தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள்

மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது தேர்தலொன்று திணிக்கப்படப் போகிறது. வன்னி முகாம் மக்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிடும் செய்திகளால் சில வெளிநாட்டு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், யதார்த்த நிலைமை முரண்பாடாகவே காணப்படுகிறது.

பதிவுகளும் கெடுபிடிகளும் வெளியேறும் மக்கள் மீது சுமத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறி இயல்பு வாழ்வினை நிலை நிறுத்தப்படுவதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்காமல் வழங்கப்படும் நடமாடும் சுதந்திரம் அர்த்தமற்ற விடயமாகப் பார்க்கப்படும். தேர்தல் வந்தால் கண்ணி வெடிகளெல்லாம் தாமாகவே அகன்று விடும் போல் தெரிகிறது. இந்த மாதம் 17 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பதாக தமிழ் மக்கள் மீது தாம் அதிக கரிசனை கொண்டவர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டினை உருவாக்க ஆளுங்கட்சி முயற்சி செய்யும்.

இறுதிப் போரும், வன்னி அவலமும் இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே பாரிய மன அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதன் எதிர்வினை, தேர்தலில் வெளிப்படலாமென்றே நம்பப்படுகிறது. ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றியடைந்தால் ஜே.வி.பி. க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மந்திரிப் பதவிகளை வழங்கி ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவப் போவதாக தூண்டில் போடுகிறது.

ரணில் விரிக்கும் இந்த பதவி ஆசை வலையில் இவ்விரு கட்சிகளும் வீழ்ந்து விடுமாவென்பது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் 17 ஆம் திகதியன்று தெரிந்துவிடும். சிங்கள மக்களுக்கு வெற்றிச் செய்தியையும் தமிழ் மக்களுக்கு நிவாரணச் செய்திகளையும் தெரிவிக்கும் இருவழிப் பாதை கொண்ட பரப்புரை உத்தியினை பிரதான வேட்பாளர்கள் இருவரும் கடைப்பிடிப்பார்கள். புலிகளுடன் இருந்தவர்களும் பிரபாகரனின் பெற்றோர்களும் இந்த தேர்தல் பரப்புரையில் ஆதரவளிப்பார்களாயின் அதனை வரவேற்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அத்தோடு இன முரண் நிலைத் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும்தான் தயாரென்பதை வெளிப்படையாகவே கூறுகின்றார். அதேவேளை, விடுதலைப் புலிகளை போரில் வென்றதாகப் பெருமிதம் கொள்ளும் சரத் பொன்சேகா தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதென்று நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அரசியல் அதிகாரப் போட்டியில் உள் நுழைந்திருக்கும் சரத் பொன்சேகா, போர்முனைகளைப் பார்க்கிலும் மிகவும் வித்தியாசமானதொரு களத்தினை இனிச்சந்திக்கப் போகிறார். இடம்பெயர வைக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தாமதமடைவதாகவும் சொந்த இடங்களில் மீண்டும் வாழ்வதற்கான ஏது நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டு மென்கிற ஜே.வி.பி. யின் முக்கிய கோரிக்கையை சரத் பொன்சேகா ஏற்றுக் கொண்டுள்ளார். ஆயினும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஏப்ரலுக்கு முன்பாக நடத்தப்படவிருப்பதாக கருதப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை ரணிலின் ஜனநாயகக் கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சி முறைமையை அகற்றக் கூடியதாகவிருக்கும். போர் வெற்றியைப் பங்குபோடும் மோதல் நிகழ்வதால் மோசமான தோல்வி ஒன்றினைச் சந்திக்கும் நிலை மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஏற்படாதென்பதையும் நோக்க வேண்டும்.

அரசியல் களத்தில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவின் அணி சேர்ப்பால் ஆளும் தரப்போடு சமநிலையைப் பேணும் வாய்ப்பினை மட்டுமே உருவாக்க முடியும். இதில் சிறுபான்மை இன மக்களின் ஆதரவுடனேயே 50 இற்கு மேற்பட்ட சதவீதத்தை இவர்களால் பெறக் கூடியதாக அமையும். மஹிந்த அணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா), ரி.எம்.வி.பி. போன்ற சிறுபான்மை இனக் கட்சிகள் இணைந்து கொள்கின்றன.

இவை தவிர 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு எந்தளவில் இருக்கிறதென்பதை உறுதிபடக் கூற முடியாதிருக்கிறது. வடக்கு கிழக்கு அரசியல் தளத்தில் த.தே. கூட்டமைப்பு முக்கியமான தொன்றாகும் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெற்றதால் கூட்டமைப்புக் குறித்த மக்களின் பார்வையும் எதிர்பார்ப்பும் சில வித்தியாசமான செய்திகளை யாழ். மாநகர மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளது.

தமது சக உறுப்பினர் ஒருவர் சிறைப்படுத்தப்பட்டு அவருடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஜனநாயகத் தேர்தலில் கூட்டமைப்பு ஈடுபடுவது எந்த வகையில் நியாயப்படுத்தப்படுமென்கிற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இவை தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தைக் கூட்டமைப்புக் கொண்டிருப்பதால் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கும் அரசியல் கோரிக்கைகள், எதுவாக இருக்க வேண்டுமென்பதை இப்போதே அவர்கள் கூற வேண்டும். ஆனாலும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பதாக இவர்கள் கூறுவது அவர்களுக்கிடையே ஒருமித்த கருத்து நிலை இன்னமும் உருவாகவில்லையென்பதையே வெளிப்படுத்துகிறது. மீள் குடியேற்றம் நிவாரணப் பணிகள் என்பவற்றுக்கு அப்பால் அரசியல் நிலைப்பாடொன்றினை கூட்டமைப்பு முன் வைக்க வேண்டும்.

உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒன்றுபட்ட இலங்கை இறைமைக்குள் சமஷ்டித் தீர்வா அல்லது பூரண சுய நிர்ணய உரிமை கொண்ட தீர்வா என்பதை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இத்தனை அழிவிற்குப் பின்னரும் சரணாகதி சமரச அரசியலானது ஒரு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத் தருமாவென்பதை வரலாற்றுப் பட்டறிவுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். முன்வைக்கும் தீர்வினை, இந்தியா அல்லது வேறொரு நாடோ நிறைவேற்றித் தருமென்கிற தவறான கற்பிதங்கள், மீண்டுமொரு வரலாற்றுப் பிரிவினை உருவாக்கி விடும்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இருவரில் ஒருவர் அதிபர் நாற்காலியில் அமரத்தான் போகிறார். பரவலாகப் பேசப்படும் தேர்தல் குறித்த பார்வை ஒன்றினை இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரைத் தோல்வியடையச் செய்வதனூடாக அவருக்கு சார்பாக நிலையெடுக்கும் வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளையும் மற்றும் யுத்தத்திற்கு ஆதரவளித்த இந்தியாவையும் இலங்கை அரசியல் களத்திலிருந்து நீக்கி விடலாமென்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். அவ் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்திய அமைதிப் படையை வெளியேற்ற பிரேமதாஸ அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் தந்திரோபாய காய்நகர்த்தல் ஒன்றில் ஈடுபட்டதை சுட்டிக் காட்டுகின்றார்கள்.

போரின் போதும் அதற்குப் பின்னரும் உலக நாடுகளிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா என்பதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, ரணிலின் அணிக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்று மாங்காய்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி விடாலாமென்பதே இக் கருத்து நிலையாளர்களின் வாதமாகும். அதேவேளை 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வடக்குகிழக்கில் ரணிலிற்கு கிடைத்த வாக்குகளை ஒப்பிட்டாய்வு செய்தால் திருமலையில் 61.33 சதவீதமும் திகாமடுல்லவில் (அம்பாறை) 55.81 சதவீதமும் மட்டக்களப்பில் 79.51 சதவீதமும் வன்னியில் 77.89 சதவீதமும் யாழ்ப்பாணத்தில் 70.20 சதவீதமும் அவருக்கு கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதிக்கு 28.8 சதவீத வாக்குகளே வட கிழக்கில் விழுந்தது.

ஆனாலும் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் வாக்களித்தோரின் சதவீதம் யாழ்ப்பாணத்தில் 0.36 வன்னியில் 24.02 மட்டக்களப்பில் 44.5 திருமலையில் 60.20 மற்றும் அம்பாறையில் 68.64 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு, வட மாகாணத்திலேயே ஓரளவு முழுமையாக நடைபெற்றுள்ளதை மேற்குறிப்பிடப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தன்னியல்பான புறக்கணிப்போ அல்லது தமிழர் தரப்பால் விடுக்கப்படும் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்தலோ, ஐ.தே.முவுக்குச் சாதகமாகவே அமையும். கூட்டமைப்பின் சார்பாக ஒருவர் களத்தில் குதித்தால் அந்நகர்வு ஐ.தே.மு. வாக்கு வங்கியையே அதிகம் பாதிக்கும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் பங்கு கொண்டு குறைந்தளவு வாக்கினைப் பெற்றால், அவர்களின் எதிர்கால அரசியல் இருப்பிற்கே அம் முடிவு ஆபத்தாக அமைந்துவிடலாம்.

"கூட்டமைப்பை நிராகரித்த தமிழ் மக்கள்' என்கிற தலைப்பில் பாரிய பரப்புரையொன்றினை பேரினவாதச் சக்திகள் முன்னெடுக்கத் தொடங்கிவிடும். ஆதலால் ஜனாதிபதித் தேர்தலைக் குறி வைத்து பிராந்திய சர்வதேச ஏகாதிபத்தியங்கள் நடத்தும் நிழல் யுத்தங்களுக்குள் மூழ்கி விடாமல் தமிழ் மக்களின் பிறப்புரிமை சார்ந்த சுய நிர்ணய உரிமை என்கிற அரசியல் நலன்களை அடைவதற்கான இராஜ தந்திர நகர்வுகளை மிக அவதானமாக மேற்கொள்ள வேண்டிய தேவை அம் மக்களுக்கு உண்டு. புதிய அரசியல் சூழலுக்குள் காலடி பதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், உள்ளக, வெளியக மாறுதல்களை உன்னிப்பாக அவதானிப்பார்களா? டிசம்பர் 17 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

-இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு

Comments