அரசுகள் இதுபோன்ற தீர்மானங்களை பல்வேறு இனப்படுகொலைகளையொட்டி எடுத்துள்ளன. வேற்று நாடுகளின் அரசோ அல்லது இந்தியாவில் உள்ள வேறொரு மாநில அரசோ இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முன்பு தமிழக சட்ட மன்றம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்துத் தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.
இலங்கையில் நடந்து வருவது இனப் படுகொலையே என்பதை அறிவிக்கும் முயற்சியில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், பத்திரிகைகளும், நாட்டரசுகளும், நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இந்த முயற்சிகள் யாவும் கைகூடுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில், பல பத்தாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகளைக் கூட இன்றளவும் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் மெதுவாகவே ஏற்றுக்கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை நிலை.
இது இனப்படுகொலைதான் என்பதை எந்த ஒரு நிறுவனமாவதோ அல்லது அரசோ முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பத் தவிர, இங்கிலாந்து நாட்டின் டைம்ஸ் ஆன்லைன் பத்திரிகை இந்த அறிவிப்பை மே 29 ஆம் தேதியன்று முன்வைத்துள்ளது. அதன் பின்னரே இந்த அறிவிப்பைப் பரிசீலிக்கும் செயல்பாடுகளைப் பல்வேறு நாட்டரசுகள் தொடங்கியுள்ளன.
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசை இனப்படுகொலைக்கான அரசாக அறிவித்தால் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை மேலதிகமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி விட்டால் என்ன செய்வது? எனவேதான் அந்த அரசோடு நீக்குப் போக்காக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இது ஒரு பத்தாம்பசலிக் கருத்தேயொழிய வேறில்லை.
மத்திய அரசின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்ல.
இந்தியை எதிர்க்கத் துணிந்த மாநிலமே தமிழகம்
இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது 1968 ஜனவரி 23 ஆம் நாளன்று - நடந்த நான்காவது தமிழக சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை இன்றளவும் தமிழ் இனம் மறக்க முடியுமா? இந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்ற தீரம் மிக்க தீர்மானத்தை இயற்றிய நாளல்லவா அது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ராஜாஜியின் 1937 ஆகஸ்டு 11 ஆம் தேதி அரசாணைக்கு 30 ஆண்டு காலப் போருக்குப் பின் திட்டவட்டமாக முடிவு கட்டிய நாளல்லவா அது? ஸ்டாலின் ஜெகதீசன், பொன்னுசாமி, குமாரசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், நடராஜன், தாளமுத்து போன்ற மொழிப்போர் வீரர்களால் ஊட்டப்பட்ட நெஞ்சுரமானது "இந்தியை அறியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக" என்ற துலேகரின் வார்த்தைகளைக் கொன்றொழித்த நாளல்லவா அது?
சியாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், குல்சாரி லால் நந்தா ஆகியோரையெல்லாம் தமிழக சட்ட மன்றம் வெற்றிகண்ட நாளல்லவா அது? 30 ஆண்டுகளாகத் தமிழ் இனம் பட்ட ஏளனத்தை இல்லாதாக்கிய நாளல்லவா அது? 1968 ஜனவரி சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு இணையான கூட்டத்தொடர் இன்னும் சில தினங்களில் மலரவுள்ளது.
2010 ஜனவரி 6 ஆம் நாள் மலரவுள்ள அந்தக் கூட்டத் தொடரில் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள இன வாதிகளாலும், அவர்தம் அரசாலும், அவர்களுக்குக்குத் துணை நின்ற இந்திய அரசாலும் ஏளனப்படுத்தப்பட்டும், கொடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த ஈழ மக்களின் விடியலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
முத்துக்குமார், ஜெனீவா முருகதாசன், சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், மலேசியா ராஜா, பள்ளபட்டி ரவி, கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், ஜெயங்கொண்டம் ராஜசேகர், சென்னை சதாசிவம் ஸ்ரீதர், புதுக்கோட்டை பாலசுந்தரம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், கடலூர் நாகலிங்கம் ஆனந்த் ஆகியோரின் ஈகைக்கு நாம் செய்யக்கூடிய ஒரே கைமாறு இதுதான். அந்த வீரர்களின் நினைவினை தமிழக சட்டமன்றமானது தன் மனதில் ஏந்தி, இலங்கை அரசு ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிவரும் அரசு என்ற தீர்மானத்தினை இந்த உலகமயமாதல் யுகத்தில் இயற்றிட வேண்டும்.
இந்த செயல்பாடே ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழ் இனம் முழுமைக்குமேயான விடியலாக அமையும்.
Comments